உலக அளவில் செயல்பட்டு வரும் முன்னணி டெக் நிறுவனங்கள் பெரிய அளவில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
ஐடி துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அடுத்த நாள் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் தான் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகின்றனர். இந்த போக்கு இந்தியாவில் இயங்கி வரும் ஸ்டார்ட்-அப் டெக் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தினமும் ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன.
இந்நிலையில், சீன இளைஞர்கள் உடல் உழைப்பு சார்ந்து தங்களுக்குப் பிடித்த வேலையை செய்வதற்காக அதிகளவில் ஊதியம் கிடைக்கும் வேலையை உதறி வருவதாக தகவல். கடந்த ஓராண்டு காலமாக அங்கு இளைஞர்கள் மத்தியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதாவது, ஒயிட்-காலர் வேலைகளுக்கு விடை கொடுத்து ப்ளூ-காலர் வேலையை உற்சாகத்துடன் அவர்கள் செய்து வருகின்றனர். அது குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டும் வருகின்றனர். இளைஞர்கள் மத்தியில் பணி சார்ந்து ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சீனாவில் இன்ஸ்டாகிராம் தளத்திற்கு மாற்றாக அறியப்படும் Xiaohongshu தளத்தில் அந்த பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. ‘உடல் உழைப்பு சார்ந்த முதல் வேலை’ என சீன இளைஞர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக சர்வர், தூய்மை பணியாளர், காசாளர், காஃபி கடையில் வேலை, ஃபாஸ்ட் ஃபுட் செஃப் என பல்வேறு இடங்களில் வேலை செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.
இது அனைத்தும் உடல் உழைப்பு சார்ந்த வேலை. குறிப்பாக இது மேனுவல் டாஸ்காக அமைந்துள்ளது. இதில் தங்களுக்கு மன நிறைவு கிடைப்பதாகவும் அவர்கள் தங்கள் பதிவுகளில் தெரிவித்துள்ளனர். ஏசி அறையில் கணினிக்கு முன்பு அமர்ந்தபடி செய்யும் வேளையில் கூட இந்த திருப்தி கிடைப்பதில்லை எனச் சொல்லி தங்கள் வேலை குறித்து இளைஞர்கள் நெகிழ்கின்றனர்.
‘நான் எந்த வேலையா இருந்தாலும் என் மனசுக்கு பிடிச்சா மட்டும் தான் செய்வேன்’ என சினிமா பட வசனம் போல பெருமையுடனும் அவர்கள் சொல்லி வருகின்றனர்.
“நான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து வெளியேறியதை எண்ணி நான் மகிழ்கிறேன். பணி செயல்பாடு சார்ந்த ரிப்போர்ட் கொடுப்பது குறித்து சங்கடம் கொள்ள தேவையில்லை. இப்போது நான் செய்வதெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் உணவு சமைத்துக் கொடுப்பது மட்டும் தான்,” என தனது சமூக வலைதள பதிவில் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர் இதற்கு முன்பாக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டேன்ஸில் பணியாற்றி உள்ளார். அந்த ஃபாஸ்ட் ஃபுட் கடையை அவர் தான் சொந்தமாக நடத்தி வருகிறார். நாள் ஒன்றுக்கு சுமார் 140 டாலர்கள் வருமானம் ஈட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அதிக சம்பளம் கிடைக்கும் கன்சல்டிங் வேலையை நான் துறந்துள்ளேன். அதன் மூலம் ஓயாமல் வரும் மின்னஞ்சல், நேர்காணல், பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் போன்றவற்றுக்கு விடை கொடுத்துள்ளேன். நான் பட்டம் முடித்துள்ளேன். இதற்கு முன்னர் செய்து வந்த அந்த பணியில் எனக்கு மன நிறைவு கிடைக்கவில்லை. ஒருவித வெறுமையான உணர்வு அதில் இருந்தது. நான் ஒரு மாற்றவல்ல தக்க திருகாணி (Screw) போல இயங்குகிறேன் என்பதை அந்த வேலையை செய்து புரிந்து கொண்டேன்.”
அதுவே உடல் சார்ந்த வேலைகளில் மன நிறைவு கிடைக்கிறது. அதை நான் அறிந்து கொண்ட அடுத்த நாளே முன்பு நான் பார்த்து வந்த வேலையை துறந்தேன். இந்த வேலையில் ஈடுபடும் போது ஒருவித புத்துணர்வு கிடைக்கிறது. அதனால் தான் காஃபி விற்பனை செய்யும் கடையில் மாத சம்பளத்திற்கு இப்போது பணி செய்து வருகிறேன்,” என தன் பதிவில் தெரிவித்துள்ளார் லியோனிங் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர்.
இப்படியே தங்களை உடல் சார்ந்து மாற்று முறை பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு வரும் இளைஞர்கள் தங்களது எண்ணத்தை பகிர்கின்றனர். ‘எங்கள் உடல் தான் இந்த வேலையில் சோர்வடைகிறது. மனம் அல்ல’ என ஒரே கருத்தை அவர்கள் முன்வைக்கின்றனர்.
“நிறைய கனவுகளுடன் ஒயிட்-காலர் பணியில் இளைஞர்கள் சேர்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அதில் ஏமாற்றம் மட்டுமே எஞ்சுகிறது. ஏனெனில், சில நிறுவனங்கள் அவர்களை கணினியை இயக்குவதற்காக மட்டுமே வேலையில் பணி அமர்த்துவதாக அவர்கள் உணர்கின்றனர்.
”அதைத் தாண்டி அவர்களுக்கு பெரிய அளவில் வேறு பெரிய அனுபவம்/கற்றலோ அந்த பணியில் கிடைப்பதில்லை. அதனால் இந்த மாற்றத்திற்கு இளைஞர்கள் தயாராகின்றனர்,” என்கிறார் பேராசிரியர் ஜியா மியாவ்.
மனிதர்களின் வாழ்வில் இலக்கிய படைப்புகள் இரண்டர கலந்தவை. அந்த வகையில் சீன இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் கடந்த 1919-ல் வெளியான ‘காங் யிஜி’ சிறுகதையுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. அந்த கதையில் பிரதான பாத்திரமான காங் யிஜி மெத்த படித்த அறிஞர். அவர் எந்த சூழலிலும் தான் அணிந்திருந்த அறிஞர்களுக்கான கவுனை கழட்டியது கிடையாது. அவரது கதாபாத்திரத்தை இப்போதைய சூழலுடன் ஒப்பிட்டு மீம் கன்டென்ட்கள் சீனர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
இளைஞர்கள் ‘காங் யிஜி’-யின் கவுனை துறந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏனெனில், சீனாவில் நிலவிவரும் வேலையின்மை விகிதம், வேலைவாய்ப்பு சந்தையில் உள்ள தேவையை காட்டிலும் அதிகம் படித்த தலைமுறையினர் என எதார்த்த சூழல் இருக்க கவர்ச்சி நிறைந்த ஒயிட் காலர் பணிகளுக்கு சீன இளைஞர்கள் குட்-பை சொல்வது இப்போதைக்கு தீர்வாக அமையும்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…