மிகக் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு வங்கிகளின் கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில், இவர்களுக்கு வரப்பிரசாதியாகத் திகழ்ந்தவர்தான் ஸ்ரீராம் குழும நிறுவனர் ஆர்.தியாகராஜன்.
உலகின் மிகவும் தனித்துவம் வாய்ந்த நிதியாளர்களில் ஒருவர்தான் ஆர்.தியாகராஜன். உலகில் பலரும் சறுக்கி விழுந்த ஒரு துறையில் இவர் தொடங்கிய பல பில்லியன் டாலர் நிதி வணிகக் குழுமமான ஸ்ரீராம் நிறுவனம் மிகச் சிறப்பாகச் செழித்தது பலரது ஆச்சரியத்திற்கும் காரணமானது என்றால் மிகையாகாது.
இந்தியாவின் ஏழைகளுக்கு லாரிகள், டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் முன்னோடியாக விளங்கிய தியாகராஜன், இன்ஷூரன்ஸ் முதல் பங்குத் தரகு வரை அனைத்திலும் 1,08,000 பேர் பணியாற்றும் ஒரு கூட்டு நிறுவனமாக ஸ்ரீராம் நிறுவனத்தை உருவாக்கினார்.
ஸ்ரீராம் குழுமத்தின் முதன்மை நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு 35%-க்கும் அதிகமாக உயர்ந்து ஜூலை மாதத்தில் சாதனையை எட்டியது. இது இந்தியாவின் முக்கியப் பங்கு குறியீட்டை விட நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 86 வயதாகி ஆலோசகராக செட்டில் ஆன தியாகராஜன், ‘புளூம்பர்க்’ ஊடகத்துக்கு அளித்த ஓர் அரிதான நேர்காணலில் இப்படிக் கூறுகிறார்:
“பணம் கடன் வழங்கும் தொழிலில் கடன் வரலாறு இல்லாத, சீரான வருவாய் இல்லாத பிரிவினருக்கு கடன் வழங்கி திரும்பப் பெறுவது, அதில் லாபம் ஈட்டுவது, மற்றவர்கள் நினைப்பதுபோல் எந்தவித ரிஸ்குகளும் உடையதல்ல என்பதை நிரூபிக்கவே.”
வணிகத்துக்கான தனது அணுகுமுறையில் அசாதாரணமானது எதுவுமில்லை. அதேபோல்தான் இன்று 750 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிறுவனத்தில் தன் பங்குகளை விட்டுக் கொடுத்ததும் ஒன்றும் அசாதாரணமல்ல, அதிசயமல்ல என்கிறார் அவர்.
“நான் கொஞ்சம் இடதுசாரி சார்புடையவன்” என்று கூறும் ஆர்.தியாகராஜன், ஸ்ரீராம் குழுமத்தை 1974ல் தென்னிந்திய புகழ்பெற்ற நகரமான சென்னையில் தொடங்கினார்.
“ஏற்கெனவே வாழ்க்கையில் பல சவுகரியங்களை அனுபவிப்பவர்களுக்காக நான் இதைத் தொடங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஏற்கெனவே நல்வாழ்க்கை அமைந்துவிட்டது. மாறாக, பிரச்சனைகளுடனேயே அன்றாடம் வாழ்ந்து வரும் ‘தினசரி வாழ்க்கைக்கு என்ன செய்யப்போகிறோம்’ என்று வருத்தமுறும் மனிதர்களின் வாழ்விலிருந்து கொஞ்சம் கசப்பை நீக்குவதையே நான் விரும்பினேன்,” என்று கூறுகிறார்.
உலகின் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்திய நாட்டில் 140 கோடி மக்களில் பலரும் வளரும் மத்தியத் தர வர்க்கத்துக்குள் நுழைய அவா கொண்ட காலம். இந்தியாவின் வங்கிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அழுத்தம் கொடுத்தாலும், நாட்டின் நான்கில் ஒரு பகுதியினர் இன்னும் முறையான நிதி அமைப்பைப் பெறவில்லை. சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், அதைப் பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறது உலக வங்கி.
ஏழைகளுக்கு கடன் உதவி அளிப்பது ஒரு வகையான சோஷலிசம் என்கிறார் தியாகராஜன். ஆனால், வங்கி இல்லாதவர்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுத்து அவர்களை வதைப்பதை விட, குறைந்த வட்டியில் கடன் அளித்தார் தியாகராஜன். இருந்தாலும் இதன்மூலம், வணிகம் பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபிக்க முயன்றார். அவ்வாறு செய்வதன் மூலம், கடன் வழங்கும் பிற நிறுவனங்களும் வட்டித் தொகையை குறைக்க அவர் ஊக்கமளித்தார் என்பதுதான் மிக முக்கியமானது.
ஸ்ரீராம் குழுமம் தொடங்கி வைத்த சிறுகடன், நடுத்தர வர்க்கத்திற்கும் கீழானவர்களுக்கான கடன் இன்று பெரிய வர்த்தகமாகியுள்ளது. இந்தியாவில் சுமார் 9,400 நிழல் வங்கிகள் செயல்படுகின்றன. பாரம்பரியமான கடன் கொடுப்பவர்கள் கைவிட்டவர்கள்தான் இந்த நிழல் வங்கி அல்லது வட்டிக்கு வட்டி மீட்டர் வட்டி வாங்கும் கந்து வட்டிக் கும்பலிடம் சிக்குகின்றனர்.
ஆனால், இத்தகைய நிலையில் உள்ளவர்களையும் உள்ளடக்கியவர் தியாகராஜன் என்கிறார் ‘கேபிஎம்ஜி இந்தியா’ நிறுவனத்தின் மூத்த கூட்டாளியும் கார்ப்பரேட் பைனான்ஸ் தலைமையுமான ஸ்ரீனிவாஸ் பாலசுப்ரமணியன். ‘இந்த வர்த்தகத்தில் தியாகராஜன் போன்ற ஒரு சிலரே நீண்ட காலம் தங்க முடிந்துள்ளது’ என்கிறார் அவர்.
உண்மையில், தியாகராஜன் இத்தொழில் துறையில் தனித்து நிற்கிறார். சோஷலிசத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட ஒருவர், கடன் வழங்கும் நிறுவனத்தை உருவாக்குவது என்பது தன் விவசாயக் குடும்பத்தில் வேலையாட்களால் சூழப்பட்ட ஒரு நபருக்கு எதிர்பாராத தொழில் தேர்வாகத் தோன்றலாம். ஆனால், தியாகராஜன் எப்போதும் பகுத்தறியும் மனத்தையும், சமத்துவ சமுதாயம் நோக்கிய சார்பும் கொண்டவர் என்பதால் இத்தகைய ஒரு கடன் நிறுவனத்தை தொடங்க முடிந்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் மூன்றாண்டுகள் செலவழிப்பதற்கு முன்பு சென்னையில் இளங்கலை மற்றும் முதுநிலை மட்டத்தில் கணிதம் படித்தார். 1961-ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு நிறுவன ஊழியராக நிதித்துறையில் தன் வாழ்வைத் தொடங்கினார். இதோடு பிராந்திய கடன் வழங்கும் வைஸ்யா வங்கி மற்றும் ஜேபி போடா & கோ ஆகியவற்றிலும் ஊழியராக இருந்தார் தியாகராஜன்.
இதன் வழியில் அவர் சென்னையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட லாரிகளை வாங்க கடன் கேட்கும் நபர்களுக்கு கடன் வழங்குவதைத் தொடங்கினார். இது அவரது வாழ்க்கையின் முக்கியச் செயல்பாடானது. 37-வது வயதில் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ‘ஸ்ரீராம் சிட்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.
வங்கியில்லாதவர்கள் பெரும்பாலும் தங்கள் சேமிப்பு மற்றும் கடன்களுக்காக சிட் ஃபண்டுகள் என்று அழைக்கப்படுவதை நம்பியிருந்தார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்யும் கூட்டு சேமிப்பு திட்டமாகும். அனைவருக்கும் பங்கு கிடைக்கும் வரை, தொகை ஒரு மாதத்துக்கு ஒரு முதலீட்டாளருக்கு வழங்கப்படுகிறது. விவசாய உபகரணங்கள், பள்ளிக் கட்டணம் அல்லது பெரிய கொள்முதல் ஆகியவற்றுக்கு பணம் பயன்படுத்தப்படுகிறது.
காலப்போக்கில் தியாகராஜன் மற்ற நிறுவனங்களை நிறுவினார். ஸ்ரீராம் இறுதியில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் குழுவாக வளர்ச்சி கண்டு ஒரு பேரரசையே கட்டமைத்தார்.
லாரிகளுக்கான கடன் நிதியுதவியில், மக்கள் 80% வரை கட்டணங்களை செலுத்துவதைக் கண்டார் தியாகராஜன். ஏனெனில் வங்கிகள் அவற்றைக் கையாளவில்லை. இது மிகவும் தவறானது என்ற முடிவுக்கு வந்தார்.
“வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதால், கடன் கொடுப்பது மிகவும் ஆபத்தானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது ஆபத்தானது அல்ல என்பதை நான் உணர்ந்தேன்,” என்கிறார் தியாகராஜன்.
இந்தச் சிந்தனைதான் அவரது வாழ்க்கையை நிர்ணயித்தது. உலகத் தரநிலைகளின் படி மிக அதிகமான வட்டிக்குத்தான் இவரும் கடன் கொடுத்தார். ஆனால், பிற தெரிவுகளை விட இது குறைவான வட்டிதான். அதாவது, வட்டி விகிதங்கள் 30%-35% முதல் 17%-18% வரை சென்றது,” என்று அவர் கூறினார்.
ஆனாலும் தன்னுடையது எந்த ஒரு தொண்டு நோக்கமும் கொண்டதல்ல, இரண்டு முதலாளித்துவ நம்பிக்கைகள் அடிப்படையிலானதே என்கிறார் தியாகராஜன். ஒன்று தனியார் துறை தொழில்முனைவின் முக்கியத்துவம்; மற்றொன்று, சந்தைக் கொள்கைகளில் நம்பிக்கை. இந்த இரண்டு கொள்கைகள் அவருக்கு நற்பலன்களை வழங்கியது.
வாடிக்கையாளர்களிடமிருந்து குறித்த நேரத்துக்கு உரிய தொகையை 98% திரும்பி வாங்க முடிந்தது. பங்குச்சந்தையில் எஸ் அண்ட் பி ரேட்டிங் அவரது பெரும்பாலான கடன் வழங்கல்கள் சரியானதே என்கிறது.
பரவலாக, ஸ்ரீராம் போன்ற வங்கியல்லாத நிதியாளர்கள்தான் இந்தியாவின் புதிய வங்கிக் கணக்காளர்களின் ஆதாரமாகும். வங்கிகளுக்கே இல்லாத திறமை இவர்களிடம் கடன்களை கையாள்வதில் இருந்தது என்கிறார் துவாரா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிந்து அமர்நாத். இந்த நிறுவனம் நிதி உள்ளடக்கத்தைக் கொள்கையாகக் கொண்ட நிறுவனங்களை ஆதரிக்கும் நிறுவனமாகும்.
“இந்தியாவின் முறையான நிதி அமைப்பில் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் பங்களிப்பை உறுதி செய்வது பொருளாதார வளர்ச்சியை நிலையான முறையில் இயக்குவதற்கு முக்கியமானது” என்று ஆனந்த் கூறினார். இன்று, ஸ்ரீராம் குழுமம் சுமார் 23 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.
முதன்மை நிறுவனமான ‘ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட்’ சுமார் $8.5 பில்லியன் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சுமார் $200 மில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. பங்குகளைக் கண்காணிக்கும் 34 ஆய்வாளர்களில் ஒருவர் மட்டுமே அதை விற்க பரிந்துரைக்கிறார் என்றால் நிறுவனத்தின் மதிப்பை புரிந்து கொள்ளலாம்.
ஏழைகளுக்கு கடன் கொடுப்பது குழப்பமாக இருக்கும். அதிகப்படியான வட்டி விகிதங்கள் வழக்கமாக பாதிக்கப்படக்கூடிய கடனாளிகளை கடனில் ஆழமாக இட்டுச் செல்கின்றன. இந்தியாவில் கடன் சுறாக்கள் சில சமயங்களில் கடுமையான முறையில் கடன் வசூலை செய்கிறார்கள். பாதிக்கப்படக்கூடியவர்களை உயர்த்துவதில் முக்கியத்துவம் அளித்தாலும் நுண்கடன் துறையில் நுகர்வோர் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது. ஸ்ரீராம் நிறுவனம் என்ன வித்தியாசமாகச் செய்து விட்டது என்று கேட்டதற்கு தியாகராஜன் கூறியது:
“கடனைத் திருப்பி அளிக்கும் சக்தி பற்றி நாங்கள் பார்க்கவில்லை. ஏனெனில், வாடிக்கையாளர்களில் பலர் முறைசார் நிதி அமைப்பின் அங்கமாக இல்லை. ஆகவே, நாங்கள் ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளின் பேரில் கடன்களை வழங்கினோம்.”
ஊழியர்களையும் ஒப்பீட்டளவில் உரிய ஊதியத்திலும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார் தியாகராஜன். “இந்த வேலை வழங்கும் மன அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஆறுதல் ஆகியவற்றை நான் மதிக்கிறேன்” என்று மும்பையில் உள்ள ஸ்ரீராம் ஃபைனான்ஸ் கிளை மேலாளர் அமோல் பவுலேகர் கூறினார். அவர் பல அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளை நிராகரித்ததாக கூறினார்.
“குழுவின் கலாச்சாரம் மிகவும் மனிதாபிமானமானது. பணியில் பைத்தியக்காரத்தனமான அழுத்தம் எதுவும் இல்லை,” என்றார்.
ஸ்ரீராமின் அமைப்பு நியாயமானது என்று ஊழியர்கள் கூறுகின்றனர். தியாகராஜன் மக்கள் மத்தியில் வாழ விருப்பம் கொண்டவர். மேட்டிமை குணமில்லாதவர். பல ஆண்டுகள் ஹுண்டாய் ஹேட்ச்பேக்கைத்தான் ஓட்டி வந்தார். கவனச் சிதறல் ஏற்படுத்தும் என்பதற்காக மொபைல்போன் கூட அவரிடத்தில் இல்லை.
அதிபர் தியாகராஜன், ஸ்ரீராம் நிறுவனங்களில் உள்ள தனது பங்குகள் அனைத்தையும் ஊழியர்களுக்குக் கொடுத்து, 2006ல் நிறுவப்பட்ட ஸ்ரீராம் உரிமையாளர் அறக்கட்டளைக்கு மாற்றினார். நிரந்தர அறக்கட்டளையில் 44 குழு நிர்வாகிகள் பயனாளிகளாக உள்ளனர். நிர்வாகிகள் ஓய்வு பெறும்போது லட்சக்கணக்கான டாலர்களை எடுத்துக்கொண்டு செல்லும் அளவுக்கு அவர் ஊழியர்களிடத்தில் அன்பு கொண்டவராக இருக்கிறார்.
அறக்கட்டளையின் மொத்த மதிப்பு $750 மில்லியனைத் தாண்டியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள், தகவல் தனிப்பட்டது என்பதால் தங்கள் அடையாளம் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
டிசம்பரில், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம், ஸ்ரீராம் கேபிடல் லிமிடெட் மற்றும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை பங்கு-மாற்று ஒப்பந்தத்தில் வாங்கியது. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் டிரக்குகளுக்கு நிதியளிக்கிறது; அதே நேரத்தில் ஸ்ரீராம் சிட்டி யூனியன் நுகர்வோர் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு நிதியளிக்கிறது.
இப்போது கூட தியாகராஜன் வருந்துவது என்னவெனில்,
‘நிறுவனம் இப்படி வளர்ந்துவிட்டது, பங்குச் சந்தையில் விலை எகிறுகிறது. ஆனால் பலன்கள் குறைந்த நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறதே என்பதுதான். பலன்கள் இன்னும் நிறைய பேரைச் சென்றடைய வேண்டும்’ என்கிறார் இந்த சோஷலிஸ்ட் தியாகராஜன்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…