வருமானம் ஈட்டுபவர்களாக மாறிய இல்லத்தலைவிகள் – பெண்கள் சொந்தக் காலில் நிற்க வழிகாட்டும் சென்னை அறக்கட்டளை!

சென்னை அறக்கட்டளை அளிக்கும் பயிற்சி

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் எஸ்.தீபலட்சுமி, பள்ளியில் கணித பாடத்தில் சிறந்து விளங்கியதை நினைவு கூர்கிறார். அவரது தோழிகளும் இதை அறிந்திருந்தனர். இருப்பினும், தேர்வுக்கு முன்பாக, பெரும்பாலும் நண்பர்கள் செய்வது போல அவரால் சிக்கலான கணித தேற்றங்கள் மற்றும் கணக்குகள் குறித்து தோழிகளுக்கு விளக்கம் அளிக்க முடிந்ததில்லை.

ஏனெனில், அவருக்கு எப்போதும் தனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களிடம் பேசுவதில் தயக்கம் இருந்தது.

“எனக்குள் எல்லாம் தெளிவாக இருந்தது. ஆனால், நான் பேசத் துவங்கியதுமே எல்லாமே குப்பையாகிவிடும்…” என்கிறார் தீபலட்சுமி.

இன்று இந்த 36 வயதான பெண்மணி, கோடம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அமைந்திருக்கும் நுண் கல்வி மையத்தின் தலைவராக இருக்கிறார். திருமணமான எட்டு ஆண்டுகளில் அவருக்கு கிடைத்த முதல் வேலை இது. இந்த வேலையை அவர் மிகவும் விரும்புகிறார்.

“ஒரு குழந்தை என்னால் புதிய ஒன்றை கற்றுக்கொள்வதை பார்க்கும் போது, என்னுடைய தயக்கம் மற்றும் அவநம்பிக்கை நிறைந்த ஆண்டுகள் கரைவதை, என்னிடம் இருந்ததாக நான் நினைக்காத உன்னத நோக்கத்தை  உணர்கிறேன்,” என்று சோஷியல் ஸ்டோரியிடம் தீபலட்சுமி கூறுகிறார்.

தீபாவை போலவே தமிழ்நாட்டின் பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் பின் தங்கிய பின்னணியைச் சேர்ந்த 275க்கும் மேற்பட்ட படித்த பெண்கள் முதல் முறையாக தங்கள் கல்லூரிப் படிப்படை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

சென்னையின் ’ஷ்ரத்தா மானு’ அறக்கட்டளையின் சி.இ.ஓ மதுமிதா நாராயணன் தான் இவர்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டியாக உருவாக்கி வருகிறார்.

இவர்களில் பலரும் முதல் முறையாக தங்கள் வீட்டிற்கு சம்பளத்தைக் கொண்டு வருபவர்கள், சில நேரங்களில் அவர்கள் கணவர்களை விட அதிக சம்பளமாகவும் இது இருக்கிறது. கிராமப்புற மற்றும் நகர்புற பின் தங்கிய குடும்பங்களில் இது மதிப்பாகவும், தன்னாட்சியாகவும் மாறுகிறது. வளரும் போது இவர்கள் மிக அரிதாக பெற்றிருந்த மதிப்புகள் இவை.

மதுமிதா நாராயணன், இத்தகைய திறமையாளர்களைக் கண்டறிவதற்கான தூண்டுதலாக இருந்தது அவரது வீட்டில் வேலை செய்த ரம்யா.  

”ஐந்தாண்டுகளுக்கு முன், ரம்யா ஒரு கையில் துடைப்பத்தை பிடித்துக்கொண்டு ஆங்கில நாளிதழை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததை மதுமிதா கவனித்தார். “அவரால் சரளமாக படித்து புரிந்து கொள்ள முடியுமா எனக் கேட்டபோது அவர் தான் ஒரு முதுகலை பட்டதாரி என தெரிவித்தார்” என்கிறார் மதுமிதா.

“அவரது பகுதியில் மேலும் பல பட்டதாரி பெண்கள், குடும்ப ஆதரவு, பயிற்சி இல்லாதது மற்றும் கலாச்சார நெறிகள் காரணமாக வீட்டிலேயே அம்மாக்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக அல்லது முழுநேரமும் தங்கள் மாமனார், மாமியாரை கவனித்துக்கொள்பவர்களாக இருப்பதை தெரிந்து கொண்டதும், மேலும் அதிசயம் அடைந்தேன். அதோடு, இவர்களில் பெரும்பாலானோரின் கணவர்கள், குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுபவர்கள் தினக்கூலி வேலை பார்ப்பவர்களாக இருக்கின்றனர்,” என்கிறார் மதுமிதா.

தமிழ்நாட்டில் ஷ்ரத்தா மானு அறக்கட்டளை, தொடக்கக் கல்வி பள்ளி மாணவர்களுக்காக பள்ளி முடிந்த பிறகான, அடிப்படை கல்வியறவு மற்று எண்ணிக்கையறிவு பாடத்திட்டம் (FLN) சார்ந்த வகுப்புகளை நடத்தி வருகிறது. குழந்தைகளை மையமாகக் கொண்ட குறிக்கோள்கள் கொண்டுள்ள இந்த பாடத்திட்டம் குழந்தைகளின் சிந்திக்கும், உணர்வு நோக்கிலான, கற்பனை சார்ந்த சமூக மற்றும் ஆன்மீக திறன்களை ஊக்குவித்து பரந்த நோக்கிலான, பல துறை சார்ந்த கற்றல் சூழலை உருவாக்கித்தருகிறது.    

அமெரிக்க உளவியல் வல்லுனரும், ஹார்வர்டு பட்டப்படிப்பு கல்லூரி பேராசிரியருமான ஹாவர்டு கார்ட்னர் உருவாக்கிய பலவேறு அறிவுகள் சார்ந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுகிறது.

2022-23 கல்வியாண்டில் இந்தத் திட்டம் 732 குழந்தைகளை சென்றடைந்தது. இந்த ஆண்டு 1,800 மாணவர்களை சென்றடைய திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், 2019ல் இந்த அறக்கட்டளை தனது பள்ளிக்கு பிந்தைய பாடத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு மேம்படுத்தக்கூடிய முழுநேர ஆசிரியர்களை பெற முடியாமல் தடுமாறியது. ஏனெனில், ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரிந்த பள்ளிகளின் வழக்கமான செயல்முறைக்கு பழகியிருந்தனர்.  

“வெளியே சென்று பணியாற்ற விரும்பிய இந்த பெண்களுக்கு பயிற்சி அளித்து, நமக்கும் உதவி செய்யும் வகையில், ஏன் நாமே சொந்த ஆசிரியர்களை உருவாக்கக் கூடாது என யோசித்தேன், ” என்கிறார் மதுமிதா.

சென்னையில் குறைந்த வருமானம் ஈட்டும் பகுதியில் ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் இந்த அறக்கட்டளை ஆசிரியர் பயிற்சித் திட்டம் ’உபாசனா’வை துவக்கியது. இதன் மூலம் தகுதி வாய்ந்த பெண் ஆசிரியர்கள் கிடைக்கத்துவங்கினர்.

இந்த பெண்களுக்கு, ஆங்கிலம், கணிதம், அறிவியல், மதிப்பு கல்வி ஆகியவை பல்வேறு முறைகளில் கற்றுத்தரப்படுகிறது. இந்த பயிற்சியில், பேச்சு, தர்கம், ஒருவருக்கு ஒருவர் இடையிலான உறவு, கைனஸ்தடிக், காட்சி மற்றும் இசை அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

ஆசிரியர்களுக்கான இந்த இலவச பயிற்சித் திட்டம் ஆறு மாதங்களுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

20 முதல் 20 பங்கேற்பாளர்களுக்கான மூன்று மாத கால ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி 150 மணி நேரம். அருகாமை பள்ளிகளில் மூன்று மாத பணி சார்ந்த பயிற்சி. வகுப்புகளை நிர்வகிக்கும் அனைத்து தகுதிகளும் இருப்பதை உறுதி செய்ய வழிகாட்டுதல்.

தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் நிதி சுதந்திரம் அளிப்பதாக அமைகிறது. வறுமை, குடும்ப சச்சரவு, மது உள்ளிட்ட பிரச்சனைகள் கொண்ட இல்லங்களில் வசிக்கும் பெண்களுக்கு இது முக்கியமாக அமைகிறது.

மேலும், பாரம்பரிய அமைப்பில், வீட்டை பார்த்துக்கொண்டு குழந்தைகளை பராமரித்து வருவது – அது மட்டுமே இவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது- திருமணத்திற்கு பின் இவர்கள் வேலைவாய்ப்பை பாதிக்கிறது.

சென்னையைச் சேர்ந்த 39 வயதான ஜெயசித்ரா, காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர், திருமணத்திற்கு பின் வீட்டிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால் தனது கனவை தள்ளி வைத்தார்.

ஐந்தாண்டுகளுக்கு முன், அவரது மகன் பள்ளியில் இருந்து உபாசனா பயிற்சி திட்ட கையேட்டை எடுத்து வந்த போது, அவர் அதில் விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார். வீட்டில் ஏற்பட்ட எதிர்ப்பை மீறி இப்போது அவர் சென்னை அரசுப் பள்ளி ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றுவதோடு, மாணவர்களுக்கு டியூஷனும் எடுக்கிறார்.

“மாலை நேரத்தில் சில மணி நேர பணிக்காக ரூ.7,500 கிடைக்கிறது. நான் விரும்பிய வகையில் என் வீட்டை நிர்வகிக்க இது போதுமானது. சின்னதோ, பெரிதோ எந்த செலவுக்காகவும் என் கணவரை இப்போது எதிர்பார்ப்பதில்லை,” என்கிறார் ஜெயசித்ரா.

உபாசனா திட்டத்தில் பயிற்சி பெற்ற பிறகு பல பெண்கள் திட்டத்திற்கு வெளியே உதவி ஆசிரியர்களாக பணிபுரிவதாக ஒப்புக்கொள்ளும் மதுமிதா இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்.

“உண்மையில் அவர்கள் பணிச் சூழலில் இணைந்து, சுய மரியாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்பதால், இதை செய்வதில் வெற்றி பெற்றுள்ளோம்,” என்கிறார்.

நாகப்பட்டினத்தில் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த 34 வயதான காயத்ரி வேல்முருகன் ஆங்கிலம் பேச முடியாததால், தன்னம்பிக்கை மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் பல வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறார்.

“நான் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டம் பெற்றிருந்தாலும், தமிழ் மீடியத்தில் படித்ததால் தொழில்முறை உலகில் நிலைத்து நிற்க முடியாது எனும், மனத்தடையால் பணி செய்வதற்கான துணிவை பெறவில்லை,” என்கிறார் காய்த்ரி.

2019ல் உபாசனாவின் முதல் பயிற்சி பிரிவில் இடம்பெற்ற காயத்ரி, ஆங்கிலம் பேசவும் கற்றுக்கொண்டார். இது துவக்கத்தில் மிகவும் கடினமாக இருந்தாலும் வழிகாட்டி தொடர்ந்து உன்னால் முடியும் எனச் சொல்லி ஊக்கம் அளித்துக்கொண்டிருந்தார். என்னால் முடியும் என என்னிடம் ஒருவர் கூறியது இதுவே முதல் முறை என்கிறார்.

இன்று காயத்ரி, செனை கோடம்பாக்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி மாதம் ரூ.10,000 பெறுகிறார்.

“என்னைப்பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்பதில் இது அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன், என் கணவரிடம் இருந்து அவரது பணத்தில் பரிசுகள் கிடைக்கும். இப்போது என் பணத்தில் அவருக்கு வாட்ச் வாங்கி கொடுத்தேன். நான் சமமாக உணர்கிறேன்,” என்கிறார் அவர்.

தற்போது, ஷரத்தா மானு அறக்கட்டளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநிலம் முழுவதும் 42 நுண் கற்றல் மையங்களை அமைத்து, அதன் ஆசிரியர்கள் பள்ளிக்கு பிந்தைய வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தினமும் மூன்று மணி நேரம் பணி செய்வதால், வீட்டு வேலைகளைக் கவனிக்க போதிய அவகாசம் உள்ளது. இந்தத் திட்டம் அதிக நிகரமதிப்பு கொண்ட தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களின் ஆதரவு இத்திட்டத்திற்கு உள்ளது என்று மதுமிதா கூறுகிறார்.

உபசானாவின் ஜூன் மாத பயிற்சியில் 24 பட்டதாரிகள் பயிற்சி பெறறனர்.

“இந்த ஆண்டு இறுதிக்குள் மையங்கள் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் மதுமிதா.

ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி | தமிழில்: சைபர் சிம்மன்

founderstorys

Recent Posts

Women-Quiz-Master-Saranya-Jayakumar-at-85-Years-Inspiration-Story

85 வயதிலும் கலக்கும் குவிஸ் மாஸ்டர் - எண்ணற்ற போட்டிகள்; கோப்பைகள் வென்ற சரண்யா ஜெயகுமார்! தீரா ஆர்வத்துடன் கூடிய…

2 hours ago

Failure-to-Success-CEO-of-AU-Bank-Sanjay-Agarwal-Success-Business-Story

8-வது ஃபெயில்; இன்று நிகர மதிப்பு $1 பில்லியன் - வங்கித்துறையில் சஞ்சய் அகர்வால் சாதித்தது எப்படி? பள்ளிப் படிப்பில்…

3 days ago

Protecting-from-Mohanlal-to-Many-Celebrities-Kerala-Lady-Bouncer-Anu-Kunjumon-Inspiration-Story

'மோகன்லால் முதல் பிரபலங்கள் வரை' - கெத்துகாட்டும் கேரள லேடி பவுன்சர் அனு குஞ்சுமோன்! மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால்…

5 days ago

Brothers-Who-Recycle-Millions-of-Cigarette-Butts-to-Products-Business-Social-Enterprise-Story

நாளொன்றுக்கு 6 மில்லியன் சிகரெட் துண்டுகள்; மறுசுழற்சி செய்து சூழலைக் காக்கும் சகோதர்கள் சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுடன் சேர்த்து, சுற்றியிப்பவர்களுக்கும்…

6 days ago

SARNIYA- RECOVERY HOME FOUNDATION – Chennai

🌱 வாழ்க்கையை மீட்டெடுக்க ஒரு பெண்… வாழ்க்கை முழுவதையும் மாற்ற ஒரு துணை – சரண்யா மற்றும் ரிகவரி ஹோம்…

2 weeks ago

From the Ground Up: The Rise of Rajesh Kumar, Founder of Rajesh & Tile Work and Team

Written by Pradeep Kumar | FounderStorys.com Today in Coimbatore, when someone says “Rajesh & Tile…

2 weeks ago