‘மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா’ ‘உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே…’ உள்ளிட்டப் பாடல்களால் நம் உள்ளம் கவர்ந்தவர் திரைப்படப் பின்னணிப் பாடகி ரேஷ்மி,
ரேஷ்மி, பாடகி என்ற அடையாளத்தை தாண்டி, அவரது நெருங்கிய நண்பரும் பாடகருமான வினோத் உடன் இணைந்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து பிள்ளைகள், பார்வை மாற்றுத்தினாளி பிள்ளைகள் இருவர் என ஏழு பேரை தங்களுடன் இணைத்துக் கொண்டு ஆர்கெஸ்ட்ரா குழு ஒன்றை நடத்தி வருகின்றனர்.
‘Samagratha’ என்ற ஆர்கெஸ்ட்ராவைத் தொடங்கி, மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளையும் சுய காலில் நிற்க வைப்பதற்கான முயற்சியை முன்னெடுத்து வருவகின்றனர் இந்த நண்பர்கள்.
அண்மையில் தி.நகர் வாணி மஹாலில் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை‘ என்ற தலைப்பில் நடந்த இசைக் கச்சேரியில் எஸ்.பி.பி. சரணுக்கே சவால் விடும் வகையில் கார்த்திக், சப்னா, ஜோதி, தேஜு, அஷ்வத், பிரேம், சஹானா ஆகிய ஏழு பேரும் டூயட் பாடியது அவ்வளவு இனிமையாக இருந்ததால் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இசை மழலை நிறுவனர் ராம்ஜி, பாடகர்கள் சுஜாதா, அனந்து, ஸ்ரீராம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திய பாடகர்கள் ரேஷ்மி, வினோத் ஆகியோரை சந்தித்துப் பேசினோம்…
“நான் கேரளாவில் உள்ள செங்கன்னூர் என்ற ஊரில் பிறந்தேன். அப்பா ஜார்ஜ் ஆப்ரஹாம் ஆல் இந்தியா ரேடியோவில் இசையமைப்பாளராக இருந்தார். அம்மா சின்னம்மா குடும்பத் தலைவி. என் கூடப் பிறந்தவங்க நாலு பேர். நான் சின்ன வயசுலேர்ந்தே பின்னணிப் பாடகியா இருக்கேன். எனக்கு இதிஹாஸ் என்ற மகனும், சங்கமித்ரா என்ற மகளும் இருக்காங்க.
இதுவரைக்கும், எட்டு மொழிகள்ல 350-க்கும் மேற்பட்ட படங்கள்ல 500-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கேன். ’உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே‘ (ஜே ஜே), ‘மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா‘ (ஆட்டோகிராஃப்) ‘பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட‘ (பார்த்தேன் ரசித்தேன்) ‘காதல் என்பதா‘ (ஜெமினி) இப்படி நிறைய பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
“ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகள்லயும் பாடியிருக்கிறேன். மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் அவர்களுடன் நிறைய கச்சேரிகள்ல பாடியிருக்கேன்,“ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“நான் இஞ்சினியரிங் படிச்சிருந்தாலும் என்னோட பேஷன் பாடறதுதான்கிறதுனால இப்ப முழு நேரமா அதையே என் அடையாளமா ஆக்கிக்கிட்டேன். 1998-ல ராஜா சார் பாடல்களக்கு கோரஸ் பாடற வாய்ப்புக் கிடைச்சது. 96-லேர்ந்து 2002 வரைக்கும் இளையராஜா சார் கூடவேதான் டிராவல் பண்ணேன். அது தவிர இவன்ட் மேனேஜ்மண்ட் பிஸினஸ் பண்ணிகிட்டிருந்தேன். அதுல அதிகமா இசை நிகழ்ச்சிகளைதான் ஒருங்கிணைச்சிருக்கேன்.
ஆர்கனைசரா இருந்தாலும் மியூசிக் புரொகிராம்ல பெரிய பெரிய ஆளுமைகளோட கொஞ்சம் சாங்ஸும் பாடுவேன். 2017ல ஜீ டி.வி-யில வர்ற ‘சரிகமப’ங்கிற சங்கீத நிகழ்ச்சியில ஜட்ஜா இருக்கறதுக்கான வாய்ப்புக் கிடைச்சது. இப்போ நான் அதே ஷோவுக்கு பர்மனன்ட் ஜூரியா இருக்கேன்.
“2018-லேர்ந்தே என் பிசினஸ் எல்லாத்தையும் விட்டுட்டு ஃபுல் டைம் சிங்கராதான் இருக்கேன்,“ என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் வினோத்.
“நான் ஒருங்கிணைக்கற இசை நிகழ்ச்சிகள்ல பாடிகிட்டிருந்தப்போதான் ரேஷ்மி எனக்கு அறிமுகமானாங்க. 2015 வெள்ளம் வந்தப்போ கேரளாவுலேர்ந்து அவங்களோட சிஸ்டர் எனக்கு ஃபோன் பண்ணி ‘ரேஷ்மியை காண்ட்டாக்ட் பண்ண முடியல நீங்க போய் பார்க்க முடியுமா?‘-னு கேட்டாங்க. அதனால அவங்களைத் தேடி அவங்க இருந்த இடத்துக்குப் போனப்ப உள்ள போகவே முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து இருந்தது. அவங்க இருந்த தெருவைக் கண்டுபிடிச்சி நானும் யார்யார்கிட்டயோ விசாரிச்சும் அவங்க வீட்டைக் கண்டுபிடிக்கவே முடியலை. அதனால நான் திரும்பி வந்துட்டேன்.
அப்புறம் வெள்ளத்தால பாதிக்கப்பட்டிருந்தவங்களுக்கு பெங்களூர்ல இருக்குற என் நண்பர் ஒருத்தர் ஒரு லாரி நிறையா நிவாரணப் பொருட்களை ஏற்றி அனுப்பி அதையெல்லாம் கஷ்டத்துல உள்ளவங்ககிட்ட சேர்க்கற பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சார். ரேஷ்மி வீடிருந்த பகுதியிலயும் அந்தப் பொருட்களை விநியோகிக்கப் போனப்பதான், ரேஷ்மியும், அவங்க மகளும் ஒரு கோயில் பீடத்துல விளக்கை ஏத்தி வச்சிட்டு பிராத்தனை செஞ்சுகிட்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்.
”அவங்களை எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து பூட்டியிருந்த எங்களோட இன்னொரு வீட்டுல தங்க வச்சேன், நிலைமை சீராகற வரைக்கும் 15 நாள் அந்த வீட்டுலதான் இருந்தாங்க. அப்போ நிவாரணப் பொருட்களை விநியோகிக்க அவங்களும் எனக்கு உதவினாங்க,“ என்று தங்கள் நட்பு தொடங்கிய கதையை விளக்கினார் வினோத்.
ஊரடங்கு காலத்துல எல்லாரையும் போலவே நிறைய இசைக் கலைஞர்களும் வருமானம் இல்லாம ரொம்ப கஷ்டப் பட்டாங்க. அப்போ, அவங்களுக்கு உதவறதுக்காக எஸ்.பி.பி. சார்தான் 2020 மார்ச்-லயே ஒரு நிகழ்ச்சிய ஆரம்பிச்சார். சோஷியல் மீடியாவுல நீங்க என்ன பாட்டு கேட்கறீங்களோ அதை நான் பாடறேன், நீங்க உங்களால முடிஞ்ச பணத்தைக் கொடுங்க அதை வச்சு ஏழை இசைக் கலைஞர்களுக்கு உதவலாம்னு சொல்லி நிதி திரட்டினார்.
அதைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகிதான் நாங்களும் நம்மால முடிஞ்ச உதவியை செய்யலாமேன்னு முடிவு பண்ணோம். ‘வைரஸ்’ பரவிக்கிட்டிருக்குன்னு எல்லாரும் பயத்துல இருந்த சமயத்துல, நாம மியூசிக் வழியா அவங்களை எண்ட்டர்டெய்ன் பண்ணி ‘VIRES’-ங்கிற பேர்லயே பாசிட்டிவிட்டியைப் பரப்புவோம்-னுதான் என் பேரோட முதல் ரண்டு எழுத்துகளையும், ரேஷ்மி பேரோட முதல் மூணு எழுத்துகளையும் சேர்த்து VIRES-கிற ப்ராண்டை க்ரியேட் பண்ணோம்.
அந்த நிகழ்ச்சி மூலமா கிடைக்கிற நிதியை கஷ்டப்படறவங்களுக்கும் கொடுக்கலாம்னு, 2020 ஏப்ரல் 13லதான் ‘பேஸ்புக் லைவ்’ மூலமா முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினோம்.
ஆரம்பத்துல ஒண்ணு ரண்டு சிங்கர்களை வச்சு, சில வாரங்களுக்கு மட்டும்தான் அந்த நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டோம். ஆரம்பத்துல வந்த பணத்துல வறுமையில வாடின நிறை இசைக் கலைஞர்களுக்கு ஆளுக்கு 1,500 ரூபாய் கொடுத்தோம். மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்தோம். மெடிக்கல் எமர்ஜென்சிக்கு பணம் கொடுத்தோம். அப்புறம் அவங்களோட பிள்ளைகளோட படிப்புக்காகவும் உதவி கேட்டாங்க. அதனால நாங்க நினைச்சபடி அந்த நிகழ்ச்சியை குறிப்பிட்ட காலத்துல முடிச்சுக்க முடியலை.
2022-க்கு அப்புறம் நாங்க பண்ணது எல்லாமே அவங்க பிள்ளைகளோட எஜுகேஷன் அண்டு மெடிகல் எக்ஸ்பன்ஸ்-காகவும்தான். ஸோ, ஒண்ணு ரெண்டு மாசம் நடத்தலாம்-னு தொடங்கின நிகழ்ச்சி வாரத்துக்கு நாலு நாள் பண்ணியும் 26 மாசத்துக்கு கண்ட்டினிவ் ஆச்சு.
“அந்த 26 மாசத்துல மொத்தம் 26 லட்ச ரூபாய் நிதி கிடைச்சது. அதை நாங்க சரியான விதத்துலதான் பயன்படுத்தறோம். வெளிப்படையா இருக்கணும்கிறதுக்காக நாங்க லயன்ஸ் க்ளப்போட அக்கவுண்ட் நம்பரைக் கொடுத்துதான் நிதி திரட்டினோம். அதை வச்சு 289 இசைக்கலைஞர்கள் குடும்பத்துக்கு உதவி செஞ்சோம். அதுக்காக ரோட்டரி க்ளப் ஆஃப் சென்னை மித்ரா எங்களுக்கு எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் சென்னை-ன்னு ஒரு அவார்டு கொடுத்தாங்க.”
மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கென்றே ஆர்கெஸ்ட்ராவை உருவாக்கும் எண்ணம் வந்ததன் பின்னணி
நாங்க ஆன்லைன் இசை நிகழ்ச்சி நடத்தறதைக் கேள்விப்பட்டு மஸ்கட்ல இருக்குற காயத்ரி நரசிம்னன், Prakramika Vocational Institute-னு ஸ்பெஷல் சில்ரன்காகவே ஒரு இன்ஸ்டிடியூஷனை நடத்தறவங்க. 2020-த்துல அவங்க, ’டேலண்ட் டிஸ்ப்ளே’-னு ஆல் இண்டியா லெவல்ல மட்டுமில்லாம வெளி நாடுகள்லேர்ந்தும் ஆட்டிஸ்டிக் சில்ரன் கலந்துகிட்ட மியூசிக் காம்படிஷனுக்கு எங்களை ஜட்ஜா கூப்டாங்க. அந்த நிகழ்ச்சியில இந்தக் குழந்தைங்களோட டேலண்ட்டை நாங்க பார்த்து அசந்து போயிட்டோம்.
அதுக்கப்புறம் கோவையில சிறப்புக் குழந்தைகளுக்காகவே ‘NISSARC’-ங்கிற உலகத்தரத்துல ஒரு பள்ளிக்கூடத்தை சேவை மனப்பான்மையோட நடத்தற காயத்ரி சம்பத், தன் பள்ளிக் குழந்தைங்களோட இசை நிகழ்ச்சிக்கு எங்களை சிறப்பு விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. அங்க இருந்த பிள்ளைகளோட திறமை எங்களை என்னவோ பண்ணுச்சு.
”ஒரே ஒரு மணி நேரத்துல அவங்களுக்கு ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாட்டை பாடறதுக்கு ட்ரெயின் பண்ணி மேடையில பாட வச்சோம். நிகழ்ச்சியை தொடங்கி வச்சுட்டு அவசரமா வெளிய போன மாவட்டக் கலெக்டர் அந்தக் குழந்தைங்க பாடத் தொடங்கினதும் திரும்பவும் வந்து உட்கார்ந்து முழு பாட்டையும் கேட்டார். ஒரு குழந்தைய பாட வைக்கறதே கஷ்டம், நீங்க எப்படி எல்லாரையும் சேர்ந்து பாட வச்சீங்க, உங்ககூட இந்தப் பசங்க ஈஸியா கனெக்ட் ஆகிடறாங்கன்னு காயத்ரி சொன்னாங்க. அப்பதான் நாங்க இந்தக் குழந்தைங்களுக்காக எதையாவது செய்யணும்னு தோணுச்சு.”
ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்காக அவங்களோட பேரண்ட்ஸ் எப்படியெல்லாம் கஷ்ட்ப்படறாங்கன்னு யோசிச்சுப் பார்தோம். அவங்கள்ல சில பிள்ளைங்களுக்கு சிலர் பாடற வாய்ப்பைக் கொடுக்கறாங்க. அந்த வாய்ப்புக்காக அவங்களோட பேரண்ட்ஸ் தன்னோட சேவிங்ஸைக் கரைச்சு டிராவல் பண்ணி போக வேண்டியிருக்கு. அவங்க காலத்துக்கு அப்புறம் அந்தக் குழந்தைகளை யார் பார்த்துக்குவாங்க அப்படீங்கிற கேள்வியும் வந்தது.
அதுக்கு ஒரே வழி மற்ற பாடகர்கள்போல அவங்களையும் சமமா நடத்தணும், அவங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கறதோட அதுக்கு சன்மானமும் கொடுக்கணும், பெரிய பெரிய இசைக்கலைஞர்கள் வாசிப்புல அவங்களையும் பாட வைக்கணும், பிரபல பாடகர்களோட சரி சமமா அவங்களையும் பாட வைக்கணும் இந்த மூனு விஷங்களுக்காகதான் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அதுக்காகதான் இந்த ஆர்கெஸ்ட்ராவுக்கு ‘சமக்ரதா’ (Inclusiveness)-னு பேரு வச்சோம்.
”நிகழ்ச்சிக்காக நான் ஸ்பான்சர் கேட்டுப் போனப்போ, ’அந்த மாதிரி புள்ளைங்க பாடறதை யாரு கேட்பாங்க?‘ அப்படீன்னு சில பேர் சொன்னப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, ‘நாம அரை மணி நேரம் அனுபவிச்ச கஷ்டத்தைதானே இந்தக் குழந்தைங்களோட பேரண்ட்ஸ் ஆயுசு முழுக்க அனுபவிக்கறாங்க?’-ன்னு தோணுச்சு. ஆனாலும் நம்பிக்கை தளராம முயற்சி பண்ணேன், ஃபாரின்லேர்ந்து நிறைய பேர் டொனேட் பண்ணாங்க.”
இந்த நிகழ்ச்சியில பங்கெடுத்துகிட்ட பெரிய பெரிய இசைச் கலைஞர்கள் எல்லாருமே சம்பளம் பேசிக்கவே இல்ல, நீங்க கொடுக்கறதை கொடுங்க நாங்க வர்றோம்-னு சொல்லி வந்தாங்க. இந்த நிகழ்ச்சியை எங்க கூட சேர்ந்து ஆர்கனைஸ் பண்ண டி.வி.கே. கல்சுரல்ஸ் அகாடமியோட ரமேஷ், ஸ்டேஜ்ல இருந்த எல்.ஈ.டி வால்ஸ் எல்லாமே அவரே முன்வந்து வச்சார்.
ஆடியோ சப்போர்ட் பண்ணவர் லைட் மொத்தத்துக்கும் பணமே வாங்கிக்கலை. நிறைய மீடியா சப்போர்ட் பண்ணாங்க. ஸ்பான்சர் கிடைக்கறதுக்கு அந்தப் பிள்ளைகளோட பேரண்ட்ஸும் சப்போர்ட் பண்ணாங்க. இப்படி நிறைய நல்ல உள்ளங்களோட சப்போர்ட்லதான் அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமா நடத்த முடிஞ்சது.
“டி.நகர் வாணி மஹாலில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை இன்னொரு செலிபிரிட்டி சிங்கருடன் எங்கள் சமக்ரதா பிள்ளைகள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அந்த நிகழ்ச்சியைக் கண்டு களிக்க வருகை தருவதோடு, தங்கள் வீட்டு விசேஷங்களிலும், அலுவலக விழாக்களிலும் சமக்ரதா குழுவினரின் இசைக் கச்சேரியை நடத்த விரும்பும் நல்லுள்ளங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்…” என்றார்கள்.
‘Samagratha’ தொடர்பு கொள்ள: 63817 88551 (வினோத்)
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…