Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

357 கோடி ரூபாய் மதிப்பு பிராண்ட் – இயற்கை விளைச்சலை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ‘ஆர்கானிக் இந்தியா’

மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 1997-ம் ஆண்டு லக்னோவில் தொடங்கப்பட்ட `ஆர்கானிக் இந்தியா’ நிறுவனம் 357 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று இதுவரை நம் வாழ்க்கையில் நாம் முன்னுரிமை அளித்து வந்த அத்தனை விஷயங்களையும் மாற்றிவிட்டது. இந்தப் பட்டியலில் ஆரோக்கியம் முதலிடம் பிடித்துவிட்டது. குறிப்பாக இயற்கை விவசாயப் பொருட்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த ஆர்கானிக் என்கிற வார்த்தை பாரத் மித்ரா, பவானி லெவ் ஆகியோருக்குப் புதிதல்ல. மூலிகைகள் பற்றி இந்தியாவின் பல்வேறு மூலை முடுக்குகளுக்குச் சென்று ஆய்வு செய்த இவர்கள், 1997-ம் ஆண்டே லக்னோவில் ‘ஆர்கானிக் இந்தியா’ தொடங்கிவிட்டனர்.

இத்தனை ஆண்டுகளில் இந்தியாவின் முதல் ஆர்கானிக் பிராண்டுகளில் ஒன்றாக ‘Organic India’ வளர்ச்சியடைந்திருக்கிறது. 2500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 2020-ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 357 கோடி ரூபாய் ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிராண்டின் வளர்ச்சி குறித்தும் பெருந்தொற்று சூழலை திறம்பட எதிர்கொண்டது பற்றியும் ஆர்கானிக் துறை குறித்தும் இந்நிறுவனக்குழுவின் நிர்வாக இயக்குநர் சுபத்ரா தத்தா பகிர்ந்துகொண்டார்.

“இந்த உலகம் ஆர்கானிக் பொருட்களின் முக்கியத்துவத்தை ஓரளவிற்குப் புரிந்துகொள்ள ஆரம்பிப்பதற்கு பத்தாண்டுகள் முன்னரே பாரத், பவானி இருவரும் உலகளவில் ஆர்கானிக் பொருட்களுக்கான தேவை இருக்கும் என்பதை உணர்ந்தார்கள். இதை ’ஆர்கானிக் இந்தியா’ முயற்சியின் மூலம் செயல்படுத்தினார்கள்,” என்கிறார் சுபத்ரா.

பெருந்தொற்று சூழல்

ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுப்பொருட்களை உட்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை கோவிட்-19 பெருந்தொற்று சூழல் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஆர்கானிக் உணவுப்பொருட்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

2020-ம் ஆண்டில் 815 மில்லியன் டாலர் மதிப்பை எட்டிய இந்திய ஆர்கானிக் துறை 2021-2026 ஆண்டுகளிடையே 24 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக IMARC சுட்டிக்காட்டுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் 2020-ம் ஆண்டு முதல் ஆர்கானிக் இந்தியா நிறுவனம் 35 சதவீதம் வளர்ச்சியடைந்து வருவதாக சுபத்ரா தெரிவிக்கிறார். ஆர்கானிக் உணவுப் பொருட்கள் குறித்து நுகர்வோரிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே இதற்குக் காரணம் என்கிறார்.

“இன்று இத்தகைய வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. இருப்பினும், ஆரம்பத்தில் விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. விவசாயிகள் பயிர் உற்பத்தி அளவை அதிகரிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள்,” என்கிறார்.

இப்படி சவாலுடன் தொடங்கப்பட்ட ’ஆர்கானிக் இந்தியா’ நிறுவனம் இன்று உலகளவிலான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இன்றைய தேவையை அன்றே புரிந்துகொண்டு செயல்படத் தொடங்கியிருப்பது இதன் சிறப்பம்சம்.

ஆர்கானிக் இந்தியா முயற்சி

ஆர்கானிக் இந்தியா மிக எளிமையாக ஒரே ஒரு தயாரிப்புடன் தொடங்கப்பட்டது. இதன் முதல் தயாரிப்பு ’துளசி டீ’. லக்னோ அருகிலிருக்கும் அசம்கர் என்கிற நகரில் சிறு விவசாயிகளுடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. ஆயுர்வேதத்தில் மிக முக்கிய மூலிகையான துளசியைக் கொண்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டது.

”துளசி வளர்ப்பது பற்றி விவசாயிகளுடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கோதுமை விளைவித்த விவசாயிகள் அதை எதற்காகக் கைவிடவேண்டும், எதற்காக துளசி வளர்க்கவேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்கள். மக்களின் பசியைப் போக்க கோதுமைதான் உதவுமே தவிர துளசி அல்ல என விவாதித்தார்கள்,” என சுபத்ரா விவரித்தார்.

இயற்கை உணவுப்பொருட்களின் மதிப்பை விவசாயிகளிடையே ஊக்குவிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பினும் இறுதியாக அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆர்கானிக் இந்தியா கிட்டத்தட்ட பத்தாண்டுகள் வரை அசம்கர் விவசாயிகளுடன் பணியாற்றியது. அதைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் குழுவாக பணியாற்றத் தொடங்கினார்கள். மாம்பழத்தை விளைவிக்க சித்தூரில் இருக்கும் விவசாயிகளுடன் ஆர்கானிக் இந்தியா கைகோர்த்தது.

ஆர்கானிக் இந்தியா நிறுவனத்தின் இயற்கையான உணவுப்பொருட்களின் தரத்தைக் கண்டு திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய வாடிக்கையாளர் வட்டம் படிப்படியாக பன்மடங்கு விரிவடைந்தது.

படிப்படியாக வளர்ச்சி

1999-ம் ஆண்டு ஆர்கானிக் இந்தியா நிறுவனம் சில்லறை வர்த்தக செயல்பாடுகளைத் தொடங்கியது. இன்றளவும் இது முக்கியப் பிரிவாக செயலப்ட்டு வருகிறது. 2000-ம் ஆண்டு Fabindiastores உடன் இணைந்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டது. 2005-ம் ஆண்டு அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சென்றடைய மின்வணிகப் பிரிவில் செயல்பட ஆரம்பித்தது. அதேசமயம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஆர்கானிக் தயாரிப்புகளை கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்தது.

2015-ம் ஆண்டு இந்த பிராண்ட் சொந்தமாக ஸ்டோர்களைத் திறந்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டது. டெல்லியில் முதல் ஸ்டோர் திறக்கப்பட்ட நிலையில் இன்று இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் இயங்குகின்றன.

தற்போது ஆர்கானிக் இந்தியா, டீ மற்றும் இன்ஃப்யூஷன் பிரிவில் 23-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது. அதேபோல், சான்றிதழ் பெற்ற 30-க்கும் மேற்பட்ட முழு மூலிகை சப்ளிமெண்ட் காப்சியூல்களையும் வழங்குகிறது. மஞ்சள், ஏலக்காய், அஷ்வகந்தா, இஞ்சி போன்ற ஏராளமான மூலிகைகளின் நன்மைகள் இதில் அடங்கும்.

தரமான இயற்கைப் பொருட்களை கொள்முதல் செய்வது, முதலீடு, நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது, சான்றிதழ் பெறுவது என ஏராளமான சவால்களைக் கடந்து வரவேண்டியிருந்தது என்கிறார் சுபத்ரா.

வருங்காலத் திட்டங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற விரும்புவோர் அதிகரிக்கும் நிலையில் ஆர்கானிக் உணவுப்பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் சுபத்ரா.

Tetley, Lipton போன்ற பிராண்டுகள் ஆர்கானிக் இந்தியா பிராண்டுடன் சந்தையில் போட்டியிட்டாலும், போட்டியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நிறுவன செயல்பாடுகளில் கவனம் சிதறமாட்டோம் என்கிறார்.

லக்னோவில் நவீன தொழிற்சாலைக்காக 100 கோடி ரூபாய்க்கும் மேல் சமீபத்தில் முதலீடு செய்துள்ளது ஆர்கானிக் இந்தியா நிறுவனம். இந்தத் தொழிற்சாலை ஒரு மாதத்திற்கு 25 மில்லியன் டீ பேக் தயாரிக்கும் திறன் கொண்டது என்கிறார் சுபத்ரா.

“இயற்கை உணவுப்பொருட்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகவே மாறவேண்டும். இந்த நோக்கத்தை முன்னிறுத்தியே எங்கள் செயல்பாடுகள் அமைந்துள்ளன,” என்கிறார் சுபத்ரா.

ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *