தற்போது உணவின் வெரைட்டிக்கு பஞ்சம் இல்லை. ஆனால் வீட்டில் சமைக்க முடியாது, ஆனால் வீட்டில் இருந்து கிடைத்தால் நன்றாக இருக்குமே என்னும் அளவுக்கு விழிப்புணர்வு உயர்ந்திருக்கிறது.

எல்லாருடைய வாழ்விலும் உணவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு காலத்தில் ஓட்டலுக்கு செல்வது என்பது எப்போதாவது நடக்கும் அபூர்வ நிகழ்வாக இருந்தது. பொருளாதாரம் வளர வளர ஓட்டலுக்கு செல்வது என்பது அடிக்கடி நடக்கும் வாடிக்கையாக மாறியது.

ஆனால், கோவிட் வந்த பிறகு வீட்டு உணவுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பற்றிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே Cookr நிறுவனம்.

இந்த ஸ்டார்ட்-அப், வீடுகளில் சமைத்து கொடுக்கப்பட்ட உணவை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ள உதவுகிறது. வீடுகளில் சமைப்பதாக இருந்தாலும் அதற்கென தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு நகரங்களிலும் உள்ளவர்கள் அந்த நகரத்தில் உள்ள சிறப்பு உணவுகளை ஆப் மூலம் ஆர்டர் செய்து வீடுகளில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

இப்போதைக்கு கோவை, மதுரை, திருச்சி, ஒசூர், சிதம்பரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் இந்த செயலியின் செயல்பாடு இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் புதுச்சேரி மற்றும் சென்னையில் அறிமுகம் செய்ய குக்கர் திட்டமிட்டிருக்கிறது.

சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய சரவணகுமார் கந்தசாமி, நிர்மல் குமார் முத்து மற்றும் பிரபா சந்தானகிருஷ்ணா ஆகிய நண்பர்கள் ஓசூரை தலைமையாக இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு மில்லியன் டாலர் பிரீ சீட் நிதியை பெற்றனர். எம்.2பி நிறுவனர்கள், தி சோசியல் கம்பெனி நிறுவனர், அமேசான், மைக்ரோசாப்ட், டைட்டன் இண்டெல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிறுவனர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் நிறுவனர்களிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. உணவு ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் பல ஓட்டல்கள் இருக்கின்றன. அங்கே ஆர்டர் செய்யலாமே? எதற்கு ‘Cookr’ என்னும் கேள்விக்கு, விரிவாக பதில் அளித்தானர் நிறுவனர்கள்.

“கோவிட் வந்தபோது நான் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது வீட்டில் இருந்து உணவு கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருந்தன. வீட்டு சாப்பாட்டுக்கு மாற்று கிடையாது என்பது அப்போதுதான் தோன்றியது. அதனால் அனைவரும் வீட்டில் சமைப்பது என்பது தற்போதைய சூழலில் முடியாது. இந்த இடைவெளியை நாம் நிரப்பினால் என்ன என்னும் ஐடியாவில் உருவானதுதான் Cookr,” என பதில் அளித்தார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரபா.

தற்போது உணவின் வெரைட்டிக்கு பஞ்சம் இல்லை. வீட்டில் சமைப்பது கஷ்டமாக இருக்கும் இந்த காலத்திலும், வீட்டில் இருந்து சாப்பாடு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது மறுக்கமுடியாது. மருத்துவமனையில் இருப்பவர்கள். படிக்க அல்லது வேலைக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என வீட்டில் சமைக்கப்படும் உணவுக்கு பெரிய தேவை இருக்கிறது.

வீட்டு உணவுக்குத் தேவை இருக்கிறது. அதேபோல, நன்றாக சமைக்கும் பலர் (பெரும்பாலான பெண்கள்) குடும்பச் சூழல் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். ‘Cookr’ செயலி இவர்களை இணைக்கிறது.

எங்கள் செயலி மூலம் சமையலில் ஆர்வம் இருப்பவர்கள் இணைந்துகொள்ள முடியும். அவர்களால் என்னென்ன சமைக்க முடியும், அவர்களின் கிச்சன் எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்ட சோதனைகளை முடித்த பிறகு அவர்களை எங்களுடன் இணைப்போம்.

சில கிச்சன்களில் சைவம் மற்றும் அசைவம் இரண்டுமே சமைக்கப்படும். சிலர் சைவம் மட்டுமே சமைப்பார்கள். அதுபோன்றவர்களையும் நாங்கள் எங்கள் ஆப்’ல் பிரித்து வகைப்படுத்தி இருப்போம்.

ஓட்டலுக்கு போய் சாப்பிடுவது என்பது அனுபவத்துக்காக சாப்பிடுகிறோம். ஆனால், இன்றைக்கு அலுவலகத்துக்கு சாப்பாடு வேண்டும் என்றால் நமக்கு காலையிலே தெரிந்துவிடும். அதனால் எங்களுடையவை முன்கூட்டியே ஆர்டர் செய்தால் மட்டுமே டெலிவரி செய்யப்படும்.

உதாரணத்துக்கு நாலை காலை என்னிடம் இந்த மெனு இருக்கும் என ஒரு குக் அப்லோட் செய்வார். குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்கு முன்பு ஆர்டர் செய்யப்பட்டால்தான் அதனை சரியான நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். தவிர உணவும் வீணாகாது.

வீடுகளில் சமைத்து வைத்தால் மட்டுமே போதும் எங்களுடைய டெலிவரி பார்ட்னர்கள் உரிய இடத்தில் உணவினை கொடுத்துவிடுவார்கள்.

உணவு மட்டுமில்லாமல், வீட்டில் தயாரித்த பொடி, மாவு வகைகள் ஊறுகாய், அதிரசம் என அனைத்து பொருட்களையும் எங்கள் செயலி மூலம் வாங்க முடியும். தயாரிப்பாளர்களுக்கு வாரம் ஒருமுறை பேமெண்ட் வழங்கிவிடுவோம்.

இதுவரை, 400க்கும் மேற்பட்டவர்களை எங்களுடன் இணைத்திருக்கிறோம். 2 லட்சம் நபர்களை இணைக்க வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு என நிறுவனர்கள் தெரிவித்தனர்.

ஏன் சிறிய நகரம்?

வழக்கமாக பெரு நகரங்களில்தான் ஒரு புராடக்ட் அறிமுகம் இருக்கும். ஆனால், சிறு நகரங்களில் உங்களுடைய சேவையை தொடங்கி இருக்கிறீர்களே என்னும் கேள்விக்கு?

“சிறு நகரங்களில் இதனை செயல்படுத்தி இதில் இருக்கும் சிக்கல்களை தெரிந்துகொள்ளலாம் என நினைத்தோம். பெரிய நகரங்களில் அறிமுகம் செய்வது சவாலானது. தவிர தவறு நடத்தால் அதனை திருத்திக்கொள்ள முடியாது. அடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். தற்போது கிடைத்திருக்கும் நிதியை விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்த இருக்கிறோம். இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யும் இலக்குடன் செயல்பட்டுவருகிறோம்,” என்றனர்.

ஓட்டல்களில் சமைக்கப்படுவது என்பது Fast cooking ஆனால் வீடுகளில் நிறுத்தி நிதானமாக சமைக்கப்படும். அதனால் சுவையும் ஆரோக்கியம் இரண்டுமே கிடைக்கிறது.

பெரும்பாலானவை முன்கூட்டியே ஆர்டர் செய்யப்படுவை என்பதால் இங்கு உணவு வீணாவதில்லை. வீடுகளில் உள்ளவர்களுக்கு வருமான வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக மூன்று வேளையும் கடையில் மட்டுமே சாப்பிட வேண்டும் என்னும் சூழலில் இருப்பவர்களுக்கு முக்கிய மாற்றாக நாங்கள் இருக்கிறோம். ’குக்கர்’ செயலி மூலம் பல சிக்கல்களுக்கு தீர்வு கண்டறிந்திருக்கிறோம் என நிறுவனர்கள் தெரிவித்தார்கள்.

தினசரி ஆர்ட்ர்கள் மற்றும் வருமானம் குறித்த கேள்விக்கு, செயல்பாட்டுக்கு வந்து சில மாதங்கள் மட்டுமே ஆகிறது என்பதால் இப்போதைக்கு என்ன ஆர்டர் வருகிறது என்பதை இப்போதைக்கு பகிரவில்லை எனக்கூறினர்.

தற்போது ஒரு மில்லியன் டாலர் நிதியை பெற்றிருக்கிறோம். இந்த நிதியை சிறப்பாக பயன்படுத்தி விரிவடைய வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது என குக்கர் நிறுவனர்கள் தெரிவித்தனர்.

founderstorys

Share
Published by
founderstorys

Recent Posts

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

1 month ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

1 month ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

2 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

2 months ago

Byju’s-Learning App

Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…

2 months ago

Standup-Comedian-Disabled-Shwetha

நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…

2 months ago