நீங்கள் கூட்டம் மிக்க ரெஸ்டாரண்ட் அல்லது மாலில் தீபிந்தர் கோயலை கவனிக்காமல் போகலாம். ஏனெனில், அவர் எல்லோரையும் போலவே சாதரணமாக இருப்பவர். ஆனால், அவருடன் பேசத்துவங்கியதுமே, அவரைப்பற்றி கொஞ்சம் கூடுதலாக தெரிந்து கொள்வீர்கள்.
Zomato நிறுவனத்தை உருவாக்கியவர், மற்ற தொழில்முனைவரை போல் பெரிய கதையை கொண்டிருக்கவில்லை. அவர் பெரிய பின்னணியில் இருந்தோ பெரும் நகரில் இருந்தோ வரவில்லை. தனக்கு முன்னாள் உள்ள எல்லாவற்றையும் போராடியப்டி, பல இரவுகள் திரைக்கு முன் அமர்ந்த படி, வியர்வையால், இரத்தத்தால் தனது நிறுவனத்தை உண்டாக்கினார் தீபிந்த்ர் கோயல்.
இவரது வெற்றிக்கதை 2008ல், உணவுகளை பட்டியலிட்டு, ரெஸ்டாரண்ட்களை எளிதாக கண்டறிய வழி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இருந்து துவங்குகிறது. அந்நிறுவனம் தான் இன்று எல்லோரும் அறிந்த, விரும்பும் ஆலமரமாக, ஜோமேட்டோவாக உருவாகியிருக்கிறது.
இந்தியாவில் உணவு கலாச்சாரத்தை மாற்றி அமைத்த அவரது நிறுவனம் போலவே அவரது கதையும் பெரிது தான். ஜொமேட்டோவை மேம்படுத்துவதில் தினமும் தீவிர கவனம் செலுத்தும் தீபீந்தர், இந்தியாவில் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தையும் வலுவாக்க முயன்று வருகிறார்.
அவர் இதுவரை, செப்கார்ட் மற்றும் அன்அகாடமி உள்ளிட்ட 16 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார். 2023 மார்ச் வரை அவர் அர்பன் கம்பெனி இயக்குனர் குழுவில் இருந்தார். எனினும், 2022 ஆகஸ்ட்டில் அவர் கையகப்படுத்திய Blinkit நிறுவனம், வீட்டு சேவைப் பிரிவில் நுழைந்ததும் அவர், புதிய நிறுவனத்தில் கவனம் செலுத்த அர்பன் கம்பெனியில் இருந்து விலகினார்.
பெருந்தொற்று காலத்தில் அவர் டெலிவரி பங்குதாரர்கள் பிள்ளைகளின் கல்விக்கு உதவுவதற்காக ஜொமேட்டோ பியூச்சர் பவுண்டேஷனுக்கு ரூ.700 கோடி மதிப்பிலான பங்குகளை நன்கொடையாக அளித்தார்.
அண்மையில், ஜொமேட்டோ மட்டும் அல்லாமல் அனைத்து சிறு வேலை நிறுவன ஊழியர்களுக்குமான, ரெஸ்ட் பாயிண்ட் உள்கட்டமைப்பு திட்டத்தை அறிவித்தார். தீபிந்தர் பல வேலைகளை செய்பவராக இருக்கிறார்.
ஆனால், இப்போது அறியப்படுவது போல தொலைநோக்கு மிக்க தீபிந்தராக உருவாவதற்கு முன், ’தீபி’ என அன்போடு பெரும்பாலானோரால் அழைக்கபபட்ட அவர், வாழ்க்கையின் பெரும்பகுதி அலட்சியப்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார். பள்ளியில் அவர் சிறந்த மாணவராக இல்லை. ஆசிரியர்களின் நேசிப்பிற்கு உரியவராக அவர் இல்லை. சக மாணவர்கள் அவரை பெரிதாக மதிக்கவில்லை.
யுவர்ஸ்டோரிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஜொமேட்டோ நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. தீபிந்தர் கோயல், தன்னை உருவாக்கிய ஆரம்ப நாட்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். ஆக, இப்போது தீபி பற்றி நாம் பேசலாம்.
பஞ்சாபில் உள்ள மக்ஸ்டர் எனும் சிற்றூரில் பிறந்த தீபிந்தர், பள்ளியில் சராசரிக்கும் குறைவான மாணவராக இருந்தார். யாரும் அவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. தீபிந்தரின் கல்வி நிலை எப்படி இருந்தது என்றால் 5வது முடிந்த போது அவரது அப்பா பள்ளி முதல்வரிடம் தனது மகனை அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறச்செய்ய வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு இருந்தது.
தந்தையின் கோரிக்கையால் அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டாலும், 8வது வரை அவரது நிலை மாறவில்லை. முதல் காலாண்டு தேர்வுக்கு தீபிந்தர் சரியாக தயாராகவில்லை. ஆனால், தேர்வுக்கு வந்த ஆசிரியர் இந்த பையன் பெயிலாகிவிடுவான் என அறிந்து உதவ முன்வந்த போது அவரது அதிர்ஷ்டம் மாறியது. இந்த சம்பவம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
“தேர்வு முடிவு வந்த போது முதல் மூன்று இடத்தில் நான் இருந்தேன்…” என்கிறார். ஆக அவர் இன்னமும் சோம்பேரி அல்ல. இது அவரைப்பற்றிய எண்ணத்தையும் மாற்றியது. சக மாணவர்கள் அவரை நாடி வந்தனர்.
ஆனால், விதியின் விளையாட்டால் அந்த ஆசிரியர் மாற்றலாகி சென்றுவிட அடுத்த தேர்வில் அவருக்கு உதவ யாரும் இல்லை. கேள்வித்தாள் கசிவு போன்றவற்றை முயற்சித்து பார்த்த பின்,
“நானே தேர்வுக்கு படிக்க வேண்டியிருந்தது, வேறு வாய்ப்பில்லை,” என்கிறார். ஒரே நாள் இரவு படித்து வகுப்பில் ஐந்தாவது இடம் பிடித்தார்.
இப்போது பள்ளியில் முன்னிலை மாணவராகி விட்டதால் அடுத்த கட்டமாக மருத்துவமா அல்லது ஐஐடியா என தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஐஐடி வாய்ப்பை தேர்வு செய்து அதற்காக தயாராக சண்டிகரில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதல் முறையாக தனது சிற்றூர் கூட்டில் இருந்து பெரிய நகருக்கு வந்திருந்தார்.
வாழ்நாள் முழுவதும் இதற்காகத் தயாராகி வந்த மாணவர்களைப் பார்த்த போது,
“மாநிலத்தின் புத்திசாலி மாணவர்கள் மத்தியில் இருந்தது என்னை சோர்வுக்குள்ளாக்கியது,” என்கிறார். தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை அவருக்கு திரும்பி வந்தது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் பள்ளியில் சிறந்த மாணவராக இருக்கவில்லை. அவர் சோம்பேரியாக கருதப்பட்டர். மனப்பாட கற்றலை அவர் விரும்பாததே பிரச்சனையாக அமைந்தது. ஐன்ஸ்டீன் உதாரணம் இங்கு சுட்டிக்காட்டபடக் காரணம், அதே போன்ற தன்மைக்காக அல்ல, பலரும் கவனிக்கத்தவறும் போது அறிவு புறக்கணிக்கப்படுகிறது என்பதை உணர்த்த தான்.
தீபிந்தருக்கும் இதே போல நிகழ்ந்தது. சண்டிகரில் இருந்த போது ஐஐடி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாது எனத்தெரிந்தது. பிளின்கிட் நிறுவனர் அல்பீந்தர் தின்சா அவரது சகாவாக இருந்தார். தீபி பள்ளித்தேர்விலாவது வெற்று பெறட்டும் என அவர் பாடங்களை கற்றுக்கொடுத்தார்.
பள்ளித்தேர்வுக்கு பின் ஐஐடி தேர்வுக்கு இரண்டு மாதங்கள் இருந்தது.
“அடுத்த ஆண்டு தேர்வு எழுதலாம் என இருந்ததால் கவலைப்படவில்லை. இயற்பியல் புத்தகத்தை எடுத்து படிக்கத்துவங்கினேன். இது எனக்கு பிடித்த பாடம். சிறிது நேரத்திலேயே எல்லாவற்றையும் முடித்துவிட்டேன்,” என்கிறார்.
இதை நண்பர்களிடம் தெரிவித்த போது அவர்களால் நம்பமுடியவில்லை.
“இது சாத்தியமே இல்லை என்றனர். ஆனால் நான் செய்து முடித்திருந்தேன். எப்படி முடியாமல் போகும்?”
தேர்வு வந்த போது மற்ற மாணவர்கள் பதற்றமாக இருந்தாலும் அவர் அமைதியாக இருந்தார். இது முன்னோட்டத் தேர்வு தான் என்றாலும் அவர் எளிதாக வெற்றி பெற்றார். ஆக மற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதை அவர் 2 மாதங்களில் முடித்துவிட்டார்.
தீபிந்தர் தில்லி ஐஐடியில் படிக்கத்துவங்கிய போது எல்லாம் கடினமாக இருந்தது.
“நான் மீண்டும் சோர்வுக்குள்ளானேன்…” என்கிறார்.
அவர் இப்போது மாநிலத்தின் சிறந்த மாணவர்களுடன் மட்டும் அல்ல நாட்டின் சிறந்த மாணவர்களுடன் இருந்தார். அவரது நிலையில் இருந்து இது பெரிய வளர்ச்சி தான். போட்டியில் ஈடுபட விரும்பாததால் அவர் ஒரு ஸ்டார்ட் அப்பை உருவாக்கினார்.
“நானும் போட்டியில் ஈடுபட விரும்பாததால் ஒரு ஸ்டார்ட் அப்பை உருவாக்கினேன்,” என்கிறார்.
அவர் உருவாக்க மட்டுமே விரும்பினார்.
“என்னைப்பொருத்தவரை, நான் யாருடனும் ஒப்பிடப்படாமல் எனக்கான சொந்த பாதையை உருவாக்குவதாக இது அமைந்தது. ஒப்பீடு எதிர்மறையானது என நினைக்கிறேன்,” என்கிறார்.
“தீபிந்தர் திமிர் பிடித்தவர். அவர் மற்றவர்களுடன் பேச விரும்புவதில்லை, இப்படி என்னைப்பற்றி சொல்கின்றனர்…” என்கிறார் அவர் சிரித்த படி. அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு டெட் உரைக்கு ஏற்றது எனக் கூறலாம். இந்த வாய்ப்பு இன்னமும் அவருக்கு அளிக்கப்படவில்லை. அவர் பொதுவெளியில் அதிகம் தோன்றியதில்லை. திக்குவாய் தான் அதற்குக் காரணம் என்கிறார்.
இந்த பிரச்சனை தற்போது ஓரளவு சரியாகிவிட்டது என்றாலும் சில வார்த்தைகள் தடுமாற வைக்கின்றன, என்கிறார். மற்றவர்களுடன் பேச நிறைய கலோரிகள் தேவைப்படுகின்றன என்கிறார். எனவே, அவர் பேட்டி கொடுக்கவும், பொது வெளியில் பேசுவதையும் தவிர்த்து வருகிறார். அவர் செயல்பட்டு மட்டும் கொண்டிருக்கிறார்.
சராசரிக்கும் குறைவான தன்மையோடு, பேசுவதற்கும் தடுமாறியதால் சிறு வயதில் அவரது நம்பிக்கை பல அடிகளை வாங்கியிருக்க வேண்டும். ஆனால், நேர்மறையான அணுகுமுறையே அவரது முன்னேற்றத்திற்கு உதவியுள்ளது.
“எனக்கு எல்லாம் தலைகீழாக இருக்கிறது, என்கிறார். போராட்டங்கள், விமர்சனங்கள், ஜொமேட்டோ நஷ்டம் பற்றி கேட்டபோது இவ்வாறு சொல்கிறார். ’நான் இதைச் செய்வேன் என எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் நான் செய்துள்ளேன். எனவே, எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஏற்கனவே இருந்ததை விட மேம்பட்டது தான்,” என்கிறார்.
திரும்பிப் பார்ப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இவ்வளவு ஏன் அவர் தன்னிடம் கூட எதிர்பார்ப்பு கொண்டிருக்கவில்லை. எனில் அவரால் எப்படி சார்திக்க முடிந்தது?
தோல்வி அடைய அவர் விரும்பாததால் ஜொமேட்டோ அது உருவான நிலையில் உண்டானது என்கிறார். தோல்வி அவருக்கான வாய்ப்பு அல்ல. தன்னைப்பற்றி குறைவாக நினைத்த எல்லோரையும் தவறு என நிருபித்திருக்கிறார். இதை தொடர்ந்து செய்து வருகிறார்.
“நான் முயற்சிக்கும் ஒரே விஷயம், தாக்குப்பிடித்து நிற்பது தான். இதற்காக தான் போராடுகிறேன். தாக்குப்பிடித்துவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம்,” என்கிறார். அவர் தினமும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறார்.
கட்டுரை: YS டீம் | தமிழில்: சைபர் சிம்மன்
கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி! உங்கள் லட்சியத்தை நோக்கி…
வீட்டு சமையலறையில் தொடங்கி இன்று இந்தியா முழுதும் Tvishi சரும பராமரிப்பு ப்ராண்ட் - மதுரை தாயின் பிசினஸ் முயற்சி!…
'மியூசிக் ஆன் வீல்ஸ்' - ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுக்கும் சகோதரிகள்... 'சவுண்ட் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனும்…
கோவை ஸ்டார்ட்-அப் Ticket9-இல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிதி முதலீடு! நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனம் டிக்கெட்9 (Ticket9…
Byju's வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்! பைஜூஸ் நிறுவனம் 30 கோடி…
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா! "எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன்…