முதலீடு ரூ.3 லட்சம்; வர்த்தகம் ரூ.40 கோடி – ஆர்கானிக் உணவுச் சந்தையில் அசத்தும் நிறுவனம்!
ஜோத்பூரைச் சேர்ந்த சித்தார்த் மண் வளத்தைக் காத்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, 40 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனத்தை கட்டமைத்த வெற்றிக் கதை.
முதலீடு ரூ.3 லட்சம்; வர்த்தகம் ரூ.40 கோடி – ஆர்கானிக் உணவுச் சந்தையில் அசத்தும் நிறுவனம்!
ஜோத்பூரைச் சேர்ந்த சித்தார்த் விவசாய நிலங்கள் பலவற்றைப் பார்வையிட்டார். அப்போது மண் வளம் குன்றியிருப்பதை கவனித்தார். ஆர்கானிக் விவசாயம் தொடர்பான வணிகத்தைத் தொடங்க இதுவே ஆரம்பப்புள்ளியாக இருந்தது.
விவசாயிகளுடன் ஒன்றிணைந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விரும்பினார். இதற்காக சித்தார்த்தும், அவரது சகோதரர் மோனீஷ் சன்ஷெட்டியும் இணைந்து Agronic Foods என்கிற நிறுவனத்தை 2019-ம் ஆண்டு தொடங்கினார்கள். தரமான விளைச்சலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.
”இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களிடம் மட்டுமே விளைச்சல்களை வாங்குகிறோம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு தரமான விளைச்சல் சென்று சேர்வது மட்டுமில்லாமல் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது” என்கிறார் சித்தார்.
இந்த வணிக செயல்பாடுகளைப் பற்றி சித்தார்த் பகிர்ந்துகொண்ட தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.
எஸ்எம்பி ஸ்டோரி: இந்த வணிகத்தை எப்படி ஆரம்பித்தீர்கள்? எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?
சித்தார்த்: என்னுடைய தனிப்பட்ட சேமிப்பாக 3 லட்ச ரூபாய் இருந்தது. அதைக் கொண்டு சுயநிதியில் தொடங்கினேன். குடும்பத்தில் சிலர் நிதியுதவி அளிக்க முன்வந்தனர். ஆனால் குறைந்த செலவில் படிப்படியாக வணிகத்தை வளர்ச்சியடையச் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.
எஸ்எம்பி ஸ்டோரி: ஆரம்பத்தில் எந்த மாதிரியான சவால்களை சந்தித்தீர்கள்? அவற்றை எப்படி சமாளித்தீர்கள்?
சித்தார்த்: முதல் மூன்றாண்டுகள் வெறும் சவால்கள் மட்டுமே இருந்தன. அந்த நாட்களில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் அதிகம் இல்லை. கொள்முதல், சான்றிதழ்களைப் பெறுவது, பொருட்களைக் கொண்டு செல்வது என ஒவ்வொரு செயல்பாடும் சவால் நிறைந்ததாகவே இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடையே ஊக்குவிப்பது கடினமாக இருந்தது.
Agronic Foods team
முதல் டீல் கிடைப்பதற்கே ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. நிதானமாக ஒவ்வொரு சவாலாக அணுகி தீர்வு கண்டோம். தளராத மனதுடன் செயல்பட்டோம். பொறுப்புகளைப் பகிர்ந்தளித்து தேவையான இடங்களில் அவர்களே முடிவெடுக்கும் சுதந்திரம் கொடுத்தோம்.
எஸ்எம்பி ஸ்டோரி: உங்கள் நிறுவனத்தின் வணிக மாதிரி என்ன?
சித்தார்த்: நாங்கள் இயற்கை உணவுகளை விளைவித்து, பிராசஸ் செய்து விற்பனை செய்கிறோம். குறைவான விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்கிறோம். நிலங்களை ஆர்கானிக் விவசாய நிலங்களாக மாற்றுகிறோம். விவசாயிகளின் கூட்டமைப்பை உருவாக்குகிறோம்.
விவசாயிகளுக்கு பயிற்சியளித்து, அவர்கள் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறோம். சந்தை தேவையை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் சொல்லும் பயிர்களையே விவசாயிகள் விளைவிக்கிறார்கள். எங்கள் தொழிற்சாலையில் இவற்றை பிராசஸ் செய்து, பேக் செய்து மறுவிற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகிஸ்தர்கள் போன்றோருக்கு அனுப்புகிறோம்.
எங்கள் வணிக மாதிரியின்கீழ் இடைத்தரகர்கள் தலையீடின்றி தரமான விளைச்சல் விற்பனை செய்யப்படுகிறது. தரமில்லாத உணவுப்பொருட்களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறுகிறோம்.
எஸ்எம்பி ஸ்டோரி: நீங்கள் வழங்கும் இயற்கை உணவுப்பொருட்கள் என்னென்ன? அவை எந்த வகையில் தனித்துவமானவை?
சித்தார்த்: இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மசாலா, மூலிகைகள், தானியங்கள், மாவு, குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் என பல்வேறு பொருட்களை வழங்குகிறோம்.
கலப்படம், ரசாயன பயன்பாடு, உணவுப் பொருட்களை சுகாதாரமற்ற முறையில் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எங்கள் தயாரிப்புகள் தீர்வாக அமைகின்றன. இதுபோன்ற உணவுப்பொருட்கள் புற்றுநோய், நோயெதிர்ப்புத் திறன் குறைதல் உள்ளிட்ட ஏராளமான நோய்களுக்கு வழிவகுத்து மண் வளத்தையும் பாதிக்கிறது.
Agronic Foods Products
நாங்கள் ரசாயனங்கள், செயற்கை உரங்கள், பதப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில்லை. எங்கள் தயாரிப்புகள் முறையாக கண்காணிக்கப்பட்டு சுகாதாரமான முறையில் கையாளப்படுகின்றன. எங்கள் பொருட்களின் தரத்தை உறுதிசெய்யும் வகையில் BRC, HACCP உள்ளிட்ட ஏராளமான சான்றிதழ்கள் பெற்றிருக்கிறோம்.
எஸ்எம்பி ஸ்டோரி: Agronic நிறுவனத்திடம் விற்பனை செய்வதால் விவசாயிகள் எந்த வகையில் பயனடைகின்றனர்?
சித்தார்த்: விவசாயிகளிடமிருந்து மொத்த விளைச்சலையும் நாங்கள் வாங்கிக்கொள்கிறோம். இதனால் அவர்கள் அவற்றை விற்பனை செய்வது பற்றியோ இடைத்தரகர்கள் பற்றியோ கவலைப்படவேண்டிய அவசியமில்லை. நாங்கள் சந்தை விலையைக் காட்டிலும் கூடுதலாகக் கொடுப்பதால் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய அதிகம் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மண்ணை உழுவது முதல் அறுவடை வரை அனைத்திலும் அவர்களுக்கு பயிற்சியளிக்கிறோம். இவை தவிர கூட்டுறவு தலைவர்கள் விவசாயிகளுக்கு உதவுவார்கள்.
இயற்கை விவசாயம் செய்வதால் மண் வளம் மேம்படுகிறது. ரசாயன உரங்களால் நிலம் பாழாகாமல் பாதுகாப்படுகிறது. மேலும் ரசாயனங்களால் விவசாயிகளின் சருமங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது.
உதய்பூரைச் சேர்ந்த சேவா மந்திர் என்கிற என்ஜிஓ உடன் இணைந்து உள்ளூர் விவசாயிகள் பலனடையும் வகையில் சிக்ஷா கேந்திரா நடத்துகிறோம். அதேபோல் அக்ஷய பாத்ரா ஃபவுண்டேஷன் உடன் இணைந்து மதிய உணவும் வழங்கப்படுகிறது.
எஸ்எம்பி ஸ்டோரி: நீங்கள் யாரை இலக்காகக் கொண்டு செயல்படுகிறீர்கள்? அவர்களை சென்றடைவதற்கான உத்தி என்ன?
சித்தார்த்: உணவு இறக்குமதியாளர்கள், பிராசஸ் செய்பவர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், உணவு சேவைத்துறை போன்ற ஏராளமான பி2பி வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். பி2சி பிரிவில் 25 முதல் 45 வயதுடைய, ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டும் நபர்களை இலக்காகக் கொண்டிருக்கிறோம்.
இயற்கை விவசாயத்தினால் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கைகோர்த்து இயற்கை விவசாயத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.
ஆர்கானிக் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வோர் எங்கள் போட்டியாளர்கள்.
வாடிக்கையாளர்களிடம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறோம். உலகச் சந்தை நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப பொருட்களையும் சேவைகளையும் வழங்குகிறோம்.
எஸ்எம்பி ஸ்டோரி: Agronic செயல்பாடுகளை கோவிட்-19 எந்த வகையில் பாதித்தது?
சித்தார்த்: கோவிட்-19 ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வைத்துள்ளது. இயற்கை உணவுப்பொருட்கள் துறையைப் பொறுத்தவரை, கோவிட்-19 ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது.
இந்திய மசாலாப் பொருட்களுக்கும் ஆயுர்வேத மூலிகைகளுக்கும் உலகளவில் தேவை அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர்
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…