கைகூடாத டாடா ‘டீல்’ – பிஸ்லெரி நிறுவனத்தை கவனிக்க மகளை களமிறக்கும் ரமேஷ் சவுகான்!
பிஸ்லெரி நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை டாடா குழுமம் கைவிட வேண்டிய் வந்ததால், அந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சவுகானின் மகள் ஜெயந்தி சவுஹான் இனி பிஸ்லெரி நிறுவனத்தை வழிநடத்துவார்.
பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை டாடா குழுமம் கைவிட வேண்டிய நிலை வந்ததால், அந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சவுகானின் மகள் ஜெயந்தி சவுஹான் இனி பிஸ்லெரி நிறுவனத்தை வழிநடத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்புலம் குறித்தும், ஜெயந்தி சவுஹான் குறித்தும் பார்ப்போம்.
டாடா குழுமம் வெளியேறியது:
முன்னணி பேக்கேஜ் வாட்டர் பிசினஸ் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தை விற்கும் திட்டம் தற்போது இல்லை என தொழிலதிபரும், அந்நிறுவனத்தின் தலைவருமான ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தைச் சேர்ந்த எஃப்எம்சிஜி நிறுவனமான டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் ஏற்கெனவே டாடா காப்பர் ப்ள்ஸ் மற்றும் டாடா குளுக்கோ ப்ளஸ் போன்ற பேக்கேஜ் பிராண்டுகளை நடத்தி வரும் நிலையில், முன்னணி பேக்கேஜ் வாட்டர் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தை வாங்க முடிவெடுத்தது. இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த டாடா குழுமம் திட்டமிட்டிருந்தது.பிஸ்லெரி பிராண்ட்டை சுமார் ரூ. 7000 கோடிக்கு டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் வாங்கத் தயாராகி வருவதாக கடந்த ஆண்டு செய்திகள் வந்தன. டாடா குழுமம், பிஸ்லெரி நிறுவனத்தை வாங்குவதற்காக இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கு முன்னதாக ரிலையன்ஸ் ரீடெய்ல், நெஸ்லே, டானோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் பிஸ்லெரியை வாங்க விருப்பம் தெரிவித்தன. ஆனால், அதன் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இருப்பினும், டாடா உடனான பிஸ்லெரியின் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாகவும் அறிக்கப்பட்டது. டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் டாடா நுகர்வோர் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் டிசோசா ஆகியோரையும் ரமேஷ் சவுகான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும், பிஸ்லெரி மற்றும் டாடா குழுமத்திற்கு இடையே ஒப்பந்தம் எட்டப்படவில்லை.
டாடா வாங்கவில்லை எனில், பிஸ்லெரி நிறுவனத்தின் எதிர்காலம் என்ன? யார் இந்த நிறுவனத்தை இனி நிர்வாகம் செய்யபோகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.
மகளுக்கு ஆர்வம் இல்லை:
பிஸ்லெரி தலைவர் ரமேஷ் சவுகானுக்கு 82 வயதாகிறது. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். பிஸ்லெரி பிராண்டை வழிநடத்த அவரது மகள் ஜெயந்தி சவுகான் தயாராக இல்லை என்றும், அதனால்தான் பிஸ்லெரியை விரிவாக்கம் செய்ய முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும், இவரது மகள் ஜெயந்தி சவுகானுக்கு தொழிலில் ஆர்வம் இல்லாததாலேயே பிஸ்லெரி பிராண்டை விற்க ரமேஷ் சவுகான் நினைத்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கு முன்னதாக தனது பேட்டி ஒன்றில் கூட, “பிஸ்லெரி வியாபாரத்தை தொழில் வல்லுநர்கள் கையாள வேண்டும் . எனது மகள் ஜெயந்திக்கு பிஸ்லெரி வியாபாரத்தில் ஆர்வம் இல்லை” என அவரே தெரிவித்திருந்தார்.
தற்போது தி எக்னாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் “ஜெயந்தி எங்கள் தொழில்முறை குழுவுடன் நிறுவனத்தை நடத்துவார், நாங்கள் வணிகத்தை விற்க விரும்பவில்லை” என ரமேஷ் சவுகான் அறிவித்துள்ளார்.
ஜெயந்தி சவுகான் தகுதி:
42 வயதான ஜெயந்தி சவுகான், தயாரிப்பு மேம்பாட்டில் பட்டம் பெற்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸின் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங் படிப்பையும் முடித்துள்ளார். அதன் பின்னர் லண்டனில் ஃபேஷன் டிசைனிங், போட்டோகிராபி போன்றவை தொடர்பாகவும் ஜெயந்தி படித்துள்ளார். 24 வயது முதல் பிஸ்லேரி நிறுவனத்தின் பங்காற்றி வரும் ஜெயந்தி சவுகான், நிறுவனத்தின் ஆட்டோமேஷனிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.
ஜெயந்தி சவுகான் தற்போது பிஸ்லெரியின் துணைத் தலைவராக உள்ளார். ஆக, இனி ஜெயந்தி சவுகான் பிஸ்லெரியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஏஞ்சலோ ஜார்ஜ் தலைமையிலான தொழில்முறை நிர்வாகக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவார் எனக் கூறப்படுகிறது.