Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

இவரிடம் சென்று குழந்தைகள் திருக்குறள் கூறினால், அதற்குப் பரிசாக தனது சொந்த பணத்தை சன்மானமாக வழங்குவார் 70 வயதாகும் ராம் ராம் ஐயா.

“சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.” 

விளக்கம்: அறத்தின்பால் ஈடுபாடு கொண்டு அதன்படி செயல்படுபவர்களுக்குத் தான் சிறப்புகளும், செல்வமும் வந்து சேரும்.

நம் வாழ்வில் சந்திக்கும் சில மனிதர்கள் பெரும் நல்மாற்றத்தை ஏற்படுத்துவார்கள், ஒரு நல்ல புத்தகத்தை போல… இன்னும் சொல்லப் போனால் புத்தகத்தை விட தெளிவாகவும், விரைவாகவும், கற்பித்து கடந்துச் செல்வார்கள். அப்படி ஒரு மாமனிதர் தான் பத்மநாபன் ஐயா! 

இவரிடம் சென்று நீங்கள் திருக்குறள் கூறினால், திருக்குறள் கூறியதற்கு பரிசாக தனது சொந்த பணத்தை சன்மானமாக வழங்குவார். அதுவும் 50 ரூபாய், 100 ரூபாய் இல்ல… 5000 ரூபாய். என்னது திருக்குறள் கூறினால் பணமா…? அதுவும் 5000 ரூபாயா என நீங்கள் ஆச்சரியப்படலாம். 

ஆம், அதிகாரத்திற்கு ஒரு குறள் என 133 அதிகாரத்திற்கு 133 குறள்களைக் கூறினால் போதும், உடனே ஒரு வெள்ளைக் கவரில் 5000 ரூபாயை வைத்து ’ராம் ராம்’ என வாழ்த்தி வழங்குகிறார் இந்த பெரியவர்! 

சில நேரம் குழந்தைகள்/பெரியவர்கள் தொடர்ச்சியாக 133 குறள்களைச் சொல்லச் சிரமப்படுவதை உணர்ந்து, தொடர்ச்சியாக 20 குறள்களை மட்டுமே கூறினால் போதும் ரூபாய் 500ஐ பரிசாக வழங்குகிறார். 

இவ்வாறு இதுவரை 133 குறள்களை தொடர்ச்சியாக கூறிய 28 நபர்களுக்கு ரூபாய் 5000-த்தையும், 20 குறள்களை தொடர்ச்சியாக கூறிய 80-க்கும் மேற்பட்டோர்க்கு ரூபாய் 500-யும் பரிசாகக் கொடுத்திருக்கிறார். 

இதற்கு எந்தவொரு வயது வரம்பையும் இவர் வைக்கவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆர்வம் உள்ளோர் யார் வேண்டுமானாலும் இவரிடம் வந்து திருக்குறள்களைக் கூறி பரிசு பெறலாம். 

அதுமட்டுமின்றி, இவரிடம் அருகில் வந்து ‘ராம் ராம்’ என உச்சரித்தாலே போதும், அள்ளி அள்ளி உணவுப் பொட்டலங்களைத் தானமாக வழங்குகிறார். பேரன்பையே தனது இயல்பாய் கொண்டுள்ள இப்பெரியவர், கரூர் மாவட்டம் குளித்தலை என்னும் ஊரில் தற்போது வசித்து வருகிறார். 

யார் இந்த பத்மநாபன்?

இவரது இளமைப் பருவத்தில் பணத்திற்கு எந்தவொரு பஞ்சமுமின்றி பல தொழில்கள் தொடங்கி பல வெற்றிகளைக் கண்டிருக்கிறார், பிறகு ஆன்மீகத்தில் தாக்கம் ஏற்பட்டு, போதும் என்கிற மனநிலைக்கு வந்துள்ளார். இனி  வாழும் காலத்தை யாருக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் ஊர் ஊராக சுற்றித் திரிந்தவர், இறுதியாக இவர் தேர்ந்தெடுத்த பாதையே, திருக்குறளும் குழந்தைகளும்… 

எந்தவொரு செயலுக்கும் பின்னால் இருக்கும் நோக்கமே, அந்த செயலையும், அந்த செயலை செய்பவரையும் காலம் கடந்து நிலைப் பெறச் செய்யும். அப்படி இவரது இந்த நல்செயலுக்கு பின்னால் உள்ள நோக்கம் என்னவென்று கேட்ட போது, புன்னகைத்தவாரே இவர் கூறியது,

“நாளைய சமுதாயம் நல்லதாய் அமையவே…” எனப் பணிவுடன் கூறினார்… இந்த 70 வயது பழுத்த இளைஞன்!

முதியோர்கள் பலர், எதிர்காலத்தில் எவரது உதவியையும் எதிர்பார்த்து நில்லாது, வாழும் காலத்தை நல்லப்படியாக வாழ, அதற்குத் தேவையான பணத்தை பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டோ அல்லது தங்களது பிள்ளைகளின் நலனுக்காக பணத்தை வங்கியில் சேமித்து வைத்துக் கொள்ளும் இந்த சமூகத்தில், ஏன் இந்த சமூக ஆர்வம்…? அதுவும் ஏன் குறிப்பாக திருக்குறள்…? தமிழில் எவ்வளவோ நல்நூல்கள் இருக்கையில் ஏன் குறிப்பாக திருக்குறள் என மீண்டும் ஒரு முறை வினவிய போது அவர் கூறியது,

”ஒருவரது வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து அறிவையும் எளிமையாக, சாதாரண பாமர மக்களுக்கும் புரியும்படி வழங்கக்கூடியது திருக்குறள். அறத்தையும், பொருளையும், இன்பத்தையும் 133 அதிகாரங்களில் அடக்கி நம்மை நல்வழிப்படுத்தும் திருக்குறளை நம் மனதில் கொண்டு நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தினால் நம் சமூகம் செழிக்கும் அல்லவோ…” என்றார். 

அதுமட்டுமின்றி, இப்படிச் சொன்னால், எனக்கு நன்கு தெரியும் இவர்கள் 133 குறள்களும் மனப்பாடம் செய்து என்னிடம் வந்து ஒப்புவிக்கிறார்கள் என்று. இருப்பினும், இதுவரை 28 நபருக்கு ரூபாய் 5000-த்தையும், 60- க்கும் மேற்பட்டோர்க்கு ரூபாய் 500-யும் பரிசாகக் கொடுத்திருக்கிறேன்.

”காரணம் யாதெனில், என்றோ ஒரு நாள் தாம் படித்த திருக்குறள்களில் ஏதேனும் இரண்டு குறள்களையாவது  தனது நடைமுறை வாழ்க்கையில் எடுத்துக் கொண்டு பின்பற்றமாட்டார்களா என்றொரு சிறிய ஆசை தான் எனக்கூறி மழலை சிரிப்போடு புன்னகைத்தார்,” ராம் ராம் ஐயா. 

வாழ்விற்காக பணம் ஈட்டும் காலம் போய், வசதிக்காக பணம் ஈட்டிக் கொண்டிருக்கும் இச்சமூகத்தில், எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி இவர் ஆற்றும் இச்செயல் நம்மை வியப்படைய செய்கிறது.

70 வயதிலும் இவரது சுறுசுறுப்பு, குழந்தைகளின் மீது இவர் செலுத்தும் பேரன்பையும் கண்டு எங்களுக்குள் பெரும் நல்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனுபவத்தை படிக்கும் உங்களுக்கும் நல்மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்… உங்கள் யுவர்ஸ்டோரி குழு. 

“தெம்புதெளிந்த நாட்களில் திருச்செயல் புரியவே,

மூத்தோர் நிலை முதுமையென கொள்ளாது,

தமிழினை ஓங்கி துளிர்க்க,

இச்சமூகம் மேன்மக்கள் சுகமடையவே,

திருக்குறள் காட்டும் வழியதுவே, இப்பிரபஞ்ச ஒழுக்கமும்!”

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *