‘முயற்சி செய்தால் சமயத்திலே முதுகு தாங்கும் இமயத்தையே…’ இது வெறும் பாடல் வரிகள் மட்டுமல்ல, இதனை தங்கள் சொந்த வாழ்க்கையில் செய்து காட்டி, ஜெயித்தவர்கள் நம்மில் ஏராளம். அந்த வெற்றியாளர்களில் ஒருவர்தான் கோவை அருகே உள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்த ‘பசுமை பழகு’ அனிஷா.
டிகிரி முடித்து பேங்கிங் செக்டரில் எட்டு வருடம் வேலை பார்த்து வந்த அனிஷா, தொழில் முனைவோரான கதையே சுவாரஸ்யமானது. அனுஷா புதிதாக கட்டிய வீட்டைப் பார்த்து, அவரது நண்பர் ஒருவர் தனக்கும் அதே மாதிரி வீடு கட்டித் தர முடியுமா எனக் கேட்டுள்ளார். அனிஷாவும் அதற்கு சம்மதித்து, நண்பரின் வீட்டு கட்டுமானத்தில் நிறைய உதவிகளைச் செய்துள்ளார்.
நண்பர் எதிர்பார்த்தது மாதிரியே வீடு நன்றாக வரவும், அனிஷாவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, ஒரு தொகையை அளித்துள்ளார் அவர். இப்படியாக நண்பருக்கு உதவி செய்வதற்காக, கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் இறங்கிய அனிஷா, சுமார் மூன்று ஆண்டுகள் அத்தொழிலை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார்.
“எங்க குடும்பத்துல பிசினஸ் பண்ற முதல் ஆள் நான்தான். நல்லபடியாக போய்க் கொண்டிருந்த தொழிலில் கொரோனா லாக்டவுன் பிரச்சினையாக முளைத்தது. நிறைய நஷ்டங்கள் ஏற்பட்டது. என்னுடன் தொழிலில் பார்ட்னராக இருந்த நண்பர், லாபத்தில் மட்டும் பங்கு போட்டுக் கொண்டார். ஆனால், நஷ்டம் வந்தபோது அதை அப்படியே என் மீது சுமத்தி விட்டார்.
ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. எனது வீடு, நிலம் போன்றவற்றை விற்று கடனை அடைக்க வேண்டிய சூழல் உண்டானது. இதனால் என் கணவருக்கும் எனக்கும் பிரச்சினை ஏற்பட்டு, பிரிந்து சென்று விட்டார். நான் எனது இரண்டு வயது குழந்தையோடு, பணப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன்.
“கையில் இருந்த வீடு, நிலம் என எல்லாவற்றையும் விட்டு என் கடன்களை அடைத்தேன். மீதம் கையில் இருந்த பணம் மீண்டும் கன்ஸ்ட்ரக்சன் தொழில் தொடங்கும் அளவிற்கு இல்லை. எனவே, அதை வைத்து புதிதாக என்ன தொழில் தொடங்கலாம் என யோசித்தபோது உருவானதுதான் இந்த பசும்பால் விற்பனை தொழில்,” என தான் இந்தத் தொழிலுக்கு வந்த கதையை விவரிக்கிறார் அனிஷா.
முன்பின் அனுபவம் இல்லாத தொழில், ஆதரவில்லாமல் குழந்தையை தானே வளர்க்க வேண்டிய சூழல், இருந்தபோதும் மனம் தளரவில்லை அனிஷா. சில மாதங்கள் ஆய்வுக்குப் பிறகு, கடந்த ஆண்டு, ‘பசுமை பழகு’ என்ற பெயரில் ஆப் மூலம் பசும்பால் விற்பனையைத் தொடங்கினார்.
“என் குழந்தைக்கு நல்ல பசும்பால் வேண்டும் எனத் தேடியபோதுதான், இங்கு பாக்கெட் பால் கிடைக்கும் அளவிற்கு பசும்பால் குறைந்த விலையில் கிடைப்பதில்லை எனத் தெரிந்து கொண்டேன். எனவே, சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மூலம் நல்ல தரமான பாலைப் பெற்று, அதனை ஆப் மூலம் விற்பனை செய்வது என முடிவு செய்தேன். நான் விற்கும் பாலையும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்க எனக்கு மனது வரவில்லை. எனவே, லாபம் குறைவாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் பலன் அடைய வேண்டும் என பாட்டிலில் விற்பனை செய்து வருகிறேன்,” என்கிறார் அனிஷா.
கடந்தாண்டு கையில் இருந்த ரு. 20 லட்சத்தில், விவசாயிகளிடம் இருந்து பாலைப் பெற்று, அதனை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க தேவையான கருவிகள் மற்றும் ஆட்டோ போன்றவற்றை அனிஷா வாங்கியுள்ளார். தற்போது சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கிமீ வரை மட்டுமே அவர் பால் சப்ளை செய்கிறார் என்றபோதும், இந்த ஓராண்டில் அவர் ஒரு கோடி ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்திருப்பதாகக் கூறுகிறார்.
“ஆப் மூலமாக மட்டுமின்றி நேரடியாகவும் வாடிக்கையாளர்களுக்கும், அருகில் உள்ள ஹோட்டல்களுக்கும் நாங்கள் பால் சப்ளை செய்து வருகிறோம். இது தவிர இரண்டு நேரடி அவுட்லெட்களும் உள்ளன. தினசரி 500-600 லிட்டர் வரை பசும்பால் சப்ளை செய்கிறோம். பால் மட்டுமின்றி, பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், மோர், வெண்ணெய், நெய், பால்கோவா மற்றும் ஐஸ்கிரீமும் எங்களிடம் கிடைக்கும். இவை அனைத்துமே எனது மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதால், தூய்மையாகவும், தரமாகவும் தயாரிக்கப்படுகின்றன. அதனாலேயே ஒருமுறை வாங்கிய வாடிக்கையாளர்கள் மீண்டும் எங்களின் பொருட்களையே வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்,” என பெருமையுடன் கூறுகிறார் அனிஷா.
அடுத்த கட்டமாக தனது பசுமை பழகு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனை எல்லையை விரிவு படுத்த திட்டமிட்டு வருகிறார் அனிஷா. தினமும் 2 ஆயிரம் லிட்டர் வரை பால் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அவரின் அடுத்த இலக்காம்.
“தற்போது என்னிடம் ஆறு பேர் வரை வேலை பார்த்து வருகின்றனர். விவசாயிகள் மற்றும் இன்னும் பலருக்கு வேலை வாய்ப்பை தர வேண்டும் என மேலும் பல திட்டங்கள் வைத்துள்ளேன். பாக்கெட் பாலைவிட குறைந்த விலையில் பசும்பால் கிடைப்பது அரிது. ஆனால், லாபத்தை பெரிதாக எண்ணாமல், குறைந்த விலையில் தரமான பாலை வழங்கி வருகிறேன். விரைவில் பசுமை பழகின் பிரான்சைசிகளை மற்ற இடங்களிலும் கொண்டு வர வேண்டும்,” என்கிறார் அனிஷா.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…