கோல் ஊன்றி நடப்பவரும்
கம்பு கூழால் கால் ஊன்றி நடப்பார்!!
திணை உண்டால்
தேக்கு போல் உடல் வலுவாகும்!!
வரும் நோய்களை
வரகால் விரட்டுவோம்!! என்று சிறுதானிய மற்றும் ஆரோக்கிய உணவு தரும் நன்மைகள் பற்பல. மனஅழுத்தம், எதிர்ப்பு சக்திக்கு பதிலாக புதுப்புது வியாதிகளை கொடுக்கும் உணவு பழக்கத்தில் இருந்து மாற்று உணவு முறையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதே புதிய தலைமுறை அம்மாக்களின் எண்ணமாக இருக்கிறது.
தேடித் தேடி கிடைத்த அற்புதமான ஆர்கானிக் பொருட்களை தான் பயன்படுத்தியதோடு மற்றவர்களும் அதன் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக லட்சங்களில் ஊதியம் பெற்ற ஐடி பணியை ராஜினாமா செய்துவிட்டு ‘தினை ஆர்கானிக்ஸ்’ என்கிற அமுதசுரபியை நடத்தி வருகிறார் சரண்யா ராஜேந்திரன்.
“இன்றைக்கு உடலில் நாம் செய்யும் முதலீடே எதிர்காலத்தில் நம்முடைய மருத்துவச் செலவுகளை குறைக்கும் மூலதனம். மாறி வரும் சூழலில் சுற்றி இருக்கும் அனைத்துமே ரசாயனம், ஆரோக்கியமற்றவையாக இருக்கும் போது என்னுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக தேடலைத் தொடங்கினேன். கொரோனா காலகட்டத்தில் அனைவருமே கடைகளை மூடிய நிலையில் நான் அப்போது தான் கடையைத் திறந்தேன்,” என்று தன்னுடைய தொழில்முனைவு பயணத்தை பகிர்ந்தார் சென்னையைச் சேர்ந்த சரண்யா ராஜேந்திரன்.
நான் ஐடியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதில் இருந்தே ஆரோக்கிய உணவிற்கான தேடலைத் தொடங்கி விட்டேன். 2014ம் ஆண்டில் என்னுடைய மகள் பிறந்த போது அது இன்னும் தீவிரமானது, அவளுக்கு பயன்படுத்தும் பொருட்களை பார்த்து பார்த்து உபயோகப்படுத்தத் தொடங்கினேன்.
அப்போது நான் கண்டறிந்த ஒரு விஷயம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் எந்த அளவிற்கு ரசாயன கலப்பு இருக்கிறது என்பதை தெரிந்து உபயோகப்படுத்த வேண்டும் என்கிற புரிதலால் இவை ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை உணர்ந்து Personal care, Home care, உணவுப் பழக்கம் என அனைத்திலும் ஆர்கானிக் முறையை உபயோகப்படுத்தத் தொடங்கினேன்.
2014ம் ஆண்டில் ஆரோக்கிய உணவு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அந்த அளவிற்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். கொரோனா பாதிப்பிற்கு பின்னரே இதன் மகத்துவம் பற்றிய புரிதல் அனைவருக்கும் வந்தது. அதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்கள் மட்டுமே ஆரோக்கிய உணவை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். என்னுடைய ஆரோக்கிய உணவு தேடலை நம்மாழ்வார் குழுவினருடன் இணைந்து தீவிரப்படுத்தினேன்.
ஐடி துறையில் பணியாற்றிக் கொண்டே என்னுடன் பணியாற்றியவர்களுடன் இவற்றில் இருக்கும் நன்மைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தேன். தொடக்கக் காலத்தில் நாட்டுச்சர்க்கரை, செக்கு எண்ணெய் உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கி அதனை நண்பர்களுடன் இணைந்து பகிர்ந்து கொண்டு பயன்படுத்தத் தொடங்கினேன் என்று தன்னுடைய தொழில்முனைவை விவரிக்கிறார் சரண்யா.
முதல் குழந்தைக்கே இத்தனை மெனக்கெடல்களைச் செய்தேன், இரண்டாவது மகள் 2016ம் ஆண்டில் முன்பருவத்திலேயே பிறந்ததால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் அதிகரித்தது. ரசாயன கலப்பு இல்லாமல், முழு உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய உணவு முறை பற்றி முதல் குழந்தை பிறந்த உடனேயே படிக்கத் தொடங்கினேன்.
குழந்தைகளுக்கு எதை உணவாகக் கொடுக்கலாம், எதை கொடுக்கக் கூடாது என்பதை படித்து தெரிந்து கொண்டேன். குழந்தைகளுக்கு பிஸ்கட், பால்பவுடர் கொடுக்கக் கூடாது, வீட்டிலேயே நாம் தயாரித்து கொடுக்கும் உணவுப் பொருட்கள் மட்டுமே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நான் அவளை வளர்த்தேன். இரண்டாவது குழந்தைக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பதால் என்னுடைய தேடலின் நீட்சியில் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு பகிரும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். இப்படித் தான் நான் பயன்படுத்திய பாரம்பரியமான உணவுப் பொருள்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். அதோடு நின்று விடாமல்,
“2017ம் ஆண்டின் இறுதியில் வீட்டிலேயே ஒரு அறையில் சிறுதானிய உணவுகள், மண்கட்டி பருப்பு, நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி உள்ளிட்ட 10 பொருட்களை வைத்து ‘தினை ஆர்கானிக்ஸ்’ என்கிற பெயரில் ஒரு நிறுவனமாகத் தொடங்கினேன். முகநூல் மூலமாக தினை ஆர்கானிக்ஸ் பொருட்கள் அருகில் இருந்தவர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினேன். பின்னர் வாட்ஸ் அப் குழு தொடங்கி பொருட்களை தேவைப்படுவோருக்கு விற்பனை செய்து வந்தேன்.”
ஐடி பணி, குடும்பத்திற்கு மத்தியில் சுமார் 3 ஆண்டுகள் ஒரு நெருக்கடியான சூழலிலும் சிறிய அளவிலான விற்பனையாக இருந்தாலும் அதை வெற்றிகரமாக செய்து வந்தேன். எனினும், ஒரு கட்டத்தில் எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் போனதால் அனைத்தில் இருந்துமே ஒரு பிரேக் எடுத்தேன்.
அந்த சமயத்தில் என்னுடைய வாழ்க்கை லட்சியம் என்கிற புரிதலுக்காக 21DC எனும் தனிமனிதத் திறன் அறியும் பயிற்சி ஒன்றில் இணைந்திருந்தேன். அந்த பயிற்சி வகுப்பில் நம்முடைய வாழ்வில் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம், அடைய நினைப்பது என்ன? போன்று ஆராயும் போது தான் எதுவுமே நான் செய்து கொண்டிருந்த வேலையோடு எனக்கு பொருந்தவில்லை என்பதை உணர்ந்தேன்.
நான் ஐடி பணிக்கான நபரல்ல, நான் செய்ய வேண்டியதே வேறு நான் இப்போது செய்து கொண்டிருக்கும் பணி வேறு என்று புரிந்தது. திருப்தி, நிம்மதி இல்லை ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக நான் எதையோ செய்து கொண்டிருக்கிறேன் என்கிற தெளிவை அடைந்தேன்.
இந்தச் சூழலில் தான் கொரோனா அச்சுறுத்தலால் கண்முன்னே பலரும் நிச்சயமில்லாத வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் நிதர்சனமும் புரிந்தது. நிரந்தரமில்லா வாழ்வில் எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம், எனக்கான பணியோ பயணமோ ஐடி அல்ல என்பதை நான் அறிந்தேன். என்னுடைய கணவர் சாய்ராமும் ஐடி துறையில் இருக்கிறார், அவரே கூட இந்தப் பணி எனக்கு ஏற்றதல்ல, நான் அடைய இருக்கும் இலக்கு வேறு என்றார்.
குடும்ப பொருளாதாரத்தை நினைத்து தயங்காமல் என்னுடைய விருப்பம் என்னவோ அதை செய்வதற்கான நம்பிக்கையை கொடுத்தார். அந்த சமயத்தில் என்னிடம் ஏற்கனவே பொருட்களை வாங்கியவர்கள், என்னிடம் வாங்கிய பொருட்கள் அதே தரத்தில் கிடைக்கவில்லை என்று என்னை தொடர்பு கொண்டே இருந்தனர்.
வாடிக்கையாளர்கள் மற்றும் கணவர் கொடுத்த உறுதியின் விளைவாகவே கொரோனா காலத்தில் எல்லோருமே கடைகளை மூடிய நிலையில் நான் வீட்டை விட்டு வெளியே சென்று ஒரு கடையைத் திறந்தேன், என்கிறார் சரண்யா.
சென்னை நங்கநல்லூரில் என்னுடைய வீட்டில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து பொருட்களை டெலிவரி செய்யத் தொடங்கினேன். கொரோனா காலகட்டத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்ததால் பல சிக்கல்கள் இருந்தன, அதே சமயம் ஒரு தொழில்முனைவராவதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய கஷ்டங்களை சமாளிப்பதற்கும் கற்றுக்கொண்டேன்.
தொடர்ந்து தொழில்முனைவு சார்பான அனுபவங்களை வளர்த்துக்கொண்டேன், இந்த மிதமான வளர்ச்சி நிறைய கற்பதற்கான வாய்ப்பை தந்தது. சமூகவலைதள பக்கத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிய நேரத்தில் நம்முடைய பொருட்களுக்கு நாமே பிராண்டாக மாற வேண்டும் என்று துணிந்து செயல்படத் தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை என்னுடைய வளர்ச்சிக்கான மார்க்கெட்டிங் மீடியம் சமூக ஊடகங்களே.
ஏற்கனவே பொருட்களை வாங்கிப் பயன்படுத்தியவர்களின் பரிந்துரை மற்றும் தினை ஆர்கானிக்சின் முகநூல், இன்ஸ்டாகிராம், இணையதள பக்கத்தின் மூலமாக புதிய வாடிக்கையாளர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.
பொருட்களை மக்கள் பார்த்து வாங்கினால் இன்னும் அதிகம் பேரை சென்றடையலாம் என்று நினைத்து 2021ம் ஆண்டில் சேர்ந்து வைத்திருந்த சேமிப்பு அனைத்தையும் செலவு செய்து முதல் தளத்தில் ஒரு ஷோரூமை திறந்தேன். தினசரி தமிழ்நாடு, வெளிநாடு எனப் பொருட்கள் விற்பனை நடந்து கொண்டே இருந்ததால் என்னுடைய கடைக்கு நேரடியாக மக்கள் வராவிட்டாலும் அது எனக்கு ஒரு குறையாக தெரியவில்லை.
2022ம் ஆண்டில் கடையை இன்னும் விரிவுபடுத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கி வெற்றிகரமாக விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.
“தமிழகம் மட்டுமின்றி அயல்நாடுகளுக்கும் என்னுடைய பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது. மாதத்திற்கு 2000 குடும்பங்களிடம் ஆரோக்கியமான உணவை கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறேன். இது வரும் காலங்களில் அதிகரிக்கும்,” என்றே நம்புகிறேன்.
ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேடிச் சென்று நான் என்னுடைய குடும்பத்தினருக்கு எப்படி நல்ல பொருளை மட்டுமே தேர்வு செய்து கொடுப்பேனோ அவை தான் தினை ஆர்கானிக்ஸ் கடையில் இருக்கிறது. புதிதாக ஒரு ஆர்கானிக் பொருளை பயன்படுத்தும் போது முதலில் அதை என்னுடைய வீட்டில் உபயோகித்துப் பார்த்து அதன் பின்னரே விற்பனைக்கு வைக்கிறேன்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியத் தேடலில் அம்மாக்களால் கண்டுபிடிக்கப்பட்ட கடை என்பதால் இதனை ’அம்மாவின் கடை’ என்றே நான் அடையாளமிடுகிறேன். அதே போல நான் விற்பனைக்கு வைத்துள்ள பெரும்பாலான பொருட்கள் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக உருவாக்கிய சிறப்பு வாய்ந்த பொருட்கள்.
இப்படியாக வீடு துடைக்கும் liquidல் தொடங்கி நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் வரை, வேதியியல் ரசாயன கலப்புகள் இல்லாமல், பாரம்பரியமான ஆராக்கியம் தரும் பொருட்கள் தினை ஆர்கானிக்சில் உள்ளது. இதுவே என்னடைய வெற்றிக்கான ரகசியம்.
ஆர்கானிக் கடை பெரிதாக லாபம் தரக்கூடியது அல்ல, அப்படி லாபம் தரக்கூடியதாக இருந்தால் கடைகள் பெருகி இருக்கும். இந்தப் பொருட்களை அதிக நாட்கள் இருப்பு வைத்திருக்க முடியாது, ரசாயன கலப்பு இல்லாததால் எளிதில் பூச்சி பிடிக்க வாய்ப்பு இருக்கிறது, இதனால் கழிவும் ஏராளமாக இருக்கும்.
மற்றொன்று ஒரு பொருள் ஆர்கானிக் தான் என்பதை சான்றிதழ் வைத்து உறுதி செய்ய முடியாது. நம்பகத்தன்மை என்பதையே எங்களின் தாரக மந்திரமாக வைத்திருக்கிறோம். தினை ஆர்கானிக்கில் இருக்கும் அதிகமான பொருட்கள் அம்மாக்களால் தயாரிக்கப்படுகிறது. அம்மாவின் அன்பைப் போல இந்தப் பொருட்களிலும் கலப்படம் இல்லை.
ஆர்கானிக் பொருட்கள் விலை அதிகம் என்கிற ஒரு கட்டுக்கதைக்குப் பின்னாலேயே நாம் போய்க்கொண்டிருக்கிறோம். பணவீக்கத்தால் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும் மளிகைப் பொருட்கள் தினசரி ஏற்றத்தை காண்கின்றன. அவற்றை ஒப்பிடும் போது ஆர்கானிக் பொருட்கள் அதிக லாபமின்றி விவசாயிக்கு கணிசமான லாபம் மற்ற செலவுகள் என கூடுதல் விலையின்றியே இவை விற்பனை செய்யப்படுகின்றன.
ஆர்கானிக் பொருட்கள் சற்று கூடுதல் விலையாக இருந்தால் தான் என்ன என்று வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
”ஆரோக்கியத்திற்கு நீங்கள் இன்று போடும் முதலீடு, பிற்காலத்தில் வரக்கூடிய உடல் உபாதைகள், மருத்துவச் செலவுகளில் இருந்து தப்பிக்க உதவலாம். ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவதனால் உடனடியாக மாற்றம் இல்லாவிட்டாலும் நீண்ட கால நோக்கத்தில் பார்த்தால் நம்முடைய உடல் என்னும் சித்திரத்தை சிதையாமல் பாதுகாக்கலாம்,” என்று கூறுகிறார் சரண்யா.
அதிக லாபம் என்பதல்ல என்னுடைய இலக்கு இப்போது மாதத்திற்கு ரூ.5 லட்சம் பணப்பரிவர்த்தனை செய்கிறோம். ஒவ்வொரு மாதமும் சுமார் 20 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்று தோராயமாகச் சொல்லலாம். எதிர்காலத் திட்டமாக Franchisee கொடுக்கவும், கடைகளை அதிக எண்ணிக்கையில் திறக்கலாம் என்றும் இலக்கு வைத்திருக்கிறேன்.
என்னுடைய பொருளுக்கு நானே பிராண்டாக மாற வேண்டும் என்று mentor-கள் கொடுத்த அறிவுரையை ஏற்று சமூக ஊடகங்களில் தினம் ஒரு ரீல்ஸ் போடுவது என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வோடு, தினை ஆர்கானிக்ஸ் பொருட்கள் பற்றிய விளம்பரத்தையும் செய்தேன். அதன் மூலம் பலரின் அறிமுகம் கிடைத்து, என்னை இவ்வளவு பேர் பார்க்கிறார்கள், விருதுகளுக்கு பரிந்துரைக்கிறார்கள் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்திருக்கிறது.
கணவருடைய ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் அம்மாவிற்கு ஒரு பக்கம் வருத்தம். ஏனெனில் நான் பிறந்து வளர்ந்தது ஒரு சாதாரண குடும்பத்தில் அப்பா ரயில்வேயில் போர்டராகவும், ஏர்போர்ட்டில் லோட்மேனாகவும் வேலை செய்தார். அம்மாவும் கூட கிடைக்கும் வேலைகளை செய்து அவர்களுடைய வாழ்க்கை முழுவதையும் என்னுடைய படிப்பிற்காகவே செலவிட்டனர்.
கஷ்டப்பட்டு படித்தேன், படிப்பில் ஸ்மார்ட் ஸ்டூடன்ட் என்பதால் ஸ்கார்ஷிப் கிடைத்து என்ஜினியரிங் படித்தேன். என்ஜினியரிங் முடித்து ஐடி துறையில் பணிக்கு சேர்ந்தேன்.
அப்படி இருக்கையில் வேலையை விட்டு விட்டு இப்படி தொழில் செய்யத் தொடங்கியது என்னுடைய பெற்றோர் மனதில் வருத்தமாகவே இருந்தது.
எனினும், குடும்பத்தினரையும் குழந்தைகளையும் பராமரிக்க தினமும் எனக்காக வந்து துணையாக இருந்து உதவி செய்கிறார் அம்மா. இப்போது எனக்குக் கிடைக்கும் விருதுகள் அங்கீகாரங்களைப் பார்த்து மனம் மகிழ்ந்து நான் சரியான திசையில் தான் பயணிக்கிறேன் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கிறது. அதே போல உறவினர்களிடமும் நல்ல மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது இந்தத் தொழில்முனைவு.
ஒரு ஊழியராக நான் இருப்பதில் கிடைக்கும் மரியாதையை விட போராட்டங்கள் போட்டிகளுக்கு மத்தியில் என்னுடைய பிராண்டை நிறுத்தி சமூகத்தில் நானும் ஒரு குறிப்பிடத்தக்க பெண்மணியாக இன்று வளர்ந்து நிற்பதற்குக் காரணமே நான் எடுத்த தொழில்முனைவு என்கிற ஆயுதமே காரணம். விருதுகள் எனக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியதில்லை, ஆனால், அதிக அளவில் ஆரோக்கியமான உணவை தேடி வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை நானே கண்கூடாக பார்க்கும் போது மனதில் ஒரு அளவிட முடியாத மகிழ்ச்சி, நிம்மதி, திருப்தி கிடைக்கிறது என்று பெருமைப்படுகிறார் சரண்யா ராஜேந்திரன்.
ArticlesTips play on the web baccarat | Ladbrokes casino codeLegal aspects of online casinosThe way…
ArticlesMegascratch casino | Bet เข้าสู่ระบบภายในประเทศไนจีเรีย เช็คอิน 1xBet NG บนเว็บวันนี้Gambling enterprises for Us ParticipantsFirst Regulations Of…
ContentTechnical at the rear of totally free casino games | casino Stan JamesThe top Split…
ArticlesRebellion casino casino bonuses - Baccarat Alive Casinos – Play for A real incomeReal time…
ArticlesGame guidance | Jackpotpe ios casinoTop Video gameMultiple Diamond Position Review - Discover It IGT…
ArticlesKnights and Maidens online: Are all roulette dining tables a similar?Body weight Workplace Gambling establishmentNetEnt…