1960-களில் மும்பையில் ஹாஜி அஜ்மல் அலி என்ற விவசாயியால் தொடங்கப்பட்ட அஜ்மல் பெர்ஃப்யூம்ஸ் இப்போது 300-க்கும் மேற்பட்ட நறுமணப் பொருட்கள் தயாரிப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள நிறுவனமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
close
அஜ்மல் பெர்ஃப்யூம்ஸ் நிறுவனம் இந்தியாவில் 36 நகரங்களில் உள்ளன. உலகளவில் 240க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
1940-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், அசாமின் ஹோஜாய் கிராமத்திற்கு அருகில், நெல் விவசாயி ஒருவர் அடர்த்தியான காடுகளில் ‘ஔத்’ (oud) என்ற அரிய அற்புதமான ஒரு நறுமணப் பொருளைத் தேடினார். அகர்வுட் என்று ஆங்கிலத்திலும் அகில் என்று தமிழிலும் அழைக்கப்படும் மரத்திலிருந்து ஒரு விலைமதிப்பற்ற வாசனை மற்றும் நறுமண எண்ணெயைத் தேடினார்.
இந்தப் பொருள் மட்டும் போதுமான அளவு கிடைத்துவிட்டால் ஹாஜி அஜ்மல் அலி வாசனை திரவியத் தொழிலைத் தொடங்கி தனது குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை மாற்ற முடியும் என்று உண்மையாகவே நம்பினார்.
Abdulla Ajmal
அப்துல்லா அஜ்மல்
உலகின் மிகவும் விலையுயர்ந்த நறுமணத்தைப் பற்றி நீங்கள் யோசிக்கும்போது உங்கள் மனம் மரப் பூஞ்சையைப் (tree fungus) பற்றி நினைக்காது. ஆனால், அங்குதான் நீங்கள் ஔத் (oud) என்ற அரிய வாசனைப் பொருளைக் காண்பீர்கள். இது அக்விலேரியா மரங்களின் நறுமண மையம் என்றால் மிகையாகாது. மேலும், உலகின் மிகவும் விலையுயர்ந்த மூலப்பொருட்களில் ஔதும் ஒன்று.
இது போதுமான அளவுக்கு தெரிந்திருந்த நிலையில்தான் ஹாஜி அஜ்மல் அலி 1950-ஆம் ஆண்டில் தனது சொற்ப சேமிப்பான ரூ.500-ஐ எடுத்துக் கொண்டு, வடகிழக்கு இந்தியாவில் உள்ள தனது தாய்மண்ணை விட்டு வெளியேறி மும்பையை அடைந்தார். வணிகத் தலைநகரை அடைந்ததும், அசாமில் இருந்து அவர் கொண்டுவந்த ஔத் மற்றும் அகில் மர வாசனைப்பொருட்களின் சப்ளையராக மாறினார்.
ஆனால், ஓர் இடைத்தரகராக இருக்க மட்டுமே அவரது மனம் ஒப்பவில்லை. நறுமணப் பொருட்களின் உற்பத்தியாளனாக வேண்டும் என்ற லட்சிய வெறி அவரை உந்தித் தள்ளியது. எனவே, 1951ம் ஆண்டில், அவர் பல்வேறு வகையான நறுமண எண்ணெய்களை கலக்கி புதிதாக ஒரு வாசனை திரவியத்தை உருவாக்கத் தொடங்கினார். பலவிதமான வாசனை திரவியங்களையும் அஜ்மல் உருவாக்கினார். இங்குதான் ரூ.500 என்ற சொற்ப முதலீட்டில் தொடங்கி இன்று பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க நறுமணப் பொருட்கள் நிறுவனத்தை உருவாக்கினார் அஜ்மல்.
இத்தகைய வெற்றிகரமான தொடக்கத்திலிருந்து ஹாஜி அஜ்மல் அலியின் வாசனை திரவியங்கள் மிகவும் பிரபலமடைந்தன. அவரது சிறிய, குடும்பத்தால் நடத்தப்படும் இந்த வணிகம் அதன் உற்பத்தி 300-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளைக் கொண்ட பெரிய நிறுவனமானது.
இந்தியாவில் 36 நகரங்கள் மற்றும் உலகளவில் 240-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் அஜ்மல் நிறுவனம் பெரிய வாசனை திரவிய கிங் ஆக வளர்ச்சி பெற்றது.
2011-ஆம் ஆண்டில், நிறுவனத்தின் வர்த்தகம் ரூ.1,475 கோடி (200 மில்லியன் டாலர்) என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நிறுவனம் அதன் தற்போதைய நிதிநிலையை வெளியிட விரும்பவில்லை.
அஜ்மல் நிறுவனம் இப்போது 40 மின் வர்த்தக (இ-காமர்ஸ்) தளங்களில் தனது இருப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஏகபோக சந்தை கொண்ட வாசனை திரவிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ajmal
துபாயில் உள்ள அஜ்மல் தயாரிப்பு ஆலை.
SMBStory உடனான உரையாடலில், அஜ்மல் & சன்ஸ் இந்தியா நிறுவனத்தின் என்.எச்.ஏ பிரிவு செயல்பாடுகளின் தலைவர் சவுரவ் பட்டாச்சார்யா, இந்திய வாசனை திரவியங்களுக்கான சந்தையில் நிறுவனம் எவ்வாறு நுழைந்தது என்பதை விளக்கினார்: அந்த நேர்காணலில் இருந்து…
இந்தியாவில் உங்களின் உற்பத்தி யுஎஸ்பி என்ன?
அஜ்மல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால், 1976-ஆம் ஆண்டில், ஹாஜி அஜ்மல் அலி நிறுவனத்தின் தலைமையகத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு மாற்றினார். அங்கு அஜ்மல் தன் முதல் விற்பனை நிலையத்தைத் திறந்தார்.
ஆனால், இந்தியாவின் சிறந்த நறுமண சந்தை இப்போதுதான் முதிர்ச்சியடையத் தொடங்கியிருப்பதையும், இந்திய நுகர்வோர் துர்மணத்தைப் போக்கும் பொருட்களைத்தான் அதுவரை பயன்படுத்தி வந்திருப்பதையும் அறிந்தோம். வாசனை திரவியங்கள் என்பது சிறுக சிறுகத்தான் அவர்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனையடுத்து, சிறந்த வாசனை திரவியங்களை நோக்கி மக்கள் நகர்வதையும் நாங்கள் கண்டோம். எனவே, இந்தியாவில், நாங்கள் நியூ ஹொரைசன்ஸ் ஆஃப் அஜ்மல் (என்.எச்.ஏ) பிரிவைத் தொடங்கினோம்.
எங்கள் விற்பனை உத்தி நுகர்வோர் எதிர்பார்க்கும் விலைக்கு அருகில் விலைகளை நிர்ணயித்து விற்பதாகும். மேலும், வாசனை திரவியங்களின் சந்தையில் உள்ள பிற பிராண்ட்களின் விலைகளுக்கு இடைப்பட்ட விலைகளில் திறம்பட வைத்தோம். எங்கள் மும்பை என்.எச்.ஏ பிரிவில் 190 பேர் கொண்ட குழுவை நாங்கள் ஒன்றிணைத்தோம்.”
உங்கள் வாசனைப் பொருட்களின் விலை நிர்ணய உத்தி என்ன?
“அஜ்மல், ஒரு உள்நாட்டு பிராண்டாக இருப்பதால், சர்வதேச தரத்தை மலிவு விலையில் வழங்க விரும்புகிறது. இதை விருப்பத்தை எட்ட ரூ.1,000 முதல் ரூ.2,500 வரையிலான வெவ்வேறு விலைப் புள்ளிகளைப் பரிசீலிக்கின்றோம்.”
யாரை நோக்கி விற்பனையை குறி வைக்கிறீர்கள்?
“25 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள்தான் எங்கள் இலக்கு. அவர்கள் அழகாக இருக்கவும் நன்றாக இருப்பதாக உணரவும் விரும்பும் நுகர்வோர் ஆவர். இரண்டையும் அடைய, நல்ல வாசனை முக்கியம். தனித்து நின்று தங்கள் ஆளுமையை வெளிப்படுத்த விரும்புபவர்கள் இவர்கள்.
ajmal
அஜ்மல் நிறுவன டீம்
அஜ்மல் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
“மக்கள் தங்கள் ஆளுமைத் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ள சிறந்த வாசனைப் பொருட்களின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துவதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. நல்ல வாசனை திரவியங்கள் குறித்து அவர்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதற்காக பல்வேறு மார்க்கெட்டிங் சேனல்கள் மூலமாக நிறைய தகவல்களை வழங்கி வருகிறோம்.”
அஜ்மலுக்கு யாரெல்லாம் போட்டியாளர்கள்? அவர்களை முந்துவதற்கு என்ன செய்கிறீர்கள்?
“வாசனைப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைவருமே எங்கள் போட்டியாளர்கள்தான். அதேநேரத்தில், வாசனை திரவியம் என்று வந்துவிட்டால், மற்ற அனைவரையும் விட நாங்கள்தான் முன்னிலையில் இருக்கிறோம் என்பதை அடித்துச் சொல்லலாம். ஏனெனில், எங்களது இந்தப் பயணம் என்பது விளை நிலைத்தில் இருந்து தொடங்குகிறது.
ஆதார வளங்கள், உற்பத்தி, தயாரிப்பு மற்றும் மற்றவர்களுடன் இணைந்து மேம்படுத்துதல் என அனைத்து நிலைகளிலும் நாங்கள் செயலாற்றுகிறோம்.
ஆனால், குறிப்பிட்ட விற்பனைப் புள்ளிகள் என்று வரும்போது மற்ற பிரபல நிறுவனங்கள் கவனம் ஈர்க்கின்றனர். உதாரணமாக, ரூ.4,000 மற்றும் அதற்கு மேலான விலைப் பிரிவுகளைச் சொல்லலாம். அதேபோல், பிராண்ட் அல்லாத, தரமற்ற, ஊர் பேர் தெரியாத பெர்ஃப்யூம் விற்பனையாளர்கள் ரூ.400-ல் இருந்து ரூ.1000 வரையிலான விலையில் விற்பனை செய்வதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.”
நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
“நாங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விற்பனைப் புள்ளிகளுடன் தொடங்கினோம், ஆனால், மார்ச் 2020 இறுதிக்குள் 500 விற்பனை புள்ளிகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளோம். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,000 விற்பனை புள்ளிகளைக் கடப்பதையும் குறி வைத்துள்ளோம்.
நாங்கள் இப்போது விரிவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் பல சந்தைகளினூடாக பயணிக்கின்றோம். மேலும் பல இடங்களில், பல நாடுகளில் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் எங்கள் இருப்பை விரிவுபடுத்த விரும்புகிறோம்.”
தமிழில்: ஜெய்
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…