உலகமயமாக்கல் பரந்துபட்ட சந்தைபடுத்துதல் விளைவாக தொழில்முனைவர்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. குடும்பம், குழந்தை வளர்ப்பு என்று சிக்கி இருந்தாலும் பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில் இந்தத் தலைமுறை இல்லத்தரசிகள் உறுதியாக உள்ளனர். குடும்ப நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்று ஸ்திரமாக இருக்கின்றனர் சிலர், அதற்கும் வாய்ப்பு இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள திறனை வைத்து சுயதொழில் தொடங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த இல்லத்தரசியான சுதா, இரண்டு குழந்தைகளின் தாயார். எம்எஸ்சி, பி.எட். பட்டதாரியான இவர் வெளியே சென்று வேலை செய்ய முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ.50,000 வருமானம் ஈட்டி வருகிறார். எந்த பின்பலமும் இல்லாவிட்டாலும் இவரின் தயாரிப்புகளின் தரம் நிரந்தரமான வாடிக்கையாளர்களை இவருக்கு கிடைக்கச் செய்துள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த சுதா, பரமத்திவேலூரில் உள்ள வெங்கரை கிராமத்தில் படிப்பின் வாசம் அறியாத குடும்பத்தில் இரண்டாவது மகளாக பிறந்தவர். தந்தை மரம் ஏறும் தொழில் செய்து வந்தவர், தாயார் கருப்பட்டி காய்ச்சி விற்பனை செய்து வந்தவர். அக்கா, தம்பி என உடன்பிறந்தவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு படிப்பு வரவில்லை என்பதால் சுதாவை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளனர் அவரின் பெற்றோர்.
“எனக்கும் படிப்பு மிகவும் கஷ்டமான ஒன்றாகத் தான் இருந்தது, அக்காவும், தம்பியும் படிக்க முடியாது என்று விடாப்படியாக இருந்துவிட்டதால் விட்டுவிட்டனர். ஆனால், குடும்பத்தில் ஒருவராவது படிக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தி படிக்க வைத்தனர்,” என்று தான் வளர்ந்த பின்னணியை விவரிக்கிறார் சுதா.
5,6,7 என ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ச்சியடையாமல் இரண்டு வருடங்கள் படித்து படித்து அடுத்த வகுப்பிற்கு சென்றேன். எங்களால் படிக்க வைக்க மட்டும் தான் முடியும் அதனால் படித்தே ஆக வேண்டும் என்று பெற்றோர் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி 6ம் வகுப்பு வந்த போது தமிழை எழுத்துக்கூட்டி படிக்கத் தொடங்கினேன். ஆனால், ஆங்கிலம் மிகவும் கஷ்டமான பாடம், அதையும் எப்படியோ மனப்பாடம் செய்து படித்து தேர்ச்சி பெற்றேன்.
படிப்பது சிரமம் என்றால் படிப்பதற்கு அக்கறையில் இருந்து இக்கறைக்கு பள்ளிக்கு வந்து செல்வது அதைவிட சிரமமாக இருந்தது. விடுதியில் தங்கி மற்ற மாணவர்களுடன் சேர்ந்து படிக்க அனுப்பினார்கள், ஆனால் அங்கு இருந்த மாணவர்கள் அவரவர்களாகவே தான் படித்தார்கள். அப்படியே நானும் பாடங்களை மனப்பாடம் செய்து படிக்க எழுத கற்றுக்கொண்டேன்.
“அந்த பள்ளியிலும் என்னை 8வது தோல்வியடைய வைத்துவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. ஏற்கனவே, 3 வருடங்கள் வீணாகிவிட்டது மறுபடியும் இன்னொரு வருடத்தை வீணாக்க வேண்டாம் என்பதால் என்னுடைய சொந்த ஊரில் இருந்த பள்ளியிலேயே சேர்ந்து படிக்க வந்துவிட்டேன்,” என தான் பள்ளி படிக்க கஷ்டப்பட்டதை விவரிக்கிறார் சுதா.
அப்பா எனக்கு புது சைக்கிள் வாங்கிக் கொடுத்து நீயே பள்ளிக்குச் சென்று படித்துவிட்டு வந்துவிடு என்று சொல்லிவிட்டார். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் யாரும் பனைமரம் ஏறி கள் விற்பனை செய்வது அல்லது பனைகருப்பட்டியாக மாற்றும் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதால் அப்பாவுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது.
அப்பா தென்னை மரம் மட்டுமே ஏறும் தொழிலை செய்து வந்தார். ஒரு மரம் ஏறினால் 20 ரூபாயும், தேங்காயும் கொடுப்பார்கள் அது மட்டுமே எங்கள் குடும்பத்தின் வருமானமானது. அம்மா சின்ன வயதில் இருந்தே கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார். இதனால் ஆஸ்துமா நோய் ஆட்கொள்ள அதுவே பின்னர் காசநோயாக மாறிவிட்டது.
“அம்மாவிற்கு உதவி செய்யலாம் என்கிற எண்ணத்தில் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது கரும்புத் தோகையை எடுத்து வந்து வீட்டில் இருந்த கால்நடைகளுக்கு போட்டுவிட்டு பள்ளிக்குச் செல்வேன். வீட்டில் இருந்து எங்களின் பள்ளிக்கு 5 கி.மீட்டர் தொலைவு, இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் எப்படியோ படித்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டேன்.”
அந்த சமயத்தில் புதிதாக மாறுதலாகி வந்த தலைமை ஆசிரியர் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை எடுப்பதை கட்டாயமாக்கி இருந்தார்.
மாணவர்களுக்கு எல்லா பாடங்களையும் எடுப்பார், சந்தேகங்களை தீர்த்துவைத்து ஊக்கப்படுத்தும் ஆசானாக இருந்தார் தலைமை ஆசிரியர் பொன். சங்கரவேல். கிராமப்புற பிள்ளைகள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் மாதிரி வினாத்தாள் மற்றும் சில எளிய வழிமுறைகளை கற்றுக் கொத்தார். அது மிகவும் உதவியாக இருந்ததால், 10ம் வகுப்பில் 350 மதிப்பெண் எடுத்துவிட்டேன். என்னுடைய ஆசிரியர் உள்பட எல்லோருக்கும் ஆச்சரியம், படிப்பை விட்டுவிடாமல் மேற்படிப்பை தொடர ஆசிரியர் வலியுறுத்தினார்.
“எனக்கு விவசாயம் சார்ந்து படிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது, ஆனால், என்ன பிரிவு எடுத்து படிக்க வேண்டும் என்று வழிநடத்துவதற்கு ஆள் இல்லை. மேல்நிலையில் அறிவியல் பிரிவு பாடத்தை எடுத்துப் படித்தேன். அப்போதும் அதிகாலையில் எழுந்து கரும்பு தோட்டத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு அங்கிருக்கு மிச்சமாக இருக்கும் கரும்புத் தோகையை எடுத்து வந்து விற்பனை செய்வேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து படிப்புக்கும் எனக்கும் தேவையானவற்றை வாங்கிக் கொள்வேன்.”
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 753 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன், அக்காவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. எங்கள் குடும்பத்தில் நான் தான் 12ம் வகுப்பு வரை படித்திருந்தேன், எங்களுடைய குடும்பம் பின்தங்கியே இருப்பதற்கு பொருளாதாரம் ஒரு காரணம் அதை உடனடியாக சரிசெய்துவிட முடியாது என்பதால் கல்வி மூலம் என்னுடைய குடும்ப நிலையை உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்பினேன்.
வீட்டில் படிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை, அம்மாவிற்கு உதவி செய்து கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் நான் படித்தேன். இதை இப்படியே நிறுத்திவிடாமல் ஒரே ஒரு பட்டப்படிப்பை மட்டும் முடித்து விடுகிறேன் என்று அம்மாவிடம் சொல்லி வீட்டில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இருந்த அரசுக் கல்லூரியில் உயிரியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்தேன்.
“இளநிலை படிப்பை முடித்துவிட்டு பி.எட் படிக்க விருப்பினேன், அதற்கான கட்டணம் கட்ட வசதி இல்லாத நிலையில் அம்மா என்னுடைய திருமணத்திற்கு நகை வாங்க வைத்திருந்த காசை என்னுடைய படிப்புக்கு கேட்டு வாங்கி படித்தேன், என்கிறார் ஜீரோவாக இருந்த தன்னுடைய கல்வியை பட்டப்படிப்பு வரை கொண்டு வந்து போராடி வெற்றியை அடைந்திருக்கும் சுதா.
பி.எட் படித்து முடித்த உடன் அருகில் இருந்த பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. அடுத்த நாள் வகுப்பில் பாடம் எடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் நேர்காணலுக்குப் போக முடியவில்லை. அம்மாவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆசிரியர் பணிக்கு நான் போகவில்லை என்பது அம்மாவுக்கு வருத்தமாக இருந்தது, இரண்டு டிகிரி முடித்துவிட்ட நிலையில் முதுநிலை படிக்க அம்மா அறிவுறுத்தியதன் பேரில் அதே கல்லூரியில் முதுநிலை பட்டமும் பெற்றேன். நான் அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது என்னுடைய அம்மாவின் விருப்பமாக இருந்தது. செய்திகளைப் பார்ப்பதில் என்னுடைய பெற்றோருக்கு அதிக ஆர்வம், டிஎன்பிஎஸ்சி பற்றிய அறிவிப்பு வந்தாலே என்னை விண்ணப்பிக்க அறிவுறுத்துவார்கள். நானும் சுமார் 20 முறைக்கு மேல் முயற்சித்திருக்கிறேன், ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் வகுப்புகளுக்கு செல்லும் வசதியும் இல்லை அதிக நேரம் செலவிட்டு படிக்க முடியாத சூழலால் என்னால் கடைசி வரை தேர்ச்சி பெறவே முடியவில்லை.
இடைபட்ட காலத்தில் எனக்கு திருமணமாகிவிட்டது, என்னுடைய கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு கணவர் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து டிஎன்பிஎஸ்சிக்கு படிக்க ஊக்கம் தந்தார். எனினும், என்னால் சரிவர தேர்வுக்குத் தயாராக முடியவில்லை, மகப்பேறு காலம், மகன் பிறந்த பின்னர் என தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தேன். இரண்டாவது மகள் பிறந்த பின்னரும் கூட டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினேன், ஆனாலும் அந்தக் கனவு நிறைவேறவே இல்லை. ஒரு கட்டத்தில் வெறுமை ஏற்பட எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட்டு ஒரு தொழிலைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன்.
என்னுடைய மகளுக்கு 1 வயது இருக்கும் போது அருகில் இருந்த மழலையர் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தேன். குழந்தைகளுக்கு நற்பண்புகளை கற்றுத் தருவது, நல்ல உணவுப்பழக்கங்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று சொல்லித்தருவது என அன்றாடம் இதையே கற்பித்து வந்தேன். ஒரு கட்டத்தில் நான் உட்கொள்ளும் உணவு நல்லதா என்னுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவை கொடுக்கிறேனா என்கிற எண்ணம் எழுந்தது.
என்னுடைய வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாததால் கொத்தமல்லி, புதினா உள்ளிட்டவை ஒரு நாளைக்கு மேல் வீணாகிக் கொண்டிருந்தது. இதனை எப்படி அதிக நாட்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை யோசித்து, அவற்றை பொடி வகைகளாக செய்து கொடுக்கலாம் என்று நினைத்தேன். என்னுடைய மகனுக்கு இந்த வகை பொடிகளை கொடுக்கத் தொடங்கினேன், அவன் மிகவும் திருப்தியாக சாப்பிட்டான். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, அப்படியும் மீதமான பொடியை சாம்பார், ரசம் உள்ளிட்டவற்றில் சேர்த்து பயன்படுத்தத் தொடங்கினேன்.
என்னுடைய உறவினர் ஒருவர் ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து புடவை விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கினோம். ஆனால், அது வெற்றியைத் தரவில்லை, அடுத்தது என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த போது தான் வீட்டில் உபயோகப் பொருட்களை தயாரிக்கும் முறையை ஆன்லைனில் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். கணவரிடம் மட்டுமே ஸ்மார்ட் போன் இருந்தது ஒரு மணி நேரம் அவரிடம் இருந்து வாங்கி வீடியோக்களை பார்த்து அவற்றின் செய்முறையை அறிந்து கொண்டேன்.
இரண்டு குழந்தைகள் இருப்பதால் சமையலுக்கு நேரமாகும் என்று எப்போதுமே சாம்பார் மற்றும் ரசப்பொடியை அம்மா எனக்கு தயார் செய்து கொடுத்துவிடுவார். ஓராண்டு ஆனாலும் கெட்டுப்போகாத அந்த பொடி வகைகளை எப்படி தயாரிப்பது என்று அம்மா தயார் செய்யும் போது தோராயமாக கண்களாலேயே அளவைப் பார்த்து குறிப்பு எழுதி வைத்துக் கொண்டேன். அதே அளவில் பொருட்களை சேர்த்து பொடி தயாரித்த போது அதன் சுவையும் மணமும் அறுசுவையோடு ஆரோக்கியத்தையும் தருவதாக இருந்தது.
என்னிடம் இருந்த அதிக அளவிலான பொடியை வீட்டிற்கு வரும் நண்பர்கள் உறவினர்களுக்கு பொட்டலங்களாக போட்டு கொடுக்கத் தொடங்கினேன். இரண்டு முறை வாங்கிச் சென்றவர்கள் மூன்றாவது முறை காசிற்காக வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்கள். இதுவே நல்ல தொழில் திட்டமாக இருக்கிறது என்ற ஒளி அப்போது தான் கிடைத்தது.
“ ஏற்கனவே நான் என் மகனுக்காக தயாரித்த கீரைப் பொடி வகைகளோடு, சாம்பார் பொடி, ரசப்பொடி உள்ளிட்டவற்றை தயார் செய்து கொடுக்க திட்டமிட்டேன். கீரைப் பொடி வகைகளில் முருங்கை, தூதுவளை, வல்லாரை, புதினா, மணத்தக்காளி மற்றும் மசாலா பொடி வகைகளை கொரோனா காலகட்டத்திற்கு முன்னர் பிராண்ட் பெயரின்றி விற்பனை செய்யத் தொடங்கினேன். அதன் பின்னர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ’இனியா ஆர்கானிக்ஸ்’ என்னும் பெயரில் எங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம்,” என்றார்.
தனியாக கீரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இட்லிப் பொடியில் கீரை வகைகள் அற்புதமான தேர்வாக அமைந்தது. மேலும் வயதானவர்கள் தேடி அலைந்து கீரையை வாங்கி சாப்பிட முடியாததால் அவர்களுக்கு ஆரோக்கியம் தரும் சூப் வகைகளை தயாரித்தோம். இந்த இரண்டு வகையான மிக்ஸ்களும் விற்பனையில் களைகட்டுகின்றன.
”தொடக்கத்தில் நான் மட்டுமே இந்தத் தொழிலை செய்து வந்தேன் இப்போது என்னுடைய கணவரும் அவருடைய வேலையை விட்டுவிட்டு முழுநேரம் என்னுடைன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொருட்களின் பார்சல், பேக்கிங், கூரியர் உள்ளிட்ட பணிகளை அவர் பார்த்துக் கொள்கிறார். வீட்டில் இருந்தே இந்தத் தொழிலை செய்து வந்தோம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 6 மாதத்திற்கு முன்னர் கோவை அருகே பூலுவம்பட்டியில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தனியாக ஒரு யூனிட்ட வைத்துள்ளோம்.”
நண்பர்கள், உறவினர்கள் மூலம் ஆர்கானிக் பொருட்கள் கடைகளின் தொடர்பு கிடைத்தது, இப்படி ஒருவர் மூலம் மற்றொருவரின் அறிமுகம் என 15 கடைகளுக்கு எங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். வீடுகளில் இருந்தும் கூட இல்லத்தரசிகள் விரும்பி வாங்கிக் கொள்கின்றனர், இது தவிர யூடியூபர்கள் பிராண்ட் இல்லாமல் எங்களின் தயாரிப்புகளை வாங்கி அவர்கள் தங்களின் பிராண்டின் கீழ் விற்பனை செய்துகொள்கின்றனர்.
மேலும், ஆன்லைனிலும் கூட இப்போது இனியா ஆர்கானிக்ஸ் தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளோம். உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவின் அங்கீகாரத்துடன் 37 வகையான பொருட்களை நாங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். மாதத்திற்கு 170 கிலோ அளவிலான பொருட்கள் விற்பனை செய்யப்பகிறது, இதன் மூலம் தோராயமாக ரூ. 50,000 வரை சம்பாதிக்க முடிகிறது. எதிர்காலத்தில் இந்த விற்பனையை அதிகரிக்க வேண்டும், பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்கிறார் சுதா.
படிப்பறிவில்லாத, வறுமையே வாழ்நாள் முழுவதும் சூழ்ந்துகொண்டிருந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்து பட்டம் பயின்று, நினைத்தபடி அரசுப்பணியில் சேர முடியவில்லை என்கிற ஏக்கங்களைக் கடந்து தனக்கான பாதையை அமைத்து, அந்தப் பாதையில் வெற்றி கண்டதன் மூலம் சக்தி மசாலாவின் சுயசக்தி விருது , மூலிகை சார் விருது என 2 விருதுகளை வாங்கி தன் குடும்பத்தினருக்கு பெருமை சேர்ந்திருக்கிறார் இந்த எளிமையின் அடையாளம்.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…