இந்தியாவில் தேநீர் பருகும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று அறியப்பட்டாலும், சில ஆண்டுகளாக காபியை விரும்பிப் பருகுபவர்களின் எண்ணிக்கை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் ஃபில்டர் காபியை விரும்பிப் பருகத் தொடங்கியுள்ளனர் பலர். இந்தப் பகுதிகளில் காபி கொட்டைகள் அதிகம் விளைச்சல் செய்யப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
சர்வதேச அளவில் பிரபலமான சில பிராண்டுகள் தங்களின் அவுட்லெட்களை பல்வேறு இடங்களில் திறந்திருக்கின்றன, டிஜிட்டல் பிளாட்பார்ம்கள் உதவியுடன் ஆன்லைன் மூலமே காபி ஆர்டர் செய்யும் பல வசதிகள் வந்துள்ளன. இந்தியச் சந்தையில் இன்று எண்ணிலடங்கா பிராண்டுகள் உள்ளன, அவற்றில் இருந்து தனித்த அடையாளமாக தன்னுடைய தன்னிகரில்லாத உயர் தரத்தால் பாரம்பரியம் காத்து நிற்கிறது கோவை இளைஞரின் ’தி சவுத் இந்தியன் காஃபி ஹவுஸ்’.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் அமர்நாத், அப்பா கார்னேஷன் பாக்ஸ் தயாரிப்புத் தொழிலில் இருந்ததால் சிறு வயது முதலே தொழில் தொடங்குவதில் ஆர்வத்தோடு இருந்தார்.
“நான் பள்ளிப்படிப்பு முழுவதையும் காங்கேயத்திலேயே படித்தேன். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் என்னுடைய அப்பாவுடன் சேர்ந்து பிசினஸில் அவருக்கு உதவியாக இருப்பேன். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றேன். தொழில் தொடங்குவதே என்னுடைய ஆசையாக இருந்தாலும், கார்ப்பரேட் அனுபவம் தேவை என்பதால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில நிறுவனங்களில் சுமார் 7ஆண்டுகள் பணியாற்றினேன். இந்தியாவிற்கு வந்த பிறகு என்னுடைய ஸ்டார்ட் அப்பை தொடங்கினேன்,” என்கிறார் தி சவுத் காஃபி ஹவுஸின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அமர்நாத்.
அப்பாவின் தொழிலுக்கு உதவுவதோடு, பள்ளி, கல்லூரி மற்றும் நான் வேலை செய்த காலங்களில் கூட பகுதி நேரமாக ஏதோ ஒரு தொழிலை செய்து வந்தேன். கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டமிடல் என்ன, வளர்ச்சிக்கான காரணம் என்ன உள்ளிட்ட நேர்த்திகளை கற்றுக் கொள்வதற்காகவே கார்ப்பரேட் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினேன்.
நான் வளர்ந்த சூழல் முழுவதும் தொழில் செய்பவர்களாகவே இருந்ததால் எனக்கும் அதுவே விருப்பமாக இருந்தது. வெற்றி தோல்வி என்பதை பார்த்து பக்குவப்பட்டே வளர்ந்தேன்,
“என்னுடைய தொழிலை சில்லரை வர்த்தகமாகத் தொடங்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காலகட்டத்தில் டீக்கடைக்கும் கபே காபி டேவிற்கும் இடையில் ஒரு பெரிய இடைவேளை இருந்தது. இடைபட்ட இந்தத் துறையில் ஒருமுறைசார்ந்த நிறுவனத்தின் பங்கு இல்லாமல் இருந்ததால், உணவுத்துறையில் அதிலும் Cash and Carry தொழிலைத் தொடங்கலாம் என்று முடிவு செய்து காஃபி கடை நடத்துவதை தொழிலாகத் தேர்வு செய்தேன் என்று சொல்கிறார்,” அமர்.
2015ல் என்னுடைய முதல் கடையை ஈரோட்டில் தொடங்கினேன், அது தோல்வியில் முடிந்த போதும் அதில் நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொண்டேன். காபி என்றால் என்ன என அறிந்து கொள்வதற்காக ஒரு காஃபி போர்டில் பங்கேற்று ஒரு காஃபி என்றால் எப்படி இருக்க வேண்டும், அதில் இருக்கும் சுவைகள் என்னென்ன, எத்தனை வகையான காபி பீன்கள் உள்ளன போன்றவற்றை அறிந்து தெளிவு பெற்றேன்.
இன்று வரை நான் காஃபி பருகமாட்டேன் என்றாலும், ஒரு சிப் காஃபி குடித்தாலே இது என்ன வகையான காபி கொட்டை, எந்த பதத்தில் வறுக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயங்களைத் துல்லியமாகக் கூறிவிடுவேன் என்கிறார்.
தொழிலில் ஒரு நிலைத்தன்மையை பெறுவதற்கு முன்னர் சென்னை, மதுரை, ஈரோடு என நகரின் சில பகுதிகளில் காபி கடைகளை நடத்தினேன். ஒற்றை ஆளாக எல்லா பகுதிகளிலும் கடைகளை கவனிப்பது என்பது சற்று கடினமாக இருந்ததால், அனைத்தையும் மூடிவிட்டு கோயம்புத்தூரில் மட்டும் கடைகளை திறந்து அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்தினேன்.
தினசரி செலவுகளை கண்காணிக்க வேண்டும், அன்றாடம் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்தை கணக்கிட்டால் சரியான முதலீடு மற்றும் அதற்கான லாபத்தையும் பெறலாம். Franchise கேட்டு பல தொலைபேசி அழைப்புகள் எனக்கு வருகின்றன.
எல்லோரும் கேட்கும் கேள்வி எவ்வளவு முதலீடு போட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று தான் கேட்கின்றனர். யாருமே அந்தத் தொழில் முன்னேற்றத்திற்கு அவர்கள் எந்த அளவிற்கு உழைப்பை செலுத்த வேண்டும் என்று பார்ப்பதில்லை. இவ்வளவு தான் லாபமா என்கிற முடிவுக்கு சிலர் எளிதில் வந்து விடுகின்றனர், வாடிக்கையாளர்களின் தேவை என்பது அன்றாடம் மாறிக்கொண்டே இருக்கும் அதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இந்த விஷயங்களில் எல்லாம் தனிக்கவனம் செலுத்தினால் மட்டுமே இந்தத் துறையில் நிலைத்திருக்க முடியும்.
“பணத்தை முதலீடு செய்தால் போதும் மற்றவையெல்லாம் தானாக நடக்கும் என்று பலர் நினைக்கின்றனர் அது சாத்தியமில்லை என்பதற்காகவே எங்களின் பிராண்ட் Franchiseஐ யாருக்கும் கொடுக்கவில்லை என்கிறார்,” அமர்.
கோயம்புத்தூரில் மருத்துவமனைகள், ரயில்நிலையம், கல்லூரிகள், மால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எங்களுடைய கடைகள் இயங்குகின்றன. தரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம், காஃபி கொட்டைகளை நேரடியாக உற்பத்தியாகும் இடத்தில் இருந்து வாங்கி சேமித்து வைக்கிறோம். ஆண்டின் எல்லா நாட்களும் காஃபி கொட்டையின் சுவை ஒரே விதமாக இருக்காது, அதே போன்று காஃபி தோட்டத்தில் ஊடுபயிறாக விளையும் மிளகு, ஆரஞ்சு உள்ளிட்டவற்றின் விளைச்சலுக்கு ஏற்பவும் கூட ருசி மாறுபடும். இவற்றையெல்லாம் ஆராய்ந்து காபி கொட்டைகளை வாங்கி தேக்கி வைக்கிறோம்.
மேலும், தினசரி அவற்றை வறுத்து அரைத்து காஃஃபி போடுவதால் எங்களின் ஸ்டால்களில் கிடைக்கும் காஃபிகள் மிகவும் புத்துணர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
“பில்டரில் டிகாக்ஷன் போட்டு வைத்தோ, அல்லது பிளாஸ்கில் காஃபியை போட்டு வைத்தோ வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதில்லை, சிறு சிறு தொகுப்புகளாக காஃபி கொட்டைகளை பிரித்து வைத்து அதை உடனுக்குடன் வறுத்து பொடி செய்து முடிந்த வரையில் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் காஃபியை தர முயற்சிக்கிறோம்,” என்று தங்களின் ஸ்பெஷலை விளக்கினார் அமர்.
மாற்றம் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்களாக நானும் என்னுடைய மனைவியும் செயல்படுகிறோம், எங்களின் கீழ் 40க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இந்தத் தொழிலில் இறங்கும் போது நான் இதுவரை சேமித்த வருமானம், மனைவியின் நகை, நண்பர்களிடம் கடன் வாங்கியது என மொத்தம் ரூ.10 லட்சத்தை முதலீடாக செய்து தான் முதல் கடையைத் திறந்தேன்.
அது லாபம் தரவில்லை என்பதால் அதனை தோல்வி என்று நான் கருதவில்லை, அதில் இருந்து நான் முதன் முதலில் தொடங்கிய தொழிலில் என்னென்ன தவறுகளைச் செய்தேன் என்பது புரிந்தது. அந்த முதல் கடையை மூட நேரிட்டாலும் அதில் இருந்து கிடைத்த அனுபவத்தை வைத்து தொடர்ந்து தொழிலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.
“தி சவுத் இந்தியன் காஃபி ஹவுஸ் இப்போது கோயம்புத்தூரில் 12 இடங்களிலும் சென்னையில் 2 இடங்களிலும் உள்ளன. தொடக்கத்தில் ஆண்டிற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டினோம், இப்போது ஆண்டிற்கு 3 கோடி அளவிற்கு வருவாய் பெறுகிறோம்,” என்றார்.
காஃபியோடு பாரம்பரியமான தென்னிந்திய பட்சணங்களும் எங்களுடைய கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் மைதாவால் செய்யப்பட்ட சமோசா, பப்ஸ் என்று இல்லாமல் ஆரோக்கியமான நம்முடைய பயிறு வகைகளை வைத்து செய்யக்கூடிய பஜ்ஜி, போண்டா, மெதுவடையோடு எங்களுடைய ட்ரேட்மார்க் ஸ்நாக் ராகி வடை அதிக அளவிலான வாடிக்கையாளர்களைக் கவரச் செய்தது.
ராகி ஒரு ஆரோக்கியமான சிறுதானியம் அதில் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்வது மிகவும் கடினமான விஷயம் எங்களின் இந்த ஸ்டார் உணவை யாராலும் தயார் செய்ய முடியாததும் தி சவுத் காஃபி ஹவுஸின் வளர்ச்சியை மற்ற பிராண்டுகளால் தடுக்க முடியாததற்கான ஒரு காரணமானது. இதன் சுவை பிடித்துப் போய் ஒரு வாடிக்கையாளர் அவரின் உறவினருக்கு தினசரி கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பார்சல் அனுப்பி வந்தார் என்று பெருமைப்படுகிறார் அமர்.
மாதத்திற்கு சுமார் 60ஆயிரம் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறது தி சவுத் காஃபி ஹவுஸ், கடைகளில் நடக்கும் விற்பனை மட்டுமின்றி ஸ்விகி, சோமாடோவுடனும் இணைந்து வீட்டிற்கே கூட டெலிவரி செய்யப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் தான் எங்களுடைய தொழில் 24 மணி நேரமும் நடந்து கொண்டிருந்தது. மருத்துவமனைகள், ரயில் நிலையங்களில் 365 நாட்களும் இயங்கிக்கொண்டிருந்தோம், எங்களுடைய கடைகளுக்கு அருகில் இருந்த காவல்நிலையங்களுக்கும் நாங்கள் காஃபி, ஸ்நாக்ஸ் டெலிவரி செய்தோம். சொல்லப்போனால் பெருந்தொற்று காலத்தில் தான் அதிகமான கடைகளைத் திறந்தோம்.
எங்களுடைய பிராண்டை உலகம் முழுமைக்கும் எடுத்துச் செல்வதையே இலக்காக வைத்துச் செயல்படுகிறோம். தொழிலில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தடங்கல்கள் ஏற்படும் அப்போதெல்லாம் போட்டி நிறுவனமாக இருந்தாலும் தயங்காமல் அவர்களிடம் சென்று அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை பெறுவேன். யாரையும் நாங்கள் போட்டியாளராகக் கருதுவதில்லை என்பதால் சமூகமும் கூட எனக்கு பல வகைகளில் தொழிலில் முன்னேற்றம் அடைய உதவி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் நிலையான சம்பளத்துடன் வேலை செய்து கொண்டிருந்த சூழலில் லாபம் எதுவும் இல்லாமல் சுயதொழில் செய்வது என்பது நிச்சயமாக சவாலான விஷயம். சந்தையில் நம்முடைய பிராண்டை நிலைக்க வைக்கச் செய்வதே தொழில்முனைவில் இருக்கும் மிகப்பெரிய சவால், தேவையான பணியாட்களை நியமிப்பது, வாடிக்கையாளர்களின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது, என்னென்ன பொருட்களை விற்பனை செய்யலாம் என்பதற்கான ஆராய்ச்சி என அனைத்துமே சவாலாக இருந்தது.
முதலில் எனக்கு எந்தப் பொருளை விற்பனை செய்வது, அடுத்தது அதனை எப்படி வளர்ச்சியாக மாற்றுவது என்பது சவாலாக இருந்தது, ஒரு பிராண்டாக எப்படி மாற்றுவது என்பது அதற்கடுத்த சவாலாக இருந்தது.
“தொழில்முனைவு என்பதே சவால் நிறைந்தது தான், ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு சவால் இருக்கும் அதற்கான தீர்வுகளைக் கண்டுபிடித்தால் நினைத்ததை சாதிக்க முடியும். Franchisee என்பதைப் பற்றி முடிவெடுக்கவில்லை என்றாலும் பங்குதாரர் முறையில் கடைகளுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த ஆண்டிற்குள் கடைகளில் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்னும் இலக்குடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்,” என்று கூறுகிறார் அமர்.
தொழில்முனைவுக்கு ஜெயிக்க எது முக்கியம்?
பணம் என்பது தொழிலின் ஒரு பகுதி அதை மட்டுமே நோக்கமாக வைத்து நாம் தொழில்முனைவைச் செய்ய முடியாது. பொறுமை இருந்தால் மட்டுமே இந்தப் பாதையில் வெற்றியை காண முடியும். தொழில் ஜெயிக்கத் தகுந்த சூழலை உங்களைச் சுற்றி நீங்கள் உருவாக்க வேண்டும், பலன் கிடைத்துவிட்டதா என்று எதிர்பார்த்துக் கொண்டே செயல்படாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தால் மட்டுமே ஜெயம் நிச்சயம்.
ஒரு தொழில்முனைவரோடு மற்றொருவரை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது சிலருக்கு எளிதில் வெற்றி கிட்டும், சிலருக்கு காலதாமதமாகலாம், எனவே, பொறுமை மட்டுமே முக்கியம். பணம் மட்டுமே இலக்கு என்று இல்லாமல் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கணக்கிட்டாலே நீடித்த வளர்ச்சியை எட்ட முடியும், சமூகத்திற்கும் உங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய முடியும்.
தொழில்முனைவு என்பது உங்களின் வளர்ச்சி மட்டுமல்ல சமுதாயத்திலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தர உதவும். 25 ரூபாய்க்கு பில்டர் காபி, 20 ரூபாய்க்குள் வடை, பஜ்ஜி, போண்டா என வாடிக்கையாளர்கள் வாங்கக் கூடிய விலையில் இளைப்பாறுவதற்கு சரியான இடமாக தி சவுத் காஃபி ஹவுஸ் இருக்கும் என்று உத்திரவாதம் தருகிறார் அமர்நாத்.
Are you a fan of online roulette looking for the best provider to play with?…
ArticlesTips play on the web baccarat | Ladbrokes casino codeLegal aspects of online casinosThe way…
ArticlesMegascratch casino | Bet เข้าสู่ระบบภายในประเทศไนจีเรีย เช็คอิน 1xBet NG บนเว็บวันนี้Gambling enterprises for Us ParticipantsFirst Regulations Of…
ContentTechnical at the rear of totally free casino games | casino Stan JamesThe top Split…
ArticlesRebellion casino casino bonuses - Baccarat Alive Casinos – Play for A real incomeReal time…
ArticlesGame guidance | Jackpotpe ios casinoTop Video gameMultiple Diamond Position Review - Discover It IGT…