காலை 11 மணி… பெங்களூருவில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிலர் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர், சிலர் இரத்த பரிசோதனைக்கான முடிவுகளுக்காகவும், மருத்துவரின் ஆலோசனைக்காகவும் காத்திருந்தனர். ஏதாவது ஒரு தினத்தன்று மட்டும் இக்கூட்டம் நிரம்புவதில்லை, பெங்களூருவின் சாந்திநகரில் அமைந்துள்ள அனாஹத் கிளினிக்கின் வழக்கமான காட்சியே இதுதான்.
ஏனெனில், தாய்-மகள் கூட்டணியான ராணி தேசாய் (70) மற்றும் பிரியா (40) ஆகியோரால் 2022ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அனாஹத் கிளினிக், நகர்ப்புற ஏழை மக்களுக்கு ஆரம்ப மற்றும் நோய் தடுப்பு மருத்துவ வசதிகளை வழங்கி அவர்களது வாழ்வினை ஆரோக்கியமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நோய் தடுப்பு மற்றும் ஆலோசனை வழங்கி இலவச சிகிச்சையை அளிக்கிறது. சுகாதார முகாம்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அனாஹத் அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது இந்த கிளினிக்.
கர்நாடக தனியார் மருத்துவ நிறுவனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த கிளினிக், இதுவரை 11,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கியுள்ளது.
“அனைவருக்கும் முதன்மை மற்றும் தடுப்பு சுகாதாரம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். ஏனெனில், அதுவே நமது மருத்துவ முறையின் அடித்தளம். மக்களை ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வைத்திருக்க ஆரம்பக் கட்ட நோயறிதல் முக்கியம். இதன்மூலம், பல்வேறு உடல்நல பிரச்னைகள் அதிகரிப்பதை தடுக்க முடியும்,” என்றார் பிரியா.
இதழியலில் பட்டப்படிப்பை முடித்துள்ள பிரியா, படித்து முடித்தபின் விளம்பரத்துறையில் காபிரைட்டராக பணியாற்றத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் பணிப்புரிந்த நிலையில், அவர் தனது, ‘உள் அழைப்பை’ பின்பற்றி சமூக மேம்பாட்டுத் துறைக்கு மாறியுள்ளார்.
விளம்பரத்தில் இருந்து சமூக மேம்பாட்டுத் துறைக்கு மாறியதைப் பற்றி அவர் கூறுகையில்,
“சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றைச் செய்ய விரும்பினேன்,” என்றார்.
கடந்த 15 ஆண்டுகளாக, சமூக மேம்பாட்டுத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், இந்தியா வாட்டர் போர்ட்டல், அர்க்கியம் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து தண்ணீர் பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
பொது சேவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பல காரணங்களில் ஒன்று, மருத்துவத் துறையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரது தாயின் விருப்பம் தான். பொதுச் சேவையில் அவர்களிடமிருக்கும் பொதுவான ஆர்வமே 2017ம் ஆண்டு ‘அனாஹத் அறக்கட்டளை’யைத் தொடங்கும் எண்ணத்தை ஏற்படுத்தியதாக பிரியா பகிர்ந்தார்.
சுகாதார முகாம்களை நடத்தும்போது, கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர்கள் கவனித்தனர்.
“மருத்துவ முகாம்களை அடிக்கடி நடத்த இயலாததால், நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக சிகிச்சையை வழங்குவது ஒரு சவாலாக இருந்தது,” என்றார்.
உளவியல் பட்டதாரியான ராணி தேசாய் அவரது படிப்பை முடித்தவுடன் விளம்பரத்துறையில் சேர்ந்தார். இருப்பினும், அவர் எப்போதும் சுகாதாரத்துறையில் பணியாற்ற எண்ணினார். பின்னர், பயோகான் அறக்கட்டளையின் தலைவராக 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். பெங்களூருவில் உள்ள ‘குடும்பா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தன்னார்வலராகவும் உள்ளார்.
“என்னுடைய அம்மா மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். பள்ளி பருவத்தில் அவருடன் சேர்ந்து மருத்துவமனைக்கு செல்வேன். அவருக்கு ஷிப்ட் முடிவடையும் வரை நான் அங்கேயே அமர்ந்திருப்பேன். அந்த நேரத்தில், அவரது பணிகளை எவ்வாறு செய்கிறார் என்பதை கவனித்து கொண்டிருப்பேன். அங்கிருந்து தான் இந்தத் துறையில் ஈடுப்படுவதற்கான ஆர்வம் பிறந்தது என்று நம்புகிறேன்,” என்கிறார் ராணி.
அறக்கட்டளையில், ராணி செயல்பாடுகள் மற்றும் பொது சுகாதார திட்டங்களை நிர்வகிக்கிறார். மேலும், பிரியா தகவல் தொடர்பு மற்றும் அறக்கட்டளைக்கான நிதியைக் கையாளுகிறார்.
“பொது சுகாதார அமைப்பில் உள்ள வளங்களின் பற்றாக்குறையால், இலவச சுகாதாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. அதனால், நாங்கள் முதலில் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டியிருந்தது. நிதியை நிர்வகிப்பது மற்றொரு பெரிய சவாலாக உள்ளது. முன்பு, எங்களிடம் போதுமான நிதியில்லை, ஆனால் இப்போது நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். இருப்பினும், நிதி இன்னும் ஒரு சவாலாகவே இருக்கிறது,” என்றார் ராணி. தரமான ஆரம்ப சுகாதாரம் இலவசமாகவும், அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இலவச மருத்துவ சிகிச்சை இல்லாமை மற்றும் ஆரம்பக்கட்ட நோயறிதலை கண்டறியவில்லையெனில் ஏற்படும் விளைவினை உண்மை சம்பவத்தை கூறி பிரியா எடுத்துரைகையில், “65 வயதான கழிவுகளை அகற்றும் தொழிலாளி ஆறுமுகம். அவரது காலில் தொற்று மற்றும் வீக்கத்துடன் சிகிச்சைக்கு வந்தார். போதிய மருத்துவ வசதி இல்லாததால் அவர் அதைச் சரிபார்க்கவில்லை. ஆறுமுகத்துக்குக் கண்டறியப்படாத சர்க்கரை நோய் இருந்தது. அதுவே காலில் நீரிழிவு அல்சருக்கு வழிவகுத்தது. அவர் சிகிச்சைக்கு வருகையிலே அவரது கால் துண்டிக்கப்பட வேண்டிய நிலையிலிருந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து, காப்பீட்டு திட்டத்தின் கீ்ழ் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கால் துண்டிக்கப்பட்டதால் ஆறுமுகம் வேலையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு அவரது மனைவி கனகம்மாவுக்கு கைமாறியது,” என்றார்.
தகுதிவாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனை, இலவச மருந்துகள், இரத்த பரிசோதனை, எக்ஸ் ரே, சிறுநீர் பரிசோதனை என பலவற்றை உள்ளடக்கிய ஆய்வக சோதனைகளை அனாஹத் இலவசமாக வழங்குகிறது. இதற்காக, பெங்களூருவில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மற்றும் லேப்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட வலி மற்றும் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு சுகாதார வொர்க் ஷாப்களையும் நடத்துகின்றது.
“சிரங்கு, சிறு காயங்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளுடன் தினமும் 70 முதல் 80 மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். நோயாளிகள் அவர்களது உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றைக் குறைக்க அறிவுறுத்துவதுடன், உணவு குறித்த புரிதலை ஏற்படுத்தும் வொர்க்ஷாப்பினை நடத்த மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் இருக்கிறார். நோயாளிகளுக்கு எளிய பயிற்சிகளை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், நோய்க்கான காரணங்கள் மற்றும் அதன் அறிகுறிகள் பற்றிய விரிவான விளக்கத்தையும் வழங்கும் வொர்க் ஷாப்களும் நடத்தப்படுகின்றன,” என்று பகிர்ந்தார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரோஹித்.
சிகிச்சைக்கு வருபவர்களில் பலர் கூலித்தொழிலாளர்கள் என்றும் அவர்கள் அடிக்கடி நாள்பட்ட வலி ஏற்படுவதாக கூறுவதாகவும் பிரியா கூறுகிறார். உடல்வலியால் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிமாக இருப்பதால் அவர்களுக்காக, மருத்துவ குழுவில் பிசியோதெரபிஸ்ட் ஒருவரையும் நியமித்துள்ளனர். விழிப்புணர்வு அமர்வுகள் வாரத்திற்கு மூன்று முறை 20 பேர் கொண்ட குழுக்களாக நடத்தப்படுகின்றன. ஆலோசகர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் வாரம் ஒருமுறை கிளினிக்கிற்கு வருகிறார்கள்.சமீபத்தில், விர்ச்சுவல் நிதி திரட்டும் நிகழ்வான SVP (Social Ventures Partners) India Fast Pitch 2024 – இல் பிரியாவும், ராணியும் 10 லட்சம் ரூபாய் மானியத்தை வென்றனர்.
ஜபீன் தாஜ் என்ற 48 வயது பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. சாந்திநகரின் தையல் தொழிலாளியான அவரே அவரது குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டுபவர். அவர் தனது குடும்பத்தை ஆதரிக்க போதுமான அளவு சம்பாதித்தாலும், மருத்துவ செலவிற்காக செலவிடுவது கூடுதல் சுமையாக இருப்பதால், மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வதில் அலட்சியம் காட்டி வந்துள்ளார். அவருக்கு இலவச சிகிச்சை வழங்கி, அவரது உடல்நலத்தை மேம்படுத்த உதவி உள்ளது.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…