ரூ.100 கோடி வர்த்தகம்: ஐஐடி-யில் படித்துவிட்டு சலவைத் துறையில் சாதித்த அருனாப்!
மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவர் அருனாப் சின்ஹா தனது UClean நிறுவனம் மூலம் இன்று 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியாவின் தன்னிகரற்ற சலவைத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்.
ரூ.100 கோடி வர்த்தகம்: ஐஐடி-யில் படித்துவிட்டு சலவைத் துறையில் சாதித்த அருனாப்!
இந்தியாவில் இன்றும் சலவைத் தொழில் என்பது பெரும்பாலும் அமைப்புசாரா தொழிலாகவே உள்ளது. சலவைத் தொழிலாளர்கள் பலரும் தங்கள் பகுதி வீட்டு வாசலில் இருந்து துணிகளை சேகரித்து கையில் துவைத்து, பிறகு இஸ்திரி செய்து வாடிக்கையாளருக்குத் திருப்பித் தருகிறார்கள். பலரும் தலைமுறை தலைமுறையாக சவலைத் தொழிலை செய்வதும் உண்டு.
இப்படியான சலவைத் தொழிலை பல கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகமாக மாற்ற முடியுமா?
‘முடியும்’ என்று சாதித்துக் காட்டியிருக்க்கிறார் ஐஐடியில் படித்தவரான அருனாப் சின்ஹா. அவரது புதிய பாதை பற்றியும், அவர் சலவைத் தொழிலை பெரும் வர்த்தமாக மாற்றிது குறித்தும் பார்ப்போம்.
மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவர் சின்ஹா, அக்டோபர் 2016ல் டெல்லியில் ‘யூ-க்ளீன்’ (UClean) நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று இது 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியாவின் மிகப் பெரிய சலவைத் தொடர் சங்கிலி நிறுவனமாக வியாபித்துள்ளது.
Uclean
UClean நிறுவனர் அருனாப் சின்ஹா
ஜாம்ஷெட்பூரில் ஒரு சராசரி கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அருனாப் சின்ஹா. இவரது தந்தை ஓர் ஆசிரியர்; தாயார் இல்லத்தரசி. மும்பை ஐஐடி-யில் உலோகவியல் மற்றும் மெடீரியல்ஸ் சயன்ஸ் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அவர் 2008ல் புனேவில் உள்ள ஓர் அமெரிக்க நிறுவன அலுவலகத்தில் அனலிடிக்கல் அசோசியேட் பொறுப்பில் பணிபுரிந்தார். பின்னர், ஒரு லாப நோக்கற்ற நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த நிறுவனம் அடிமட்ட அளவிலான விவசாயிகளுடன் பணிபுரிந்து, அவர்களை பல்வேறு பிராண்டுகளுடன் இணைக்கும் நிறுவனமாகும்.
மும்பை ஐஐடி to ஸ்டார்ட் அப் நாயகர்!
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நாட்களில் அருனாப் தனது ஸ்டார்ட் அப் தொழிலுக்கான பாடங்களைக் கற்கத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 2011-ஆம் ஆண்டில் அவர் இந்தியாவில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு உதவுவதற்காக வணிக ஆலோசனை நிறுவனமான ஃபிராங்க்ளோபலை நிறுவினார்.
ஃபிரான்சைஸ் இந்தியாவிற்கு தனது வணிகத்தை விற்ற பிறகு, அருனாப் 2015ல் விருந்தோம்பல் துறையில் (Hospitality sector) களம் இறங்கினார். ட்ரீபோ ஹோட்டல்ஸில் வட இந்தியா பகுதியின் இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். அங்கு பணிபுரியும் போது விருந்தினர்களின் மிகப் பெரிய புகார்கள் என்னவெனில், அழுக்கு உடைகள், படுக்கையில் கறை மற்றும் சலவை தொடர்பான பிற பிரச்சனைகள் பற்றி அவர் கவனித்தார்.
அவர் அப்போதுதான் பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்தார். சலவைத் துறை எவ்வளவு பெரிய துறை என்பதையும், அது ஒழுங்கமைக்கப்படவில்லை என்பதையும், இந்தத் துறையில் தொழில்முறை நிறுவனர்கள் யாரும் இல்லை என்பதையும் அருனாப் உணர்ந்தார்.
“கிட்டத்தட்ட 60 சதவிகித புகார்கள் சலவை பற்றி எங்களுக்கு வந்தது. நாங்கள் விரிவடைந்து வருவதால், இந்தியா முழுவதும் எங்களுக்கு சேவை வழங்கக் கூடிய சலவைத் தொழிலாளார்களைத் தேடிக்கொண்டிருந்தேன். என்னால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். அப்போது முடிவெடுத்தேன்… என் வேலையை விட்டுவிட்டேன்,” என்று இந்தியா டைம்ஸிடம் விவரித்துள்ளார் அருனாப்.
UClean வளர்ந்தது எப்படி?
சலவைத் தொழில் குறித்த சந்தை மற்றும் தயாரிப்பு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இந்தத் துறை பற்றி ஆழமான சில விஷயங்களை அறிந்தார். இதனையடுத்து, அருனாப் ஜனவரி 2017-இல் டெல்லி NCR-இல் UClean-ஐ தொடங்கினார்.
Uclean
“ஆரம்பத்தில் நாங்கள் வணிகத்தை வளர்த்தெடுத்தலிலும், சவால்களைப் புரிந்துகொண்டு தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தினோம். நாங்கள் எங்கள் சொந்த இயங்குதளம் மற்றும் தொழில்நுட்ப ஆதாரத்திற்காக மென்பொருளையும் உருவாக்கினோம். 2017ம் ஆண்டின் நடுப்பகுதியில், இது ஒரு உரிமையாளர் மாதிரியின் (franchise model) மூலம் செய்யக்கூடிய வணிகம் என்று நான் உறுதியாக நம்பினேன்,” என்றார் சின்ஹா .
2017-ஆம் ஆண்டின் இறுதியில், UClean ஹைதராபாத் மற்றும் புனேவில் பணிபுரியும் உரிமையாளர்களுடன் தொடங்கியது. இது இப்போது நாடு முழுவதும் 104 நகரங்களில் 350க்கும் மேற்பட்ட கடைகளாக வளர்ந்துள்ளது.
UClean ஏற்கெனவே வங்கதேசம் மற்றும் நேபாளத்திற்கும் விரிவடைந்துள்ளது. மேலும், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இன்னும் சில நாடுகளில் அதன் இருப்பை உருவாக்க உள்ளது.
“நாங்கள் குறுந்தொழில் முனைவோர்களுடன் இணைந்து அவர்களின் UClean ஸ்டோர்களைத் தொடங்குவதற்கு உதவுகிறோம். இந்த உரிமையாளர்களுக்கு மனிதவளத்தை நாங்கள் வழங்குகிறோம். அவர்களுக்குப் பயிற்சியளிக்கிறோம். பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் சோப்பு, டிடர்ஜென்ட்களை நாங்களே வாங்கி வழங்குகிறோம். இதனால் ஒவ்வொரு UClean-லும் ஒரே மாதிரியான தரமும் நடைமுறையும் உள்ளது.”
UClean தனது வருவாயை உரிமையாளர் கட்டணம் மற்றும் மாதாந்திர ராயல்டி மூலம் சம்பாதிக்கிறது. ராயல்டி என்பது உரிமையாளர் சம்பாதிப்பதில் 7 சதவீத பங்கு ஆகும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல ஸ்டார்ட்அப்களுக்கு சவாலானதான இருந்தது. மேலும், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் வணிகத்தை விட்டு வெளியேறினர். ஆனால், இந்தக் காலக்கட்டமே UClean நிறுவனத்திற்கு மறைமுக ஆசீர்வாதமாக இருந்தது.
“இதுபோன்ற சவாலான காலங்கள் இருந்தபோதிலும், எங்கள் வணிகத்தின் தன்மை காரணமாக, கோவிட் 19 சமயத்தில் நாங்கள் இழந்ததை விட அதிகமான உரிமையாளர்களைச் சேர்த்துள்ளோம். மக்களிடம் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து அதிக விழிப்புணர்வு இருந்ததும் எங்களுக்கு வளர உதவியது,” என்கிறார் அருனாப்.
கிலோ கணக்கில் சலவை:
அருனாபை பொறுத்தவரை, UClean தனித்து நிற்பதற்குக் காரணமே சலவைத் துணிகளை கிலோ கணக்கில் சலவை செய்வதே.
Uclean
“எங்கள் முக்கிய சலுகையானது கிலோ கணக்கில் சலவை செய்வதாகும். இதில் நீங்கள் எங்கள் இணையதளம், ஆப் அல்லது கால் சென்டர் மூலம் ஆர்டர் செய்தால், எங்கள் அருகிலுள்ள உரிமையாளரின் பிரதிநிதி உங்கள் வீட்டு வாசலை அடைந்து, டிஜிட்டல் அளவில் துணிகளை எடைபோட்டு கிலோவிற்கு கட்டணம் வசூலிப்பார். துவைத்த துணிகள் வாடிக்கையாளருக்கு 24 மணி நேரத்திற்குள் திருப்பித் தரப்படும்,” என்கிறார் சின்ஹா.
நீரை வீணாக்குதலும் மாசு பிரச்சனையும்
வணிக ரீதியான சலவைத் தொழில் எப்போதும் தண்ணீர் அதிகம் தேவைப்படும் வணிகமாக இருந்து வருகிறது. மேலும், அதிக அளவு இரசாயனங்களைப் பயன்படுத்துவதால் ரசாயனங்கள் நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
“உலகின் சிறந்த தொழில்நுட்பச் சலவை இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் UClean நீர் நுகர்வையும் குறைக்க முடிந்தது. மேலும், நொதி அடிப்படையிலான சோப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், அவை எந்தச் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை,” என்று உறுதிபடச் சொல்கிறார் அருனாப்.
“சராசரி வீட்டு வாஷிங் மெஷின் ஒரு கிலோ துணிகளை சுத்தம் செய்ய 14 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. மாறாக நாங்கள் அதே அளவுத் துணிக்கு 6 லிட்டர் தண்ணீரையே பயன்படுத்துகிறோம். உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நொதி அடிப்படையிலான டிடர்ஜென்ட்டைப் பயன்படுத்துகிறோம். அது தண்ணீரில் மூன்று மணி நேரத்தில் சிதைந்து கரைகிறது. அதனால், தண்ணீரோ சுற்றுச்சூழலோ மாசுபடாது,” என்றார்.
கூடுதலாக, UClean-ன் அனைத்து கடைகளும் மார்ச் 2023-இன் இறுதிக்குள் பிளாஸ்டிக் இல்லாததாக மாறிவிட்டது. பேக்கேஜிங் சோளம் சார்ந்த பேக்கேஜிங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது, மேலும், பிளாஸ்டிக் கூடைகள் உலோக கூடைகளாக மாற்றப்பட்டுள்ளன.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…