Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

பெண்கள் கிரிக்கெட் தொடர்பாக பலவிதமான உள்ளடக்கத்தை அளிக்கும் இணையதளத்தை விஷால் யாதவ் 2016 ல் துவக்கினார். இப்போது இந்த தளம் திறன் அறியும் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் அகாடமியை நடத்துகிறது.
close
பெண்கள் கிரிக்கெட்டிற்கான களத்தை சமமானதாக முயற்சிக்கும் மனிதரை சந்தியுங்கள்.

விஷால் யாதவ் தான் அந்த மனிதர். 2016ல் இவர் பெண்கள் கிரிக்கெட் தொடர்பான பலவிதமான உள்ளடக்கத்தை வழங்க ஃபீமேல் கிரிக்கெட் (Female Cricket) தளத்தை துவக்கினார்.

ஆறு ஆண்டுகள் கழித்து, இது திறன் கண்டறியும் நிகழ்வுகள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் அகாடமியை நடத்தும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஹெர் ஸ்டோரி நேர்காணலில், இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் நட்சத்திரமான ஜெர்மியா ரோட்ரிக்ஸ்,

“கிரிக்கெட் விளையாடும் பெண்ணாக வளர்வது எளிதாக இல்லை. 400 சிறுவர்கள் இருந்த மைதானத்தில் கிரிக்கெட் ஆடும் ஒரே பெண்ணாக இருந்திருக்கிறேன். அதோடு, வீட்டிற்கு வருபவர்கள், பெற்றோரிடம் அவள் எப்படி கிரிக்கெட் விளையாடலாம், வேறு ஏதேனும் விளையாடட்டும் என்று கூறுவார்கள்,” எனத் தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட்
இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை தேடிக்கொண்ட ஜெர்மியா, 2017ல் தான் கிரிக்கெட் ஆடத்துவங்கிய போது நிலைமை மேம்பட்டிருந்தது, என்றார்.

ஆனால், ஆண்களுக்கு கிரிக்கெட் மதமாக கருதப்படும் ஒரு தேசத்தில், பெண்கள் சம வாய்ப்பை பெற போராடுவது முரண் என்று தான் சொல்ல வேண்டும். எனினும், மற்றவர்களும் இதற்கு உதவ முன்வந்துள்ளனர்.


2016ல், விஷால் யாதவ், மேலும் பல பெண்களை கிரிக்கெட் விளையாட்டில் ஈர்க்கவும், இதில் பாலின சமத்துவத்தை உண்டாக்கவும் ஃபீமேல் கிரிக்கெட் இணையதளத்தை துவக்கினார்.

செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிட்டு பெண்கள் கிரிக்கெட்டிற்கான சமூகத்தை உருவாக்கும் மேடையாக துவங்கிய இந்த தளம், 2017ல் பெண்கள் கிரிக்கெட் அணியின் சிறப்பான செயல்பாட்டால் மேலும் ஆதரவைப் பெற்றது.

பெண்கள் கிரிக்கெட் தொடர்பான கோரிக்கைகள் குவிந்ததால், விஷால் மும்பையில் பெண்களுக்கான பிரத்யேக கிரிக்கெட் அகாடமியை துவக்கினார்.

2020ல் கோவிட் பாதிப்பு, காரணமாக மற்ற விளையாட்டுகள் போல, பெண்கள் கிரிக்கெட்டும் பாதிக்கப்பட்டது. ஃபீமேல் கிரிக்கெட் இணையதளம் தனது சமூக ஊடக பக்கங்கள் மூலம் தொடர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்கி வந்தது.

“எனினும், ஆண்கள் கிரிக்கெட் முடங்கி விடவில்லை, ஐபிஎல் வெளிநாட்டில் நடைபெற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் கிரிக்கெட் ஓரங்கட்டப்பட்டது,” என்கிறார் விஷால்.
எளிய துவக்கம்
பெண்கள் கிரிக்கெட் தனது பார்வையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக இந்த காலகட்டத்தில் புதுமையாக்கத்தை நாட வேண்டியிருந்தது.


“தி பயோனீர்ஸ் எனும் பெயரில் மாறுபட்ட தொடரை துவங்கினோம். மம்தா மேபன், கல்பனா வெங்கட்சார், பிரமிளா பட் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். அவர்கள் கதைகள் இன்னமும் அறியப்படவில்லை. அவர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் வரலாறு ஏன் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும் என உணர்த்த விரும்பினோம்,” என்கிறார் விஷால்.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன் படமாக்கப்பட்ட ’கிரிக்கெட் வித் குவீன்ஸ்’ எனும் டிஜிட்டல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. ஜெர்மியா, மோனா மேஷ்ராம் மற்றும் ஏக்தா பிஸ்ட் போன்ற புதிய யுக கிரிக்கெட் வீராங்கனைகள் இதில் இடம்பெற்றனர்.

விஷால் இந்த மேடையை துவங்கிய பிறகு, பெண்கள் கிரிக்கெட் பரவலான அங்கீகாரத்தை பெற்று வருகிறது. 2022 அக்டோபரில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டிற்கு சம ஊதியம் எனும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை அறிவித்தது. நிலைமை மிகவும் மேம்பட்டிருக்கிறது என்கிறார் விஷால்.

“தேசிய மற்றும் உள்ளூர் அளவில் பெண்களுக்கு விளையாட பல போட்டிகள் இருக்கின்றன. இந்த ஆண்டு கிரிக்கெட் வாரியம், 15 வயதுக்கு குறைந்த பிரிவினருக்கான போட்டிகளை அறிவித்துள்ளது. 2015 ஐ விட பெண்கள் கிரிக்கெட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன,” என்கிறார்.
ஆண் வீரர்களைப் போல பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் அறியப்படவில்லை எனும் ஆதங்கம் காரணமாகவே விஷால் இந்த தளத்தை துவக்கினார். அதன் பிறகு, பெண்கள் கிரிக்கெட் தொடர்பான செய்தி கவனம் அதிகரித்துள்ளது, கிரிக்கெட் வீராங்கனைகள் நன்கு அறியப்பட்டுள்ளனர்.

“2015ல், உங்கள் கதைகளை பகிர்ந்து கொள்ள முடியுமா எனக் கேட்டு வீராங்கனைகளை அணுகினோம், இப்போது அவர்கள் தொடர்பு கொள்கின்றனர்,” என்கிறார்.
விளையாட்டிற்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு, பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பான பெற்றோர்கள் மனநிலையையும் மாற்றியிருக்கிறது.

2017 பெண்கள் உலகக் கோப்பை மற்றும் இதில் இந்திய அணியின் செயல்பாடு இந்தியாவில் இந்த விளையாட்டின் முகத்தை மாற்றியது என்கிறார் விஷால். நான் அல்லது எனது மகள் எப்படி கிரிக்கெட் விளையாடத்துவங்கலாம்? எனும் ஒற்றை கேள்வி பலரிடம் இருந்து விஷாலுக்கு வரத்துவங்கியது.

அவருக்கு அப்போது தேசிய கிரிக்கெட் அமைப்பு தொடர்பான முழு புரிதல் இருக்கவில்லை. ஒரு சிலரிடம் பேசிய போது, கிளப் அல்லது கிரிக்கெட் அகாடமியே பெண்கள் கிரிக்கெட் கற்றுக்கொள்ள சிறந்த வழி என்று கூறினர்.

கிரிக்கெட்
சிறிய நகரங்கள்
சிறுமிகளுக்கான பிரத்யேக கிரிக்கெட் அகாடமி இல்லாததை உணர்ந்த விஷால், 2017ல் மும்பையில் கிரிக்கெட் அகாடமி துவங்க தீர்மானித்தார்.

பெருந்தொற்று காலத்திற்கு முன், 250 சிறுமிகளுக்கு பயிற்சி அளித்தனர். அதன் பிறகு, இரண்டாம் கட்ட நகரங்களில் இருந்தும் அழைப்பு வரத்துவங்கியது. இந்த பெண்கள் எல்லாம், கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்துக்கொண்டு முதல் முறையாக தோல் பந்தை சந்திப்பவர்கள்.

”அடிப்படையில் துவங்கி, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் விளையாடினால் தான் மாவட்டம், மாநிலம், தேசிய அணி என முன்னேற முடியும். இந்த சிறுமிகளுடன் அதிக காலம் செலவிடவில்லை என்றாலும், முன்னேறக்கூடிய ஒரு சிலர் இருக்கின்றனர்,” என்கிறார்.
மும்பை சூழல் போட்டி மிக்கது மற்றும் மாநில அணி பெரும்பாலும் மாறுவதில்லை, ஏனெனில், பெண்கள் 13 அல்லது 14 வயதில் கண்டறியப்பட்டு தொடர்ந்து விளையாடுகின்றனர், என்கிறார் விஷால்.

மும்பையில் இருந்து விரிவாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் கவனம் செலுத்துவதாக கூறுகிறார் விஷால். நல்ல அனுபவம் உள்ள பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒவ்வொரு பெண்ணிடமும் மாதம் ரூ.3,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை 400 சிறுமிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம் மற்றும் பயிற்சியோடு நின்று விடாமல், கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டறிவதற்கான நிகழ்ச்சியையும் நடத்தியது. லக்னோ, பெங்களூரு, தில்லியில் இவற்றை நடத்த ஏபிபி நியூசுடன் இணைந்து செயல்படுகிறது. இரண்டாவது நிகழ்ச்சியில் 700 பெண்கள் பங்கேற்றனர்.

“பெருந்தொற்று பாதிப்புக்கு முன்பாகவே, பெண்கள் ஐபிஎல் சாத்தியமாகும் என நினைத்தோம். திறன் மேலாளர்கள் திறமையானவர்களை எதிர்நோக்குவார்கள் என அறிந்தோம். எனவே, போதுமான திறமையாளர்கள் இருப்பார்களா என்பதை தெரிந்து கொள்ள துவக்க நிகழ்ச்சியை நடத்தினோம். இரண்டாவது நிகழ்ச்சியில் பார்ட்னர்கள் மற்றும் கபில் தேவ், அதுல் வாசன், ஜெயா சர்மா, சுனிதா சர்மா போன்றவர்காள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றனர்,” என்கிறார் விஷால்.
கிரிக்கெட்
தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு கபில் தேவ் மற்றும் வாசன் ஆலோசனை அளித்ததோடு, விளிம்பு நிலை பெண்களுக்கு ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டது.

இந்தத் தளம், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் அகாடமி மூலம் வருமானம் ஈட்டுகிறது. 2022ல் ரூ.50 லட்சம் வருவாய் ஈட்டியது. முதலில் நுழைந்தது, பெண்கள் கிரிக்கெட்டிற்கான சமூகத்தை உருவாக்கும் ஈடுபாடு மற்றும் பெண்கள் கிரிக்கெட்டின் செய்தி அதிகரிப்பு ஆகியவை இதற்குக் காரணம் என்கிறார். சுயநிதியில் செயல்பட்டு வந்த தளம் அண்மையில் விதைக்கு முந்தைய சுற்றி நிதி திரட்டியது.

2018ல், 20 ஆயிரம் பார்வையாளர்கள் என்ற நிலையில், இருந்து தற்போது மாதம் 2 லட்சம் பார்வைகள் இந்த தளத்திற்கு கிடைக்கின்றன. பெண்கள் கிரிக்கெட் தொடர்பாக செய்தி வெளியிட அழைக்கப்படுகிறது. துபாய் கிரிக்கெட் போட்டி மற்றும் வங்க தேச பெண்கள் ஆசிய கோப்பை பற்றி செய்தி வெளியிட்டது. பெண்கள் கிரிக்கெட்டில் திறமையை தக்க வைப்பது சவால் என்கிறார்.

“ஒரு சமூகமாக நாம் அதிகம் மாறிவிடவில்லை. மெட்ரோக்களில் நமக்கு திறந்த மனது இருந்தாலும் சிறிய நகரங்களில் இன்னமும் சவாலாக இருக்கிறது. பெண்கள் அகாடமியில் சேர்ந்ததும், மாநில மற்றும் தேசிய அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கின்றனர். ஒரு சில சீசன்களுக்கு பிறகு பெற்றோர்கள் கிரிக்கெட்டில் எதிர்காலம் இல்லை என பிள்ளைகளை விலக்கிக் கொள்ள நினைக்கின்றனர். இது மாற வேண்டும்,” என்கிறார் விஷால்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *