தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் இன்குபேஷன் துறையின் வளர்ச்சியைக் குறித்தும் அவை வழங்கும் சேவைகள் குறித்தும் விளக்கும் தொடர்
ஒரு புத்தொழில் நிறுவனத்திற்குத் தேவையான சேவைகளை அளித்திட இயங்கி வரும் அமைப்புகள் தான் இந்த ’புத்தாக்க வளர் மையங்கள்’ (Incubation Center). ஒரு புத்தாக்கத்தை அதனுடைய ஆரம்ப நிலையில் இருந்து, அதாவது, சிந்தனையில் இருந்து செயல் வடிவம் பெற்று, ஒரு வெற்றிகரமான தொழிலாக வளரும் வரை அந்நிறுவனர்களோடு இருந்து வெற்றிக்கு தோள் கொடுப்பவர்கள் தான் இந்த புத்தாக்க மையங்கள்.
புத்தாக்க மையங்கள் என்றால் என்ன?
இதை அறிவதற்கு முன், ஒரு இளம் தொடக்கநிலை ஸ்டார்ட்அப் நிறுவனருக்கு என்னவெல்லாம் தேவையாக இருக்கும் என்று சிந்தியுங்கள். சிந்தனையில் இருக்கும் அவருடைய ஐடியா உருபெற தகுதியான ஆய்வக வசதிகள், திறனான வல்லுனர்களின் துணை இருந்தால் இன்னும் சிறப்பு. பின்பு, தொழில் துவங்க ஒரு அலுவலக வசதியும், முதலீடுகளைக் கவரத்தக்க வசதிகளும் இருந்தால் அருமை. இப்படி பல தேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த தேவைகளை எல்லாம் தொகுத்து சேவைகளாக தரக்கூடிய இடம் தான் இந்த புத்தாக்க வளர்மையங்கள். ஒரு புத்தொழில் தொடங்க வேண்டும் என்ற சிந்தனை இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த மையங்களை அணுகலாம். இல்லை, இப்போது எனக்கு தொழில் தொடங்க ஆர்வம் இல்லை என்றாலும் பயின்று கொள்ள ஆர்வமாக உள்ளேன் என்ற ஆர்வம் உள்ளவர்களும் இந்த மையங்களை அணுகலாம்
பெரும்பாலும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் சார்ந்த சூழலில் தான் இந்த மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதற்காக இவை கல்லூரி போல இயங்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டுதல்களை எளிமையாக பெற்றுக்கொள்ளவும், அடுத்த தலைமுறையினரும் பயன் பெரும் வகையில் இருக்கவுமே அச்சூழலில் அமைக்கப்படுகின்றன.
இந்த மையங்கள் அனைத்துமே அந்தந்த கல்வி நிறுவனங்கள் சார்பில் ஒரு தனி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது.
தமிழ்நாட்டில் இந்த மையங்கள் எங்கெல்லாம் உள்ளது?
இந்தியாவில் உள்ள மாநிலங்களில், தமிழ்நாட்டில் தான் இந்த மாதிரியான புத்தாக்க வளர்மையங்கள் ஸ்டார்ட்அப் இந்தியா தரவுப்படி கிட்டத்தட்ட 104 மையங்கள் உள்ளன. அதிலும் சிறப்பு என்னவென்றால், மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பரவலாக இவை உள்ளன.
பெரும்பாலும் இந்த மையங்கள் துறை சார்ந்து இயங்குவன ஆகும். இதனால், எந்தத் துறை சார்ந்து உங்கள் ஸ்டார்ட்அப் இருக்கிறதோ அந்தத் துறை சார்ந்த மையத்திற்கு சென்றீர்கள் என்றால் சிறப்பு. இந்த தகவல் எல்லாம் நம்முடைய தமிழக அரசின் நிறுவனமான ஸ்டார்ட்அப்.டி.என் வலைத்தளத்தில் (https://www.startuptn.in) காணலாம். மாநிலத்தின் பெருநகர பகுதிகளில் மட்டுமல்லாமல் குறு நகரங்களிலும் கிராமப்புற பகுதிகளிலும் இம்மையங்கள் உள்ளன.
“பிரசவத்தில் முன்கூட்டியே பிறந்த குழந்தைக்கு சரியான ஊட்டமளித்து திடப்படுத்தும் வகையில் அடைகாக்கும் கருவியில் (இன்க்குபேட்டர்) வைத்து, திடநிலை வந்தபின் தான் வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்வார்கள். அதுபோல தான் புத்தாக்க வளர் மையங்களும் உங்கள் சிந்தை முழுவடிவம் பெற்று திடமான புத்தொழில் ஆன பின்பு தான் உலகத்திற்கு அறிமுகம் செய்வார்கள்…”
மேலும், பல துறை சார்ந்த புத்தாக்க வளர் மையங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பு குறித்து அடுத்த உரையில் தொடருவோம்!