இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்களை வாட்டி வதைக்கும் குடும்ப வன்முறையிலும், கணவனின் குடியாலும் சீரழிந்த லலிதா தேவி என்ற சாமானிய பெண்ணின் வாழ்க்கை, தற்போது பல பெண்களுக்கும் முன்மாதிரியானதாக மாறியுள்ளது.
பீகாரில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த லலிதா தேவி, குடிகார கணவனால் வறுமையை மட்டுமின்றி சொல்ல முடியாத துயரங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
“என்றாவது ஒருநாள் கணவர் திருந்திவிடுவார்,” என எதிர்பார்த்து காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய பெண்களைப் போலவே லலிதா தேவியும் காத்துக்கொண்டிருந்தார்.
ஆனால், பொறுத்து, பொறுத்து பொறுமை இழந்த லலிதா தேவி தனது கணவனை விட்டுப் பிரிய முடிவெடுத்தார்.
2005ம் ஆண்டு ஒரு கையில் மூன்று பிள்ளைகளையும், மறுகையில் சில மாற்று உடைகள் அடங்கிய பையையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். நசிர்கஞ்ச் செல்ல ரயில் ஏறிய, மறுகணமே பிள்ளைகள் பசியால் ஆழ ஆரம்பித்தனர். கையில் பணமோ, உணவோ இல்லாமல் தவித்த லலிதா தேவி, வேறு வழி இல்லாமல் அடுத்த நிறுத்தமான சமஸ்திபூரில் இறங்கினார்.
பிள்ளைகள் பசியால் வாடுவதை பார்க்க கசிக்காமல், கண்கலங்கியபடியே ரயில் நிலையத்தில் அமர்ந்து புலம்ப ஆரம்பித்தார். அங்கு துணி விற்றுக்கொண்டிருந்த பெண்மணி, நாள் முழுவதும் லலிதா தேவி ரயில் நிலையத்தில் அமர்ந்திருப்பதை கவனித்தார். லலிதா தேவியின் கதையை அறிந்து கொண்ட அந்த பெண்மணி, சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள உஜியர்பூர் தொகுதிக்கு உட்பட்ட சாரி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்.
அந்த பெண்மணியுடன் இணைந்து லலிதா தேவி ரயில் நிலையத்தில் துணிகளை விற்க ஆரம்பித்தார்.
“குழந்தைகள் வளர்ந்த பிறகு, குடும்பத்தை நடத்துவதற்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. அதன்பிறகு, அருகில் உள்ள துணி தையல் மையத்தில் ரூ.1,500 மாத சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்,” என்கிறார்.
தையல் கடையில் வேலைக்குச் சேர்ந்தது லலிதா தேவி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சிறிது, சிறிதாக சேகரித்து வைத்த 6000 ரூபாய் முதலீட்டையும், தையல் தொழிலில் கற்ற அனுபவத்தையும் வைத்து, துணி பைகள் தைக்கக்கூடிய ‘ஜோலாஸ்’ என்ற தனது சொந்த கடையை 2017ம் ஆண்டு தொடங்கினார்.
தற்போது சமஸ்திபூர் நகரில் உள்ள பஹதூர்பூரில் தனது மகனின் பெயரில் ‘அவினாஷ் ஜோலா உத்யோக்’ என்ற கடையை நடத்தி வருகிறார். ஒரே ஒரு தையல் இயந்திரத்தை நம்பி தொழிலை ஆரம்பித்த லலிதா தேவி இன்று 4 பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்துள்ளார்.
கடந்த ஆண்டு, பீகாரில் உள்ள பெகுசராய், ககாரியா, முசாபர்பூர், சமஸ்திபூர் மற்றும் தர்பங்கா மாவட்டங்கள் மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பைகளை தயாரிக்க லலிதாவுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.
“நாங்கள் ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர்களையும் பெறுகிறோம். பிளாஸ்டிக் பைகளுக்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டாலும், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக நாங்கள் அவற்றை ஊக்குவிப்பதில்லை. துணியால் ஆன பைகளை தயாரிக்க மட்டுமே ஒப்புக்கொள்கிறோம்” என்கிறார் லலிதா.
25 வயது மகன்களான நிதிஷ் குமார், அவினாஷ் குமார் இருவரும் அம்மாவுக்கு துணையாக தொழிலில் உதவி புரிந்து வருகின்றனர். மகள் குஞ்சன் சமஸ்திபூர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தற்போது டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
“தனியாக குடும்பத்தை நடத்துவதற்கு கடினமாக உழைத்த என் அம்மாவின் கனவுகளை நிறைவேற்ற விரும்புகிறேன். எனது இலக்கை அடைய நான் எந்தக் கல்லையும் விடமாட்டேன். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) நடத்தும் நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றிற்குத் தயாராகும் போது எனது படிப்பிற்கு 100% கொடுப்பேன், ”என்று குஞ்சன் தனது குடும்பத்தைச் சந்திக்க நகரத்திற்குச் சென்றார்.
கடந்த ஐந்தாண்டுகளில் லலிதாவின் வங்கிக் கணக்குகளில் நடந்த பரிவர்த்தனைகளை மட்டுமே அடிப்படையாக வைத்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று தானாக முன்வந்து அவரது தொழிலை விரிவுப்படுத்த 2 லட்சம் ரூபாயை கடனாக வழங்கியுள்ளது.
ஆரம்பத்தில் கணவன் இல்லாமல் தனியாக வசித்ததால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டதாக கூறும் லலிதா தேவி, தற்போது தன்னை பல பெண்களும் முன்மாதிரியாக நினைப்பதாக பெருமையுடன் தெரிவிக்கிறார்.
'தன்னலமற்ற சேவை' - உயரிய 'ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது வென்ற கோவா செவிலியர் நீலிமா! 37 ஆண்டுகளுக்கும்…
எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்! சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில்…
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…