தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோஷன் என்ற தனியார் நிறுவனம் இணைந்து, சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பான FIA-வின் மேற்பார்வையில் சென்னையில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், IRL எனப்படும் இந்தியன் ரேசிங் லீக் மற்றும் JK FLGBF4 ரேஸ் ஆகிய 3 பந்தயங்களை நடத்தியது.
இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயமான இது சென்னையில் ஆகஸ்ட் 31ம் தேதி இரவு தொடங்கியது. தெற்காசியாவில் முதன்முறையாக நடைபெறும் இந்த இரவுநேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இதில், 8 அணிகளின் சார்பாக 32 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். 5 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் சுற்று ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையிலும், இரண்டாவது சுற்று சென்னையிலும், மூன்றாவது சுற்று கோயம்புத்தூரிலும், நான்காவது சுற்று கோவாவிலும், ஐந்தாவது சுற்று கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கிறது. இந்த ஐந்து சுற்றுகளின் முடிவில், அதிக புள்ளிகளைப் பெறும் அணியினர் சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள்.
இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் நடந்த இரண்டாவது சுற்றில், வெற்றி பெற இயலாவிட்டாலும், மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சேத்தன் கொரொடா தான். காரணம், தனது இரண்டு கால்களையும் சிறுவயதிலேயே இழந்தபோதும், தொடர்ந்து தனது கடினமான பயிற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும், ஃபார்முலா கார் பந்தயங்களில் கலந்து கொண்டுவரும், இவர் நேற்றைய போட்டியிலும் கலந்து கொண்டு, குறைந்த நேர வித்தியாசத்திலேயே தனது வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்தப் போட்டியில் அவருக்கு 11வது இடம் கிடைத்துள்ளது.
இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் இத்தகைய போட்டிகளில் கடந்த 18 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.
பிறக்கும் போதே எலும்பு பிரச்சினையால், கால் பாதங்கள் சரிவர இயங்காத மாற்றுத்திறனாளியாகத்தான் இருந்துள்ளார் சேத்தன். அவருக்கு மூன்று வயது இருக்கும்போது, அவருடைய இருகால்களையும் எடுத்தாக வேண்டிய சூழல் உருவானது. இருகால்களும் எடுக்கப்பட்டதால், வாழ்நாள் முழுவதும் அவர் வீல்சேரில் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கும் என அவரது பெற்றோரும், உறவினர்களும் கவலைப்பட்டனர்.
ஆனால், எலும்பு கால்கள் இருந்தால் மட்டுமல்ல.. இரும்புக் கால்கள் இருந்தாலும் சாதிக்க முடியும் என தன் முயற்சியினாலும், பயிற்சியினாலும், அவர்களது கவலையை மாற்றி, தற்போது அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலைமைக்கு மாற்றி இருக்கிறார் சேத்தன்.
தொழில்நுட்ப உதவியுடன் தற்போது கார்பனால் செய்யப்பட்ட செயற்கைக் கால் பொருத்தப்பட்டு ஃபார்முலா கார் பந்தயங்களில் பங்குபெறும் அளவிற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார் அவர்.
“சிறுவயதில் இருந்தே விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். பள்ளி, கல்லூரி காலங்களில் டென்னிஸ், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வேன். அதேபோல், கார்கள் மீதும் காதல் அதிகம். ஒருமுறை நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்து கொண்டத் பற்றி, ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அதன்பிறகுதான் எனக்கும் கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் அதிகமானது. அந்த விளையாட்டிலும் சாதிக்க முடியும் என என்னுடைய குடும்பத்தினர் நம்பி ஆதரவு கொடுத்தனர்.“
செயற்கை கால்களுடன் போட்டியில் கலந்து கொள்ளும் வகையில், முறையான பயிற்சியை எடுத்திருக்கிறேன். செயற்கை கால் பொருத்தி இருந்தாலும், அதற்கென பிரத்யேகமாக காரில் எந்த மாற்றமும் செய்யாமல், மற்றவர்கள் பயன்படுத்துவது போலவே நானும் ரேஸ் காரை பயன்படுத்தி வருகிறேன். ஃபார்முலா கார்களை அதிகளவு பயன்படுத்தி பந்தயங்களில் பங்கேற்றுள்ளதால் ஃபார்முலா 4 காரை தைரியமாக ஓட்ட முடிகிறது.
கடந்த 18 வருடங்களாக நான் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறேன். இதுவரை, 250க்கும் மேற்பட்ட கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளேன். அது எனக்கு பல்வேறு அனுபவங்களை பெற்றுக் கொடுத்து வருகிறது. நான் கடந்த 2017ஆம் ஆண்டு ஃபார்முலா 16, கடந்த 2019ஆம் ஆண்டு ஃபார்முலா 13 ஆகிய போட்டிகளில் மூன்றாவது இடமும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற எம்ஆர்எப் தொடரில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளேன்,” என்கிறார் சேத்தன்.
“இரண்டு கால்களுமே இல்லை என்றாலும் கூட முறையான பயிற்சியும், மன உறுதியும் இருந்தால் எதையும் செய்யலாம். விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொள்ளக்கூடாது. எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும். நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன,“ என்கிறார்.
தனது சொந்த அனுபவம் மூலம், தற்போது தமிழக பாரா தடகள வீரர்களுக்கான அசோசியேஷனிலும் இளம் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வழிகாட்டி வருகிறார் சேத்தன்.
“நான் ரேஸில் கலந்துகொண்ட முதல் 3 ஆண்டுகளுக்கு நான் மாற்றுத்திறனாளி வீரர் என்பதே பலருக்கும் தெரியாது. பின்னர், அதனை தெரிந்து கொண்ட சக வீரர்கள் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், பரிதாபத்தின் வழி பாராட்டுகளை பெறுவதை எப்போதுமே வெறுக்கிறேன். என்னுடைய திறமையின் வழிதான் நான் கொண்டாடப்பட வேண்டும். எனக்கு அப்படி கொண்டாடத்தக்க திறமையிருப்பதாக நம்புகிறேன்,” என தன் ஒவ்வொரு வார்த்தையில் நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் சேத்தன்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…