இந்தியாவில் ஐபோன், மேக்புக், ஐ பேடு போன்ற ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை விற்பனை செய்ய அதிக அளவில் சில்லறை விற்பனைக் கடைகளை அமைக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கியமான விற்பனைச் சந்தையாக இந்தியா மாறியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சொந்த விற்பனைக் கடைகளை அமைக்க உள்ளது. இந்தியா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கான பொறுப்புத் துணைத் தலைவரான ஹியூஸ் அசெமான் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு ஆப்பிள் இந்தியா பிரிவின் தலைவர் ஆஷிஷ் சவுதரிக்கு பதவி உயர்வு வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு விற்பனைத் தலைவரான மைக்கேல் ஃபெங்கரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்திய விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் விற்பனை அதிகரிப்பு:
ஆப்பிள் நிறுவனம் கடந்த காலாண்டில் இந்தியாவில் சாதனை வருவாயைப் பதிவு செய்திருந்தாலும், சர்வதேச அளவில் அதன் மொத்த விற்பனை 5 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் தனது விற்பனையை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கவனம் முதற்கட்டமாக இந்தியா மீது திரும்பியுள்ளது. ஏனெனில், இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் தனது சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அதிக அளவில் விற்பனையாகும் நாடுகளில் அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு பிறகு சீனா முக்கியம் இடம் பிடித்துள்ளது. சீனாவில் ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருவாய் ஈட்டி வருகிறது. இருப்பினும், கொரோனா பரவல் போன்ற காரணங்களால் சீனாவில் ஆப்பிள் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் பணியை நிறுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்களான ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், சால்காம்ப் போன்ற நிறுவனங்கள் சென்னை அருகே ஆலை அமைத்து ஐபோன் மற்றும் ஐபோன்களுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.