‘சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்’ எனும் நடமாடும் இசைப்பள்ளியின் வழி மும்பையில் உள்ள பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இசை மற்றும் அதனுடன் தொடர்புடைய கற்றலை வழங்கும் ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளனர் சகோதரிகளான காமாட்சி மற்றும் விசாலா குரானா.
சகோதரிகள் இருவரும் மூன்று வயதிலிருந்தே கிளாசிக்கல் இசையைக் கற்று பயிற்சி செய்து வருகின்றனர். அவர்களின் தந்தை ஒரு பயிற்சி பெற்ற இசைக்கலைஞர் மற்றும் சவுண்ட் ஹீலர். உளவியல் பட்டம் படிக்கும் போது ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் விஷாரத் (இளங்கலைப் பட்டத்திற்கு சமமானவர்) முடித்தவர்.
தந்தையின் வழியில் பயணிக்கும் குரோனா சகோதரிகள் இருவரும், பல்வேறு பலன்களை அளிக்கும் இசை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர்.
மக்களுக்கு மன அழுத்தத்தைத் தணிக்கவும், அதிலிருந்து மீட்கவும் மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வை அனுபவித்தவர்களின் மறுவாழ்வை நிர்வகிக்கவும் உதவ விரும்பினர். அதற்கு இசையை மருந்தாக்கினர். குரானா சகோதரிகள் பள்ளிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு இசைப்பயிற்சியை அளித்தனர்.
மேலும், பின்தங்கியவர்களுக்காக இலவச இசை பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்து, நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு, தெற்கு மும்பையில் உள்ள பல்வேறு குடிசைவாழ் பகுதிகளில் இசை அமர்வுகளை ஏற்பாடு செய்தபோது, இடவசதி இல்லாததால் குழந்தைகள் இசைகற்க முன்வரவில்லை என்பதை சகோதரிகள் உணர்ந்தனர்.
பல்வேறு தரப்பில் யோசனைகள் நீடித்த நிலையில், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று இசையை மையமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் ஒரு பயணப் பேருந்தை உருவாக்கினர். ‘Music on Wheels’ எனும் கான்செப்டில், ‘தி சவுண்ட் ஸ்பேஸ்’ எனும் பெயரில் நடமாடும் இசைப்பேருந்தை உருவாக்கினர்.
2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்’ ஆனது அதன் முதல் பயணத்தை வோர்லியில் உள்ள லோட்டஸ் காலனியில் அதன் முதல் அமர்வுடன் தொடங்கியது. மாற்றியமைக்கப்பட்ட உட்புறங்களுடன் கூடிய பேருந்து ஆனது ஐஷர் மோட்டார்ஸால் வழங்கப்பட்டது.
சகோதரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டம் குழந்தைகளுக்கு நம்பிக்கையை கற்பிக்கவும், அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்றவும், வெளியில் பேசுவதற்கு பயப்படாமல் இருக்கவும் கற்பிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்தானது மும்பையின் சிம்லா நகர், போலீஸ் முகாம், லோட்டஸ் கேம்ப், மச்சிம்மர் நகர், அபியுதயா நகர் மற்றும் பிற குடிசைவாழ் பகுதிகளில் பயணித்து வருகிறது.
“இசையை எத்தனை பேருக்குச் சென்றடைய வைக்க முடியுமோ அத்தனை பேருக்கு சென்றடைய வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். இசையினால் பல நன்மைகள் உள்ளன. இது பொது நல்வாழ்வை உயர்த்துகிறது. சமூக நன்மைகளை வழங்குகிறது.“
தெற்கு மும்பையில் உள்ள பல பள்ளிகளில் பணிபுரியும் போது, மச்சிம்மர் நகர் மற்றும் லோட்டஸ் காலனி போன்ற பகுதிகளுக்குச் சென்றபோது, குழந்தைகள் கற்பதிலிருந்து பின்வாங்குகின்றனர். அதில் பல சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தோம். இந்தச் சமூகங்களில் உள்ள தலைவர்களை அணுகி, இந்தக் குழந்தைகளை எப்படி இசைக் கற்றலுக்கு ஒன்றாகச் சேர்க்கலாம் என்பதைப் புரிந்துகொண்டோம்,” என்று சோஷியல் ஸ்டோரியிடம் விசாலா பகிர்ந்தார்.
பேருந்தின் உள்ளே குழந்தைகளுக்கு இசை மறுகட்டமைக்கப்பட்ட வடிவத்தில் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு அமர்விலும் 25 மாணவர்கள் பங்கேற்க முடியும் மற்றும் ஒரு இசை அமர்வானது 40 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. இசைப்பேருந்தானது வாரம் முழுவதும் ஏழு நாட்களும் குடிசைப்பகுதிகளுக்கு பயணிக்கிறது. இதுவரை 5 முதல் 12 வயதுக்குட்பட்ட 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
வெளிப்புறத்தில் வழக்கமான பேருந்தாக காட்சியளிக்கும் அதே வேளை உட்புறம் பல்வேறு இசைக்கருவிகளுடன் நடமாடும் இசைப்பள்ளியாக தோற்றமளிக்கிறது. சான்றளிக்கப்பட்ட இசைப் பயிற்றுனர்கள் இந்தக் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கின்றனர்.
“ஒருவருக்கொருவர் பாடி வாழ்த்துகின்றனர். ஒரு மெல்லிசை அம்சத்தை வார்ம்-அப் குரல் பயிற்சியாக கற்றுக் கொடுக்கிறோம். ஒரு ரைம் அல்லது ஒரு இசை மூலம் குழந்தைகளுக்கு மொழியைக் கற்பிக்கிறோம். மூளை வளர்ச்சிக்கு தாளச் செயல்பாட்டைப் பயன்படுத்துகிறோம். மேலும் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் வகையில் மகிழ்ச்சியான பயிற்சியையும் எப்போதும் சேர்த்துக்கொள்கிறோம்.“
குழந்தைகளின் இசை ஞானத்தில் சில அற்புதமான வளர்ச்சியை கண்டிருக்கிறோம். குழந்தைகள் இந்த வகுப்புகளை அரிதாகவே தவறவிடுகிறார்கள். இதில், மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இசைப்பள்ளி விளங்குகிறது. குழந்தைகள் அவர்களது ஆசிரியர்களுடன் நல்ல கனெக்டில் இருக்கின்றனர். அவர்கள்மீது முழுமையா நம்பிக்கை வைத்துள்ளனர். இது எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது, என்கிறார் விசாலா.
தற்போது, தி சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸில் ஆறு முழுநேர இசைப் பயிற்றுனர்கள் உள்ளனர். இருப்பினும், இந்த முயற்சியை விரிவுபடுத்த நிதி திரட்டுவதில் தாங்கள் போராடி வருவதாக சகோதரிகள் தெரிவித்தனர்.
“ஐச்சர் மோட்டார்ஸ் ஏற்கனவே மற்றொரு பேருந்தை அளிப்பதாக உறுதியளித்துள்ளது. இருப்பினும், பஸ்ஸை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல எங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. இதுவரை நன்கொடையாளர்கள் மற்றும் கிரவுட் ஃபண்டிங் மூலம் நிர்வகித்தோம்.
ஆனால், இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு எங்களுக்கு கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப் தேவை. பல பேருந்துகளை இயக்குவது, இசை வகுப்புகளை நடத்துவது, ஆசிரியர்களை பணியமர்த்துவது, குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பது இவை தான் எங்களது நோக்கம் மற்றும் எதிர்கால திட்டம். ஆனால், இவை அனைத்தையும் செயலாக்கமுடியுமா? முடியாதா என்பது நிதியினை பொறுத்தது” என்றார் காமாட்சி.
இசைப்பள்ளியில் தாளம் உருளும்போதும், அவற்றின் ஒலிகள் காற்றில் எதிரொலிக்கும்போதும், குழந்தைகளின் தன்னம்பிக்கையும் உயருகிறது என்றனர்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…