தொழில்முனைவோர் தங்களுக்கான வெற்றி எண்ணங்களை கண்டறிந்த தருணத்தை விவரிக்கும் தொடராக திருப்பு முனை அமைகிறது. இந்த வாரம், கோவையைச்சேர்ந்த சரும நல மற்றும் கூந்தல் நல பிராண்டான வில்வா (Vilvah) கதையை பார்க்கலாம்.
அழகுப் பொருட்களூக்கான சந்தையில் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், அவற்றி சில கோடிகளில் வருவாய் கொண்டவை, இந்திய சருமத்திற்கு ஏற்ற ஆர்கானின் பொருட்களை அளிப்பதாகக் கூறினாலும், அரிதாகவே அந்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்றன.
இருப்பினும், கோவையைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் இயற்கை மூலப்பொருட்களை மட்டுமே கொண்ட சரும நல அழகு சாதன பொருட்களை தயாரித்து வருகிறது.
2017ல் துவங்கப்பட்ட Vilvah Store சோப், கூந்தல் நலப் பொருட்கள், கொசு விரட்டி, பாடி பட்டர், யோகர்ட், மாய்ஸ்சரைசர் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. அண்மையில் நிறுவனம், சன்ஸ்கிரீனை அறிமுகம் செய்தது.
ஆரம்ப நாட்கள்
கோவையைச் சேர்ந்த நிறுவனர் கிருத்திகா குமரன், இந்த பிராண்டை துவக்க திட்டமிட்டிருக்கவில்லை. மாறாக, தனது மகளின் தோலழற்சி (eczema) பிரச்சனைக்கான சோப்பை தேடிக்கொண்டிருந்தார்.
சருமப் பிரச்சனை தொடர்பான நோயால் அவர் தனது தாயையும் இழந்திருந்தார். இந்த பிராண்ட் ஆர்கானிக்காக வளர்ச்சி பெற்றதாக அதன் நிறுவனர் கூறுகிறார். முதலில் தனது சமையலறையில் உள்ள பொருட்கள் கொண்டு சோதனை செய்தவர், அந்த தயாரிப்பை குடும்பத்தினர் பயன்படுத்த செய்தார்.
மற்றவர்களிடம் இருந்தும் அந்த பொருட்கள் விற்பனைக்கு தேவை என கோரிக்கை வந்த போது திருப்பு முனையாக உணர்ந்தார். சந்தையில் இயற்கையான பொருட்களுக்கான இடைவெளி இருப்பதை உணர்ந்ததாக கிருத்திகா கூறுகிறார்.
“ஒரு பிராண்ட் போல உருவாக்கப்பட்டது அல்ல இந்த பிராண்ட். நாங்கள் துவங்கிய போது இந்த எண்ணம் கொண்டிருக்கவில்லை. இதை என் மகளுக்காக செய்ய விரும்பினேன், அது தானாக ஒரு பிராண்டாக வளர்ந்தது,” என்கிறார் கிருத்திகா.
2017ல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கமாக துவங்கிய நிறுவனம், தற்போது மூன்று கடைகள், இணையதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களை கொண்டுள்ளது. பின்னர், கணவர் குமரனும் இதில் இணைந்து கொண்டார். ஆட்டுப் பால் பயன்படுத்தியது இந்த பிராண்டுக்கு பெரும் மாற்றமாக அமைந்தது.
“விவசாயப் பின்னணியில் இருந்து வந்ததால், நான் ஆட்டு பால் கொண்டு பொருட்களை தயாரித்தேன். ஏனெனில், அவை மிகுந்த மாய்ஸ்சரைசிங் தன்மை கொண்டவை. ஒரு பிராண்டாக பால் சார்ந்த பொருட்களில் கவனம் செலுத்தினோம். இப்போது பால் சார்ந்த பல வகை சரும நல மற்றும் கூந்தல் நல பொருட்கள் கொண்டுள்ளோம்,” என்கிறார் கிருத்திகா.
தடைகள்
ஒரு அணியை உருவாக்குவது மற்றும் சரியான மூலப்பொருட்கள் தேர்வு செய்வதுதான் சவாலாக இருந்தது என்கிறார்.
“சரியான பார்முலேஷனை பெற இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்துவது சவாலாக இருந்தது என்கிறார். எனினும் வாடிக்கையாளர்கள் கருத்து பொருட்களை மேம்படுத்த உதவியது, என்றார் கிருத்திகா.
“கருத்துகளைக் கேட்டறிகிறோம். வாடிக்கையாளர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அதை கொண்டு எங்கள் அணி செயல்படுகிறது,” என்கிறார்.
மேலும், சமூக ஊடக கருத்துகளுக்கும் நிறுவனர் நேரடியாக பதில் அளிக்கிறார். அழகுக்கலை விஞ்ஞானியை பணிக்கு அமர்த்தி ஆய்வில் முதலீடு செய்துள்ளனர். 23ம் நிதியாண்டில் ரூ.30 கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆங்கிலத்தில்: ஐஸ்வர்யா லட்சுமி | தமிழில்: சைபர் சிம்மன்