பார்வை மாற்றுத்திறனாளிகள் பிறரைச் சாராமல் சுயமாக தொழில் செய்து வாழ்வை நடத்த வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ‘தேங்க் யூ ஃபுட்ஸ்’ இப்போது ஒரு பிராண்ட் ஆனது எப்படி என்பதை விவரிக்கிறார் அப்துல் ரஹீம்.
மதுரை சுந்தரம்பட்டியில் 35 ஆண்டுகளாக இயங்கி வரும் Indian Association for Blind (IAB) பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வியோடு, சுயமாக வாழ்வதற்கான திறன்களையும் பயிற்சிக்கிறது. பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்து வருவாய் ஈட்டி மரியாதையான வாழ்வை வாழ்வதற்காக கடும் சவால்களுக்கு மத்தியில் ‘தேங்க் யூ ஃபுட்ஸ்’ (Thank U Foods) நிறுவனத்தை உருவாக்கி, அதனை ஒரு சக்சஸ் பிராண்டாக மாற்றி இருக்கிறார் அதன் நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் அப்துல் ரஹீம்.
‘தேங்க் யூ ஃபுட்ஸ்’ ஏன் உருவானது என்று பேசத் தொடங்கிய அவர், “எல்லாவற்றிற்குமே துவக்கம் என்னுடைய தந்தைதான்” என்கிறார். “பார்வை மாற்றுத்திறன் படைத்தவர்களின் வாழ்க்கை மாற்றத்திற்காக 70-களில் இருந்தே செயல்பட்டுக் கொண்டிருந்தவர் என்னுடைய தந்தை முகமது அலி ஜின்னா. விபத்து ஒன்றில் 13 வயதில் அவர் பார்வையை இழந்துவிட்டார். எதிர்காலத்தில் கஷ்டப்படாமல் இருப்பதற்கான பொருளாதார வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அவருடைய பெற்றோரின் விருப்பமாக இருந்தது.
ஆனால், என்னுடைய அப்பாவின் கனவோ வேறாக இருந்தது. படிப்பு ஒன்று மட்டுமே ஒருவரின் நிலையை உயர்த்தும் என்பதில் அசாத்திய நம்பிக்கையுடன் இருந்தவர். சொந்த ஊரான ஏர்வாடியை விட்டு வெளியேறி பாளையங்கோட்டையில் இருந்த பழமை வாய்ந்த பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார்.
அதன் பின்னர் திறன் பயிற்சிகள் மட்டுமே படிக்க முடியும் என்று இருந்த நிலையில், மதுரைக்கு வந்து தன்னுடைய படிப்பை தொடர்ந்தார். பியூசி, பி.எட், எம்.எட் என்று அனைத்திலும் டாப்பராக இருந்தவர், ரோட்டரி சங்கத்தின் உதவி மூலம் 1980-களிலேயே அமெரிக்கா சென்று பார்வையற்றவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தல் பற்றி படித்தார். அங்கேயே அவருக்கு பணி வாய்ப்புகளும் கிடைத்த நிலையில், தன்னுடைய வாழ்வில் தான் அனுபவித்த கஷ்டங்களை மற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். 1985-ல் அமெரிக்காவில் இருந்து மதுரை திரும்பிய கையோடு இந்திய பார்வையற்றோர் சங்கம் (Indian Association For Blind) எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கி விட்டார்” என்கிறார் அப்துல்.
jinnah
மறைந்த ஜின்னா, நிறுவனர், இந்திய பார்வையற்றோர் சங்கம்
தற்சார்பே இலக்கு
“மாற்றுத்திறனாளிகள் தற்சார்பாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய தந்தையின் கனவு. இந்த இலக்கை அடைவதற்கான பாதைகளாக கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு என்கிற முறையை ஏற்படுத்தினார்.
2 மாணவர்களை வைத்து மட்டுமே இந்த நல்நோக்கத்திற்கான விதை போடப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறனாளிகள் தங்கிப் படிப்பதோடு அவர்கள் சுயதொழில் கற்று சுயமாக சம்பாதிக்கும் வரை இங்கே தங்கி இருக்கும் வகையில் ஒரு சிறப்பு பள்ளி இப்போது வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கான கல்வி, மருத்துவச் செலவு, உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம்.
காலக்கட்டங்களுக்கு ஏற்ப அவர்களுக்கான சுய தொழிலை வயர் சேர் பின்னுதல், தட்டச்சு, டெலிபோன் பூத் அமைத்தல் என்று திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்பாவின் இந்தப் பள்ளியோடே நானும் என்னுடைய சகோதரியும் பிறந்தது முதலே சேர்ந்து வளர்ந்து வாழ்ந்து வருவதனால், எங்களுடைய வாழ்க்கையை இவர்களை விட்டு தனித்து பார்க்க முடியவில்லை. 2013-ல் அப்பா காலமாகிவிட்ட நிலையில் IAB-ல் நான் துணைத் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மனைவி மற்றும் சகோதரி எனக்குத் துணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறுகிறார் அப்துல் ரஹீம்.
அப்பாவுடன் இணைந்து பயணம்
“நாம் 6-ம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே அப்பாவுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். அப்பாவின் பார்வையாக நான் செயல்படுவது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. பள்ளிப் படிப்பிற்கு பின்னர் என்ஜினியரிங் படித்து விட்டு கேம்பஸ் இன்டர்வியூவில் விப்ரோ நிறுவனத்தில் நான் 2001-ம் ஆண்டு வேலையில் சேர்ந்தேன். 3 ஆண்டுகள் ஐடி துறையில் பணியாற்றிய அனுபவத்தில் வெளிநாட்டில் சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு தான் உயர்ந்தது, எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது உனக்கென ஒரு தொழில் அதோடு ஐஏபியில் தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று என்னுடைய அப்பா விரும்பினார். அமெரிக்காவில் சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்பு இரண்டு முறை வந்தபோதும் அப்பா தெளிவாக அந்த வாய்ப்பு வேண்டாம் என்று மறுத்ததால் செல்லவில்லை.
தொழில்முனைவராக முடிவு
தொடர்ந்து 2005-ம் ஆண்டில் மதுரைக்கே இடம்பெயர்ந்து Honeywell நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்பாவிற்கு வயதாகிக் கொண்டே இருந்தது. எனக்கும் கூட தொழில்முனைவு என்னும் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. இதனால் 2012-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஒரு தொழிலைத் தொடங்க முனைந்தேன்.
நான் தொடங்கும் தொழில் என்னுடைய தொழில்முனைவு கனவை பூர்த்தி செய்யவேண்டும், இந்தத் தொழில் ஏற்படுத்தப் போகும் வேலைவாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கானதாக இருக்க வேண்டும், இந்தத் தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தில் பெரும் பங்கை ஐஏபி சிறப்பு பள்ளிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய மூன்று முக்கிய நோக்கங்களாக இருந்தது.
தேங்க்
பார்வையற்றவர்களை வைத்து கால்சென்டர்
ஐஏபி ஒரு தொண்டு அமைப்பாக செயல்படுவதால் மற்றவர்களிடம் நன்கொடை பெற்றே இயங்கிக் கொண்டிருந்தது. நன்கொடையாளர்கள் கொடுக்கத் தயங்கவில்லை என்றாலும் எனக்கு அவர்களிடம் கேட்க ஒரு தயக்கம் இருந்தது. எனவே, நன்கொடைகள் இல்லாவிட்டாலும் சிறப்புப் பள்ளியில் தங்கி இருப்பவர்களுக்கு தொடர்ந்து சேவை வழங்கத் தேவையான பணம் நம்முடைய தொழிலில் இருந்தே கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது.
நான் ஐடி துறையில் பணியாற்றியதால் டெக்னாலஜி துறையில் இருந்த அனுபவத்தை வைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் பேசுவது தடங்கலின்றி வரும் ஒரு செயல் என்பதால் கால் சென்டர் போன்ற ஒரு திட்டத்தை தொலைபேசி நிறுவனங்களிடம் கொண்டு சென்றோம். டாடா டொகாமோ இதற்கு இசைவு தெரிவிக்க 2 பேரில் இருந்து 2017-ம் ஆண்டில் சுமார் 250 மாற்றுத்திறனாளிகளை வைத்து கால்சென்டர் நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருந்த சமயத்தில் தான் நெருக்கடிக்கு ஆளானோம் என்கிறார் அப்துல்.
சறுக்கிய முதல்படி
பணமதிப்பிழப்பு, ஆதார் இணைப்பு போன்றவற்றால் நிறுவனங்களுக்கு பின்னால் இருந்து செய்து கொடுக்கும் வேலைகள் அடிவாங்கியதில் எங்களுக்கான கால்சென்டர் பணியிலும் சுணக்கம் ஏற்பட்டது. ஒரு வேலை இல்லை என்றால் இன்னொரு வேலை என்று செல்லக்கூடியவர்கள் அல்ல மாற்றுத்திறனாளிகள். இப்படி இருக்கையில் கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி இருக்காமல் நாமே ஒரு பிராண்டாக மாற வேண்டும் என்கிற சிந்தனை எனக்கு எழுந்தது.
நாங்கள் இது வரை செய்து வந்த பயிற்சிகள் அதில் கிடைத்த வேலைவாய்ப்புகளை திரும்பிப் பார்த்த போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் தேவையில்லாததாகிப் போனது, இந்த நிலை தொடராமல் இருப்பதற்காகவே 2018-ம் ஆண்டில் உணவு தயாரிப்புத் துறையில் கால் பதித்தோம்.
thank
ஐஏபி குக்கீஸ் டூ தேங்க் யூ ஃபுட்ஸ்
பொது இடங்களில், போக்குவரத்துகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தின்பண்டங்களை விற்பனை செய்கின்றனர். அவர்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், ஒரு பிராண்டை உருவாக்கி அவர்களை ஒரு தொழில்முனைவராகவோ அல்லது ஊழியராகவோ மாற்றலாம் என்று திட்டமிட்டேன். முதன்முதலில் மதுரையில் வீட்டிலேயே குக்கீஸ்களை தயாரித்து சாலையோரம் நின்று விற்பனை செய்யத் தொடங்கினோம். ஐஏபி குக்கீஸ் என்று பெயரிட்டு டப்பாக்களில் அடைத்து பள்ளிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்யத் தொடங்கியதில் தினசரி கணிசமான பணம் கிடைத்தது. நாங்கள் இருக்கும் வரை செயல்படும் நிறுவனமாக இது இல்லாமல் எங்கள் காலத்திற்குப் பிறகுத் தொடர்ந்து இந்த பிராண்ட் இருக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் அளிக்க வேண்டும் என்கிற லாபம் தரும் தொலைநோக்கு சமுதாயத் தொழில்முனைவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்தேன்.
கைகொடுத்த கார்ப்பரேட்டுகள்
ஏழ்மையான குடும்பச் சூழலில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் கல்வி, தங்குமிடம் என அனைத்திற்கும் மற்றவர்களின் உதவியால் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருக்கும் என்பதால் ‘தேங்க் யூ ஃபுட்ஸ்’ என்பதையே ஒரு பிராண்ட் பெயராக மாற்றினோம்.
நகைக்கடைகள், வங்கிகள் என்று பொது இடங்களில் அந்தந்த நிறுவனங்களிடம் அனுமதி பெற்று ஒரு சிறிய இடத்தில் கடையை அமைத்து தேங்க் யூ குக்கீஸ்களை விற்பனை செய்யத் தொடங்கினோம். இதனைத் தொடர்ந்து Honey well, HCL போன்ற கார்ப்பரேட்களிலும் வார அல்லது மாத முறையில் விற்பனை செய்தோம். பொருளும் நன்றாக இருக்கிறது, ஊழியர்கள் செலவிடும் பணம் நல்ல நோக்கத்திற்காக சென்றடைகிறது என்கிற திருப்தியும் அவர்களுக்கு இருந்தது.
மதுரையில் கிடைத்த வரவேற்பை பார்த்து சென்னையிலும் விற்பனை செய்வதற்கு கார்ப்பரேட்கள் அழைப்பு விடுத்தன. எந்த தயக்கமும் காட்டாமல் சென்னையில் ஒரு வீடு எடுத்து பார்வை மாற்றுத்திறனாளிகளை தங்க வைத்து பொருட்களை மதுரையில் உற்பத்தி செய்து அவர்களுக்கு டெலிவரி செய்து அதனை ஸ்டால்களாக போடச் செய்தோம்.
thank you brand
படிப்படியான வளர்ச்சி
இப்படியாக சென்னையில் வேறு சில கார்ப்பரேட்களும், அதன் கிளைகள் இருக்கும் ஹைதராபாத், மும்பை, புனேவில் kiosk-களை அமைக்க அழைப்பு விடுத்தன. எங்களிடம் பயிற்சி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை அதிகம். பெருநகரங்களாக இருந்தாலும் அவர்கள் தயங்கவில்லை. மொழி தெரியாது, பார்வை கிடையாது என்றெல்லாம் யோசிக்காமல் இரவோடு இரவாக அந்த ஊருக்கு பயணம் செய்து வீடு எடுத்து நாங்கள் அனுப்பும் பொருட்களை அவர்களே ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று பெற்று அதனை ஐடி கம்பெனிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வரை அனைத்தையும் அவர்களே செய்துவிடுவர். அவர்களின் உத்வேகம் என்னைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்தது.
மதுரை சுந்தரம்பட்டியில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஃபேஸ்புக், கூகுள் என சுமார் 700 கார்ப்பரேட்டுகளை சென்றடைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 50 மாற்றுத்திறனாளிகளோடு அந்தந்த நகரங்களில் இருந்த மாற்றுத்திறனாளிகளையும் நாங்கள் மொழி தெரிய வேண்டும் என்பதற்காக பணியில் அமர்த்தி செயல்பட்டுக் கொண்டிருந்தோம். குக்கீஸ்கள் மட்டுமின்றி 15 நாட்கள் கெடாமல் இருக்கக் கூடிய சேவரிகள் என எங்களின் பட்டியலை விரிவுபடுத்தினோம்.
என்னுடைய மனைவி செஃப் மற்றும் உணவு சார்ந்த கற்றலைத் தொடங்கினார். உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பட்டியலை அதிகரிக்கும்போது எல்லா வேலைகளையும் பார்வையற்றவர்களால் செய்ய முடியாது. இதனால் பிற மாற்றுத்திறனாளிகள், கிராமப்புற பெண்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த மாஸ்டர்கள் என்கிற வரிசையில் ஆட்களை எடுத்தோம், பொருட்களின் தரம் இருந்தால் மட்டுமே சந்தையில் அந்த பிராண்ட் நிலைத்து நிற்கும்.
ஸ்டால் அமைக்க கார்ப்பரேட்டுகளிடம் அனுமதி கேட்பது, ஐடி நிறுவனத்திற்கு சென்று ஸ்டால் போடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளுக்கு ஏற்ப ஆடியோ வடிவில் வழிகாட்டிகளை வகுத்து அவர்களுக்காக பிரத்யேகமாக அனைத்தையும் உருவாக்கி தந்திருந்தோம். மதுரையில் இருந்து இயக்குவது மட்டுமே நாங்கள். ஆனால் அங்கு பார்வை மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். சொல்லப்போனால் ரூ.1 லட்சம் வரை கூட விற்பனை செய்திருக்கிறோம்” என்கிறார் அப்துல்.
ஏற்றத்தில் மீண்டும் வந்த சிக்கல்
வெற்றிகரமாக ஒரு பிசினஸ் மாடலை உருவாக்கி விட்டோம் என்று நிம்மதியடையும்போது தான் கொரோனா தாக்கம் வந்துவிட்டது. வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள், வாங்குவதற்கும் மக்கள் இருக்கிறார்கள், இடையில் இருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லாததால் மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. எனினும், சற்றும் யோசிக்காமல் கோவிட் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே எந்தெந்த நகரங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கி இருந்தார்களோ அவர்கள் இருப்பிடத்தை காலி செய்துவிட்டு மதுரைக்கு வரச் சொல்லிவிட்டோம். அவர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதால் மார்ச் மாதத்திலேயே மீண்டும் வரவழைத்துவிட்டேன்.
40 ஆண்டுகளில் மூடப்படாத எங்களின் சிறப்புப் பள்ளிகள் கூட இயங்க முடியாமல் அனைவரையும் அவரவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். தொழிலில் கவனம் செலுத்தாமல் அந்தக் கடின காலத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் முக்கியம் என்று கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து சுமார் 3 மாதங்கள் தமிழகம் முழுவதும் இருந்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மளிகை சாமான்களை பெற்றுத் தந்தோம்.
அடுத்தது என்ன?
இந்தச் சவாலான காலகட்டத்தில் தொழிலை எப்படி கொண்டு செல்லலாம் என்று சிந்திக்கத் தொடங்கினோம். நம்முடைய தயாரிப்புகளை ரீட்டெய்ல் சந்தை மற்றும் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். 2020-ம் ஆண்டில் இருந்து www.thankufoods.com என்கிற இணையதள பக்கம் மூலம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வழியாக விற்பனையைத் தொடங்கினோம். எங்களுடைய பனைவெல்ல மைசூர்பாக், அல்வா உள்ளிட்ட பொருட்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதிலும் கூட பொருட்களை பேக் செய்து கூரியர் செய்யும் போது logistics கட்டணம் அதிகம் இருந்ததால், சொந்தமாக நாமே கடைகளை அமைத்தால் மட்டுமே லாபமாக இருக்கும் என்கிற அனுபவத்தை பெற்றோம்.
2021-ல் எங்களின் பள்ளிக்கு முன்னால் ஒரு சின்ன ஸ்டோரை அமைத்து பேக்கரியில் செய்து கொடுக்கக் கூடிய பப்ஸ், பிரத்யேக கேக் தயாரிப்புகளை செய்து கொடுத்தோம். சிறிய கிராமமாக இருந்தாலும் அதற்கு நல்ல வரைவேற்பை பெற்றது. கபே, கேக், ஸ்வீட்ஸ்களுடன் கூடிய ஸ்டோராக இப்போது மதுரையில் 5 இடங்களில் தேங்க் யூ ஃபுட்ஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அடுத்த கட்டமாக சென்னை, கோவையில் ஸ்டோர்களைத் திறக்க திட்டமிட்டிருக்கிறோம். கார்ப்பரேட்டுகளும் மீண்டும் செயல்படத் தொடங்கி இருப்பதால் அங்கு சென்று ஸ்டால்களை அமைப்பது, குடியிருப்புகளுக்கு சென்று கியோஸ்க் போடுவது மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆன்லைனில் ஆர்டர் என்கிற ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் அதில் ஒன்று மாற்றுத்திறனாளிக்கானது என்கிற உள்ளடக்கத்துடன் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீண்ட கால இலக்காக விமான நிலையங்கள், மால்களில் கியோஸ்க்களாக அமைத்து செயல்பட திட்டம் உள்ளது.
thank you products
ஈடேறும் அப்பாவின் கனவு
15 வகைகளான கேக்குகள், மதுரையில் அனைத்து இடங்களிலும் சென்னை துறைப்பாக்கத்திலும் பிரத்யேகமான பிறந்தநாள் கேக் டெலிவரி. இளநீர் அல்வா, கருப்பட்டி மைசூர்பா என 15 வகையான இனிப்புகள், தட்டை, காரசேவ் உள்ளிட்ட 15 கார வகைகள், குக்கீஸ்கள், தொக்கு, ஊறுகாய் வகைகளில் 15 ரகங்கள் என்று மொத்தம் 80 வகை பொருட்களை நாங்களே சொந்தமாக தயாரிக்கிறோம். 50 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகள், 50 சதவிகிதம் பெண்கள் மற்றும் இதர தரப்பினரைக் கொண்டு இயங்கி வருகிறோம்.
தொழில் ஒரு ஸ்திர நிலையை அடைந்த பின்னர் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஒரு மைக்ரோ தொழில்முனைவர்களாக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இது தவிர உணவு ட்ரக் மற்றும் மூன்று சக்கர வாகனத்தில் இதர வகை மாற்றுத்திறனாளிகள் சென்று விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்.
எங்களிடம் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்து ஸ்டார் ரேட்டிங் கொடுப்பது எங்கள் மீதான நம்பகத்தன்மையை உயர்த்தி இருக்கிறது. எங்களின் சேவையை பாராட்டி இந்திய பார்வையற்றோர் சங்கம் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து விருதுகளைப் பெற்றிருக்கிறது. அரசுகள் இப்போது வலியுறுத்து தற்சார்பு வாழ்க்கை என்பதை 80-களிலேயே முன்நிறுத்திய எனது அப்பாவின் கனவு 2023-ல் ஈடேறத் தொடங்கி இருக்கிறது” என்று மகிழ்கிறார் அப்துல் ரஹீம்.
ArticlesTips play on the web baccarat | Ladbrokes casino codeLegal aspects of online casinosThe way…
ArticlesMegascratch casino | Bet เข้าสู่ระบบภายในประเทศไนจีเรีย เช็คอิน 1xBet NG บนเว็บวันนี้Gambling enterprises for Us ParticipantsFirst Regulations Of…
ContentTechnical at the rear of totally free casino games | casino Stan JamesThe top Split…
ArticlesRebellion casino casino bonuses - Baccarat Alive Casinos – Play for A real incomeReal time…
ArticlesGame guidance | Jackpotpe ios casinoTop Video gameMultiple Diamond Position Review - Discover It IGT…
ArticlesKnights and Maidens online: Are all roulette dining tables a similar?Body weight Workplace Gambling establishmentNetEnt…