எவரெஸ்ட் சிகரம், வட, தென் துருவம் மீது ஸ்கை டைவிங் செய்த உலகின் முதல் இந்திய பெண்மணி!

எவரெஸ்ட் சிகரத்தின் முன் 21,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கைடைவ் செய்த ‘முதல் பெண்மணி ‘என்ற பெருமையை பெற்றார் ஷித்தல் மகாஜன். அதன்மூலம் வட, தென் துருவங்கள் மற்றும் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஸ்கை டைவ் செய்த ‘உலகின் முதல் பெண்’ என்ற உலக சாதனையை படைத்தார் சிறகுகளற்ற பறக்கும் பறவை.

ஷீத்தலுக்கும் சாகசங்களுக்கும் பிரிக்கமுடியாத பந்தமுள்ளது. சேலை அணிந்து ஸ்கை டைவிங், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து பாதை ஏந்திய ஸ்கை டைவிங் என ஸ்கை டைவிங்கில் சில வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஏன், அண்டார்டிகாவின் நார்த் போலில், மைனஸ் 37 டிகிரி செல்சியஸில் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல், ‘பாரா ஜம்ப்’ செய்தார். இது போன்று ஷீத்தல் நிகழ்த்தியுள்ள சாகச ஸ்கை டைவிங் பட்டியல் சற்றே நீண்டது. இதுவரை 25 தேசிய சாதனைகள், இரண்டு ஆசிய சாதனைகள், மற்றும் எட்டு உலக சாதனைகளை படைத்து பிரம்மிக்க செய்துள்ளார்.

அவரைப் பாராட்டி 2014ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பட்டியலில், இன்னும் சில சாதனைகளை இணைத்துள்ளார். அதுவும் அவரது கனவு இலக்கினை அடைந்த சாதனை அது. ஆம்,

எவரெஸ்ட் சிகரத்தின் முன் 21,500 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த ‘உலகின் முதல் பெண்மணி’ என்ற பெருமையை பெற்றார் அவர். அது மட்டுமின்றி, வட துருவம், தென் துருவம் மற்றும் எவரெஸ்ட் சிகரம் ஆகிய மூன்று துருவங்களுக்கு மேல் ஸ்கை டைவ் செய்த ‘உலகின் முதல் பெண்மணி’ என்ற பட்டத்தையும் வென்றார். இந்த சாதனைக்கான செயல்பாட்டில் ஈடுப்பட்ட 3 நாட்களில் பல தேசிய மற்றும் உலக சாதனைகளை படைத்தார்.

எதிர்பாரா சந்திப்பில் தொடங்கிய பயணம்;

எவ்வித பயிற்சியுமின்றி செய்த ‘முதல் பாராஜம்ப்’!

இவை அனைத்தும் ஷீத்தல், அவரது தோழியின் சகோதரரை சந்தித்த ஒரு எதார்த்த சந்திப்பின் எதிர்வினைகளாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரைச் சேர்ந்த ஷீத்தல், அவரது தோழியின் சகோதரரான கமல்சிங் ஓபரை ஒருமுறை சந்தித்தார். இந்திய விமானப்படை அதிகாரியான அவர், ஸ்கை டைவிங் செய்ய போவதாக அவருடைய சகோதரி, ஷீத்தலிடம் தெரிவித்தார். அதுநாள் வரை ஸ்கை டைவிங் என்றால் என்ன என்பதே அவருக்கு தெரியாது. கமல் சிங்கின் சாகசத்தை நேரில் கண்ட நாளிலிருந்து, ஸ்கை டைவிங் மீது ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டார்.

ஆனால், அதனை குடும்பத்தினரிடம் தெரிவித்து அதற்கான ஒப்புதல் பெறுவது பெரும் சிரமமாக இருந்துள்ளது. இதற்கிடையே, கமல்சிங் வட மற்றும் தென் துருவங்கள் மீது ஸ்கை டைவ் செய்த ‘முதல் இந்தியர்’ ஆனபோது அவரின் புகைப்படம் செய்திதாளின் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அதனை பார்த்த பிறகு ஷீத்தல், ஸ்கை டைவிங் மேற்கொள்வதில் தீவிரமாக இறங்கினார். அவரது ஆர்வத்தை கமல்சிங் புரிந்து கொள்ளும் வரை அவரை விடாது துரத்தினார் ஷீத்தல்.

தொடர் முயற்சியின் பலனாய் கமல்சிங், ஸ்கை டைவிங் நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கு ஷீத்தலை அழைத்து சென்றுள்ளார். இறுதியாய், 2004ம் ஆண்டில் வட துருவத்தில் முதன் முதலில் ஸ்கை டைவிங் செய்தார். அதுவும் எவ்வித பயிற்சியும் இல்லாமல் பறந்துள்ளார். இதற்கான நிதியினை டாடா மோட்டார்ஸில் பணிபுரியும் அவரது தந்தை, நிறுவனத்திடமிருந்து நிதியின் ஒரு பகுதியனை ஸ்பான்சர்ஷிப்பாக பெற்றுள்ளார். மீதி செலவை ஈடுகட்ட கடன் வாங்கியுள்ளனர்.

2004ம் ஆண்டு வட துருவத்தில் முதல் ஸ்கை டைவிங் செய்த பிறகு, ஷீத்தல் தொடர்ந்து பல எதிர்ப்புக் குரல்களை கேட்டார். அவரது அனைத்து மறுப்பாளர்களின் கூற்றுகளையும் தவறு என்று நிரூபிப்பதுடன், இந்தியப் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் நினைத்த எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க கடுமையான பயிற்சியில் ஈடுப்படத் தொடங்கினார்.

“நீ ஒரு பெண், நீ ஏன் இதைச் செய்ய விரும்புகிறாய்’, ‘உன்னால் இதைச் செய்ய முடியாது’ போன்ற கேள்விகள் தொடர்ந்து அனைத்து பக்கங்களிலிருந்தும் எழுந்தது. ‘என்னால் இதைச் செய்ய முடியும்’ என்பதை உலகுக்கு நிரூபிக்க விரும்பினேன்…” என்று அவருக்கு தொடக்கப்புள்ளியை போடுவது மட்டுமே கடினமாக இருந்தது. பின் அவர் நிகழ்த்தியவையெல்லாம் வரலாறு.

எவரெஸ்ட்டில் பாரா-ஜம்ப் செய்ய ரூ.65 லட்சம் நிதி திரட்டிய ஷீத்தல்…

முதல் ஸ்கை டைவிங்கை தொடர்ந்து ஷீத்தல், அமெரிக்காவில் முறையாக பயிற்சியெடுத்து கொண்டதுடன், பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சியையும் முடித்தார். 2006ம் ஆண்டில், தென் துருவத்தில் ஸ்கை டைவிங் செய்து அசத்திய அவர், தொடர்ந்து ஏழு கண்டங்களிலும் ஸ்கைடைவ் செய்தார். ஆனாலும், எவரெஸ்ட் சிகரத்தில் ஸ்கை டைவிங் செய்வதற்கான நேரத்திற்காக காத்திருந்தார். இதற்கிடையில், 2008ம் ஆண்டு அவருக்கு திருமணமாகி, ஓராண்டு கழித்து இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். குழந்தைகளைப் பெற்ற பிறகு, ஷீத்தலின் ஆர்வம் தணிந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால், புதைக்கவோ, அடக்கவோ முடியாத பேரார்வம் அது. அவரது இரட்டையர்களுக்கு ஒரு வயது ஆனபோது, அவர் ஸ்கை டைவிங்கிற்கு மீண்டும் திரும்பினார்.

“கடந்த ஆண்டு, எவரெஸ்ட் சிகரத்தின்முன் ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த சமயத்தில் பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்திலும், தென் துருவத்திலும் ஸ்கை டைவிங் முடித்திருந்தார். அவருக்கு வட துருவம் மட்டுமே எஞ்சியிருந்தது. அச்செய்தி மூன்று துருவங்களுக்கு மேல் ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்காக உழைக்க துாண்டியது,” என்றார் ஷீத்தல்.

அவருடைய இலக்கினை அடைவதற்காக கடினமாக உழைக்கத் தொடங்கினார். ஆனால், அதனை அடைவதற்கு தடையாக முன்னின்றது அதற்குத் தேவைப்படும் நிதி. எவரெஸ்ட் சிகரத்தின் முன் ஸ்கை டைவிங் செய்வதற்கு 65 லட்சத்துக்கும் மேலாக செலவாகும் என்பது பெரும் தடையாக மாறியது. அதற்காக, அவர் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அணுகி, சில ஸ்பான்சர்ஷிப்களைப் பெற்றார்.

அதில், ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒரு முக்கியப் பங்கை அளித்து கைக்கொடுத்தது. பட்ஜெட்டின் 20 சதவீதப் பணத்தை அவரே ஏற்றுக்கொண்டார். ஸ்கை டைவிங் செய்வதற்கான நிதியினை திரட்டியபிறகு, ஷீத்தலுக்கு வானமே எல்லையாகியது. அவரது இலக்கினையும் அடைந்தார். சாதனைகள் பல படைத்தார்.

எவரெஸ்ட் சிகரத்தின் முன் 21,500 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் அவர்.

அது மட்டுமின்றி, வட துருவம், தென் துருவம் மற்றும் எவரெஸ்ட் சிகரம் ஆகிய மூன்று துருவங்களுக்கு மேல் ஸ்கை டைவ் செய்த உலகின் முதல் பெண்மணியும் ஷீத்தல் ஆவார். இந்த சாதனைக்கான செயல்பாட்டில் ஈடுப்பட்ட 3 நாட்களில் பல தேசிய மற்றும் உலக சாதனைகளை படைத்தார்.

3 நாட்களில் நிகழ்த்திய பல தேசிய, உலகசாதனைகள்!

நவம்பர் 7 ஆம் தேதி, ஷீத்தலும் அவரது குழுவினரும் எவரெஸ்ட் பகுதியில் உள்ள லுக்லா, ஃபாட்கிங் மற்றும் பின்னர் நம்சே பஜார் வரை ஏறி, சியாங்போச்சே விமான நிலையத்தை அடைந்தனர்.

நவம்பர் 11 அன்று, 17,500 அடியிலிருந்து பாய்ச்சலை துவக்கி நேபாளத்தில் உள்ள சியாங்போச்சே விமான நிலையத்தில் 12,500 அடியில் தரையிறங்கினார். இந்த தாவலில், நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஸ்கைடைவர் வெண்டி ஸ்மித், அவருக்கு பயிற்றுவிப்பாளராக இருந்தார். இச்சாகச பாய்ச்சலை முடித்து எவரெஸ்ட் சிகரத்தின் முன் ஸ்கைடைவ் செய்த முதல் இந்தியப் பெண்மணி மற்றும் மூன்று துருவங்களுக்கு மேல் ஸ்கைடைவ் செய்த முதல் இந்தியப் பெண்மணி ஆகிய இரு தேசிய மற்றும் உலக சாதனைகளைப் படைத்தார்.

அடுத்த நாள், மகாஜன் சியாங்போச்சே விமான நிலையத்தில் 8,000 அடி உயரத்தில் இருந்து தேசியக் கொடியுடன் குதித்து, அவ்வாறு செய்த முதல் இந்தியப் பெண்மணி ஆனார். நவம்பர் 13 அன்று, அவர் அமடபிளாம் மலை அடிவார முகாமில் 23,000 அடியிலிருந்து குதித்து 4600 மீ/15091 அடியில் இறங்கினார். இந்த தாவலின்போது, பிரான்சின் புகழ்பெற்ற ஸ்கைடைவரான பால் ஹென்றி டி பெயர் ஹாலோ ஸ்கைடைவிங் பயிற்றுவிப்பாளராக உடனிருந்தார்.

அதேநாளில், எவரெஸ்ட் சிகரத்தின் முன் 21,500 அடி உயரத்தில் இருந்து அவரது வாழ்க்கையின் சிறந்த பாய்ச்சலை நிகழ்த்தினார். 17,444 அடி / 5,317 மீ உயரத்தில் கலா பத்தரில் மிக உயரமான இடத்தில் இறங்கினார். ஒரு பெண் செய்த மிக உயரமான ஸ்கை டைவிங் தரையிறக்கத்திற்காக அவர் தேசிய மற்றும் உலக சாதனைகளை படைத்தார்.

எவரெஸ்ட் ஸ்கை டைவ் செய்யும் போது, விமானத்தில் மட்டுமின்றி, உயர பறக்கும்போதும் பெயில்அவுட் பாட்டில்கள் தேவை எனும் அவர் அந்த அனுபவத்தை விவரிக்கையில், ”காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால், பாராசூட்டுகள் அதிக உயரத்தில் வித்தியாசமாக செயல்படுகின்றன. குறிப்பாக, அவை சற்று வித்தியாசமாக திறக்கின்றன, மிக வேகமாக பறக்கின்றன, மேலும் தரையிறங்கும்போது அவற்றின் விரிவடைதல் மிகவும் குறைவான சக்தி வாய்ந்ததாக இருக்கும், என்கிறார்.

”எவரெஸ்ட்டில் ஸ்கை டைவிங் செய்பவர்கள் இயல்பை விட மிகப் பெரிய பாராசூட்களைப் பயன்படுத்துகின்றனர். இதுவரை செய்ததிலே இதுதான் ’பயங்கரமான ஜம்ப்’. எவரெஸ்ட் பகுதியில் நிகழ்ந்துள்ள ஹைபோக்ஸியா மற்றும் ஸ்கை டைவிங் இறப்புகள் பற்றிய கதைகளை கேள்விப்பட்டுள்ளேன். அப்பகுதியில் நிகழ்த்திய தாவலில் என்னிடம் போதுமான ஆக்ஸிஜன் இல்லை என்று உணர்ந்த ஒரு கணம் இருந்தது. ஆனால் நல்லவேளை எல்லாம் நல்லப்படியாக முடிந்தது,” என்றார்.

“2025ம் ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்பதே எனது கனவு. விண்வெளியில் ஸ்கை டைவ் செய்த முதல் பெண்மணியாக இருக்க விரும்புகிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதை அடைவேன் என்று நம்புகிறேன்.

ஸ்கைடிவிங்கை விளையாட்டாகவோ அல்லது சாகசமாகவோ மேற்கொள்ள விரும்புபவர்கள் நீங்கள் என்றால், முதலில் நீங்கள் உங்கள் பயத்தை எதிர்கொள்ள வேண்டும், பின் உங்கள் எல்லையினை சோதிக்க வேண்டும், என்று கூறி முடித்தார் சிறகுகளற்ற பறக்கும் பறவை.

founderstorys

Recent Posts

Global-Nursing-Award-Social-Service

'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…

2 months ago

‘Weganool’

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…

2 months ago

Cremica-Business-Success

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…

4 months ago

Tvishi Skin Product

வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…

4 months ago

‘Music on Wheels’

'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…

4 months ago

Ticket9

கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…

4 months ago