மகப்பேறு பெண்களின் தேவையை தீர்க்கும் ‘put-chi’ – 3 ஆண்டுகளில் சர்வதேச பிராண்ட் ஆக்கிய கோவை தம்பதி!

ஆடைகள் முதல் இளம் தாய்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வைத் தரும் சர்வதேச தரத்திலான பிராண்டாக உருவாகி இருக்கிறது கோவை தம்பதி தீபிகா தியாகராஜனின் “Putchi”. 50 ஆயிரம் முதலீட்டில் தொடங்கிய தொழிலை மூன்றரை ஆண்டுகளில் மாதத்திற்கு ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் பிராண்டாக்கி உள்ளனர்.

உடல் அளவில் கஷ்டங்கள் இருந்தாலும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கும் காலம் மகப்பேறு.

தாய்மை அடைந்தது முதல் குழந்தைக்கான கவனிப்பு தொடங்குகிறதே தவிர, அந்த சிசுவை சுமக்கும் தாய்க்கான பராமரிப்பு அவ்வளவாக இல்லை. சொல்லப்போனால் அவர்களுக்கு ஏற்ற உடைகள் கூட சந்தையில் கிடைப்பதில்லை என்கிறார்Put-chi-யின் நிறுவனர், இயக்குனர் மற்றும் சிஇஓவான தீபிகா.

நான் முதலில் தாய்மை அடைந்த போது, அந்த நேரத்தில் என்னை சவுகரியமாக வைத்துக் கொள்ள தேவைப்பட்ட பொருட்கள் நான் எதிர்பார்த்த வகையில் கிடைக்கவில்லை. சொல்லப் போனால் நம் ஊரில் அது போன்று தனிக்கவனம் செலுத்தி வாங்கும் அளவிற்கு சந்தையில் பொருட்களும் இல்லை. இந்த விஷயம் எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது, குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்யும் தாய்களுக்கு ஏன் இந்த பாகுபாடு என்று எண்ணினேன்.

படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் இருந்தாலும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் சமூகத்திற்கு என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருந்து கொண்டே இருந்தது. அந்த உதவி ஏன் இளம் தாய்களின் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கக் கூடாது என்று உருவாக்கப்பட்டதே “put-chi” என்கிறார் தீபிகா.

ஆஸ்திரேலியா டூ இந்தியா

கோபிசெட்டிபாளையத்தில் பிறந்து வளர்ந்த தீபிகா, இளநிலை விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு தனியார் தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறார். திருமணத்திற்குப் பின்னர் அவர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் சென்றுள்ளார். தீபிகாவின் கணவரான தியாகராஜனும் கோபிசெட்டிபாளைத்தைச் சேர்ந்தவர், இளநிலை பொறியியல் படித்த பின்னர் உயர் படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றவர் அங்கேயே முதுநிலை பட்டங்களைப் பெற்று நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியிலும் சேர்ந்துள்ளார்.

7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவிலேயே வசித்து வந்த தியாகராஜன், திருமணத்திற்கு பின்னர் தீபிகாவை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தீபிகா அங்கும் பகுதிநேரமாக பல்வேறு பணிகளைச் செய்துள்ளார், ஒன்றரை ஆண்டுகள் இனிமையாக சென்று கொண்டிருந்த நேரத்தில் இருவரும் இந்தியாவிற்கே திரும்பி புதிதாக ஒரு தொழில் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதன்படி, 2018ம் ஆண்டில் இருவரும் இந்தியா திரும்புயிள்ளனர்.

வலிகளுக்கான தீர்வு

நாங்கள் இந்தியாவிற்கு வந்து ஏதேனும் ஒரு தொழில் தொடங்கி சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று விரும்பினோம். என்ன தொழில் செய்ய வேண்டும் என்கிற திட்டமில்லை என்றாலும் வெளிநாடுக்கு சென்று அதிக சம்பளம், சொகுசான வாழ்க்கை சொல்லப்போனால் ஆஸ்திரேலியா குடியுரிமை கிடைத்தாலும் கூட அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நம் தாய்நாட்டிற்குத் திரும்பி மற்றவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதே இருவரின் கனவாக இருந்தது என்கிறார் புட்சியின் இணை நிறுவனரான தியாகராஜன்.

“நாங்கள் இங்கு வந்த பிறகு தீபிகா கருவுற்றிருந்தார், 2019ல் எங்களுக்கு மகன் பிறந்தான். பிரசவத்திற்குப் பிறகு தீபிகாவிற்கு ஏற்றவாறும் பாலூட்டுவதற்கு சவுகரியமான ஆடைகள் வாங்கலாம் என்று தேடியபோது, எங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் எதுவுமே கிடைக்கவில்லை. தாய்மை தொடங்கிய 9 மாதங்கள் முதல் பிரசவத்திற்கு பின்னர் என பெண்களின் உடல்அமைப்பு பன்மடங்கு மாற்றங்களுக்கு உள்ளாகிறது, பேஷனுக்காக என்றில்லாமல் அவர்களின் பிரச்னைக்கான தீர்வைத் தரும் விஷயங்கள் வெளியே கிடைக்காததால் நாங்களே அவற்றை உருவாக்கத் தீர்மானித்தோம்,” என்கிறார் தியாகராஜன்.

சொந்த டிசைன்கள்

நான் இளம் தாயாக இருந்த சமயத்தில் என்னுடைய தோழிகள் சிலரும் கருவுற்றிருந்தனர், அவர்களும் இதே சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். மகப்பேறுக்கான ஆடைகளை அவர்கள் எங்கே வாங்குகிறார்கள் என்ற போது அவர்களே டெய்லரிடம் துணி வாங்கிக் கொடுத்து தைத்துக் கொள்வதாகவும், அல்லது பொருந்தாத ஏதோ ஒரு டிசர்ட் போன்றவற்றை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

டெய்லரிடம் துணியை வாங்கிக் கொடுத்து தைத்து வாங்குவது என்பது இளம் தாய்களுக்கு ஒரு பெரிய வேலை ஏனெனில் அத்தனை முறை கடைக்கு நேரில் செல்ல முடியாத சூழ்நிலை.

“இதனால் நானே இளம் தாய்களுக்கான ஆடைகள் எப்படியெல்லாம் தேவை, அதில் என்னென்ன சவுகரியமான விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதை வைத்து ஒரு prototype டிசைன் வடிவமைத்து உற்பத்தி செய்யத் தொடங்கினேன். அப்படி உருவானது தான் எங்களின் பிராண்ட் ’put-chi’, என்கிறார் தீபிகா.

வளர்ச்சியடைந்த ஆன்லைன் விற்பனை

எங்களுடைய மகனின் செல்லப்பெயர் ’புட்சி’, அவனால் தான் இந்தத் தொழிலுக்கான உந்துதல் கிடைத்தது என்பதால் அதையே பிராண்ட் பெயராக வைத்தோம். ஆசிய மொழிகளில் ’புட்சி’ என்றால் ’ஆற்றலைத் தூண்டுவது’ என்று பொருள் எங்களுக்கான ஆற்றலாக மகனும் இந்தத் தொழிலும் இருப்பதாலும் தாய்மை மற்றும் மகப்பேறு தொடர்பானதால் அதையே பெயராக வைத்தோம் என்கிறார்கள் இந்த தம்பதி.

2019 மார்ச் மாதத்தில் இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் செலிபிரிட்டி ஒருவரை வைத்து Product-ஐ ஆன்லைன் விற்பனைக்கு வைத்தோம். பிரத்யேகமாக மகப்பேறு பெண்களுக்கு 10 ஸ்டைல்களிலான ஆடைகளை இன்ஸ்டாகிராமில் விற்பனைக்கு வைத்தோம் முதல் 3 நாட்களிலேயே அனைத்து ஆடைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அந்த உற்சாகத்தில் எங்களுடைய தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கினோம்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கால் ஆன்லைன் விற்பனை அதிகரித்த நிலையில் எங்களுடைய பிராண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியது என்கின்றனர் இவர்கள்.

முதல் தலைமுறை தொழில்முனைவர்கள்

குழந்தைக்குத் தேவைப்படும் ஆடைகள் முதல் பொருட்கள் வரை ஏராளமானவை சந்தையில் கொடிக்கிடக்கின்றன, கிடைக்கவும் செய்கின்றன. ஆனால், மகப்பேறு பெண்களுக்குத் தேவையானவற்றை பூர்த்தி செய்வதற்கு பிரத்யேகமான ஒரு இடம் என்பது சந்தையில் இல்லை.

“ஒரு குழந்தை எப்படி புதிதாக பிறந்து இந்த பூமிக்கு வருகிறதோ அப்படித் தான் அந்தத் தாயும். அம்மா என்னும் புதிய உறவிற்குள் நுழைகிறாள். பச்சிளம் குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு தாய்க்கும் எந்த அசவுகரியங்களும் இருக்கக் கூடாது, “A Happy mother makes a happy child” எனவே அவர்களுக்குத் தேவையானவற்றை எப்படி எளிதில் அவர்களுக்கு கிடைக்கச் செய்யலாம் என்னும் விதத்தில் எங்களுடைய தொழில்முனைவு பயணம் தொடங்கியது,” என்கிறார்.

எங்களது குடும்பப் பின்னணியில் யாரும் தொழில்முனைவராக இல்லை, நாங்கள் இருவரே முதல் தலைமுறை தொழில்முனைவர்கள். தொழில்முனைவு பற்றிய அனுபவம் எதுவும் இல்லாத நிலையில், ஸ்டார்ட் அப்பில் இருந்தே ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டோம்.

தீபிகாவிற்கு வடிவமைப்பு பற்றி எந்த அனுபவமும் இல்லாத நிலையிலும் கூட அவரே இளம் தாய்களுக்கு ஏற்ற ஆடைகளை வடிவமைத்தார், அவற்றிற்குத் தேவையான தரமிக்க துணிகளை நேரில் சென்று வாங்கி வந்து அதனை தைக்கக் கொடுத்து வாங்கிய போது தான் அதில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது அவற்றை எப்படி சரிசெய்வது என்கிற தெளிவு கிடைத்தது, என்கிறார் தியாகராஜன்.

மகப்பேறை இனிமையாக்கும் பொருட்கள்

மகப்பேறு ஆடைகள் விற்பனை என்று https://theputchi.com/ எங்களுடைய இணையதள பக்கத்தில் ஆன்லைன் விற்பனையாக தொடங்கிய பயணத்தில், 2021ல் மகப்பேறு பெண்களுக்கான மூங்கில் உள்ளாடைகளை அறிமுகம் செய்தோம்.

அதன் பின்னர், இளம் தாய்களுக்கான யோகா ஆடைகள், சரும மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் என ஃபேஷனுக்காக இல்லாமல் தாய்மார்களுக்கு சிரமத்தை கொடுக்கின்ற விஷயங்களுக்குத் தீர்வாக ஒவ்வொரு பொருளையும் அக்கறையுடன் அறிமுகம் செய்தோம்.

பெண்கள் கருவுற்றிருக்கும் நேரத்தில் ஏற்படும் கால் வலிக்கு compressor socks , வயிற்றுக் குமட்டலுக்கு anti nausea band என்று மருத்துவத்தை நாடாமல் அக்குபஞ்சர் முறையில் ஆரோக்கியமாக பிரசவ காலத்தை கடப்பதற்கான பொருட்கள் பலவற்றை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம்.

“புட்சி maternity பிராண்டு என்பதை விட நாங்கள் பெண்களின் மிக முக்கியமான தாய்மை காலத்தில் அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வைத் தருவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டையே செய்து கொண்டிருக்கிறோம்,” என்று பெருமைப் படுகின்றனர் இவர்கள்.

தொழில்நுட்பத்தின் மூலம் டிராக்கர்கள்

Maternity ஆடைகளுக்கான பிராண்ட் என்று மட்டும் புட்சியின் வட்டத்தை சுருக்கிக் கொள்ளாமல் maternity தொடர்பான ஊட்டச்சத்து இணைகள், மருந்துகள், மாத்திரைகள் என அனைத்தையும் வழங்க முடிவு செய்தோம்.

இந்தியாவின் முன்னணி Maternity பிராண்டாக put-chi-யை கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 3 மாதங்களாக மீண்டும் ஒரு R&D செய்து இந்தியா முழுவதும் உள்ள maternity தொடர்பாக சின்ன சின்ன விஷயங்களில் அக்கறையோடு செயல்பட்டு வருபவர்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம். அதனை வைத்து புட்சியில் ஒரு மார்க்கெட் இடத்தை உருவாக்கியுள்ளோம்.

முதலில் சில பிராண்டுகளை எங்களுடைய தளத்தில் சேர்த்து அவர்களுக்கான வாய்ப்பை அதி தொழில்நுட்ப வசதி மூலம் அனைவருக்கும் கிடைக்கச் செய்துள்ளோம். பிரத்யேகமாக மகப்பேறு பெண்களுக்கான 100க்கும் மேற்பட்ட பயனுள்ள பொருட்களை புட்சி தளத்தில் கிடைக்குமாறு இணைத்துள்ளோம். இதை ஒரு தொழில் என்கிற அடிப்படையில் செய்யாமல் ஒரு சேவையாகச் செய்து கொண்டிருக்கிறோம்.

பெண்களை உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக மேம்பாடு அடையச் செய்வதே எங்களின் மைய நோக்கம். தொழில்நுட்பத்தைச் சார்ந்து எங்களின் தளம் இருப்பதால் பெண்களுக்கான மாதவிடாய் நாட்களை கணக்கிட்டுச் சொல்லும் period tracker, maternity tracker, kids tracker, due date tracker என தொழில்நுட்பத்தால் தீர்வு தரக்கூடிய வசதிகளையும் கூட எங்களுடைய இணையதளத்தில் வழங்குகிறோம்.

Empower Her என்று நாங்கள் புட்சியின் இணையதள பக்கத்தில் வைத்திருக்கும் ஒரு பிரிவின் நோக்கமே பிரசவத்திற்குப் பிறகு பணியைத் தொடர முடியாத பெண்களை எப்படி மேம்படுத்துவது என்பதேயாகும். அவர்கள் புட்சியின் பிராண்ட் பார்ட்னராக இருந்து வருமானம் ஈட்டலாம்.

தொடக்கம் முதலே லாபம்

மூன்றரை ஆண்டுகளில் புட்சி ஒரு சர்வதேச தரத்திலான பிராண்டாக வளர்ந்து நிற்கிறது, எங்களின் மகனின் வளர்ச்சி போலவே புட்சியின் வளர்ச்சியும் மனநிறைவைத் தருகிறது. நாங்கள் இரண்டு பேர் மட்டுமே தொடக்கத்தில் ஆடைகளை வடிவமைப்பத்தில் தொடங்கி அவற்றை பேக் செய்து டெலிவரிக்கு அனுப்புவது என அனைத்தையும் செய்தோம்.

“இப்போது நாங்கள் 22 பேர் கொண்ட குழுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ரூ.50 ஆயிரம் முதலீட்டில் தொடங்கிய put-chi ஆரம்பத்தில் இருந்தே லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது, தற்போது மாதத்திற்கு ஏறத்தாழ ரூ.25 லட்சம் வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் 20 வாடிக்கையாளர்கள் மட்டுமே கொண்டிருந்தோம் இப்போது சுமார் 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உள்ளனர்.”

பெண்களின் உடல் அமைப்பானது பருவம் எய்தியது முதல் தாய்மை, மெனோபாஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கிறது. அவர்களுக்கு ஏற்றாற் போன்ற பொருட்கள், சேவைகள் மற்றும் தேவைப்படும் தகவல்களைத் தருவதையே எதிர்கால இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

உழைப்புக்கான வெற்றி

குடும்பத்தினரின் அச்சங்களுக்கு நடுவே நாங்கள் இருவரும் உறுதியாக இருந்து புட்சியை வளர்த்தோம். துறை, தொழில் என அனைத்தும் புதிதாக இருந்த நிலையில், அனுபவங்களில் இருந்தே எங்களை நாங்கள் முன்னேற்றிக் கொண்டோம். இன்ஸ்டாகிராமில் சிறிய அளவில் தொடங்கி ஆன்லைன் விற்பனை மட்டுமே செய்து வந்த நிலையில், 2021ம் ஆண்டு கோயம்புத்தூரில் புட்சி ஸ்டோர் திறந்தோம்.

அடுத்த நிதியாண்டிற்குள் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்தில் நேரடியாக புட்சி தயாரிப்புகளை கடைகளுக்கே சென்று வாங்கிக் கொள்ளும் வகைகளில் ஸ்டோர்களை அமைப்பதற்கான திட்டமிடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

“அடுத்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஆயிரம் பிராண்டுகளுடன் 100 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இப்போது இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், தாய்லாந்து, சீன என அயல்நாடுகள் உள்பட 32 நாடுகளுக்கு நாங்கள் எங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். புட்சி ஒரு தரமிக்க பிராண்டாக சர்வதேச அளவில் வளர்ந்துள்ளதையே எங்களின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம்,” என்கின்றனர் இளம் தொழில்முனைவு தம்பதிகளான தீபிகா மற்றும் தியாகராஜன்

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

2 months ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

2 months ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

4 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

4 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

4 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

4 months ago