உலகின் முதல் ‘கார்பன் நியூட்ரல் பேபி’ – தினேஷ்-ஜனகநந்தினி ஜோடியின் மரம் வளர்ப்பு மிஷன்!

மெட்டாவெர்ஸ் என்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு, கடந்தாண்டு தனது திருமண வரவேற்பை நவீன வடிவத்தில் கொடுத்து, மக்களை ஆச்சர்யப்படுத்திய சென்னையைச் சேர்ந்த தினேஷ், தற்போது தங்களது குழந்தையை உலகின் முதல் carbon-neutral baby என்ற பெருமைக்கு ஆளாக்கி இருக்கிறார்.

புவி வெப்பமாதல்… மனித குலத்திற்கு பெரும் சவாலாகி வரும் இயற்கை சார்ந்த அபாயங்களில் இதுவும் ஒன்று. அதனால்தான் ‘மரங்களை வெட்டாதீர்கள்… புதிய மரங்களை நடுங்கள்!’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

ஒவ்வொரு மனினும் தங்களது வாழ்நாளில் குறிப்பிட்ட அளவு ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொண்டு, கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். ஒரு வருடத்திற்கு ஒருவர் எவ்வளவு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறார் என்பதை ’கார்பன் புட் பிரிண்ட்’ மூலம் கணக்கிடுகிறார்கள்.

நாம் வெளியேற்றும் கார்பனை ஓரளவுதான் இந்த பூமியால் தாங்க முடியும். தற்போது அந்த எல்லையை நாம் தாண்டி வருகிறோம். அதனால்தான் ’க்ளோபல் வார்மிங்’ ஏற்படுகிறது.

நாம் வெளியேற்றும் கார்பனை மரங்கள்தான் மீண்டும் எடுத்துக் கொண்டு, நல்ல ஆக்ஸிஜனை நமக்குத் தருகிறது. அதனால்தான், காடுகளை அழிக்காதீர்கள், மரம் வளர்ப்பை ஊக்குவிப்போம் போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உலகளவில் நடந்து வருகிறது. ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்கள் நட பிசிசிஐ முடிவு செய்துள்ளதுகூட இந்த பிரச்சாரத்தின் ஒரு அங்கமே ஆகும்.

இப்படியாக ஆளாளுக்கு மரம் வளர்த்தலின் முக்கியத்தை உணர்ந்து வரும் நிலையில், தங்களது குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வித்தியாசமாகச் சிந்தித்து குழந்தை பிறந்ததுமே சுமார் ஆயிரம் மரங்களை நட்டு பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர் தினேஷ், ஜனகநந்தினி ஜோடி.

கார்பன் நியூட்ரல் பேபி ஐடியா உருவானது எப்படி?

தங்கள் குழந்தை எதிர்காலத்தில் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு அளவைக் கருத்தில் கொண்டு, இந்த ஆயிரம் மரங்களை நட்டதன் மூலம், உலகின் முதல் carbon-neutral baby என்ற பெருமையை தங்களது குழந்தைக்குப் பெற்றுத் தந்துள்ளனர் தினேஷ், ஜனகநந்தினி ஜோடி.

ஏற்கனவே மெட்டாவெர்ஸ் என்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு, கடந்தாண்டு தனது திருமண வரவேற்பை நவீன வடிவத்தில் கொடுத்து, புதிய வரலாறு படைத்தவர்கள் தான் இந்தத் தம்பதி. தற்போது கடந்த மார்ச் மாதம் பிறந்த தங்களது பெண் குழந்தை ஆதவியை ‘உலகின் முதல் கார்பன் நியூட்ரல் பேபி’ என்ற பெருமைக்கு ஆளாக்கி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

“என் குழந்தை பிறந்ததில் இருந்து இந்த பூமியில் வாழும் வரை எவ்வளவு கார்பனை வெளியேற்றுகிறாரோ, அதனை சமன் செய்வதுபோல் நாங்கள் மரங்களை நட்டுள்ளோம். அதாவது, குத்துமதிப்பாக அவள் ஒரு வருடத்திற்கு 12 டன் கார்பனை வெளியேற்றுகிறார் என்றால், அதனை சமன் செய்ய 1000 மரங்கள் தேவைப்படும். அதைத்தான் நாங்கள் இப்போது புதிதாக நட்டுள்ளோம்,” என்கிறார் தினேஷ்.

இதற்கு முன்னர், பலரும் இதுபோல் அவர்களது குழந்தை பிறந்தபோது மரங்களை நட்டுள்ளனர். ஆனால், இதுதான் காரணம் என யாரும் குறிப்பிட்டதில்லை. எனவே, உலகிலேயே முதல் கார்பன் நியூட்ரல் பேபி என்ற பெருமையை எங்கள் மகள் பெற்றுள்ளார். இது மக்களிடையே மரம் வளர்ப்பது பற்றிய நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

”இனி பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதே போல், கார்பன் நியூட்ரலை ஏற்படுத்துவது போல் அனைவரும் மரங்கள் நட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு,” என தங்களது திட்டம் குறித்துப் பேசுகிறார் தினேஷ்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல், இந்த கார்பன் நியூட்ரல் என்ற கான்செப்ட்டை, மற்றவர்களும் செயல்படுத்தும் வகையில், தனது ’சீராக்கு’ (Seerakku) என்ஜிஓ மூலம் ‘நோவா’ (NOVA) என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார் தினேஷ்.

இதற்கென தனியாக இணையதளம் ஒன்றை ஆரம்பித்திருப்பதோடு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடனும் கைகோர்த்து, புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இத்தனை மரங்கள் நடுவது என தங்களது திட்டத்தை இவர் செயல்படுத்தி வருகிறார்.

கார்பன் நியூட்ரலால் ஏற்படும் நன்மை?

“1000 கிலோ கார்பனை நாம் வெளியேற்றுகிறோம் என்றால் 50 மரங்களை நாம் வளர்த்தால், அதனை சமன் செய்ய முடியும். காவிரி மருத்துவமனையுடன் சேர்ந்து, அந்த மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு மரம் நட்டோம்.

மேலும், பல மருத்துவமனைகளிலும் எங்களது ’நோவா’ திட்டம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இது தவிர தமிழக அரசின் கவனத்திற்கும் எங்கள் நோவா திட்டத்தை கொண்டு சென்றிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 10 மரங்களாவது நட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.  

”புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு என்றில்லை, பெற்றோர்கள் தங்களது எந்த வயது குழந்தைகளுக்கும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து மரங்கள் வளர்க்கலாம். பெரியவர்கள் பெயரில் மரம் வளர்க்கவும் நாங்கள் உதவுகிறோம்…” என்கிறார் தினேஷ்.

இப்படி மரம் நடுபவர்களுக்கு தங்களது என்ஜிஓ மூலமாக சான்றிதழ் வழங்குகின்றனர். அதில், சம்பந்தப்பட்ட அந்தக் குழந்தை பெயரில் எந்தெந்த இடத்தில் எத்தனை மரங்கள் வளர்க்கப்படுகின்றன, அதைப் பராமரிக்கும் விவசாயிகள் யார் யார் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.

“எங்களது சீராக்கு என்ஜிஓ மூலமாக விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து, அவர்களில் யார் யார்க்கெல்லாம் அவர்களது நிலங்களில் மரங்களின் தேவை இருக்கிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொள்கிறோம். சில விவசாயிகளிடம் நிலம் இருக்கும், ஆனால் அதில் மரம் நடும் அளவிற்கு பொருளாதார நிலை இருக்காது. அப்படிப்பட்டவர்களை அணுகி, அவர்களுக்குத் தேவையான மரங்களை நாங்கள் நட்டுத் தருகிறோம்.”

விவசாயிகளுக்கு என்ன பலன்?

பெரும்பாலும் நிலம் தரும் விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் பலன் தருவது மாதிரியான மரங்களையே நாங்கள் இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்கிறோம். எங்கள் மகளுக்காக நட்ட மரங்களிலும்கூட எலுமிச்சை, கொய்யா போன்றவைதான் அதிகம். அப்போதுதான் வருடாவருடம் அந்த மரங்களில் இருந்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் பழங்களை அறுவடை செய்து பயன்பெற முடியும், என்கிறார் தினேஷ்.

தற்போது விவசாயிகளின் நிலம் மூலம் நோவா திட்டத்தை செயல்படுத்தி வரும் தினேஷ், விரைவில் தரிசாகக் கிடக்கும் அரசு நிலங்களிலும் மரங்கள் நடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தங்களது இந்த நோவா திட்டம் மூலம் விவசாயிகளுக்கும் புதிய வாழ்வாதாரம் கிடைக்கிறது, பூமிக்கும் நல்லது நடக்கிறது எனக் கூறுகிறார்.

“ஏற்கனவே என்எப்டி மூலம் தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல புராஜெக்ட்களை நாங்கள் செய்து வருகிறோம். என் மனைவி கர்ப்பமாக இருப்பது உறுதியானதும், எங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு பரிசைத் தந்து, அவரை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக்கினால் என்ன என்ற ஐடியா வந்தது. எனவே, எங்கள் திட்டத்திற்கு நோவா எனப் பெயரிட்டோம். நோவா என்றால் புதிய நட்சத்திரம் என்று பொருள்,” என்கிறார்.

எங்களது நோவா திட்டத்தின் கீழ் மரம் நடுபவர்களிடம் ரூ.200 மட்டுமே நாங்கள் கட்டணமாக வசூலிக்கிறோம். அதோடு மரம் நட்டதற்கான உரிய சான்றிதழும் வழங்குகிறோம். மரம் வைத்த முதல் ஓராண்டிற்கு, மரத்தின் வளர்ச்சியை அவ்வப்போது சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு நாங்கள் போட்டோ ஆதாரத்துடன் அப்டேட் செய்து கொண்டே இருப்போம். இதன் மூலம் அவர்கள் நட்ட மரம் எந்தளவிற்கு செழிப்பாக வளர்ந்து வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும், என்கிறார் தினேஷ்.

இவர்களது சீராக்கு இணையதளத்தில் பொதுமக்கள் நேரடியாக தங்களது கார்பன் புட் பிரிண்ட்டை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலம் ஒருவர் தனது வாழ்நாளில் எவ்வளவு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறார், அதனை சரி கட்ட எவ்வளவு மரங்களை நட வேண்டும் என்ற தகவல்களை நம்மால் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.

“மரங்கள் வளர்த்தால் இயற்கைக்கு நல்லது என்பதை மட்டும் மக்களுக்கு தெரியப்படுத்தாமல், அறிவியல் ரீதியாக ஒரு நபர் உயிர் வாழ எத்தனை மரங்கள் தேவைப்படும் போன்ற தகவல்கள் இந்த கார்பன் புட் பிரிண்ட் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். இதன் மூலம் இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும். இதற்கு எங்களது நோவா திட்டம் நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும்,”என நம்பிக்கையுடன் பேசுகிறார் தினேஷ்.

எதிர்கால சந்ததிக்கு பசுமை மிக்க சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தருவதற்கான

அஸ்திவாரமாகவே தினேஷின் இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. இது போன்ற முன்னெடுப்புகளை மற்றவர்களும் பின்பற்றும் பட்சத்தில், நிச்சயம் மீண்டும் புவி குளுமையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

2 months ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

2 months ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

4 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

4 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

4 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

4 months ago