அனைத்து வசதிகளுடன் நிறைவான பஸ் பயண அனுபவம் தர உதவும் ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ வென்ற கதை!

ஒரு ரயில் முன்பதிவு தளத்தில் பணியாற்றிய அனுபவத்தையும் நம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டு, பேருந்து முன்பதிவு தளமான ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ சேவை மூலம் வெற்றிப் பயணத்தைத் தொடரும் தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு இது.

நாட்டில் தினசரி வேறு ஊர்களுக்கு பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. ரயில் முன்பதிவு என்பது எட்டாக்கனியாக பலருக்கும் ஆகிக் கொண்டிருக்கின்றது.

ரிசர்வேஷன் ஆனாலும் ஆர்.ஏ.சி., வெயிட்டிங் லிஸ்ட் என்று சீட் கிடைக்குமா பெர்த் கிடைக்குமா என்று காத்திருந்து காத்திருந்து கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்வதும் ஒத்திப் போடுவதுமாக பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவது அன்றாடக் கண்கூடு. அதே சமயம், ரயில்களுக்குப் பதிலாக பேருந்து புக்கிங் என்பதும் அதிக கட்டணச் செலவினம் கொண்டதாக மாறி வருகின்றது.

இந்த கஷ்டங்களைப் போக்க இப்போது பேருந்துகளுக்கான புக்கிங் மையங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இது ஒரு குழப்பமான சந்தை. இதற்கு அர்த்தம் கொடுத்து நம்பகத்தன்மையைக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயமல்ல. பெரும்பாலான தளங்கள் எளிதாக பயண பேருந்து டிக்கெட்டுகளை எளிதில் பெற முன்பதிவு வசதிகளை மேம்படுத்துவதிலும் அதனை திறம்பட செயல்படுத்துவதிலும் சிரமேற்கொண்டு கவனம் செலுத்தி வருகின்றன.

இருப்பினும், நொய்டாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் பஸ் முன்பதிவு தளமான ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ ’IntrCity SmartBus’ ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலம் வெறும் முன்பதிவு சிக்கலைத் தீர்ப்பதைத் தாண்டியும் பல பயன்களை நோக்கிச் செல்கிறது.

‘இனடர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ நிறுவனர்களான கபில் ரைசாதா மற்றும் மணீஷ் ராதிக்கு இது தொடக்க வர்த்தகமல்ல. இவர்கள் முதலில் 2012-ம் ஆண்டில் ரயில் முன்பதிவு தளமான ‘ரயில் யாத்ரி’ என்ற பயணத் தளத்தில் முக்கியப் பொறுப்புகளில் செயலாற்றினர். இது பயனர்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உதவும் தளமாகும்.

‘ரயில் யாத்ரி’யின் மூலம் பெற்ற உத்வேகம்

‘ரயில் யாத்ரி’ என்ற தளத்தின் மூலம் பெற்ற அனுபவ உத்வேகம் பற்றி ‘இனடர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ இணை நிறுவனர் கபில் ரைசாதா கூறும்போது,

“ரயில் பயணத்தில் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், மக்கள் பயணம் செய்ய விரும்பும் ரயில்களில் இருக்கையோ, படுக்கை வசதிகளோ கிடைப்பதில்லை என்பதை நாங்கள் ஆரம்பத்தில் உணர்ந்தோம்,” என்றார். மேலும் அவர், “நாங்கள் ஆரம்பத்தில் ரயில் யாத்ரி என்ற செயலியை உருவாக்கினோம், இது மக்கள் இருக்கையைப் பெறக்கூடிய ரயிலைக் கண்டுபிடிக்க உதவும் முகமாகச் செயல்பட்டது,” என்றார்.

ரயில் முன்பதிவு சிக்கல்களை உணர்ந்த பிறகே இந்தத் தொழில் முனைவோர்கள் தங்கள் புதிய தொழில் திட்டத்தை நோக்கிப் பயணித்தனர். தங்கள் முந்தைய பணியை உதறினர். இருவரும் 2013-ஆம் ஆண்டில் ரயில் யாத்ரி பயன்பாட்டை அறிமுகப்படுத்தினர், மேலும் 2014-ம் ஆண்டு முதல் முதல் 2017-ம் ஆண்டு வரை, இந்நிறுவனம் ரயில் டிக்கெட் முன்பதிவில் கவனம் செலுத்தியது.

ரயில் பயண டிக்கெட் முன்பதிவு பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு உருவாக்கப்பட்டவுடன், காத்திருப்பு பட்டியல் (waiting list) சிக்கலை நிவர்த்தி செய்ய மேலும் ஒரு கருவியைச் சேர்க்க முடியும் என்பதை ரயில் யாத்ரி குழு உணர்ந்தது. அதாவது, வெயிட்டிங் லிஸ்ட்டில் சிக்கிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பாதைகளுக்கு கிடைக்கக்கூடிய பேருந்து டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான கருவியையும் சேர்த்தது.

ஆனால், “காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளுக்கு பேருந்து டிக்கெட்டுகளை விற்க முயற்சித்தோம். இது ஒரு கடினமான விற்பனை முயற்சி என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்று அவர் கூறினார்.

அதாவது, பேருந்து பயணத்திற்கு பயணிகள் அத்தனை ஆர்வம் காட்டவில்லை என்பதே அந்த புதிய சிக்கல்.

பயணிகள் பயணத்தை ஒத்தி வைத்தார்களே தவிர, ரயில் பயணத்திற்கு மாற்றாக பேருந்து பயணத்தை வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை; அதில் ஆர்வம் காட்டவில்லை. பேருந்து பயணத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதார விஷயங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதால் அதிக நேர பயணங்களுக்கு பேருந்து அவர்களது தேர்வாக இருக்கவில்லை.

இந்தச் சிக்கலைத் தீர்க்கும் முகமாகவும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை தரும் விதமாகவும் ஒன்றை யோசித்ததன் விளைவுதான் 2019-ல் உதித்த IntrCity SmartBus என்பதாகும். இது குறித்து கபில் கூறும்போது,

“பேருந்துகளில் சுகாதாரம், தூய்மை மற்றும் அவற்றின் பாதை, அவற்றின் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் முழு பேருந்து நடவடிக்கைகளையும் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு முழு தொழில்நுட்ப தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.”

இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ் குழுவினருக்கு பயிற்சியளிப்பதில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். மேலும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நேரம் தவறாமை ஆகியவற்றின் அடிப்படையில் பயணத்தின் சில அடிப்படை வாக்குறுதிகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக பயணம் முழுவதும் வாகனத்தைப் பற்றிய நிறைய தரவுகளைப் பெற்றுத் தரும் ’டெலிமேடிக்ஸ்’ இணைக்கப்பட்ட பிளஸ் தளத்தை உருவாக்கியுள்ளோம்.

இன்ட்ரிசிட்டி ஸ்மார்ட்பஸ் மிகவும் நம்பகமான அனுபவத்தை உருவாக்க டெலிமேடிக்ஸ் மற்றும் ஜி.பி.எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இன்ட்ரிசிட்டி ஸ்மார்ட்பஸ் கழிவறைகள் மற்றும் ஹெல்ப்லைன் மையங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி நிலை:

இந்தியாவில் ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ தற்போது 750 நகரங்களில் சுமார் 250 பேருந்துகளை இயக்கி வருகின்றது. இப்போது இந்த வர்த்தகம் தொடர்ந்து நடத்துவதற்குரிய செயல்பூர்வ லாப விகிதத்தை எட்டியுள்ளது.

கபிலின் கூற்றுப்படி, ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ 2021-ம் ஆண்டு 2 மடங்கு வளர்ந்தது, மேலும், வருடாந்திர ஓட்ட விகிதம் 50 மில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அடுத்த மூன்று ஆண்டுகளில், 15 முதல் 20 மடங்கு வரை வருவாய் அதிகரிக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

“எங்களிடம் ஏற்கெனவே ஏழு முதல் எட்டு மாதகாலத் தரவுகள் உள்ளன. எனவே, இந்த போக்கின்படிப் பார்த்தால், ஆண்டுக்கு ஆண்டு வருவாயில் சுமார் 300% வளர்ச்சியை அடைவோம் என்று நான் மிகவும் நம்புகிறேன்,” என்று கபில் கூறுகிறார்.

இன்டெர்சிட்டி பேருந்து இயக்கம் கொரோனாவுக்கு முந்தைய 50 மில்லியன் என்ற தினசரி பயணிகள் எண்ணிக்கையைத் தாண்டி வரத் தொடங்கிவிட்டது.

“நாங்கள் ஏற்கெனவே எங்கள் இருப்பை சந்தையில் வாடிக்கையாளர்கள் இடையே நிறுவியுள்ளோம். இப்போது அடிப்படையில் எவ்வாறு விரிவுபடுத்தலாம் மற்றும் சலுகையை அதிக இடங்களில் அதிக மக்களுக்கு கிடைக்கச் செய்யலாம் மற்றும் புதிய கருவிகளைச் சேர்ப்பதன் மூலம் அனுபவத்தை மேம்படுத்தலாம் என்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறோம்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கபில்.

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

2 months ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

2 months ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

4 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

4 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

4 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

4 months ago