ஒரு நிறுவனம், அரசு அல்லது தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் பெற வேண்டும் என்றால் டெண்டர் மூலமே அந்த கான்ட்ராக்டை பெறமுடியும். இந்த டெண்டருக்கு தயார் ஆவது என்பது பெரும் சிக்கலான பணி. தவிர ஒரு நிறுவனத்தின் பல துறையைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க முடியும்.
பெரிய நிறுவனங்களில் அடிக்கடி டெண்டர் எடுக்க அல்லது கொடுக்க வேண்டி இருக்கும். இதுபோன்ற சூழலில் இதனை கையாளுவதற்கே பெரிய குழு தேவைப்படும். இவற்றை எளிமையாக்குவதற்காக 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்தான் RFPIO.
கோவையைச் சேர்ந்த கணேஷ் ஷங்கர், ஏஜே சுந்தர் மற்றும் சங்கர் லகடு ஆகிய மூவர் தொடங்கிய நிறுவனம்தான் இது. டெக்னாலஜி பணிகள் முழுவதும் கோவையில் நடக்கிறது. இதர மார்க்கெட்டிங், சேல்ஸ் உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே அமெரிக்காவில் நடக்கிறது.
Strategic response management சாப்ட்வேர் பிரிவில் செயல்படும் இந்த நிறுவனம், ஆர்.எப்.பி (RFP) தவிர இதர சேவைகளையும் வழங்குகிறது. இந்த சூழலில் நிறுவனத்தின் பெயர் RFPIO என்று இருப்பது சரியாக இருக்காது என்னும் சூழலில் பெயர் மாற்றம் குறித்து சிந்தித்தனர்.
8 ஆண்டுகளாக RFP பிரிவில் சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டும் நிறுவனமாகியுள்ள RFPIO தங்களது பெயர் மாற்றம் மற்றும் ப்ராண்டிங் மாற்றங்களை அறிவிப்பதற்காக நிறுவனர்கள் குழு சென்னை வந்திருந்தனர்.
“நாங்கள் RFP-யை தாண்டி பல சேவைகளை செய்யும் சூழலில் பெயர் மற்றும் லோகோவை மாற்றுவதுதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தோம். பல பெயர்களை நாங்கள் பரிசீலனை செய்தோம், இறுதியாக Responsive என்று முடிவெடுத்தோம்,” என அதன் நிறுவனர் கணேஷ் சங்கர் கூறினார்.
வழக்கமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெயர் வைக்கும்போது வார்த்தைகளில் உள்ள எழுத்துகளை மாற்றி அமைத்து பெயரை உருவாக்கி இருப்பார்கள், ஆனால் அப்படியே ஒரு முழுமையான சொல்லையே பெயராக வைத்திருக்கிறீர்களே என்னும் கேள்விக்கு. நாங்கள் புதிதாக செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தால் எழுத்துகளை மாற்றி அமைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுவருதால், எங்களுக்கு முழுமையான வார்த்தைகள்தான் தேவை என்பதில் தெளிவாக இருந்தோம்.
தவிர எங்களுடைய தொழிலுக்கு ’Responsive’ என்பது சரியான பெயர் என்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால் இதனை தேர்ந்தெடுத்தோம், எனக் கூறினார்.
பெயர் மாற்றம் தவிர நிறுவனத்தின் வளர்ச்சி, செயல்பாடு, நிதி உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து பகிர்ந்து கொண்டனர் கணேஷ் மற்றும் சங்கர்.
தற்போது நிறுவனத்தில் 500க்கு மேற்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் அதுவும் கோவையில் செயல்படுகிறார்கள்.
“கிட்டத்தட்ட 250 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்.எப்.பிகள் எங்கள் மூலமாக நடக்கிறது. ’Strategic Response Management’ என்னும் பிரிவில் நாங்கள் முன்னணி நிறுவனமாக இருக்கிறோம். இந்த பிரிவு ஆண்டுக்கு 35 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைகிறது. தற்போது 3.34 பில்லியன் டாலராக இருக்கும் இந்தத் துறை 2028-ம் ஆண்டில் 22.74 பில்லியன் டாலராக மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது,” என்றனர்.
தற்போது இவர்களிடம் உலகம் முழுவதும் 2000 நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய சாப்ட்வேரை 3 லட்சம் நபர்கள் பயன்படுத்துகிறார்கள்.
புரபெஷனல்களின் தளமாக லிங்கிடினை எடுத்துக்கொண்டால், பெரிய நிறுவனங்கள் வைத்திருக்கும் தகுதிகளில் ஒன்று எங்கள் சாப்ட்வேரை பயன்படுத்தத் தெரிய வேண்டும் என்னும் விதியை வைத்திருக்கிறார்கள். கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பல ஃபார்சூன் 100 நிறுவனங்களில் 20 சதவீத நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இவை அனைத்தும் எட்டு ஆண்டுகளில் நடந்திருக்கிறது என நிறுவனர்கள் குறிப்பிட்டார்கள்.
தற்போது மந்த நிலை காரணமாக உங்கள் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதா என்னும் கேள்விக்கு நிறுவனர்கள் விளக்கமாக பதில் அளித்தனர். சந்தையின் போக்கு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
”நாங்கள் கொடுக்கும் தீர்வு மிக எளிமையானது என்பதால் எங்களுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும். உதாரணத்துக்கு ஒரு ஏலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் பல குழுவினரின் உதவி தேவைப்படும். இவற்றை ஒருங்கிணைப்பது பெரும் பணி. ஆனால், எங்கள் சாப்ட்வேர் உதவியுடன் செய்வதினால் உரிய நேரத்தில் ஒரு ஏலத்துக்கு விண்ணப்பிக்க முடிகிறது. அதில் கிடைக்கும் டெண்டர்கள் மூலம் நிறுவனங்களின் வருவாயும், லாபமும் உயந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் எங்களை மீண்டும் நாடி வருகிறார்கள்.”
இதனை கண்டறிவதற்காக ஒரு சர்வே நடத்தினோம். மைக்ரோசாட்ப் நிறுவனத்தில் 13,000 நபர்கள் எங்களுடைய சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள். இதனால், ஒரு ஆண்டுக்கு மட்டும் 21,000 மணி நேரங்கள் மீதமாகின்றன. அதோடு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மீதமான தொகை மட்டும் 4.2 மில்லியன் டாலர் ஆகும். இது வருமானம் அல்ல, சாப்ட்வேர் பயன்படுத்துவதால் மீதமாகும் தொகை. அதனால் சந்தை சூழல்கள் எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது, என்று கூறினார்.
வருமானம் நிதி உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டபோது, வருமானம் குறித்து நாங்கள் பொதுவெளியில் அறிவிப்பதில்லை. இருந்தாலும் கடந்த 2018-ம் ஆண்டு 25 மில்லியன் டாலர் நிதி திரட்டினோம். அதற்குப் பிறகு நிதி தேவையில்லை. வாடிக்கையாளர்கள் எங்கள் மென்பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் வளர்ச்சிக்குத் தேவையான நிதி கிடைத்துவருகிறது, என்று கணேஷ் கூறினார்.
ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு வெளியேறும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமே என்று கேட்டதற்கு, இந்த கேள்வியை நாங்களும் முதலீட்டாளர்களிடம் கேட்டபோது, நிறுவனத்துடன் நாங்களும் வளர விரும்புகிறோம். அதனால், ஏன் முதலீட்டை வெளியே எடுக்க வேண்டும் என எங்களிடம் சொல்லிவிட்டனர், என்றார் கணேஷ்.
கோவை போன்ற டயர்-2 நகரத்தில் இருந்து தொடங்கிய Responsive (முன்னாள் RFPIO) தனித்து நின்று, யாரும் கொடுக்காத சேவைகளை அளித்து வருவதினாலும், காலத்துக்கு ஏற்ப Ai தொழில்நுட்பம் மற்றும் ப்ராடக்ட் மாறுதலகளை தொடர்ந்து செய்து வருவதால் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
விரைவில் கோவையில் மேலும் ஊழியர்களை பணியமர்த்தி பெரிய அலுவலகத்துக்கு மாற இருப்பதாகவும், சென்னை, பெங்களுருவில் கிளை அலுவலகம் தொடங்கும் திட்டம் இருப்பதாகவும் நிறுவனர்கள் தெரிவித்தது அவர்களின் வளர்ச்சியை காட்டுவதாக அமைந்தது.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…