ஜனக் பால்டா மெக்கில்லன் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சனாவாடியா என்கிற நகருக்கு அருகில் வசிக்கிறார். இவர் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அதுமட்டுமல்ல, பெண்கள் முன்னேற்றத்திலும் தீவிரமாகப் பங்களித்து வருகிறார் இந்த சமூக சேவகர்.
இவர் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பிறந்த ஜனக் பால்டாவிற்கு 2015-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவர் Jimmy McGillgan Centre for Sustainable Development நிறுவன-இயக்குநர். இந்த அரசு சாரா நிறுவனம் இந்தூரில் உள்ளது. இதுதவிர கிராமப்புற பெண்களுக்காக செயல்படும் பார்லி விகாஸ் சன்ஸ்தான் முன்னாள் நிறுவன இயக்குநராகவும் இருந்தார்.
ஜனக் பால்டா கிராமப்புற மற்றும் பழங்குடிப் பெண்கள் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய ஆற்றல், இயற்கை விவசாயம் போன்றவற்றில் தீவிரமாகப் பங்களித்து வருகிறார். அதுமட்டுமா, மின்சார கட்டணமில்லாமல் கழிவுகளற்ற வீட்டில் வசித்து வருகிறார்.
ஜனக் பால்டா கழிவுகளற்ற வீட்டில் வசித்து வருகிறார். மின்சாரத்திற்காக இவர் எந்த செலவும் செய்வதில்லை. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? காற்றாலை. இந்த காற்றலை ஜனக்கின் வீட்டிற்கு மட்டுமில்லாமல், சுற்றியிருக்கும் 50 வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்கி வெளிச்சம் கொடுக்கிறது.
காய்கறிகள், பருப்பு போன்றவற்றை கடைகளுக்கு சென்று வாங்குவதில்லை. வீட்டின் தோட்டத்திலேயே இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்கிறார். உப்பு, டீத்தூள், வெல்லம் போன்ற சில பொருட்களை மட்டுமே வெளியிலிருந்து வாங்குகிறார். இவரது தோட்டத்தில் 160 மரங்களும் 13 செடிகளும் இருக்கின்றன.
இவர் சமைப்பதற்கு சோலார் குக்கர்களைப் பயன்படுத்துகிறார். வெளியில் செல்லும்போதுகூட சிறிய சோலார் குக்கரை எடுத்து செல்வது இவரது வழக்கம். சமையல் அடுப்பிலும் மரக்கட்டைகளுக்கு பதிலாக மாட்டு சானத்தில் தயாரிக்கப்படும் வரட்டி, செய்தித்தாள் போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்.
வெளியிலிருந்து பொருட்களை அதிகம் வாங்காமல் இப்படி மாற்று ஏற்பாடுகளை செய்வது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? பொறுங்கள். ஆச்சரியம் இத்துடன் முடிந்துவிடவில்லை. இவரது வீட்டிலிருந்து எந்தப் பொருட்களும் கழிவுகளாக நிலத்தில் கொட்டப்படுவதில்லை என்பது அடுத்த ஆச்சரியம்.
முகத்திற்கு போடும் ஃபேஸ்பேக், ஷாம்பூ, சோப்பு, டிடெர்ஜெண்ட், டூத்பேஸ்ட் போன்றவற்றைக் கூட இவரே தயாரித்துவிடுகிறார். இவரது சமையலறை சிங்க் குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் செடிகளுக்கு பாய்ச்சப்படுகிறது. ஒரே ஒரு துளி நீரைக்கூட வீணடிக்காமல் இவர் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவது வியப்பூட்டுகிறது.
ஜனக் சண்டிகர் பகுதியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். எம்.ஏ ஆங்கில இலக்கியமும் அரசியல் அறிவியலும் படித்தார். படித்துக்கொண்டிருந்தபோதும், படிப்பை முடித்த பிறகும் பி.எஃப் அலுவலகம், உயர்நீதி மன்றம், கிராமப்புறம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான மையம் என பல்வேறு இடங்களில் பணியாற்றியிருக்கிறார்.
ஜேம்ஸ் மெக்கில்லன் என்கிற அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் ஒன்று சேர்ந்து ’
பார்லி டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட் ஃபார் ரூரல் வுமன்’ என்கிற அமைப்பை நிறுவினார்கள். இது 1985-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி நிறுவப்பட்டது. ஜனக் 26 ஆண்டுகள் வரை இந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். 2011-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இருப்பினும் இன்னமும் நிர்வாகக் குழுவில் பங்களித்து வருகிறார்.
இந்நிறுவனத்தைப் பற்றி ஜனக் பால்டா புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். 2015-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இதுதவிர மேலும் பல விருதுகளை இவர் வென்றுள்ளார். இந்திய அரசாங்கத்திற்காக ஆய்வுப் பணிகளையும் இவர் மேற்கொண்டுள்ளார்.
1964-ம் ஆண்டு சண்டிகரில் இருந்தார் ஜனக். அப்போது அவருக்கு வயது 15. உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருந்தார். ஒருமுறை திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறு மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவமனையில் சொல்லிவிட்டனர். அதன் பிறகு அரசாங்கம் உதவிக்கரம் நீட்டியது. கனடாவிலிருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு ஜனக்கிற்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
புதிய வாழ்க்கை கிடைத்த உணர்வு ஏற்பட்டது. இந்த வாழ்க்கையை பூமிக்காக அர்ப்பணிக்கவேண்டும் என முடிவு செய்தார் ஜனக். மக்கள் நலனில் பங்களிக்கத் தீர்மானித்தார். பல கோவில்களுக்கு சென்று கடவுளுக்கு நன்றி செலுத்தினார். டெல்லியில் லோடஸ் டெம்பிள் சென்றார். பகாய் சமய வழிபாட்டைத் தழுவினார்.
படிப்பு, வேலை என ஒருபுறம் பரபரப்பாக இருந்தபோதும், மக்கள் நலப்பணிகளையும் செய்யத் தொடங்கினார். இதய அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்தார்.
ஜனக் ஒருகட்டத்தில் இந்து-முஸ்லீம் பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்ய இந்தூர் வந்திருந்தார். பின்னர் வேலையை விட்டு விலகி இந்தூரில் வசிக்க ஆரம்பித்தார். இங்கு பழங்குடி பெண்களுக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அவர்களுக்கு பயிற்சியளித்தார். பகாய் நிறுவனம் கொடுத்த 6 ஏக்கர் நிலத்தில் நிறுவனத்தைத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பெண்கள் மேம்பாட்டிற்காக பணியாற்றி வருகிறார்.
ஜனக்கின் வழிகாட்டுதல்களுடன் 1.5 லட்சம் இளைஞர்கள், 6000 கிராமப்புற மற்றும் பழங்குடிப் பெண்கள் சூரிய சக்தி சமையலில் பயிற்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…