தீபாவளி, பொங்கல், ஈஸ்டர், ரம்ஜான் என பண்டிகைக் காலங்கள் வந்துவிட்டாலே சென்னை போன்ற பெருநகரங்கள் காலியாகி விடும். காரணம் இதுபோன்ற பெருநகரங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லோருமே, தங்களது சொந்த ஊருக்குச் சென்று, அங்கு பண்டியை கொண்டாட விரும்புவதுதான்.
வேலைக்காக சொந்த ஊரைவிட்டுப் பிரிந்திருப்பவர்கள் எல்லோருக்குமே, இதே சம்பளத்தில் நம் ஊரில் ஒரு வேலை கிடைத்துவிடாதா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கும். ஆனால், எல்லோருக்குமே அந்தக் கனவு பலித்து விடுவதில்லை.
வருமானத்திற்காக சொந்த ஊரில் வாழும் ஆசையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு மற்ற ஊர்களில் வாழ்பவர்களுக்கு மத்தியில், திறமையும், மாற்றி யோசிக்கும் திறனும் இருந்தால் போதும் சொந்த ஊரிலேயே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என நிரூபித்துக் காட்டியுள்ளனர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலைக்கதிரவன் மற்றும் கிருஷ்ணசாமி என்ற இரண்டு நண்பர்கள்.
நாங்கள் இருவருமே பொறியியல் பட்டதாரிகள். ராமநாதபுரத்தில் வெவ்வேறு பள்ளிகளில் படித்தவர்கள். அப்போது எங்களுக்குள் அறிமுகமில்லை. 2014ம் ஆண்டு வேலைக்காக சென்னையில் தங்கிய போதுதான் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். அப்போது வேலைக்காக வெளியூரில் தங்கியிருக்கும் வலி எங்களை நட்பாக்கியது.
“எந்தத் தொழில் செய்தாலும், அதைச் சொந்த ஊரில் செய்ய வேண்டும் என அடிக்கடிப் பேசிக் கொள்வோம். அந்த பேச்சுதான் இன்று எங்களை வெற்றிகரமான தொழில்முனைவோராக்கி இருக்கிறது,” என்கிறார் கலைக்கதிரவன்.
சென்னையில் இருவரும் ஒன்றாக தங்கியிருந்தது சில காலம்தான். பின்னர், இருவரும் கடலூர் மற்றும் பெங்களூருவுக்கு பணி நிமித்தமாகப் பிரிந்து சென்று விட்டனர். ஆனாலும் அவர்களுக்குள் இருந்த தொழில்கனவு மட்டும் மாறவேயில்லை. போனில் பேசிய போதும் சரி, நேரில் சந்தித்துக் கொண்ட போதும் சரி, இந்த வேலையை விட்டுவிட்டு எப்போது, என்ன தொழில் ஆரம்பிப்பது என்பது பற்றியே பெரும்பாலும் பேசியுள்ளனர்.
”நான் கடலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் துறையில் உதவி மேலாளராக வேலை பார்த்தேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய அனுபவங்களை கற்றுக் கொண்ட காலம் அதுதான். மிகவும் சவாலான பணி. வார விடுமுறைக்குக்கூட வாய்ப்பில்லை. தீபாவளி, பொங்கல் என பண்டிகைக் காலங்களில் ஊருக்குச் சென்று திரும்புவதே பெரிய சாதனையாக இருக்கும். அப்போதுதான் எனக்குத் திருமணம் ஆனது. குடும்பத்துடன் நேரமே செலவிட முடியாமல் தவித்த போதுதான், சொந்த ஊரில் தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கியது.
வெறும் சிந்தனையோடு நில்லாமல் அதற்கு செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினேன். என் மாவட்டத்தின் அடையாளமான கருவாடு, அதையே என் தொழிலுக்கான களமாக்கினேன்.
“அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் கருவாடு என்ன விலைக்கு விற்கப்படுகிறது, அதன் எங்கள் ஊர்ச் சந்தை விலை என்ன என ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான், ஆன்லைனில் அதன் வியாபார வாய்ப்பு பிரகாசமாகத் தெரிந்தது. உடனடியாக ஆன்லைனில் கருவாடு விற்க, ’Lemurian Bazaar’என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நானே உருவாக்கினேன்,” என தன் திட்டம் செயலாக மாறிய கதையைக் கூறுகிறார் கலைக்கதிரவன்.
ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன் அது பற்றிய ஆழமான அறிவு இருக்க வேண்டும் என நினைத்த கலைக்கதிரவன், முதலில் கருவாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்.
“கடல் இருக்கும் ஊரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், என் தாத்தாவிற்கு இருந்த அளவிற்கு கருவாடு பற்றிய ஞானம் என் அப்பாவுக்கோ, எனக்கோ இருந்ததில்லை. காரணம் நாங்கள் அதிலிருந்து விலகி வேறு வேறு துறைகளில் வேலை பார்த்ததுதான். எனவே, ஒவ்வொரு வகை கருவாடு பற்றியும், அவற்றைத் தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை என எல்லா விசயங்களையும் தேடித் தேடிக் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் கலைக்கதிரவன்.
இந்தத் தொழில் முயற்சியில் கதிரவன் இறங்கும்போது, அவருக்குத் திருமணமாகி இருந்தது. எனவே, கை நிறைய சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு இந்த விபரீத முயற்சி தேவையா என பலரும் எச்சரித்துள்ளனர்.
ஆனால், அவற்றைத் தன் காதுகளில் வாங்கிக் கொள்ளாமல், தொடர்ந்து தன் முயற்சிகளை வேகப்படுத்தியுள்ளார் கதிரவன். அதன் பலனாக விரைவிலேயே லெமூரியன் பஜார் (https://lemurianbazaar.com/) என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார்.
கதிரவனைப் போல் கிருஷ்ணசாமியும் உடனே வேலையைவிட்டுவிடவில்லை. காரணம் அவரது வீட்டில் அவருக்கு திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், தனது ஆதரவை மட்டும் தெரிவித்துக் கொண்டிருந்த அவர், பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டே தன்னால் முடிந்த உதவிகளை கதிரவனுக்குச் செய்தார்.
பின்னர், தனது திருமணம் முடிந்து ஆறுமாதம் கழித்து அவரும் வேலையை ராஜினாமா செய்தார். லெமூரியன் பஜார் ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குப் பின் கிருஷ்ணசாமி தன்னையும் அதில் இணைத்துக் கொண்டார்.
“ஆரம்பத்தில் கருவாடு விற்பனையில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வது மற்றும் தரமான கருவாட்டைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினமானதாக இருந்தது. காலப்போக்கில் அடிமேல் அடிவாங்கி ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டோம். இலங்கையில் நல்ல மீன்களை உலர்த்தி கருவாடாக மாற்றுகின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டோம். நாமும் அதே முறையைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்தோம்.
சில இடங்களில் ஒருமுறை பயன்படுத்திய உப்பையே திரும்பத் திரும்ப வருடக்கணக்கில் பயன்படுத்துவார்கள். ஆனால், அப்படிச் செய்யும் போது நல்ல மீன்களைப் பதப்படுத்தினாலும், அதன் தரம் நிச்சயம் குறையும். எனவே, சுகாதாரமுறையில், தரமான பொருட்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தர விரும்பினோம். எனவே,
“தரமான மீன்கள். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய உப்பு, சுகாதாரமான செய்முறை, நேர்த்தியான பேக்கிங் என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறோம். எங்கள் கருவாடு பேக்கிங்கில், கருவாடு வாங்கிய இடம், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், அதைக் கொண்டு என்னென்ன சமைக்கலாம் என எல்லாத் தகவல்களையும் வெளிப்படையாகவே கொடுத்திருக்கிறோம்.”
நம்மில் பலருக்கு கருவாடு சாப்பிடப் பிடிக்கும், ஆனால் அதனை எப்படி சமைப்பது என்பது சரிவரத் தெரிவதில்லை. எனவே, எங்கள் கருவாடு பேக்கிங்கிலேயே சமையல் குறிப்பையும் சேர்ப்பது என முடிவு செய்தோம்.
“யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் கருவாடு சமையல்களை க்யூஆர் கோடு மூலம் எங்கள் பேக்கிங்கில் சேர்த்தோம். எங்களது இந்த புதுமையான முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது,” என்கிறார் கலைக்கதிரவன்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் New, Innovative Non Fare Revenue Ideas Scheme (NINFRIS) திட்டத்தின்கீழ் DRY FISH HUT என்ற கடையைத் திறந்துள்ளனர். இந்திய ரயில்வேயில் இத்தகைய கடையைத் திறப்பது இதுவே முதல்முறை.
அமேசான் மூலம் மட்டும் ஒரு மாதத்திற்கு 3 லட்ச ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆனால் இந்த விற்பனையை நாங்கள் எளிதாக அடைந்துவிடவில்லை. ஆன்லைனில் கருவாடு விற்கலாம் என நாங்கள் திட்டமிட்டு வேலையை ஆரம்பித்த நேரம், கொரோனா லாக்டவுன் வந்துவிட்டது. இதனால் எங்களுக்குக் கிடைத்த முதல் ஆர்டர் உட்பட சுமார் 20 ஆர்டர்களை, நாங்களே போன் செய்து கேன்சல் செய்யச் சொல்லும்படி ஆகிவிட்டது.
“புதிதாக ஒரு தொழில் ஆரம்பித்த உடனேயே இப்படி ஒரு தடங்கலா என்று ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் நாங்கள் சோர்ந்துவிடவில்லை. கொரோனா லாக்டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு ஆனவுடன், மீண்டும் எங்கள் தொழிலை புதிய உத்வேகத்துடன் ஆரம்பித்து விட்டோம்,” என்கிறார் கலைக்கதிரவன்.
தங்களுடைய தயாரிப்புகளில் தாங்களே பெருமைப்படும் ஒரு விசயமாக அவர் நினைப்பது, கருவாடை அதன் மணம் அதிகம் வெளியில் தெரியாத அளவிற்கு அழகாக பேக்கிங் செய்வதைத்தான்.
“மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எங்களது கடைக்கு அருகிலேயே பூக்கடை, இனிப்புக்கடைகள் என பல உள்ளது. ஆனால், அவர்கள் யாரும் இதுவரை எங்களது கருவாட்டுக்கடையைப் பற்றி ஒரு புகார்கூட சொன்னதில்லை. ஏனென்றால், அந்தளவிற்கு எங்களது தயாரிப்பு மற்றும் பேக்கிங் நன்றாக உள்ளது. இதுவே எங்களது முயற்சிக்கு கிடைத்த பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம்,” எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் கலைக்கதிரவன்.
மதுரை ரயில் நிலையத்தில் கடல் மற்றும் கடற்கரை காட்சியை பின்னணியாகக் கொண்டு அழகாகக் காட்சி தருகிறது இவர்களது கடை. அங்கு ரூ.100 முதல் ரூ.400 வரை விலையில் 30 வகையான கருவாடுகள் விற்பனைக்கு உள்ளன. நெத்திலி தொடங்கி சுறா வரை பல வகை கருவாடுகளை அங்கு விற்பனை செய்கின்றனர். கூடவே, உப்பு உள்ள மற்றும் உப்பு இல்லாத கருவாடுகள் என ரகம் பிரித்து விற்பனைச் செய்வதால், எல்லா வயதினரும் சாப்பிடும் வகையில் உள்ளது இவர்களது கருவாடுகள்.
கொஞ்சம் கொஞ்சமாக இவர்களது விற்பனை விகிதம் அதிகரித்து வருகிறது. இதே நிலையில், வளர்ச்சி தொடர்ந்தால், மாதம் ரூ.15 லட்சத்துக்கு (ஆண்டிற்கு ரூ.2 கோடி) மேல் விற்பனை நடைபெறும் என்பது இவர்களது எதிர்பார்ப்பு. கூடவே, விரைவில் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்களது கருவாட்டுக் கடையைத் தொடங்கும் திட்டம் இவர்களிடம் உள்ளது. அதற்காக நபார்டு வங்கியிலிருந்து ரூ.25 லட்சம் லட்சம் பங்கு முதலீடு (Equity Investment) பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…