மைராவிற்கு வயது நான்கு. வீட்டுத் தின்ணையில் அமர்ந்த அவள் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் என சற்று எண்ணிப் பாருங்கள்…
இன்றைய கால குழந்தை அப்படி என்ன செய்து கொண்டிருப்பாள்? ஸ்மார்ட்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருப்பாள் என்று தானே எண்ணுனீர்கள்? இன்றைய சூழலுக்கு உங்களது அனுமானம் சரியானது தான். ஆனால், அவள் அதை செய்யவில்லை.
காதில் ஆடியோ கதைகளை கேட்டுக் கொண்டே அதில் வரும் கதாபாத்திரங்களை காகிதத்தில் உயிர்பித்து கொண்டிருந்தாள். அதை கண்டு அவரது தாய் ஜப்னித் கவுர், குழந்தைக்கு சரியான தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பதை எண்ணி மனம் குளிர மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில், இருமாதங்களுக்கு முன்பு வரை, உங்களது அனுமானத்தின்படியே மைராவும் இருந்தாள். ஸ்மார்ட்போனுக்கு பழகி போனக் குழந்தையை அதிலிருந்து வெளிக்கொணர முடியாமல் தவிர்த்து வந்தார் ஜப்னித் கவுர். கிட்டத்தட்ட அவரது நிலை தான் இன்றைய பெற்றோர்களுக்கும்! அச்சூழலில் தான் ஜப்னித், வாபூல் (Vobble) பற்றி அறிந்துள்ளார்.
ஆடியோ கதைகள், கேம் ஷோக்கள், இசை மற்றும் ஆக்டிவிட்டிகள் நிறைந்த 4 முதல் 10 வயது குழந்தைகளுக்கான ஆடியோ ஓடிடி இயங்குதளமான வாபூல் மைராவை ஸ்மார்ட்போன் ஈர்ப்பிலிருந்து வெளியேற்றியது. நீங்கள் எதிர்பார்ப்பதும் உங்களது குழந்தையிடம் மைராவிற்கு ஏற்பட்ட மாற்றத்தை தானே! அதற்கு உறுதியளிக்கிறார்கள் வாபூலின் நிறுவனர்களான நேஹா சர்மா மற்றும் செளமியா ஜெயகாந்த்.
2022ம் ஆண்டு நேஹா ஷர்மா மற்றும் சௌமியா ஜெகநாத் ஆகிய இரு தாய்மார்களால், குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ஆடியோ கதைகள், கேம் ஷோக்கள், இசை மற்றும் ஆக்டிவிட்டிகள் என 1,000 நிமிடங்களுக்கு மேலான உள்ளடக்கத்தை கொண்டு தொடங்கப்பட்டது Vobble எனும் ஓடிடி இயங்குதளம்.
‘குழந்தைகளின் கவனத்தை திரையில் இருந்து ஒலிக்கு மாற்றி அவர்களின் கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுவதே எங்களது நோக்கம்,’ எனும் அதன் நிறுவனர் சர்மா அதன் பாதையிலே பயணித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆம், ஒரு வருட சோதனைக்கு பின் பெங்களூரை தளமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் கடந்த ஆகஸ்ட் மாத கணக்கீட்டின்படி, 200 சந்தாதாரர்களுடன் 6 லட்சம் வருவாயையும் ஈட்டியுள்ளது.
சர்மாவும் ஜெகநாத்தும் அண்டை வீட்டார்கள். விரைவில் அவர்களது குழந்தைகளும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர் சர்மா. அதே போல், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறிவியலில் பட்டமும் சிருஷ்டி மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ட், டிசைன் மற்றும் டெக்னாலஜியில் இருந்து விளையாட்டு மற்றும் கல்வியில் கவனம் செலுத்தும் மனிதனை மையமாகக் கொண்ட வடிவமைப்பிலும் நிபுணத்துவம் பெற்றவர் செளமியா ஜெகநாத்.
தொற்றுக் காலத்தின் போது, வீட்டிலே முடங்கிக் கிடந்த அவர்களது குழந்தைகளின் திரைநேரம் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் டிவி பார்க்கும் நேரம் குழந்தைகளுக்கு அதிகரித்ததை எண்ணி இருவரும் கவலை அடைந்தனர். அதிலிருந்து குழந்தைகளை வெளியில் கொண்டு வருவதற்கான தீர்வுகளை தீவிரமாகத் தேடினர். ஆனால் பயனில்லை.
சர்மாவுக்கும் ஜெகநாத்துக்கும் அதுதான் ‘ஆஹா’ தருணம். ஏனெனில்,குழந்தைகளின் திரை நேரத்தை குறைப்பதற்கான தீர்வினை அவர்களே வழங்க முடிவெடுத்தனர். அதற்காக 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இருவரும் அவர்களது வேலையை விட்டனர்.
“இந்தியாவில் பாட்காஸ்ட் சந்தை வளர்ந்து வருகிறது. இருப்பினும், குழந்தைகளுக்கான போதுமான ஆடியோ இயங்குதளங்கள் இங்கில்லை. இந்த வகையான ஆடியோ உள்ளடக்கம் அமெரிக்காவில் பிரபலமடைந்து, இறுதியில் இந்தியாவுக்கு வரும். ஏன் முதல் நகர்வை நாம் (இந்தியாவில்) செய்யக்கூடாது என்று சிந்தித்தோம்,” என்று சர்மா விளக்குகிறார்.
ஒரு ஆண்டு முழுவதும் ஆடியோ உள்ளடக்கங்களை உருவாக்குவது, அதனை மேம்படுத்துவது என சோதனைக்கான காலமாக ஓடியுள்ளது. இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பின்னோட்டங்களை பெற்றுள்ளனர்.
பெருவாரியானவர்களிடமிருந்து இம்முயற்சி “எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்ற கருத்தை பெற்றுள்ளனர். இருவரின் கணவர்களும் தொழில்முனைவோர் என்பதால், ஷர்மாவும் ஜெகநாத்தும் தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டனர். இறுதியில், இயங்குதளத்தை தொடங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வருவாய் ஈட்டவும் தொடங்கினர்.
“எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான ஆர்வங்கள் உள்ளன, ஆனால் எங்கள் திறமை மற்றும் இயல்பு வேறுபட்டது. செயல்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் நிதி ஆகியவற்றை நான் கையாளுகிறேன். அதே நேரத்தில் சௌமியா தயாரிப்பு மற்றும் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட படைப்பு பகுதிகளை கவனித்துக்கொள்கிறார். வணிகத்தின் இதயமும் மனமுமாக நாங்கள் இருவரும் செயல்படுகிறோம்” என்று சர்மா கூறினார்.
குழந்தைகளின் பொழுதுபோக்கு முறையை மாற்றியமைப்பது எளிதான காரியமல்ல. அதற்கு சற்றே பொறுமை அவசியம். நீண்ட நிமிடங்களுக்கு ஒலிக்கும் ஆடியோ கதைகள் என்றால் குழந்தைகளுக்கு சலிப்பு தட்டிவடும் என்பதால், அதிகபட்ச அளவு 10 நிமிடக் கதைகளை உள்ளிட்டுள்ளனர். அதே போல், அவர்களுக்கு அதிகப்பட்ச வாய்ப்புகளை வழங்க புதுப்புது கதைகளை பதிவுச் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும், Vobble 250 நிமிடங்களுக்கான கன்டென்ட்களை அவர்களது சொந்த குழுவினராலும், Harper Collins India, Amar Chitra Katha, Scholastic Tulika மற்றும் பல வெளியீடுகளிலிருந்து 250 முதல் 300 நிமிட உள்ளடக்கத்தையும் பெற்று சேர்த்து வருகிறது.
வாபூலில் கணக்கைத் தொடங்கியவுடன், பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளின் சுயவிவரத்தை உள்ளிட்டு, நாளொன்றுக்கு எத்தனை முறை ஆடியோவை கேட்கிறார்கள் எனும் விவரத்தை அளிக்க வேண்டும். இத்தகவல்களின் அடிப்படையில், தளமானது குழந்தையின் வயதை நிர்ணயித்து முகப்பு பக்கத்தில் வயதுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை மட்டுமே காட்டுகிறது. இதில் கூடுதல் சிறப்பு அம்சம் என்னவெனில், குழந்தைகளுக்கான ஆடியோ கதைகளை குழந்தைகளின் குரலிலே பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாபூலின் குழந்தை வாடிக்கையாளர்களும், ஆடியோ கதைகளுக்கு குரல் கொடுக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக, ஆடியோ கதைகளுக்கு குரல் கொடுக்கும் குழந்தைகளின் வாபூல் கணக்கிற்கான தொகையில் ஆஃபர் வழங்குகிறது.
6 வயதான கண்ணனின் தாய் மதுமிதா சுப்ரமணியன், அவரது மகளின் குரலில் ஆடியோ கதையினை ரெக்கார்ட் செய்து அவளுக்கு புதிய அனுபவமாக இருந்தது என்று கூறிப் பகிர்ந்தார். “ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்தது கனாவுக்கு புதிய அனுபவத்தை அளித்தது. ஸ்டுடியோவின் சூழல், மைக்கில் சரியாகப் பேசுவது, தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பழகுவது மற்றும் அவர்களின் ஒலிப்பதிவு உபகரணங்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது என அன்றைய தினம் அவளுக்கு புதுவித அனுபவங்களை அளித்தது.
குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு டைலாக்கிற்கு முன்பும் அவள் ஸ்டுடியோவை சுற்றி வருவாள். ஒலிப்பதிவாளர்கள் குழு அவளது சுட்டித்தனத்திற்கு இடமளித்து, வேடிக்கையான அனுபவமாக மாற்றினர். அவளது சொந்த குரலில் பதிவுச் செய்த ஆடியோ கதைகளை கனா கேட்பதால், அடுத்து எப்போது ஆடியோ ரெக்கார்ட் செய்ய செல்லலாம் என கேட்டுக் கொண்டே இருப்பாள், என்றார் மதுமிதா.
ஆறு மாத இலவச ஆடியோ உள்ளடக்கத்துடன் பெற்றோர்கள் கட்டுப்படுத்தக் கூடிய ஆப்ஸ், குழந்தைகளுக்கு ஏற்ற 90 டெசிபல் அளவுள்ள வால்யூம் லிமிட்டர்கள் கொண்ட ஹெட்ஃபோன்கள் மற்றும் இரண்டு செயல்பாட்டு புத்தகங்கள் ஆகியவை அடங்கிய ரூ.3,500 மதிப்பிலான ஆரம்பத் தொகுப்பை வழங்குகிறது.
ஆரம்ப விலையே அதிகமாக தோன்றினாலும், அதனை கடந்த இருமாதங்களாக பயன்படுத்தி வரும் மைராவின் தாய், செலவிட்ட பணத்திற்கு மதிப்பானது இது என்றார். இருப்பினும், விலை குறைப்பாட்டிற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிறுவனம் விரைவில் 3 மாத சப்ஸ்கிரிப்ஷன் கொண்ட பேக்கை அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ப்ளூம் நிறுவனர் நிதி, அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டெக் ஏஞ்சல் நிறுவனர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து 4,00,000 டாலர் நிதி திரட்டியுள்ளது. தற்போது 200 சந்தாதாரர்களை கொண்டள்ள நிலையில், 2024ம் ஆண்டின் இறுதியில் 1,00,000க்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு பணிபுரிந்த வருகிறது.
“ஆடியோ உள்ளடக்கம் படைப்பாற்றலை வளர்த்து, ஆர்வத்தைத் தூண்டும் போது குழந்தையின் திரை நேரத்தைக் குறைக்கிறது. துல்லியமாக இதை அடைவதையே வாபூல் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறி முடித்தார் சர்மா.
இன்னும் எதற்காக வெயிட்டீங்! இப்பவே வாபூலில் கணக்கை துவங்கி குழந்தைகளின் பொழுதுபோக்கை மாற்றி படைப்பாளர்களாக மாற்றுங்கள்!
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…