கடந்த ஏப்ரலில் இந்தியாவின் மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் ஸ்டோரை திறந்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது ஆப்பிள் நிறுவனம். இதன் திறப்பு விழா நிகழ்வில் ஆப்பிள் நிறுவன ‘சிஇஓ’ டிம் குக் பங்கேற்றார்.
இந்த ஸ்டோர்களில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐ-போன், மேக்புக், ஆப்பிள் அக்ஸசரிஸ், ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி என ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் நேரடியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை நகரில் இயங்கி வரும் ஸ்டோர் ‘ஆப்பிள் BKC’ என்றும், டெல்லியில் இயங்கி வரும் ஸ்டோர் ‘ஆப்பிள் Saket’ என்றும் அறியப்படுகிறது. உலகம் முழுவதும் 25 நாடுகளில் ஆப்பிள் ஸ்டோர் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 552 ஆப்பிள் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன. அதில் இரண்டு இந்தியாவில் இயங்கி வருகிறது.
இந்த இரண்டு ஸ்டோர்களிலும் சுமார் 170-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆப்பிள் சாதன பிரியர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை இங்கு பணியில் அமர்த்தியுள்ளது ஆப்பிள். சுமார் 20 மொழிகளில் வாடிக்கையாளர்களுடன் பேசும் வகையிலான மொழி புலமை பெற்றவர்களும் இதில் அடங்குவர். இதன் மூலம் இருதரப்புக்கும் இடையே மொழி தடை ஏதும் இருக்காது.
இவர்கள் அனைவரும் தொழில்நுட்பச் சாதனங்கள் குறித்து தெளிவாக அறிந்தவர்கள். இவர்கள் பின்னணி குறித்து தீர ஆராய்ந்த பிறகே ஆப்பிள் நிறுவனம் அவர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் கொடுத்துள்ளது.
மேலும், மற்ற டெக் பிராண்டுகளை காட்டிலும் சுமார் நான்கு மடங்கு உயர்வாக ஆப்பிள் தன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை வணிகச் செய்திகளை வெளியிட்டு வரும் முன்னணி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதில்,
ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களுக்கு சுமார் 1 லட்ச ரூபாய் ஊதியம் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் பணி நிலைக்கும் ஏற்ப மாறுபட வாய்ப்புள்ளது.
டார்கெட் இந்தியா: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது மிகப்பெரிய உற்பத்தித் தளமாக உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. அதற்கான பணிகளையும் ஆப்பிள் முன்னெடுத்து வருகிறது.
இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் சார்பில் ஆப்பிள் ஐபோன்கள் அசெம்பிள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதலீட்டை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உள்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.