Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

கோவையைச் சேர்ந்தவரான ஸ்ருதி பாபு, BIRAC – ஸ்பார்ஷ் பெலோவாக இருந்த போது பாடத்திட்டம் தொடர்பாக, தனது சொந்த ஊரில் உள்ள கங்கா மருத்துவமனைக்குச் சென்ற போது, அங்கே பக்கவாதத்தால் முடங்கியிருந்த நோயாளியைக் கண்டார்.

அவரை கவனித்துக்கொண்டிருந்த இரண்டு மகள்களும், அவரை குளியலறைக்கு அழைத்துச்செல்ல கஷ்டப்படுவதை பார்த்தவர் மனதில் நடமாட முடியாத நோயாளிகளுக்கான சேவையை உருவாக்கும் எண்ணம் உண்டானது.

நடமாட முடியாதவர்கள் அல்லது மலம் கழித்த அல்லது சிறுநீர் கழித்த பிறகு தங்களை சுத்தம் செய்து கொள்ள முடியாதவர்களுக்கான தூய்மை சேவை கொண்ட சக்கர நாற்காலியான சஹாயதா-வை (Sahayatha) உருவாக்கும் எண்ணம் கொண்டார் ஸ்ருதி.

“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனிதரின் மகள்கள் அவரை படுக்கையில் இருந்து கழிவறைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அதன் பிறகு சுத்தம் செய்வது தான் கடினமாக இருந்தது. அலுவலக ஊழியர் ஒருவர் உதவிக்கு வந்தாலும், ’என் மகள்களுக்கு பாரமாக இருப்பதைவிட இறப்பது மேல்’ என அவர் சொன்னது என் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாமல் ஆனது என்கிறார் ஸ்ருதி.

இந்த அனுபவத்தை அடுத்து நடமாட முடியாதவர்கள் இயற்கை உபாதையை தீர்த்துக்கொண்ட பிறகு தங்களை சுத்தம் செய்து கொள்ள உதவும் சாதனங்கள் இருக்கிறதா என ஸ்ரூதி ஆய்வு செய்தார். பிரத்யேகமான சக்கர நாற்காலிகள் இருந்தாலும் தூய்மை அம்சம் தான் சவாலாக இருந்தது.

மேலும், நடமாட முடியாத நோயாளிகள் கம்மோட் வசதியை பயன்படுத்துவதும் சிக்கலாக இருந்தது. இந்த எண்ணமே, படுகையாக மாற்றிக்கொண்டு கழிவறையாக பயன்படுத்தக்கூடிய சக்கர நாற்காலியை உருவாக்க வைத்தது.

ஸ்ருதி; தொழில்முனைவோர்கள் குடும்பத்தில் இருந்து வருகிறார். அவரது தாத்தா மற்றும் தந்தை கோவை நகரில் உற்பத்தி ஆலையை அமைத்தவர்கள். பயோமெடிக்கல் இஸ்ட்ருமண்டேஷனில் பொறியியல் பட்டம் பெற்றவர், டெக்னோசாட்ப் நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார். அதன் பிறகே பெலோஷிப்பில் இணைந்தார். இங்கு தான் தொழில்முனைவு புதுமையாக்கம் பற்றிக்கொண்டது.

நோயாளிகளுக்கு உதவி

தந்தை அவரது எண்ணத்தை ஆதரித்தார். இருவருமாக வடிவமைப்பு குறித்து ஆய்வு செய்தனர். தன்வந்த்ரி பயோமெடிக்கல் நிறுவனத்தின் கீழ், ’சஹாயதா’ எனும் பெயரில் இந்த சாதனத்திற்கு பெயர் வைத்தனர். 118 முயற்சிகள் மற்றும் ஐந்து முன்னோட்ட வடிவத்திற்கு பிறகு இறுதி வடிவமைப்பு சாத்தியமானது.

“ஆரம்ப வடிவமைப்புகள் மோசமாக இருந்தன. அவற்றை மருத்துவமனைக்கு கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருந்தோம். சான்றிதழோடு வந்தால் தான் நோயாளிகளை சோதனை முறையில் அவற்றை பயன்படுத்த வைக்க முடியும் எனத் தெரிவித்தனர்,” என்கிறார் ஸ்ருதி.

2022 மே 8ம் தேதி இறுதி வடிவமைப்பு அறிமுகம் ஆனது. இரண்டு தயாரிப்புகள் பற்றி ஸ்ருதி விளக்குகிறார்.

“100 டாலர் சாதனம் உதவியாளர் இயக்கக் கூடியது அல்லது தானாக செல்லக்கூடியது. தானியங்கி சுத்தம் செய்யும் வாய்ப்பு கொண்டது. ஸ்டிரெச்சர் போல இதை பயன்படுத்தலாம்”.

“ஒரு ஸ்விட்சை அழுத்தினால் நோயாளி மீது தண்ணீர் தெளிக்கும். கழிவு சாதனத்தை பின் பக்கத்தில் இருந்து எளிதாக அகற்றலாம். 200 டாலர் சாதனம் மடக்க முடியாதது.”

இவை பெரும்பாலும் நடமாட முடியாத நோயாளிகளுக்கானது என்றாலும், மூன்று உதவியாளர்கள் என்பது மாறி ஒருவரே போதும் என்ற நிலை உண்டாகிறது என்கிறார்.

கம்மோட் கொண்ட சக்கர நாற்காலிகள் இருந்தாலும், இந்த சக்கர நாற்காலி மட்டுமே அகற்றக்கூடிய சுத்தம் செய்யும் அமைப்பு கொண்டது என்கிறார்.

இந்த இரண்டு சாதனங்களுக்கும் காப்புரிமைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஸ்ருதி கூறுகிறார். மடங்கக் கூடிய சாதனம் ரூ.39,900, விலையிலும், மடங்காத சாதனம் ரூ.29,900 விலையிலும் கிடைக்கின்றன.

முதல் முன்னோட்ட வடிவம் கங்கா மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது. இந்த தயாரிப்பை மேம்படுத்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கு சிறப்பு மருத்துவர்களை அணுகியுள்ளார்.

ஸ்ருதி மற்றும் அவரது தந்தை இந்த தயாரிப்பில் ரூ.18 லட்சம் முதலீடு செய்தனர். பின்னர், BIRAC, அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திட்டம் ஆகியவற்றின் ஆதரவு கிடைத்தன.

ஸ்டார்ட் அப் டிஎன். ஸ்டார்ட் அப் இந்தியா, KIIT-TBI ஆகியவற்றின் ஆதரவும் கிடைத்துள்ளது. பத்து நபர் குழுவுடன் செயல்பட்டு வருகிறார். சக்கர நாற்காலி தயாரிப்பு ஒப்பந்த முறையில் செய்யப்படுகிறது.

ஸ்ருதி அண்மையில் ஷார்க் டாங்க் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று, 10 சதவீத சமபங்கிற்கான ரூ. 1 கோடி நிதி உதவியை வென்றுள்ளார்.

“ஷார்க் டாங்க் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு எனது போன் ஒலிப்பது நிற்கவேயில்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல கோரிக்கைகள் வந்ததை அடுத்து வலுவான விநியோகஸ்த அமைப்பை உருவாக்க உள்ளோம். மாதம் 100 சாதனங்கள் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார்.

அவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்த அவரின் தந்தை கடந்த ஆண்டு மறைந்தார். எனினும், ஸ்ருதி நிறுவனத்தை தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச்செல்ல உறுதி கொண்டுள்ளார்.

’ஷார்க் டாங்க்’ அனுபவம் இந்த நிறுவனத்தை முன்னோக்கி எடுத்துச்செல்லும் என நம்பும் ஸ்ருதி விற்பனை அதிகரிக்கும் போது, விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது, என்கிறார்.

ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *