“கனவு காணுங்கள் ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல உன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே லட்சியக் கனவு…” என்பார் ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கலாம்.
அவரின் பொன்மொழிகளை படித்து வளர்ந்தவர் சென்னை குரோம்பேட்டை அடுத்த நன்மங்கலத்தைச் சேர்ந்த சுபாஷ் கே குப்புசாமி. ராக்கெட் விஞ்ஞானியாக வேண்டும் என்பதை சிறு வயது முதலே மனதில் விதைத்துக் கொண்டு வளர்ந்தவர், இன்று அதேத்துறையில் சொந்த நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.
எட்டாம் வகுப்பு வரை சென்னைப் பள்ளியில் படித்து வந்தார் சுபாஷ்.
“நான் இங்கே படித்த வரையில் சுமாரான மதிப்பெண் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய கனவிற்கு கல்வி அவசியம் என்பதால் 9 மற்றும் 10ம் வகுப்பை நாமக்கலில் இருந்த தனியார் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்தேன்.
“ஆங்கில வழிக் கல்வி வகுப்புக்கான அனுமதி மட்டுமே கிடைத்ததால் வேறு வழியின்றி அதில் சேர்ந்தேன், ஆனால், எனக்கு தமிழில் புரிந்து கொண்டு படிப்பதே எளிதாக இருந்தது. யதேச்சையாக ஒரு முறை என்னுடைய பாடப்புத்தகங்களின் தமிழ்வழி நூல்களைப் பார்த்தேன், அதில் அனைத்தும் தமிழில் இருந்தது. அவற்றைப் படித்து அதனை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வகுப்புத் தேர்வின் போது எழுதி இருந்தேன், அதில் வழக்கத்தை விட அதிக மதிப்பெண் பெற்றேன்,” என்று இளம் வயதில் கல்வியில் இருந்தே தனக்கு இருந்த போராட்டங்களை விவரிக்கத் தொடங்கினார் சுபாஷ்.
இன்று ’பிரம்ஸ்தரா ஏரோநாடிகல் மற்றும் டிபென்ஸ் பிரைவேட் லிமிடெட்’டின் நிறுவனர் மற்றும் சிஇஓவாக இருக்க்கிறார் 26 வயது இளைஞரான சுபாஷ் குப்புசாமி.
படிப்பில் மட்டுமல்ல உருவத்திலும் சவால்களை சந்தித்து வளர்ந்தவர் சுபாஷ்.
“உருவத்தில் நான் சாதாரணமானவர்களைப் போல இல்லாமல் சற்று உயரம் குறைவாக இருப்பேன். இது ஒரு பிறவிக்குறைப்பாடு. ஏராளமான சமூகக் கிண்டல்களுக்கு ஆளாகி இருக்கிறேன். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற நான், இது போன்ற கேலி, கிண்டல், அவமானங்களால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவிகித மதிப்பெண் மட்டுமே பெற்றேன்.”
சென்னையின் மதிப்புமிக்க எம்ஐடியில் ஏரோநாடிக்கல் படிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் ஆனால் நான் எடுத்த மதிப்பெண்ணிற்கு பாலக்காட்டில் இருந்த கல்லூரி ஒன்றில் மட்டுமே இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக படிக்கத் தொடங்கினேன்.
ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளையும் நன்கு கற்றுக் கொண்டேன், நான் படித்துக் கொண்டிருக்கும் வருடத்திற்கான பாடங்களை படித்து முடித்துவிட்டு அடுத்த செமஸ்டருக்கான புத்தங்களை வாங்கிப் படிப்பது என்று அட்வான்ஸாக போய்க்கொண்டருந்தேன்.
“4 ஆண்டுகளுக்கான பாடத்திட்டத்தை மூன்றரை ஆண்டிலேயே படித்து முடித்துவிட்டு, என்னுடைய ஆசிரியர்களின் முனைவர் பட்டப்படிப்புக்கான ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருந்தேன். சக மாணவர்களின் சந்தேகத்தை தீர்க்கும் விக்கிபீடியாவாக நான் இருந்தேன். ஆனால் 4 ஆண்டுகள் முடிவில் நான் 10 பாடங்களில் அரியர் வைத்தது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது,” என்கிறார் சுபாஷ்.
நான் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் சொல்லிக்கொடுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஒருவர் கூட மதிப்பெண் குறைவாக எடுக்கவில்லை. ஆனால், எனக்கே 10 அரியர்கள் இருந்ததால் இஸ்ரோவில் சென்று ராக்கெட் விஞ்ஞானியாக வேண்டும் என்கிற கனவுக் கதவு மூடப்பட்டது.
முதுநிலை படிக்க அயல்நாடு செல்லலாம் என்றால் இளநிலை பட்டம் பெறாததால் அதற்கும் சாத்தியமில்லாமல் போனது. ஏரோநாடிக்கல் என்ஜினியரிங்கில் புலமை இருந்தும் நான் ஏன் தோற்றேன் எங்கு தோற்றேன் என்று ஆராயத் தொடங்கினேன். ஏரோநாடிக்கல்லில் கஷ்டமான பாடங்களில் வெற்றிபெற்றுவிட்டேன், ஆனால் எளிமையான பாடங்களில் தோல்வியுற்றிருந்தேன். நான் சொல்லிக் கொடுத்து என்னுடைய வகுப்புத் தோழியான சுபாஷினி பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக வந்திருந்தார்.
“உனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தாலும் உன்னுடைய கையெழுத்தில் தான் குறை இருக்கிறது, நீ எழுதுவது யாருக்கும் புரியவில்லை என்று அந்தத் தோழி என்னிடம் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து என்னுடைய தேர்வுத் தாள்களை வாங்கிப் பார்த்த போது யாராலும் படிக்க முடியவில்லை என்று புரிந்து கொண்டேன்,” என்று தன்னுடைய தோல்வின் காரணத்தைத் தேடத் தொடங்கியுள்ளார்.
சின்ன வயசு முதலே நான் வகுப்புப் பாடம் எழுத மாட்டேன், மதிப்பெண் எடுக்காவிட்டாலும் வகுப்பில் brilliant மாணவன் என்றால் அது நான் தான். அப்படியானால் எழுதுவதில் தான் பிரச்னை இருக்கிறது Dyslexia என்னும் கற்றல் குறைபாடாக இருக்குமோ என்று மருத்துவ உதவியை நாடினேன். அப்போது தான் எனக்கு Dystonia என்று சொல்லப்படும் நரம்பு வளர்ச்சி குறைபாடு இயற்கையாகவே இருக்கிறது என்பது தெரிய வந்தது.
“டிஸ்டோனியாவின் பாதிப்புகளானது எழுத முடியாது, வரைய முடியாது, கியர் வண்டி ஓட்ட முடியாது. இது நோயாக இருந்தால் மருந்து மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்தலாம், ஆனால் இது நோயல்ல என்பதால் இதனுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.
என்னுடைய அம்மா உயரக் குறைபாட்டால் சாதாரணமானவர்களைவிடக் குள்ளமாக இருப்பார். அவருடைய மரபு வழியில் நானும் உடல் அமைப்பில் குள்ளமாக இருந்தேன், மற்றொரு புறம் இந்த ’டிஸ்டோனியா’ பாதிப்பால் படிப்பை முடிக்கமுடியவில்லை என எல்லா பக்கமும் எனக்கான கதவுகள் சாத்தப்பட்டது.
”மீண்டும் மருத்துவர்களின் ஆலோசனையை நாடிய போது எனக்கு பதிலாக நான் கூறுவதை எழுதும் ஒரு Scribbler வைத்துக் கொள்ளலாம் என்று கூறினர். ஆனால், கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ அப்படி ஒருவிதியே கிடையாது. ஆனாலும் போராடி என்னுடைய குறைபாடு என்ன என்பதை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு புரிய வைத்து Scribbler வைத்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி பெற்றேன். ஆனால், அப்படியும் 10 பாடங்களையும் கூடுதலாக 4 செமஸ்டர் எடுத்து தேர்வெழுதி ஒரு வழியாக ஏரோநாடிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்தேன்,” என்கிறார் சுபாஷ்.
இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசின் திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்காக நான் படித்த அதே கல்லூரி எனக்கு அழைப்பு விடுத்தது. ஏனெனில், எழுதுவதில் மட்டும் தான் எனக்கு குறைபாடு மற்றபடி படித்து புரிந்து கொள்வது, அவற்றை திறம்பட செயல்படுத்துவது என அனைத்தும் எனக்கு மிக எளிதில் வந்த விஷயங்கள். கல்லூரியில் தங்க இடம் கொடுத்து ஏரோநாடிக்கல் அரியர்களில் தேர்ச்சி பெறுவதோடு மாணவர்களை தொழில் முனைவர்களாக்கும் வாய்ப்பை நிர்வாகம் கொடுத்தது.
தினசரி மாணவர்களை சந்தித்து படித்து முடித்த பின்னர் தொழில்முனைவர்களாவதற்கான வழிகள் என்ன என்பதை விளக்கி, அவர்கள் கொண்டு வரும் திட்டங்களை மதிப்பிட வேண்டும்.
“சுமார் 5 ஆயிரம் மாணவர்களில் இருந்து 10 குழுக்களை தேர்வு செய்து அவர்களுக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து ஸ்டார்ட் அப் தொடங்கச் செய்தோம். படிப்பை முடிக்காமல் இருந்ததால் என்னையும் ஒரு நிதியைப் பெற்று தொழில் தொடங்க பேராசிரியர்கள் அறிவுறுத்தினார்கள். என்னுடைய இலக்கு ராக்கெட் சயின்ஸ், ட்ரோன் என்று இருந்தாலும் வெகுஜன மக்களுக்கு உதவும் ஒன்றை செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் குப்பையை நிலக்கரியாக மாற்றுவதது குறித்த ஆராய்ச்சியை செய்யத் தொடங்கி அதற்கான இயந்திரத்தையும் கண்டுபிடித்தேன்.”
அது வெற்றியடைந்த நிலையில் கொரோனா வந்துவிடவே என்னுடைய திட்டத்தை கல்லூரி பேராசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன் என்று தன்னுடைய கண்டுபிடிப்பு பற்றி விவரிக்கிறார் இந்த இளைஞர்.
ஏரோநாட்டிக்கல், வெப்டிசைனிங் தெரியும், தொழில் கற்றுக்கொண்டேன், என்னுடைய கனவு தான் நிறைவேறவில்லை மற்றவர்களின் கனவுக்கு உதவியாக இருக்கலாம் என்று எண்ணினேன்.
ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தே ஏதேனும் செய்யலாம் என்று ஆன்லைனில் ஏரோநாட்டிக்ஸ் கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். ’பிரம்மாஸ்திரா ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் லிமிடெட்’ என்று நான் தொடங்கிய நிறுவனம் மூலம் ஏரோஸ்பேஸ் வகுப்பில் நம்மைச் சுற்றி இருக்கும் 10 பேர் தான் வருவார்கள் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால், கூகுள் படிவங்கள் நிரம்பி வழிந்தன.
“முதல் நாளிலேயே 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர், 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் வகுப்பு எடுத்ததால் முதல் நாள் தட்டுத் தடுமாறினேன். எனினும், அடுத்தடுத்த நாட்களில் இருந்து நான் கற்றுத் தருவதைப் பார்த்து எல்லோரும் உற்சாகமாகிவிட்டனர். இரண்டு நாட்கள் வகுப்பு, 4 நாட்கள் வகுப்பு என்று எடுக்கத் தொடங்கியதும் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள ஸ்பேஸ் சமூகத்தினைரிடையே பிரம்மாஸ்திரா பிரபலமடையத் தொடங்கியது,” என உற்சாகமாக தனது பயனத்தை பகிர்ந்தார் சுபாஷ்.
இதுவரையில் தோராயமாக 15 ஆயிரம் மாணவர்களுக்கு ஏரோஸ்பேஸ் வகுப்புகளை எடுத்திருக்கிறேன், அதற்கு மேல் என்னால் தனியாக வகுப்புகளை எடுக்க முடியாததால் பேராசிரியர்கள் குழுவை நியமித்து வகுப்புகளை பிரம்மாஸ்திரா மூலம் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுடன் சுமார் 92 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாணவர்களாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் நான் மட்டுமே வகுப்புகளை எடுத்துக் கொண்டிருந்தேன், ஆனால், நாளாக நாளாக அதிக அளவிலான மாணவர்கள் சேர்ந்ததால் நான் இப்போது முக்கிய வகுப்புகளை மட்டும் எடுத்துக் கொள்வதோடு நிர்வாகப் பொறுப்பையும் கவனித்துக் கொள்கிறேன்.
ஏரோநாடிக்கல் டிசைனிங், ஸிமுலேஷன் மற்றும் ட்ரோன், 3டி பிரிண்டிங் என்றால் செயல்முறைகளுடன் கூடியவையாக பாடத்திட்டங்களை நாங்களே வடிவமைத்துள்ளோம்.
“என்னுடன் சேர்ந்து 22 பேர் இப்போது பிரம்மாஸ்திராவில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏரோஸ்பேஸ் பற்றி படிக்கும் ஆர்வம் இருந்தாலும் பலருக்கும் அதற்கான வாய்ப்புகள் என்ன மேற்படிப்பு எங்கே தொடரலாம் போன்ற விழிப்புணர்வு இல்லாமல் பலரும் இங்கேயே தேங்கிவிடுகின்றனர். பிரம்மாஸ்திரா மூலம் நாங்கள் சுமார் 200 பேரை மற்ற நாடுகளுக்கு ஏரோஸ்பேஸ் உயர்கல்விக்காக அனுப்பி இருக்கிறோம்.”
எனினும், தமிழ்நாட்டில் இருந்து ஏரோஸ்பேஸ் படிக்கும் மாணவர்கள் குறைவானவர்களே. பின்தங்கிய நாடு என்று நாம் கருதும் நாடுகளில் இருந்தும், வடஇந்தியாவில் இருந்துமே பெரும்பாலானவர்கள் ஏரோஸ்பேஸ் படிக்க வருகின்றனர், என கள எதார்த்தை விளக்குகிறார்.
விண்வெளித்துறையில் தனி இடம் பிடித்துள்ள நிலையில் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ஸ்பேஸ் டியூட்டராக பிரம்மாஸ்திரா அனுமதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தொழில் வழிகாட்டி அனுபவமும் இருப்பதால் சில இன்குபேட்டர்களுக்கு தனிப்பட்ட முறையில் mentorஆக அதிக ஸ்டார்ட் அப்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
Drone pilot-களுக்கு லைசென்ஸ் கொடுக்கும் ஒரு அமைப்பை தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், அதே போல, இந்தியாவில் ஸ்பேஸ்க்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்காலக் கனவு. ஏரோஸ்பேஸ் சயின்ஸ்க்கு அதிக வேலைவாய்ப்பு இல்லை என்று பலரும் கருதுகின்றனர், அந்தத் துறை பற்றிய அறிவாற்றல் இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என்று நான் கருதுகின்றேன்.
“ஏரோஸ்பேஸ் துறையில் சாதிக்க நினைக்கும் கனவுடன் பலர் இருக்கின்றனர், ஆனால் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்கிற வழிகாட்டுதல் இல்லாமல் அவர்கள் டெலிவரிபாய்களாகவும், கிடைக்கும் வேலைக்கும் சென்று விடுகின்றனர். கனவுகளோடு தத்தளிப்பவர்களை சரியான கரையில் கொண்டு சேர்க்கும் களமாக பிரம்மாஸ்திரா செயல்படும். இதனையே என்னுடைய நோக்கமாக வைத்து செயல்படத் தொடங்கி இருக்கிறேன் என்று உத்வேகத்துடன் கூறுகிறார் இளம் தொழில்முனைவரான இவர்.
இஸ்ரோவில் பணிபுரிய ஆசைப்பட்டேன் ஆனால் இப்போது இஸ்ரோவில் மட்டும் இல்லாமல் DRDO, HAIL, NASA என பல அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தொழில் ரீதியாகப் பார்த்தால் எந்த நிதி முதலீடும் இல்லாமல் நேரத்தை மட்டுமே முதலீடாக்கியதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது, குடும்பத்தின் நிதி நிலைமை வலுவடைந்திருக்கிறது.
60 சதவிகித லாபத்தை நான் இப்போது பிரம்மாஸ்திரா மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறேன். நான் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பிய இடங்களிளெல்லாம் இப்போது அவர்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி இஸ்ரோவின் வழிகாட்டுதலுடன் இப்போது 7ம் வகுப்பு முதலான மாணவர்களுக்கும் ஏரோஸ்பேஸ் வகுப்புகள் மற்றும் பயிலரங்கங்களை எடுக்கத் தொடங்கி இருக்கிறேன்.
’ஏரோஸ்பேஸ் எட்டா ஸ்பேஸ் அல்ல’ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது திறமையானவர்களும் பலர் உள்ளனர் இவர்களை இணைக்கும் பாலமாக தொடர்ந்து பிரம்மாஸ்திரா இயங்கும் என்று கூறுகிறார் விண்வெளித் துறைக்கான வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சுபாஷ் குப்புசாமி.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…