ஆண்டுக்கு 30 டன் உணவு வீணாவதை தடுத்து, 20 லட்சம் பேரின் பசிப்பிணி போக்கிய No Food Waste அறக்கட்டளை!

மக்கள் யாரும் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் “No Food Waste” என்ற அமைப்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் சேவையாற்றி வருகிறது

உலகளவில் சுமார் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவாதாக கடந்த ஆண்டு ஐக்கிய நாடு அதிர்ச்சிகாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 50 கிலோ எடையுள்ள உணவை வீணடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் திருமணம், பிறந்தநாள், கிரகப்பிரவேஷம், வளைக்காப்பு என ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படுவது உண்டு. அப்படிப்பட்ட தருணங்களில் உணவு மீந்து போய்விட்டால், சாப்பாட்டிற்காக வாடும் ஏழைகளுக்கு தானம் செய்பவர்களை விட ‘இதையெல்லாம் யார் கொண்டு போய் கொடுக்கிறது’ என்ற சலிப்புடன் குப்பையில் கொட்டுபவர்களும், கால்நடைக்கு உணவாக கொடுப்பவர்களுமே அதிகம்.

அப்படி யாருமே தீண்டாத உணவை பசியில் வாடும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னதமான பணியைத் தான் “No Food Waste” என்ற NGO செய்து வருகிறது.

மக்கள் யாரும் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் “No Food Waste” என்ற அமைப்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் சேவையாற்றி வருகிறது.

No Food Waste உருவான கதை:

ஒவ்வொரு முயற்சிக்கும் ஒரு உந்துதல் இருக்கும், அதேபோல் தான் மனிதர்கள் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க ஏதாவது ஒரு சம்பவம் திருப்புமுனையாக அமையும். அப்படித்தான் அருண்குமாரின் கல்லூரி காலத்தில் நடந்த ஒரு சம்பவம், No Food Waste என்ற அறக்கட்டளையை கட்டமைக்க காரணமாக அமைந்துள்ளது.

அருண் குமார் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது உறவினர் ஒருவரது வீட்டில் துக்க நிகழ்ச்சியின் போது ஏராளமான உணவு மீதமாகியுள்ளது. அதனை இவரும், இவரது குடும்பத்தினரும் சேர்ந்து அருகேயுள்ள முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு பரிமாறியுள்ளனர்.

2012ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தான், அருணின் மனதில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் மீதமாகும் உணவையும், பசியால் வாடும் மனிதர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

படித்து முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்த அருண்குமார், தனது சமூக சேவையையும் தொடர்ந்துள்ளார். பல அறக்கட்டளைகளில் தன்னார்வலராக இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது தான் 2014ம் ஆண்டு கோவையில் ஆரம்பிக்கப்பட்ட “No Food Waste” என்ற அமைப்பு இவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை அடுத்தகட்டமாக சென்னையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டார்.

2017ம் ஆண்டு முதல் சென்னையில் மீதமான உணவை சேகரித்து பசியால் தவித்து வரும் மனிதர்களுக்கு வழங்க ஆரம்பித்தார். அதன் பின்னர், 2108ம் ஆண்டு சென்னையில் “No Food Waste” அமைப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

வீடுகளில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளை தங்களது வாகனங்களில் சேகரித்து, அதனை ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்படும் ஏழை மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

”ஆரம்பத்தில் இருசக்கர வாகனம் மூலம் உணவை சேகரித்து, வழங்கி வந்தோம். காலப்போக்கி “No Food Waste” அமைப்பிற்கான ஆதரவு அதிகரிக்கவே பைக்கில் சென்று உணவு சேகரிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த சமயத்தில் தான் உணவு பாதுகாப்புத்துறை செயலாளர் ஒருவர் முதன் முறையாக இந்த அமைப்பிற்கு ஒரு வாகனத்தை நன்கொடையாக வழங்கினார்,” என்றார் அருண்குமார்.

அன்று வேகமெடுக்க ஆரம்பித்த “No Food Waste” அமைப்பின் சமூகப்பணி இன்று சென்னையில் மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு வரையுள்ள ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய மக்களின் பசி தீர்க்க தீயாய் பணியாற்றி வருகிறது.

பசி பிணி போக்கும் சேவை:

சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் ஆதரவற்றோருக்கான இரவு நேர தங்கும் இடங்கள், மெரினா பீச், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த அமைப்பால் அணுக முடியாத தொலைவில் உள்ளவர்களுக்கு உணவிற்கு பதிலாக, மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

”சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கும் இந்த அமைப்பு சார்பில் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குகிறோம். மாற்றுத்திறனாளிகள், பெண் கூலித்தொழிலாளார்கள், திருநங்கைகள் என மாதம் ஆயிரம் நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.”

சாப்பாட்டை எந்தவித சேதமும் இல்லாமல் தேவையிருப்பவர்களிடம் கொண்டு சேர்க்க “No Food Waste” அமைப்பு சார்பில் அவ்வப்போது கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து “No Food Waste” அமைப்பின் சென்னை மண்டல இயக்குநர் அருண்குமார் கூறுகையில்,

“வீணாக கீழே கொட்டப்படும் உணவை சேகரிப்பதை விட, அதற்காக காத்திருப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது சவாலானது. எனவே தான் ஒவ்வொரு ஏரியா வாரியாக உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கணக்கெடுப்பு நடத்துகிறோம். தினந்தோறும் அவர்கள் சம்பாதிக்கும் தொகை, அதிலிருந்து உணவிற்காக செய்யும் செலவு, தினசரி ஊட்டச்சத்து உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கிறோம். இதன் மூலமாக உணவு தேவைப்படுவோர் அதிகமுள்ள பகுதிகள் எது என்பதை அடையாளம் கண்டு வைத்துள்ளோம்” என்கிறார்.

உணவு சேகரிக்கும் இடங்கள்:

No Food Waste அமைப்பு சார்பில் யார் கையும் படாமல் மீதமாகிப்போன உணவுகளை சேகரிப்பதற்காக 9962790877 என்ற பிரத்யேக எண் அறிவிக்கப்பட்டுள்ளது. யார் வீட்டு விசேஷம் அல்லது நிறுவனங்களின் நிகழ்ச்சியிலாவது உணவு கூடுதலாக இருந்தால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

உடனடியாக No Food Waste அமைப்பைச் சார்ந்த தன்னார்வலர்களே வாகனம் மற்றும் உணவை சேகரிப்பதற்கான பாத்திரத்துடன் வந்து அதனை பெற்றுக்கொள்கின்றனர். அதன் பின்னர், ஏற்கனவே “No Food Waste” அமைப்பு எடுத்து வைத்துள்ள சர்வேயின் படி உணவு தேவைப்படுவோரின் ஏரியாவிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

வெறும் உணவு வீணாவதை தடுப்பது மட்டும் தங்களது நோக்கமல்ல எனக்கூறும் அருண்குமார்,

“உணவு வீணாவதை தடுப்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு மக்களுக்கு உணவின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். எனவே தான் எங்களிடம் உணவு தருவதற்காக போன் செய்யும் நபர்களை முதலில் வீட்டிற்கு அருகில் உள்ள சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவளிக்க அறிவுறுத்துகிறோம். இதன் மூலமாக மக்கள் உணவுக்காக எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை நேரடியாக பார்த்து, உணவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வார்கள் என்பதை நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார்.

“No Food Waste” வீட்டு விசேஷங்கள், துக்க நிகழ்வுகள், பெரு நிறுவனங்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகள், கலை விழாக்கள் என எங்கு கை தீண்டாத உணவு கூடுதலாக இருந்தாலும் அதனை பெற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி பேக்கரி, ரெஸ்ட்ராண்ட், ஓட்டல்கள், நிறுவனங்களில் இருந்தும் ப்ரெஷ்ஷான உணவை சேகரிக்கின்றனர்.

2019ம் ஆண்டு சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்த போது தேங்கிய உணவு அனைத்தையும் இந்த அமைப்பு சேகரித்து பசியால் வாடும் மக்களுக்கு வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது ஸ்விக்கியில் கேன்சல் செய்யப்படும் உணவு பார்சல்களையும் முறையாக சேகரித்து, உணவிற்காக தவிக்கும் மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதற்காக சென்னையில் மட்டும் 5 ஹப்கள் அமைக்கப்பட்டு உணவு ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்களிடம் இருந்து உணவு சேகரிப்படுகிறது.

கம்யூனிட்டி கிச்சன்:

கொரோனா காலக்கட்டத்தில் ஏராளமானோர் உணவை வழங்க முன்வந்தாலும், அதனை சேகரித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விநியோகிப்பது சவலாக இருந்துள்ளது. மேலும், நாளுக்கு நாள் உணவு தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே “No Food Waste” அமைப்பினர் உணவை தாங்களே சமைக்க முடிவெடுத்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை அருகேயுள்ள ஜல்லடியன்பேட்டையில் 1200 சதுர அடி பரப்பளவிலான சமையலறை, 2021ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தினந்தோறும் சுமார் 2,00,000 பேருக்குத் தேவையான உனவு தயாரிக்கப்படுகிறது. இதற்கான சமையல் வேலையில் தன்னார்வலர்கள் பங்கேற்பதோடு, பொருளாகவும், பணமும் ஏராளமான நன்கொடையாளர்கள் உதவி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு சத்தான உணவு:

2020ம் ஆண்டு முதல் ஊட்டமில்லாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவினை வழங்கும் முயற்சியிலும் இந்த அமைப்பு இறங்கியுள்ளது.

“எங்கள் சமூக சமையலறையில் புதிதாக சமைக்கப்படும் சுண்டல், முட்டை, சத்துணவு என சுமார் 5000 குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி வருகிறோம்,” என்றார் அருண்.

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் தினமும் உணவளிக்கப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு பிரச்சாரம்:

பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் உணவு வீணாவதை தடுக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்த “No Food Waste” அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, விழிப்புணர்வு வீடியோக்கள் காட்சிப்படுத்துதல் மூலமாக உணவை வீணடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

“ஆண்டுக்கு 3 முதல் 4 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம். 2017ம் ஆண்டு முதல் இதுவரை 20 லட்சம் பேருக்கு உணவளித்துள்ளோம். இதன் மூலமாக ஆண்டுக்கு சென்னை மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டும் 30 டன் உணவு குப்பைக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.”

பள்ளிகள் தோறும் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு உணவை வீணாக்குவது, உணவின் முக்கியத்துவம் மற்றும் ஆதரவற்ற மக்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வது குறித்து கற்பிக்கின்றனர். இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் விதமாக சோசியல் மீடியாவிலும் ஜீரோ வேஸ்ட் பிளேட் சேலஞ்ச்விழிப்புணர்வு போஸ்ட்கள்வீடியோக்கள் மற்றும் பிரபலங்களின் பேட்டிகளை ஒளிபரப்பி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இப்படி இவர்கள் செய்யும் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு கை மேல் பலனாக டன் கணக்கிலான உணவு வீணாக குப்பையில் கொட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

5 days ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

1 week ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

2 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

2 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

2 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

2 months ago