74வது வயதில் மினியேச்சர் மாடல்களை உருவாக்கும் கனவை நனவாக்கியுள்ளார். ஆம், சந்திரயான்- 1, 2, 3 முதல் ககன்யான் வரையிலான இஸ்ரோவின் அனைத்து ராக்கெட்களின் மாதிரிகளை மினியேச்சர் வெர்ஷனில் உருவாக்கி ஆண்டுக்கு ரூ.6 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்.
ராம்ஜிக்கு மினியேச்சர் மாடல்கள் மீதான காதல் எப்போது பிறந்தது என்பைத அறிந்துக் கொள்ள, நாம் 1950களின் காலத்தை ரீவைண்ட் செய்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழமனேரி என்ற சிறிய கிராமத்திற்குப் பயணப்பட வேண்டும்.
5 மகன்களில் ஒருவரான ராம்ஜி, கிராமத்தில் உள்ள அவரது தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். காவேரி ஆற்றங்கரை அருகில் அவர்களது வீடு அமைந்திருந்ததால், சிறுவனான அவருக்கு அப்போது அதிகம் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், புனேவில் பணிபுரியும் பொறியாளரான ராம்ஜியின் தந்தை, அவருக்கு எட்டு வயது இருக்கும் போது அவருக்கு மெக்கானோ செட் (ஒரு மாதிரி கட்டுமான அமைப்பு) ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
“1952ம் ஆண்டு என் அப்பா மெக்கானோ செட் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். இன்ஜீனியரிங் மற்றும் மினியேச்சர் மாடல்கள் தயாரிப்பதில் எனக்கிருக்கும் ஆர்வம் அப்போது தான் துளிர்விட்டது. அந்த மெக்கானோ செட் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல மணிநேரம் இந்த செட்டை வைத்து வெவ்வேறு மாடல்களை உருவாக்குவேன்.”
இந்த செட், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். விலை உயர்ந்தது. என் அப்பா அவரது ரூ.300 மாதச் சம்பளத்திலிருந்து ரூ.40-க்கு இந்த செட்டை வாங்கி உள்ளார். மெக்கானோ செட்டை ராம்ஜி எந்நேரமும் வைத்துக் கொண்டிருப்பதை பார்த்த, சிவில் இன்ஜினியரான அவரது தாத்தா, அடுத்த ஆண்டே சில மரக்கருவிகள் மற்றும் கட்டங்கள் அமைக்க உதவும் ப்ளாக்சை வாங்கிk கொடுத்துள்ளார்.
சில ஆண்டுகள் கழித்து, அவரது தந்தை அவருக்கு சில பொறியியல் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். இன்றைய ராம்ஜியின் தொழிலுக்கு அஸ்திவாரங்கள் போட்டது இவையெல்லாம் தான். பின்னாளில், மாடல் மேக்கிங் மற்றும் இன்ஜினியரிங் மீதான ஆர்வம் பெருக்கெடுத்ததில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள புனேவிற்கு சென்றுள்ளார்.
“1961-62ம் ஆண்டில் என் அப்பா 2 ரூபாய்க்கு வாங்கி கொடுத்த 4 பொறியியல் புத்தகங்கள் எனக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டின. அந்தப் புத்தகங்கள் தான் என்னுடைய பைபிள். இன்றும் அதையும், மெக்கானோவையும் பத்திரமாக வைத்திருக்கிறேன்,” என்றார் 79 வயதான ராம்ஜி
புனேவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர், அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்பது அவரது தந்தையின் ஆசையாக இருந்தது. ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. அவரது பால்ய வயது கனவான மாடல்கள் தயாரிப்பதை தொழிலாக்கலாம் என்றால், அந்நேரத்தில் அத்தொழில் வணிக ரீதியாக லாபகரமானதாக இல்லை. அதனால், மரவேலை பணியைத் தேர்ந்தெடுத்தார்.
இன்ஜினியரிங் படிப்பு முடிந்ததும், மரப்பட்டறையில் தொழில் கற்கத் தொடங்கியுள்ளார். பின், 1968ம் ஆண்டு புனேவில் மரவேலை செய்யும் தொழிலைத் தொடங்கியுள்ளார். வீடுகளுக்கு இன்டீரியர் டிசைனிங் செய்ததுடன், ஃபர்னிச்சர் தயாரித்து விற்பனைச் செய்துள்ளார். புனேவிலிருந்து பெங்களூருக்கு இடம்பெயரவே, அங்கும் தொழிலை தொடர்ந்தார்.
“பெங்களூரில் தொழிலைக் கட்டமைத்தோம். வணிகம் செழித்தது. எங்களிடம் கிட்டத்தட்ட 150 பேர் வேலை செய்தார்கள். நாங்கள் பலவிதமான ஃபர்னிச்சர்கள் தயாரித்ததுடன் பல வீடுகளின் உட்புற வடிவமைப்பில் ஈடுபட்டோம். இருப்பினும், சில நிதி சிக்கல்களால் கடையை மூட வேண்டியிருந்தது,” என்றார்.
அதுநாள் வரை வாழ்வில் எந்த சிரமங்களுக்கும் ஆளாகாதவர் முதன் முறையாக சிறு சறுக்கலை சந்தித்தார். அந்நிலையயும் வீடுகளுக்கு இன்டீரியர் டிசைனிங் கன்சல்டன்டாக இருந்து லாவகமாக சரிச்செய்துள்ளார். ஊர் விட்டு ஊர் சென்றாலும், தொழில் பல கற்றாலும் அவரது பால்ய கால கனவான மாடல் தயாரிப்பு மனதில் என்றும் மறையாதிருந்தது.
மைசூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, அவர் சிறிய மாதிரியான ரயில்கள் மற்றும் ராக்கெட்டுகளை வீட்டிலேயே உருவாக்கத் தொடங்கினார். ஓய்வு நேரத்தில் செய்யத் துவங்கிய பழக்கம், காலப்போக்கில் அதிகரித்து நூற்றுக்கணக்கான மாடல்களை செய்து அவரது வீட்டில் வைத்தார்.
2018ம் ஆண்டும், ராம்ஜி உருவாக்கிய இஸ்ரோவின் ராக்கெட் மாதிரி அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.
“ஒரு முறை இஸ்ரோ ராக்கெட்டின் பித்தளை மாதிரியை உருவாக்கினேன். இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள திறன் உருவாக்கம் மற்றும் பொது அவுட்ரீச் (CBPO) குழு அம்மாதிரியை கண்டு மகிழ்ச்சியடைந்து என்னை மீட்டிங்கிற்கு அழைத்தனர். இஸ்ரோவிற்காக அதிக ராக்கெட் மாடல்களை உருவாக்க வேண்டும் என்றனர். அதுவே எனது கனவு நனவாகியதற்கான தொடக்கம்,” என்கிறார் ராம்ஜி.
மைசூருவில் உள்ள அவரது நண்பரது தொழிற்சாலையில் ஒரு பகுதியை அவரது மாதிரிகள் உருவாக்குவதற்கான தளமாக்கி, ‘கிராப்டிஸன் இன்ஜினியரிங் மாடல்ஸ்’ (‘Craftizan Engineering models’) எனும் பெயரில் நிறுவனத்தை தொடங்கினார். அவரது முதல் ஆர்டரே இஸ்ரோவிலிருந்து தான்.
இஸ்ரோ அதன் ராக்கெட் மற்றும் இதர கருவிகளின் மாதிரிகளை உருவாக்க ஆர்டர்களை குவித்தது. 50-75 அடி உயர மாடல்கள் முதல் 1:2 அளவிலான மாடல்களையும் உருவாக்கினார். சந்திரயான்-1, 2, 3 முதல் ககன்யான் வரையிலான இஸ்ரோவின் அனைத்து ராக்கெட்களின் மாதிரிகளையும் ராம்ஜி உருவாக்கினார். இஸ்ரோவைத் தவிர, பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் தனியார் டீலர்களுக்கும் ராக்கெட்டுகளை வடிவமைத்து அளித்தார்.
அவரது வீட்டில் கைவினைத் தொழிலாகத் தொடங்கியது, இன்று வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் என 50 பேர் கொண்ட குழுவைக் கொண்டுள்ளார். அவர் உருவாக்கிய ரயில் மாதிரிகளை, மைசூர் ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
“இஸ்ரோ ஆன் வீல்ஸ்‘ எனும் கான்செப்டில் விண்வெளி அமைப்பின் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளால் நிரப்பப்பட்ட 6 பேருந்துகளை மாதிரிகளை நாங்கள் வடிவமைத்தோம். உண்மையில், இஸ்ரோ அற்புதமான ஆதரவை அளித்தது. அவர்களுக்காக இஸ்ரோவின் வரலாற்றை விவரிக்கும் சுவர் அருங்காட்சியகத்தை நாங்கள் உருவாக்கினோம். சிலர் தனியார் பல்கலைகழகங்கள் சுவர் அருங்காட்சியகத்தை அவர்களது மையத்தில் அமைக்க முன்வந்துள்ளன. ஆனால், அதை அரசுப் பள்ளிகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.
மகாராஷ்டிராவில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் காட்சிப்படுத்த, அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இப்போது அகமதாபாத்தில் உள்ள சயின்ஸ் சிட்டி, கோயம்புத்தூர் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை சவிதா பல்கலைக்கழகத்தில் சுவர் அருங்காட்சியகங்களை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறோம். இன்று எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. போதுமான வேலைகள் கிடைக்கின்றன.
”மாதத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஆர்டர்களை பெறுகிறோம். விரைவில், தொழிலை விரிவுபடுத்தும் திட்டத்திலும் உள்ளோம். இதற்கு அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா திட்டமும் ஒரு வகையில் உதவி செய்து, நாங்கள் பெரிய அளவில் முன்னேறுவதற்கு பாதை அமைத்து கொடுத்தது,” என்று மனமகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் ராம்ஜி.
ஒரு 30வயது இளைஞனின் ஆற்றலுடன் ராம்ஜி வலம் வருவது வியப்பில் ஆழ்த்தும் அதே வேளை ஊக்கமும் அளிக்கிறது. தொழிற்சாலையில் காலை 9 மணிக்கு தொடங்கும் அவரது பணி இரவு 7-8 மணி வரை நீடிக்கின்றது. ஆனால், அவர் அதற்காக சோர்வுறவில்லை, ஓய்வு பெறும் திட்டத்திலுமில்லை. மாறாக, நீண்ட நாள் வாய்ப்புகளுக்காக காத்திருந்த அவர், அதற்கான நேரம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் பணிச் செய்துவருகிறார்.
“காலை எழுந்து தொழிற்சாலைக்கு சென்று, கர்நாடக இசை பின்னணியில் ஒலிக்க செய்தவுடன், என் அன்றைய நாளுக்கான பணித் துவங்கிவிடும்.
வயது எண்ணிக்கையெல்லாம் நான் நினைவில் கொள்ளவில்லை. அரை தகாப்தமாக இதற்காக தான் நான் காத்துக் கொண்டிருந்தேன். 365 நாட்களுமே வேலை செய்ய விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் புதுப்புது மாடல்களை உருவாக்குவதால், ஒவ்வொரு நாளும் புது விடியலாகவே இருக்கிறது. மாடல் தயாரிப்பது இன்று வணிக ரீதியாக சாத்தியமாகியுள்ளது. சீனப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொம்மைகளுக்கான உதிரிபாகங்களை தயாரிப்பதற்கான உலோக அச்சுகளை தயாரிக்க முடிவெடுத்துள்ளோம்.
ஆனால், இவையெல்லாம் எனக்கு போதாது. இதுவரை நான் செய்ய விரும்பிய வேலைகளில் 10 சதவிகிதம் மட்டுமே செய்துள்ளேன். அதில், 90% மிச்சமுள்ளது. குழந்தைகள் இந்தத் துறையில் ஆர்வம் காட்டவேண்டும். குழந்தைகள் கற்பூரம் போல் கற்றுக்கொடுப்பதை உடனே கற்றுக்கொள்வர். அவர்களுக்காக அவர்களுக்கு மாடல்கள் தயாரிப்பதில் ஆர்வத்தையை ஏற்படுத்த எனக்கு கிடைத்த மெக்கானோவை செட் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. அது அவர்களுக்கு அடிப்படை பொறியியல் திறன்களைக் கற்பிக்கும்,” என்கிறார்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…