வேதாந்தா நிறுவனத்தின் சேர்மன் அனில் அகர்வாலின் பெயர் இப்போது அனைவருக்கும் பரிச்சயமானதுதான். ஆனால், இந்த அனில் அகர்வால் பள்ளிப்படிப்பை 15 வயதிலேயே நிறுத்தியவர் என்பதும், இதன் பிறகு அவர் எப்படி உலகே வியக்கும் தொழிலபதிரானார் என்பது அனைவருக்கும் பரிச்சயமாகாத ஒரு சுவாரஸ்யமான கதையாகும்.
சுரங்கத் தொழிலில் இன்று கொடிகட்டிப் பறக்கும் ‘Vedanta’ அனில் அகர்வாலின் வெற்றிக் கதை மிகவும் வியக்கத்தக்கது. அவர் தனது 15 வயதில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதில் தொடங்கி 2.01 பில்லியன் டாலர் (ரூ.16,000 கோடி) சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்து வரையில் அவர் பற்றிய ஏராளமான குறிப்புகள் மலைக்கத்தக்கவை.
உலகெங்கிலும் உள்ள பல கோடீஸ்வரர்கள் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளனர். இருப்பினும், வேதாந்தா தலைவர் அனில் அகர்வாலின் கதையே வேறு.
1954-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் வசித்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் அனில் அகர்வால். இவரது குடும்பம் நிதியளவில் வலுவாகத் திகழவில்லை. இவரது தந்தை துவாரகா பிரசாத் அகர்வால் சுமாரான அலுமினியம் கண்டக்டர்களை வியாபாரம் செய்து வந்தார்.
பாட்னாவில் உள்ள மில்லர் உயர்நிலைப் பள்ளியில் படித்த அனில் அகர்வால், ஸ்ரீ கணேஷ் தத் பாடலிபுத்ரா பள்ளியில் 15 வயதிலேயே கல்வி எட்டிக்காயாகக் கசக்க வெளியே வந்தார்.
தந்தையுடனேயே கண்டக்டர்கள் தயாரிப்புத் தொழிலில் இருந்த அனில் அகர்வால் 1976ம் ஆண்டு தந்தையின் அலுமினியம் கண்டக்டர்கள் தயாரிப்பு தொழிலிலிருந்து விடுபட்டு மும்பையில் ஓட்டை உடைசல் சாமான்களை வாங்கும் ஸ்கிராப் டீலராக ஒரு வாழ்க்கையைத் தொடங்கினார்.
இதன்மூலம் அலுமினியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு போன்ற உலோகங்களின் பேரரசை உருவாக்கும் பெரிய லட்சியம் இவர் மனதில் அப்போதே குடிகொண்டிருந்தது.
40 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டை உடைசல் உலோக சாமான்கள், அதாவது நாம் தட்டுமுட்டுச் சாமான்கள் என்று கூறுவோமே அத்தகைய ஓர் எளிய வர்த்தகத்தில் தொடங்கிய அனில் அகர்வால் இன்று இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்த தொழிலதிபர்களில் ஒருவர் என்றால் நம்ப முடிகிறதா?
இன்று கனிம உற்பத்தி சுரங்கத்தொழில் முதல் அலுமினியம், தாமிரம் என்று உலக அளவில் பெரிய உலோக உற்பத்தியில் கொடி நாட்டியுள்ளார். இதோடு பெட்ரோலியம் துறையிலும் இவர் கால்பதித்து வெற்றி கண்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஒருமுறை பேசிய அனில் அகர்வால், தான் 20 வயது முதல் 30 வயது வரையிலான காலக்கட்டத்தில் எப்படி கஷ்டப்பட்டார் என்பதையும், மற்றவர்களின் வெற்றியை பார்த்துக் கொண்டிருந்த தனக்கு, ஒருநாள் நாமும் இப்படி வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்துடன் இருந்ததையும் தெரிவித்தார்.
1970-களின் நடுப்பகுதியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கேபிள் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பழைய உலோகங்களை வாங்கி, அதை மும்பையில் சந்தைப்படுத்தினார். இன்று அனில் ‘மெட்டல் கிங்’ என்று அழைக்கப்படும் ‘வேதாந்தா’ அனில் அகர்வால் 1976-ஆம் ஆண்டில், மற்ற பொருட்களுடன் சேர்த்து, முலாம் பூசிய தாமிரத்தை உற்பத்தி செய்யும் ஷம்ஷெர் ஸ்டெர்லிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தை வாங்குவதற்காக வங்கியில் கடன் வாங்கினார்.
1986-ஆம் ஆண்டில், ஜெல்லி நிரப்பப்பட்ட கேபிள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவியதன் மூலம் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்தத் தொழிலில் தனது லாபம் தாமிரம், அலுமினியம் போன்ற உலோகங்களின் நிலையற்ற சந்தை விலை மதிப்பினால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை விரைவில் உணர்ந்தார்.
அதைத் தொடர்ந்து, அனில் அகர்வால் தனது உள்ளீடு செலவுகளை மேலாண்மை செய்ய உலோகங்களை வெளியிலிருந்து வாங்குவதற்குப் பதிலாக அவற்றைத் தயாரிக்க முடிவு செய்தார். இந்த தீரா முயற்சியின் விளைவுதான் தாமிர உருக்காலை மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவிய ஸ்டெரிலைட் இண்டஸ்ட்ரீஸ் ஆகும். 1993-ல் இந்தியா கண்ட முதல் தனியார் துறை உலோகத் தொழிற்சாலையாகும் இது.
ஒரு சிறிய ஸ்கிராப் மெட்டல் வணிகத்தைத் தொடங்கி உலோகங்கள் மற்றும் சுரங்க அதிபர் ஆன அனில் அகர்வால் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா நிறுவனமாக்கினார்.
அக்டோபர் 2018ல், அகர்வால் ஏற்கனவே தனக்குச் சொந்தமில்லாத உலோக நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலுத்தி வேதாந்தாவைத் தன் வசம் எடுத்துக்கொண்டார்.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் அதன் மின் பரிமாற்ற வணிகத்தை ஒரு தனி யூனிட்டாக மாற்றி உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையை பங்குச் சந்தையில் பட்டியலிட்டது.
இந்தியப் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட வேதாந்தாவில்தான் அனில் அகர்வால் பெருவாரியான தன் பங்குகளை வைத்துள்ளார்.
குஜராத்தில் செமிகண்டக்டர்கள் மற்றும் காட்சி ஆலைகளை உருவாக்க 20 பில்லியன் டாலர்களை கூட்டாக முதலீடு செய்ய தைவானின் ஃபாக்ஸ்கானுடன் வேதாந்தா கூட்டு சேர்ந்துள்ளது.
அகர்வால் 2012ல், 3-4 ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பில் இருந்து தான் விலகி நிர்வாகமற்ற தலைவராக வழிகாட்டியாகப் பொறுப்பேற்கப் போவதாகக் குறிப்பிட்டார். ஆனால், ஜனவரி 2019-இல், வேதாந்தா குழுமத்தில் ஓய்வுபெறவோ அல்லது நிர்வாகமற்றப் பொறுப்பை ஏற்கவோ தனக்கு உடனடித் திட்டம் இல்லை என்று கூறினார்.
1992-ஆம் ஆண்டில், அகர்வால் வேதாந்தா அறக்கட்டளையை உருவாக்கி சமூகத் தொண்டு மற்றும் சமூக உதவி நிகழ்ச்சிகள், செயல்பாடுகளை மேற்கொண்டார்.
சமூக சேவையில் பில் கேட்ஸால் ஈர்க்கப்பட்டதாகக் கூறி, தனது குடும்பத்தின் 75 சதவீத செல்வத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…