Tamil Stories

The Max Trust (Cancer Awareness)

71 வயதில் சினிமா என்ட்ரி; கேன்சர் நோயாளிகளுக்காக 3 தசாப்தங்கள் அர்பணிப்பு- ‘உம்மாச்சி’ விஜி-யின் கதை!

தனது 70களில் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி அனைவருக்கும் பிடித்த ‘உம்மாச்சி’ ஆகுவதற்கு முன் விஜி வெங்கடேஷ், புற்றுநோயாளிகளுக்காக அவரது வாழ்க்கையின் மூன்று தசாப்தங்களை அர்ப்பணித்து உள்ளார்.

உம்மாச்சி” என்று பலரால் அன்போடு அழைக்கப்படும் விஜி வெங்கடேஷ் சமீபத்தில் அகில் சத்யன் இயக்கத்தில் பிரபல நடிகர் ஃபஹத் பாசிலின் ‘பச்சுவும் அழகுவிளக்கும்’ (பச்சு மற்றும் மந்திரவிளக்கு என்று பொருள்) என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகுக்கு அறிமுகமானார். ஆனால், அவருடைய கதையில் பகிர வேண்டியவை பல உள்ளன.

கடந்த 3 தசாப்தங்களாக புற்றுநோயுக்கு எதிராக பணியாற்றி வருகிறார். தற்போது ‘தி மேக்ஸ் அறக்கட்டளை’ என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான பிராந்தியத் தலைவராகப் பணியாற்றுகிறார். உலகெங்கிலும் உள்ள புற்றுநோயாளிகளுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் கிடைக்கப்பெற வைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.

டெல்லியில் பிறந்து வளர்ந்த விஜி, ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1974ம் ஆண்டில் திருமணம் முடிந்தநிலையில், மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

“இந்தப் பயணத்தில் எனது கணவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார். 80களின் பிற்பகுதியில், குறிப்பாக ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை முடித்த ஒருவருக்கு வேலை தேடுவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். அதுபோன்றதொரு நிலையில் இந்த பணி எளிதான சாதனையாக தெரியவில்லை. இருப்பினும், புற்றுநோய்க்கு ஆதரவாக செயல்பட துவங்குகையில், எனது பாதை மாறியது,” என்று கூறினார்.

சியாட்டிலைத் தலைமையிடமாகக் கொண்ட மேக்ஸ் அறக்கட்டளையானது, 1997ம் ஆண்டு லுக்கிமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்காகவும், அவர்களது குடும்பத்துக்கும் உதவுவதற்காக நிறுவப்பட்டது. இதனையடுத்து, 2001ம் ஆண்டில், 70 க்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில், Glivec இன்டர்நேஷனல் நோயாளி உதவித் திட்டத்தை உருவாக்கி, அதனை நிர்வகிப்பதற்காக மருந்து நிறுவனமான நோவார்டிஸுடன் இந்த அமைப்பு கூட்டு சேர்ந்தது.

2002ம் ஆண்டு முதல், தி மேக்ஸ் அறக்கட்டளையில் பணியாற்றி வரும் விஜி, Glivec இன்டர்நேஷனல் நோயாளி உதவித் திட்டத்தின் (GIPAP) நிர்வாகத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். நோவார்டிஸ் ஆன்காலஜி அணுகல் (NOA) திட்டத்தின் நிர்வாகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். இருப்பினும், நோயை எதிர்த்துப் போராடுவதற்கு தனக்கு புற்றுநோய் கதை தேவையில்லை என்று அவர் கூறுகிறார்.

புற்றுநோயுக்கு எதிரான போர்…!

“புற்றுநோயை எதிர்க்கும் பயணத்தில் பயணிக்கத் தூண்டியது எது என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த கதை எனக்கில்லை. புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு பங்களிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மும்பையில் உள்ள வணிகங்கள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவைப் பெற்று நிதி திரட்டத் தொடங்கினேன்,” என்றார்.

புற்றுநோயாளிகளுக்காக நிதி திரட்டுகையில் அவரது நிறுவனத்தில் உள்ள குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து, தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு, வெறும் மாதம் ரூ.1,500 சம்பளத்திற்கு பணிபுரியும் ஊழியர்களின் அவலத்தை நேரில் கண்டார். மேலும், அவர்கள் புற்றுநோயுக்கு முதன்மை காரணியான புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளனர்.

“பணிக்கு சேர்ந்த ஆரம்ப நாட்களில், புற்றுநோய் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அறிந்து கொள்வதற்காக அருகிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்குச் சென்று, புற்றுநோயைப் பற்றிய அனைத்து புத்தகங்களையும் படித்தேன். அவற்றைப் படித்து, தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முயற்சித்தேன்.

தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசுவதற்காக தொழிற்சாலையில் உள்ள நலன் அல்லது தொழிலாளர் அதிகாரியை சமாதானப்படுத்த முயற்சித்தேன். இந்தியாவில், வாய்வழி, மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற புற்றுநோய்கள் மிகவும் பொதுவானவை. இவை மூன்றையும் மிக விரைவில் கண்டறிய முடியும்,” என்றார்.

புற்றுநோய்க்கு எதிரான வேட்கையில் அவரும், அவரது குழுவினரும் ரத்த வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களுக்குச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவர்களது ஓய்வு நேரத்தில் நோயறிதல் முகாம்களை நடத்த முன்வந்தனர்.

“டாடா மெமோரியல் மருத்துவமனையில் தடுப்பு புற்றுநோயியல் துறையை அமைக்கும் பணியில் நியமிக்கப்பட்டேன். அங்கு பணியாற்றிய மூன்றே ஆண்டுகளில், புற்றுநோயைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொண்டேன். அது ஒரு ‘கற்றல் கோவில்,” என்றார்.

‘உம்மாச்சி’ ஆகிய பின்னான வாழ்க்கை…

விஜி வெங்கடேஷின் முதல் திரைப்படத்தின் கதாபாத்திரமானது, ஒரு தாய் உருவத்தின் பொதுவான சித்தரிப்புக்கு அப்பாற்பட்டது. வயதானவர்களுக்கென சமூகம் கட்டமைத்துள்ள விதிகளை மீறி, ஸ்டீரியோடைப்களை உடைத்தெறியும் ஒரு சுதந்திரமான வயதான பெண்ணின் கதாபாத்திரம் அவருடையது. அந்த கதாபாத்திரத்துக்கு விஜி பொருத்தமாக இருப்பார் என்ற நம்பிக்கையில், அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்துள்ளனர்.

“நான் சோஷியல் மீடியாவை அதிகம் பயன்படுத்துவேன். அகில் மற்றும் அவரது குழுவினர் இன்ஸ்டாகிராமில் என்னுடைய புகைப்படத்தைப் பார்த்துள்ளனர். படத்தின் ‘உம்மாச்சி’ கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என எண்ணி என்னை அழைத்தனர். மலையாளப் படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று கேட்டனர். எனக்கு முழுநேர வேலை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், என்னுடைய மலையாளம் மோசமாக இருக்கும் என்று சொன்னேன். இந்த வயதில் நடிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். அதனால் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை,” என்று விஜி ஹெர்ஸ்டோரியிடம் கூறினார்.

இந்நிலையிலே, மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இயக்குனர் அகிலை சந்தித்துள்ளனர். “அகில் மிகவும் உணர்ச்சிவசமான மற்றும் ஆற்றல் மிக்க ஒரு மகிழ்ச்சியான இளைஞன்! கதையையும், கதாபாத்திரத்தையும் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டேன்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் விஜியின் மலையாளம் பேசும் திறனை மேம்படுத்த உதவியதுடன், அவருக்கு நடிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் நடிப்பதை எளிதாக்கினர்.

“முதல் காட்சியே ஃபகத் ஃபாசிலுடன் தான். எனக்கு வார்த்தையே வரலை. படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஃபஹத் என்னிடம் வந்து ‘ஹாய், நான் ஃபஹத்..’ என்றார், அதற்கு நான், ‘நிச்சயமாக நீங்கள் ஃபஹத் என்று எனக்குத் தெரியும்ம் என்றேன். படப்பிடிப்பில் எத்தனையோ தவறுகள் செய்தாலும், படக்குழுவினர் உறுதுணையாக இருந்தனர்,” என்றார்.

உம்மாச்சி கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பால் மேலும் இரு திரைப்படங்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளார். அதில் ஒன்று, ஓட்டல் (2015), வீரம் (2016) மற்றும் பயநாகம் (2018) ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜெயராஜின் படமாகும்.

புற்றுநோயாளிகளின் நலனுக்கான தேநீர் சந்திப்பு!

இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டும் பிரச்சாரமான ‘சாய் ஃபார் கேன்சர்’ முயற்சிக்கு விஜி தலைமை தாங்குகிறார். பத்து ஆண்டுகளை கடந்துள்ள இப்பிரச்சாரமானது, முறைசாரா தேநீர் சந்திப்புகள் மூலம் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கிறது. நோயின் வீரியத்தால் நிலவும் அஞ்சப்படும் நிலையினை மாற்றி, இயல்புநிலையை உருவாக்கும் முயற்சியில், “டிரிங் டு எ காஸ்” என்ற முழக்கத்தையும் அவர் கொண்டு வந்தார்.

“புற்றுநோயை குணப்படுத்த முடியும், புற்றுநோயை சமாளிக்க முடியும். ஆனால், அதற்கு உங்களுக்கு நிதி தேவை. இன்று, நிறைய புதிய மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. மேற்கத்திய தொழில்நுட்பத்திற்கு இணையாக இருக்கிறோம். இவை அனைத்தும் கிடைக்கின்றன, ஆனால் நோயாளிகளால் அவற்றை அணுக முடிவதில்லை. நம் நாட்டில் பெரும்பாலான நோயாளிகளுக்கு மிகவும் தாமதமான கட்டத்திலே நோய் கண்டறியப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில், காப்பீட்டுக் கொள்கைகளை அணுகுவதற்கு நோயாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆதரவையும் பெறுவதில்லை. நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான நிதியினை வழங்க விரும்புகிறோம்,” என்றார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விஜியின் கணவர் உயிரிழந்தார்.

“எனக்கு ஒன்னுமே புரியவில்லை. அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அவர் ஐந்து வாரங்கள் மட்டுமே வாழ்ந்தார். பொருளாதார ரீதியாக மேம்பட்ட குடும்ப பின்னணியை கொண்டிருந்ததால், என்னால் உடனே சிறந்த மருத்துவர்களை அணுக முடிந்தது. அந்த நேரத்தில் என் கணவருக்குத் தேவையான அனைத்தையும் என்னால் செய்ய முடிந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை.

உங்கள் இதயத்தைக் கேளுங்கள். உங்கள் உள்ளம் உங்களுக்குச் சொல்வதைச் செய்யுங்கள். பயமற்று இருங்கள். நீங்கள் உங்களைப் பார்க்கும் விதத்திலே மக்கள் உங்களைப் பார்க்கிறார்கள். உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் அல்லது மகிழ்ச்சியற்றதாக்கும் சக்தி எதுவாக இருப்பினும், அந்த சக்தியை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான வாய்ப்பு வரும்போது நீங்கள் பயப்பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்,” என்று கூறி முடித்தார் அவர்.

founderstorys

Recent Posts

Women-Quiz-Master-Saranya-Jayakumar-at-85-Years-Inspiration-Story

85 வயதிலும் கலக்கும் குவிஸ் மாஸ்டர் - எண்ணற்ற போட்டிகள்; கோப்பைகள் வென்ற சரண்யா ஜெயகுமார்! தீரா ஆர்வத்துடன் கூடிய…

3 months ago

Failure-to-Success-CEO-of-AU-Bank-Sanjay-Agarwal-Success-Business-Story

8-வது ஃபெயில்; இன்று நிகர மதிப்பு $1 பில்லியன் - வங்கித்துறையில் சஞ்சய் அகர்வால் சாதித்தது எப்படி? பள்ளிப் படிப்பில்…

3 months ago

Protecting-from-Mohanlal-to-Many-Celebrities-Kerala-Lady-Bouncer-Anu-Kunjumon-Inspiration-Story

'மோகன்லால் முதல் பிரபலங்கள் வரை' - கெத்துகாட்டும் கேரள லேடி பவுன்சர் அனு குஞ்சுமோன்! மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால்…

3 months ago

Brothers-Who-Recycle-Millions-of-Cigarette-Butts-to-Products-Business-Social-Enterprise-Story

நாளொன்றுக்கு 6 மில்லியன் சிகரெட் துண்டுகள்; மறுசுழற்சி செய்து சூழலைக் காக்கும் சகோதர்கள் சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுடன் சேர்த்து, சுற்றியிப்பவர்களுக்கும்…

3 months ago

From the Ground Up: The Rise of Rajesh Kumar, Founder of Rajesh & Tile Work and Team

Written by Pradeep Kumar | FounderStorys.com Today in Coimbatore, when someone says “Rajesh & Tile…

3 months ago

Rajesh & Tile Work and Team: Building India’s Dream Floors – The Inspiring Journey of Rajesh Kumar

நிலத்தில் இருந்தே எழுந்தவர்: ‘ராஜேஷ் அண்ட் டைல் வார்க்’ நிறுவனர் திரு. ராஜேஷ் குமார் பிரதீப் குமார் எழுதுகிறார் |…

3 months ago