முகப்பரு, கரும்புள்ளி மற்றும் பிற தோல் பிரச்சினைகளால் நீண்ட நாட்களாக போராடி வந்துள்ளார் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட தொழில்முனைவோரான டெய்சி மோர்கன். சருமப் பிரச்னை ஒரு புறமிருக்க, அதற்கான தீர்வினை தேடி அலைவது அவருக்கு மற்றொரு சவால். ஏனெனில், சிங்கப்பூரில் வசித்துவந்த அவருக்கு, இந்திய சருமத்திற்கு ஏற்றபோல் தயாரிக்கப்பட்ட தோல் பராமரிப்பு தயாரிப்புகளை சந்தையில் கண்டுபிடிப்பது பெரும் தேடலாகியது. சந்தையில் கொரிய மற்றும் சீனப் பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. மேலும், ஆசிய நாட்டவர்களின் சரும வகைகளுக்கு ஏற்ற தயாரிப்புகள் சந்தையில் இல்லாததையும் அவர் கவனித்தார்.
அதனை உணர்ந்த டெய்சி, ப்யூட்டி தயாரிப்புகள் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். அதற்கான தீர்வுகளையும் உருவாக்கத் தொடங்கினார். இதன் நீட்சியாய் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைந்து ‘9Skin’ என்றதோல் பராமரிப்பு பிராண்டை அறிமுகப்படுத்தினார். பாரபென்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாத பிரீமியம் தோல் பராமரிப்புப் தயாரிப்புகளை பிராண்ட் வழங்குவதாக டெய்சி கூறினார்.
“நிறைய தோல் பிரச்சினைகள் எதிர்கொண்ட ஒருவர் என்பதால், தோல் பராமரிப்பு தயாரிப்புகளை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருக்கும் ஒன்று. இயற்கை அறிவியலை ஆயுர்வேத ஞானத்துடன், அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றாற் போன்ற தயாரிப்புகளை வழங்குகிறது 9ஸ்கின்,” என்று யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார் டெய்சி.
2011 ஆம் ஆண்டில் வணிகத் துறைக்கு அறிமுகமாகிய மோர்கன், சிங்கப்பூரில் ஒரு நைட் கிளப் வணிகத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் அவருக்கு நிறைய சவால்களும், தடைகளும் காத்திருந்தன.
“தனி ஒரு பெண்ணாக நைட் கிளப்பை நடத்துவதால், சந்தேகங்களையும் தடைகளையும் எதிர்கொண்டேன். குறிப்பாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், ஒரு பெண்ணாக பங்குதாரர்களை இணைத்துக்கொள்வது கடினமாக இருந்தது. ஒரு இரவு விடுதியை நடத்துவது என்பது சட்ட அமலாக்க மற்றும் பாதாள உலகம் இரண்டையும் கையாள்வதாகும். இது மிகவும் சவாலானது. தூக்கமில்லாத இரவுகள் மற்றும் கடினமான பணிகள் இருந்தாலும், முயற்சியை கைவிடாது உழைத்தேன். இந்த பயணத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்,” என்றார்.
அதன்பின், சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் ஸ்பாக்களை நடத்தத் தொடங்கினார் டெய்சி. இதனால், அடிக்கடி இந்தியாவிற்கு வருகை தருவது வழக்கமாகியது. அப்படி, ஒருமுறை இந்தியாவிற்கு வந்திருந்த போது, தமிழ் திரைப்படங்களுக்கான வெளிநாட்டு உரிமைகளை வாங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
”நான் வாங்கிய படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கியது. அப்படி தான், அவருடனான அறிமுகமும், நயன்தாராவின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தொடங்கி, நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். காலப்போக்கில் அந்த உறவு வளர்ந்து இறுதியில் ஒரு குடும்பத்தைப் போல மாறினோம்.”
2015 ஆம் ஆண்டிலே மூவரும் இணைந்து ஒரு ப்ராண்ட் துவங்குவது குறித்து விவாதித்ததாக கூறினார். இருப்பினும், சருமப்பராமரிப்பில் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புகளின் மேம்பாட்டிற்கு காலம் தேவைப்பட்டதால், 2023ம் ஆண்டு தான் ’9Skin’ அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு தொடர் தொழில்முனைவராக அனுபவங்களை சேகரித்து வைத்திருந்த டெய்சி, ஒயிட்னீங் க்ரீம் மற்றும் முகப்பரு லோஷனை தயாரித்து, “டெய்சி மோர்கன் இன்டர்நேஷனல்” நிறுவனம் மூலம் இலங்கை, மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் மாலத்தீவு போன்ற சந்தைகளில் விற்பனை செய்யத் தொடங்கினார்.
“சருமப் பொருட்களின் விற்பனையில் கிடைத்த அனுபவத்தின் மூலம், புதிய சந்தைகளில் நுழைவது, உரிமங்களைப் பெறுவது மற்றும் பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி என்பதை அறிந்து கொண்டேன். நீண்ட கால கலந்தாலோசிப்பின் முடிவில், 9ஸ்கின்- ஐ சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த நாங்கள் நன்கு தயாராகினோம்,” என்றார்.
தற்போது டே கிரீம், நைட் கிரீம், பூஸ்டர் ஆயில், ஆன்டி-ஏஜிங் சீரம் மற்றும் க்ளோ சீரம் என 5 தயாரிப்புகளை 9ஸ்கின் வழங்குகிறது. இந்த தயாரிப்புகள் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் கனடா முழுவதும் கிடைக்கின்றன. வரும் மாதங்களில் இங்கிலாந்து சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
க்ரீம் தயாரிப்பதற்காக நிறுவனமானது, சீ பக்ஹார்ன் போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். கூடுதலாக, இவர்கள் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள். க்ரீம் தயாரிக்க அவர்கள் பின்பற்றும் சீக்ரெட் பார்மூலாக்கள் அவற்றை தோலின் வெளிப்புற அடுக்குக்கு அப்பால் ஊடுருவி, ஆழமான நிலைகளை அடைய உதவுகின்றன.
அதுமட்டுமின்றி, தயாரிப்புகளுக்காக அவர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான மூலப்பொருட்கள் எளிதில் அணுக முடியாதவை என்று கூறினார். மூலப்பொருட்களில் ஒன்று இந்தோனேசியாவிலிருந்து பெறப்பட்டு, அவை இந்தியாவை அடைவதற்கு முன்பு பிரேசிலில் பதப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
“மூலப்பொருள்கள் யாவும் சரியான காலத்தில் மட்டுமே அறுவடைச் செய்யப்படுகின்றன. அதனால், நாங்கள் 10,000 பீஸ்களை தயாரிக்கப் போகிறோம், அடுத்த செட்டைத் தயாரிக்க குறைந்தது 45 முதல் 60 நாட்கள் காத்திருக்க வேண்டும். இச்சிக்கலைத் தணிக்க, பிராண்டின் வெளிநாட்டு ஏற்றுமதிகளை எளிதாக்குவதற்காக மலேசியாவில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளோம்,” என்றார்.
சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களிலே தயாரிப்புகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, இது ஒரு சிறிய பிரச்சினையாக மாறியது. ஆனால் இப்போது நாங்கள் இந்த சவாலை சமாளித்துவிட்டோம், என்று கூறினார்.
9ஸ்கின்னின் தயாரிப்புகள் அதன் இணையதளத்திலும், பெங்களூரில் அமைந்துள்ள நேச்சுரல்ஸ் கடைகளிலும் கிடைக்கின்றன. 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் சருமப் பராமரிப்பிற்கு உதவும் இத்தயாரிப்புகள் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
9ஸ்கின் ப்ராண்டில் இணை நிறுவனர்களாக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் டெய்சி இருக்கையில், யார், யார்? எந்தெந்த பகுதிகளில் கவனம் செய்லுக்கிறார்கள் என்ற கேள்விக்கு, விரிவாக விளக்கினார் டெய்சி.
நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு நியமிக்கப்பட்ட பாத்திரம் உள்ளது, அவர்கள் அந்த பிரிவை சரிவர கையாள்கின்றனர். அவ்விதத்தில் தயாரிப்பு மற்றும் உருவாக்கலை டெய்சி கவனித்து கொள்கிறார். பேக்கேஜிங் பிரிவானது நயன்தாராவால் நிர்வகிக்கப்படுகிறது.
நயன்தாரா நடிப்புலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார், ஆனால் குடும்பம், பிசினஸ் என்று வரும்போது அதற்கான தேவைகளையும் சரியான வகையில் பகிர்ந்து அளிப்பவர். ப்ராண்ட் தொடர்பான விவாதங்களில் அவரவர்களின் விருப்பத்தை தெரிவித்து பின்னர் எங்கள் மூவருக்கும் அதில் உடன்பாடு ஏற்பட்ட பின்னரே முடிவுகளை எடுக்கிறோம்.
“நயன்தாரா நிறைய முயற்சி செய்கிறார். பிராண்டிற்கான அவரது அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும். குறிப்பாக நாங்கள் நீண்ட நேரம் மற்றும் இரவு நேர விவாதங்களை மேற்கொள்வோம். அவர் பிராண்டின் முகம் மட்டுமல்ல, பிராண்டை புரிந்து கொள்வதற்கும் வளர்ப்பதற்கும் சமமாக நேரத்தை முதலீடு செய்கிறார்…” என்றார் டெய்சி.
“என்னைத் தவிர வேறு யாரும் எனக்கில்லை. ஒவ்வொரு நாளும் கடவுளை மட்டுமே எனக்கு மிகப்பெரிய ஆதரவாக நினைக்கிறேன்,” எனும் டெய்சி ஒற்றை தாயாக, இரு பாத்திரங்களையும் நிர்வகிப்பது தனக்கு சவாலாக இல்லை என்று குறிப்பிட்டார்.
“எனது குழந்தைகளுக்கும் எனது வணிகத்திற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னுரிமை அளித்து, எனது வேலையை ப்ராக்டிக்கலாக அணுகுகிறேன். நேர நிர்வாகத்தைப் பொறுத்தவரை, 9ஸ்கினில் உள்ள எங்கள் மூவருக்கும் வெவ்வேறு கடமைகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரே மனநிலையைப் பகிர்ந்து கொள்கிறோம். அதற்கேற்ப முன்னுரிமை அளிக்கிறோம். குழந்தைகள் என்று வரும்போது, அவர்களுக்கு தான் முன்னுரிமை. எப்பணியாக இருந்தாலும் அவர்களைப் பராமரிப்பதற்காக எல்லாவற்றையும் கைவிடுகிறோம். ஒரு தாயாக குழந்தைகளுக்கு அவர்களது நிகழ்காலமும் வாழ்க்கையும், தாயின் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் அறிவோம்.”
பயணிக்கும் வழியில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், பாலினத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வணிகமும் தடைகளை எதிர்கொள்கிறது.
“நீங்கள் ஒன்றைத் தொடங்கும்போது, அதை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். பிரச்சனைகளைக் கண்டு நான் ஒதுங்கிபோவதில்லை. அவற்றை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளைத் தேடுகிறேன். பெண்கள் தங்களை நம்பத் தொடங்கி அவர்களது ஐடியாக்களைச் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஒரு சிறப்பு சக்தியைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை அடையாளம் காண வேண்டும்,” என்று கூறினார் டெய்சி.
எதிர்காலத்தைப் பற்றி பேசுகையில், “பிராண்டை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும். இதுவரை ஐந்து நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் ஆண்டில் 10 நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த மாதம் சென்னையில் “டீரா பியூட்டி” உடன் கைக்கோர்த்து ஸ்டோர் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். தற்போது வரை பிராண்ட் எந்த நிதியையும் திரட்டவில்லை. ஆனால் நானும் மற்ற நிறுவனர்களும் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்துள்ளோம்” என்றார்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…