நாளொன்றுக்கு 6 மில்லியன் சிகரெட் துண்டுகள்; மறுசுழற்சி செய்து சூழலைக் காக்கும் சகோதர்கள்
சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுடன் சேர்த்து, சுற்றியிப்பவர்களுக்கும் கேடு என்பதை தாண்டி சுற்றுப்புறத்துக்கும் பெரும் ஆபத்தை உண்டாக்கக்கூடியவை. ஆம், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.5 டிரில்லியன் சிகரெட்டின் கடைசி துண்டுகள் மண்ணில் துாக்கியெறியப் படிகின்றன. பெருகி வரும் இந்த சிக்கலை தீர்க்க எண்ணிய நமன் குப்தா, அவரது சகோதரர் விபுல் குப்தாவுடன் சேர்ந்து நாளொன்றுக்கு 6-7 மில்லியன் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்து, பொம்மை போன்ற நிலையான தயாரிப்புகளை உருவாக்கி வருகின்றனர்…
2018ம் ஆண்டு நொய்டாவை சேர்ந்த நமன் குப்தா, அவரது சகோதரர் விபுல் குப்தாவுடன் இணைந்து ரூ.15 முதல் 20 லட்ச முதலீட்டில். கோட் எஃபெர்ட் எனும் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து நிலையான தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனத்தை தொடங்கினார். ஆங்கிலத்தில் பட்ஸ் எனப்படும் சிகரெட்டின் நிராகரிக்கப்படும் முனைப்பகுதி துண்டுகள் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆதாரமாகும்.
சிகரெட் குப்பைகள் மற்றும் அவற்றை சரியாக எப்படி அப்புறப்படுத்துவது என்பது குறித்து பல சுகாதர அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், “கோட் எஃபெர்ட்” (Code Effort) ஒரு B2B நிறுவனமாக வேறுபட்ட அணுகுமுறையை கையிலெடுத்து, இந்த கழிவுகளை வணிக நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்கிறது. இந்த ஸ்டார்ட் அப் தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மறுசுழற்சி செய்யப்பட்ட சிகரெட் ஸ்டப்களிலிருந்து ஜவுளி, காகிதம், எழுதுபொருள், பரிசுப் பொருட்கள் மற்றும் பலவற்றை தயாரிக்கிறது. இன்று, நாளொன்றுக்கு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சிகரெட் ஸ்டப்களை மறுசுழற்சி செய்கிறது. எவ்வித நிதி திரட்டலுமின்றி சுயநிதியில் இயங்கும் நிறுவனம் 2022ம் ஆண்டு முதல் லாபகரமானதாக செயல்பட துவங்கியது.
“இந்த சிகரெட் துண்டுகள் வெறும் குப்பைகள் மட்டுமல்ல, அவற்றில் உள்ள ரசாயன கழிவுகள் மற்றும் புகையிலை எச்சங்கள் காரணமாக மண் மற்றும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. இந்த துண்டுகள் செல்லுலோஸ் அசிடேட்டால் ஆனவை. செல்லுலோஸ் மரக் கூழிலிருந்து வந்தாலும், அசிடேட் அடிப்படையில் அதை மக்காத பிளாஸ்டிக்காக மாற்றுகிறது,” என்று விளக்கினார் நமன் குப்தா.
நமன் குப்தா கல்லுாரி நாட்களிலிருந்தே சிகரெட் துண்டின் மறுசுழற்சியில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பி.காம் பட்டப்படிப்பின் 3ம் ஆண்டில், மறுசுழற்சி குறித்த ஆராய்ச்சி மற்றும் சோதனையில் அவரை ஈடுப்படுத்தி கொண்டார். இறுதியாக, 7 மாத சோதனைகளுக்கு பிறகு, முறையாக சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கினார்.
அதன் படி, துாக்கியெறியப்படும் சிகரெட் துண்டுகளில் மிச்சமுள்ள புகையிலை, அதன் காகிதஉறை, அதனுள் உள்ள பஞ்சு போன்ற செல்லுலோஸ் அசிடேட் என மூன்று வகைகளாக பிரிக்கிறார். புகையிலை உரமாக மாற்றப்படும் அதே வேளையில், துண்டுகளை சுற்றியுள்ள காகித உறையானது கொசுவிரட்டிகள் மற்றும் காகிதங்களை தயாரிக்கப் பயன்படுத்தபடுகிறது.
மேலும், செல்லுலோஸ் அசிடேட் நொய்டாவில் உள்ள கோட் எஃபர்ட்டின் உள்ளக இரசாயன சுத்திகரிப்பு நிலையத்தில் நூல் மற்றும் ஜவுளிக்கான இழைகளாக மாற்றப்படுகிறது.
“ரசாயன சிகிச்சையானது சிகரெட் துண்டில் எவ்வித தீங்கு விளைவிக்கும் எச்சமும் இல்லாமல் ஆக்குகிறது,” என்றார்.
கோட் எஃபெர்ட்டின் மறுசுழற்சி செயல்முறையானது கழிவுகளை சேகரிப்பிலிருந்தே தொடங்குகிறது என்றும், அதற்காக நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் V-Bins ஐ நிறுவி சிகரெட் துண்டுகளை சேகரிக்கிறது என்றும் தெரிவித்தார். NCR, மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட இந்தியாவின் பல இடங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட V-பின்களுடன், இந்த ஸ்டார்ட்அப் கழிவு சேகரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இது தவிர, 2,500க்கும் மேற்பட்ட குப்பை சேகரிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, சிகரெட் துண்டுகளை சேகரிப்பதில் அவர்களின் உதவியைப் பெறுகிறது.
“சிகரெட் துண்டுளை சேகரிப்பதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எங்களது V-பின்கள், சிகரெட் கடைகள், வணிக இடங்கள், நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் புகைபிடிக்கும் மண்டலங்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், எங்கள் மூலப்பொருட்களை அதன் மூலத்திலிருந்து சேகரிக்க முடிகிறது. மேலும், இது புகைப்பிடிப்பவர்கள் தங்களது சிகரெட் துண்டுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கழிவு மேலாண்மை அமைப்பில் குப்பை சேகரிப்பவர்கள் என்பவர்கள் பாரம்பரிய பங்குதாரர்கள். சிகரெட் துண்டுகளை சேகரிப்பதில் எங்களுக்கு உதவ நாங்கள் அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை வழங்குகிறோம்,” என்கிறார் நமன்.
சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்தபின் கிடைக்கும் ஃபைபர்களை கொண்டு புது தயாரிப்புகளை உருவாக்குவதற்கு கோட் எஃபெர்ட், நொய்டாவில் உள்ள நங்லி கிராமத்தில் வசிக்கும் பெண் கைவினைஞர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 30 வயதான கைவினை கலைஞரான வர்ஷா, திருமணத்திற்கு பிறகு நங்லி கிராமத்திற்கு குடிபெயர்ந்தபோது கோட் எஃபர்ட்டில் பணிபுரியத் தொடங்கினார்.
“இங்கே பலவகையான பொருட்களை தயாரிக்கக் கற்றுக்கொண்டேன். நன்றாக சம்பாதிக்கிறேன். கண்ணியத்துடன் வாழ்வதும் சம்பாதிப்பதும் நல்ல உணர்வை அளிக்கிறது,” என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.
எஃபர்ட்டில் பணிபுரியும் மற்றொரு கைவினை கலைஞரான 23 வயது ரஜினி கூறுகையில், “என் கணவரின் முழு சப்போர்ட் உடன் இந்த வேலை எனக்கு கிடைத்தது. கிடைக்கும் வருமானத்தின் மூலம், என் குடும்ப செலவுகளுக்கு என்னால் பங்களிக்க முடிகிறது,” என்றார்.
வேலையின் தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்களைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பை உறுதி செய்வது கோட் எஃபர்ட்டுக்கு ஒரு பெரிய கவலையாக உள்ளது.
“எங்களிடம் ISO 90001, 140001 மற்றும் GRS சான்றிதழ்கள் உள்ளன. அவை எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பு, தரம் மற்றும் நிலைத்தன்மைக்காக அரசாங்கத்தால் சான்றளிக்கப்படுகின்றன. ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குறிப்பாக சிகரெட் துண்டுகளை நேரடியாகக் கையாளும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எங்களிடம் ISO 450001 உள்ளது,” என்று நமன் கூறுகிறார்.
சிகரெட்டுகள், அவற்றின் தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழல் தாக்கத்தை மீறி, அதிக வரி விதிக்கப்படும் பொருளாகவும், அரசுக்கு குறிப்பிடத்தக்க வருவாயையும் ஈட்டித் தருகின்றன. கூடுதலாக, புகையிலை சாகுபடி இந்தியாவில் உள்ள பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது.
“சிகரெட்டை முறையாக அப்புறப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எப்போதும் எங்கள் வேலையின் ஒரு முக்கிய பகுதியாகும். 10 கிராம் ஸ்டப்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் நாங்கள் நிறுவனத்தை தொடங்கினோம். 10 கிராம் என்பது கிட்டத்தட்ட 30 முதல் 40 ஸ்டப்களுக்கு சமம். இன்று, ஒவ்வொரு நாளும் 6-7 மில்லியன் ஸ்டப்களைக் கையாளுகிறோம். இது மொத்த கழிவுகளில் சுமார் 2% மட்டுமே.“
வணிகங்களிலிருந்து பெரிய அளவிலான ஆர்டர்களை பெறுவதன் மூலம், கோட் எஃபர்ட் ஒரு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் தொழில்நுட்பத்தை மலேசியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளோம். இது உலகளாவிய பிரச்சினையாக இருப்பதால் உலகளவில் விரிவுபடுத்த விரும்புகிறோம்,” என்று கூறினார்.
இந்தியாவில் கோட் எஃபெர்ட் அதன் பணி வரிசையில் முதன்மையானவராக இருப்பதால், முடிந்தவரை பல நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அவர்களது வணிகத்தை விரிவுப்படுத்தி, சுற்றுச்சூழலின் பாதுகாப்பில் அதன் பங்கை பெருக்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
'மோகன்லால் முதல் பிரபலங்கள் வரை' - கெத்துகாட்டும் கேரள லேடி பவுன்சர் அனு குஞ்சுமோன்! மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால்…
🌱 வாழ்க்கையை மீட்டெடுக்க ஒரு பெண்… வாழ்க்கை முழுவதையும் மாற்ற ஒரு துணை – சரண்யா மற்றும் ரிகவரி ஹோம்…
Written by Pradeep Kumar | FounderStorys.com Today in Coimbatore, when someone says “Rajesh & Tile…
நிலத்தில் இருந்தே எழுந்தவர்: ‘ராஜேஷ் அண்ட் டைல் வார்க்’ நிறுவனர் திரு. ராஜேஷ் குமார் பிரதீப் குமார் எழுதுகிறார் |…
'11 ஆண்டுகளில்; 0 - 5 கோடி ரூபாய்' - வைரலான மிடில் கிளாஸ் இளைஞரின் வெற்றிக்கதை! கடனில்லாத வாழ்க்கை..…
18 ஆண்டுகள்; 7,80,000 கூடுகள்; குருவி இனங்களுக்கு வீட்டை உருவாக்கிய 'இந்தியாவின் நெஸ்ட்மேன்' விரைவான நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு…