Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

ஐஐடியில் படித்துவிட்டு மாடு விற்கும் தோழிகள் – 2 ஆண்டுகளில் ரூ.2,500 கோடி ஈட்டியது எப்படி?

ஐஐடியில் படித்த இரு இளம் பெண்கள் ஆன்லைனில் பசுக்களையும் எருமைகளையும் விற்கும் ஸ்டார்ட் அப் ஒன்றைத் தொடங்கி மலைக்கத்தக்க வருவாய் ஈட்டும் வெற்றிக் கதை.

ஐஐடி-யில் படித்த இளைஞர்கள் என்ன செய்வார்கள்?

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளத்தில் சேர்வார்கள். இவர்களை வைத்து இவர்களது குடும்பத்தினர் பலரும் நட்பு வட்டாரமும் கூட சீரும் செழிப்பும் பெறும் என்றுதானே நாம் நினைப்போம்.

ஆனால், ஐஐடியில் படித்த இந்த இரு இளம்பெண்கள் தேர்ந்தெடுத்த பாதை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும் அளித்தது என்பதே உண்மை.

ஆம்! ராஜஸ்தான் – நாவல்புராவைச் சேர்ந்த நீது யாதவ், ஹரியானாவைச் சேர்ந்த கீர்த்தி ஜாங்ரா இருவரும் சேர்ந்து இந்தியாவிலேயே தொழில்முனைவோராகிவிட்டனர். ஐஐடியில் படித்த இருவர் இந்தியாவில் தொழில் தொடங்குகிறார்கள், இதில் என்ன ஆச்சரியம், அதிசயம் என்கிறீர்களா? அவர்கள் ஆரம்பித்த தொழில் என்ன தெரியுமா?

மாடு விற்பனையில் தோழிகள்

‘அனிமால் டெக்னாலஜிஸ்’ (Animall Technologies) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் ஆன்லைனின் பசுக்களையும் எருமை மாடுகளையும் விற்கும் தொழிலைத் தொடங்கியதுதான் அனைவரின் ஆச்சரியமும் அவர்களது குடும்பத்தினரின் அதிர்ச்சியும்.

நீத்து யாதவ் பிரதிலிபி என்ற ஆன்லைன் ஸ்டோரி டெல்லிங், அதாவது கதைசொல்லி செயலி தளத்திலிருந்து தன் வேலையை ராஜினாமா செய்தார். பெங்குயின் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தார் கீர்த்தி ஜாங்ரா. நீத்துவின் தந்தையும் கால்நடைப் பண்ணை விவசாயி, கீர்த்தி ஜாங்ராவின் தந்தை ஓர் அரசு அலுவலர். இவர்கள் இருவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பியபோது குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சியில் குதூகலித்தனர்.

குறிப்பாக கீர்த்தி ஜாங்ரா அடுத்து அமெரிக்காவில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை தொடரப் போகிறார் என்று அவருடன் நேரத்தைச் செலவிட குடும்பத்தினர் ஆர்வமாகவும் குதூகலமாகவும் இருந்த நேரத்தில் கீர்த்தி ஜாங்ரா, முதல் குண்டை இறக்கினார், ‘நான் வேலையை ராஜினாமா செய்து விட்டேன்!’

உடனே குடும்பத்தினர் ஆரவாரம் செய்து அடுத்து அமெரிக்கா போகவிருக்கிறார் என்று புரிந்து கொண்ட்னர். ஆனால், அவர்களின் குதூகலம் அடங்கும் முன்னரே, கீர்த்தி ஜாங்ரா, ‘நான் அமெரிக்காவுக்கும் போகப்போவதில்லை’ என்றார். இதில் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியும் அமைதியும் அடைந்தது.

“நான் அமெரிக்கா போகவில்லை, நான் பசுமாடுகளை விற்கப் போகிறேன்…” என்றாரே பார்க்கலாம். “இந்தத் தொழிலைப் பார்க்கவா உன்னை ஐஐடி வரை படிக்க வைத்தோம், அடக்கடவுளே! என்ன இது சோதனை! இந்தப் பெண்ணிற்கு ஏதாவது பித்து பிடித்து விட்டதா அல்லது யாராவது பில்லி சூனியம் வைத்து விட்டார்களா?!” என்று குடும்பத்தினர் அங்கலாய்த்தனர்.

ஹரியாணா குடும்பத்தில் இப்படி என்றால், அங்கு ராஜஸ்தானில் நீது யாதவ் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சி. நீது, “நான் எருமைகளை விற்கப்போகிறேன்” என்று கூறியது களேபரத்தை உருவாக்கியது.

சரி நீது யாதவ், கீர்த்தி ஜாங்ரா எப்படி இணைந்தனர் என்று கேட்கிறீர்களா?

இருவரும் ஐஐடியில் அறை சகாக்களாக இருந்ததுதான் காரணம். இருவருக்கும் இடையே பிரிக்க முடியா பிணைப்பு, நட்பு கெட்டியாக பிடித்துக் கொண்டது. தங்களை எதிர்காலத்தைத் திட்டமிட்டனர்.

மாடு விறக உதவும் தளம் உருவானது எப்படி?

ஒரு இயர் போன் வாங்க வேண்டுமென்றால் டஜனுக்கும் மேலான பிராண்ட் இருக்கின்றது. எது சிறந்தது என்பதற்கு ஆயிரம் பரிந்துரைகள் கிடைக்கும். ஆனால், ஒருவர் பசுவையோ, எருமையையோ வாங்குவதற்கு என்ன பரிந்துரை இருக்கின்றது? இந்தக் கேள்விதான் இந்த ஐஐடி பெண்களின் மூலதனம். இந்த மூலதனம்தான் ‘அனிமால் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் உருவாக்கம்.

இவர்கள் இருவருடன் மேலும் இரு தோழிகள் இணைந்தனர். நால்வரும் பெங்களூருவில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து 2019-ம் ஆண்டில் ஆன்லைனில் பசு – எருமை விற்பனையை அமோகமாகத் தொடங்கினர்.

ஆனால், இந்த முயற்சிக்கு பல இடையூறுகள் இருந்தன. ஏனெனில், பலரும் இதை முட்டாள்தனமான ஒரு காரியம் என்று இழிவு படுத்தினர்.

“என்னய்யா இது… பசுவையும் எருமையையும் யாராவது இன்டெர்நெட்டில் வாங்க முடியுமா? வாங்குவார்களா?” என்பதே அனைவரது கேலிக்கும் கேள்விக்கும் காரணமாக இருந்தது. ஊர் முழுதும் இந்தப் பேச்சு பரவி, ‘என்ன இருவருக்கும் பைத்தியம் கியித்தியம் பிடித்துவிட்டதா?’ என்ற ரேஞ்சுக்கு ஊரில் கேலி கிண்டல்கள் வலம் வந்தன.

ஆனால், முதலில் 3 எருமைகள் விற்றன. அதிலிருந்து சூடுபிடித்தது. அதாவது, ஜனவரி 2020 வாக்கில் ஆன்லைன் பசு – எருமை வர்த்தகம் சூடுபிடித்தது. சூடுபிடிக்கத் தொடங்கியவுடன் அனுபம் மிட்டல் முதலில் ரூ.50 லட்சம் முதலீடு செய்தார். சில நண்பர்களும் முதலீடு செய்தனர். பிறகு சிங்கப்பூரிலிருந்து முதலீடுகள் வரத் தொடங்கின. இப்போது இதன் முதலீடு ரூ.102 கோடியையும் தாண்டி விட்டது.

இருவரும் சந்தையை ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் என்று விரிவாக்கம் செய்தனர். 2 ஆண்டுகளுக்குள்ளாக 5 லட்சம் கால்நடைகளை விற்று ரூ.2,500 கோடி வருவாய் ஈட்டியது நிறுவனம்!

நம்ப முடிகிறதா? ஆனால், இதுதான் உண்மை.

அதாவது, கால்நடை விற்பனைச் சந்தை இந்தியாவில் ஒரு முக்கியமான சந்தை. ஆனால், அது ஒழுங்கமைக்கப்படாத ஒரு சந்தையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு நீதுவும், கீர்த்தியும் ஆரம்பித்த ஒரு சிறு வர்த்தக ஐடியா இன்று பெரிய அளவு முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது என்றால், சாதாரண விஷயமல்ல.

கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான ஒரு யோசனை, ஒரு வர்த்தக முயற்சி இன்று பலரையும் மூக்கில் மேல் விரல் வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றது. எனவே, எந்தத் தொழிலுக்குமே ஒரு வளர்ச்சி நிலை உண்டு. அதை சீரிய தன்மையுடன் நேர்மையாக முயற்சித்தால் மற்ற விஷயங்கள் தானாகவே நடக்கும் என்பதற்கு நீது, கீர்த்தி கதை ஒரு அகத்தூண்டுதலாக இருக்கும் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *