‘உதாவக்கரை பழங்களில் 2 பில்லியன் டாலர் மதிப்பு நிறுவனம் உருவாக்கிய இளைஞர்!
காய்கறிகளும் பழங்களும் வீணாவதைக் கண்ட அபி ரமேஷ் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து குறைந்த விலையில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கிறார்.
ஒரு ஆப்பிள் கீழே விழுகிறது. அதைப் பார்த்த நியூட்டன் என்ன செய்தார்? யோசித்தார். பொருட்கள் ஏன் கீழே விழுகின்றன? இதற்கும் பூமிக்கும் என்ன தொடர்பு? இந்த யோசனையின் விளைவு என்ன? – புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
சரி. இப்போது காட்சி மாறுகிறது. அதேபோல், மரத்திலிருந்து ஆப்பிள் விழுகிறது. ஒன்று, இரண்டு அல்ல. ஏராளமான ஆப்பிள்கள் மரத்திலிருந்து விழுந்து கிடக்கின்றன. சொல்லப்போனால் மரத்தில் இருக்கும் ஆப்பிள்களைவிட தரையில் கிடக்கும் ஆப்பிள்களின் எண்ணிக்கைதான் அதிகம். இது நடந்தது பென்சில்வேனியா ஆப்பிள் தோட்டத்தில்.
இந்த ஆப்பிள்களைப் பார்த்தவர் அபி ரமேஷ். அதெல்லாம் சரி, இதற்கும் நியூட்டன் கதைக்கும் என்ன சம்பந்தம்? இதைப் பார்த்த அபி ரமேஷ் என்ன கண்டுபிடித்தார் என்று கேட்கிறீர்கள். அப்படித்தானே?
கீழே விழுந்த ஆப்பிள்களால் உருவானது Misfits Market என்கிற நிறுவனம்
Misfits Market – அப்படினா?
தோப்பில் ஆப்பிள்கள் கீழே கிடப்பதைப் பார்த்த அபி ரமேஷ், விவசாயிகளிடம் சென்று பேசினார். அந்த ஆப்பிள்களின் நிலை பற்றியும் கேட்டறிந்தார். அதற்கு,
“தம்பி, ஆப்பிளை ரெண்டு, மூணு மாசம் வரைக்கும்தான் சேமிச்சு வைக்கமுடியும். அதுக்கப்புறமும் விக்கமுடியலைன்னா வீணாகிப்போயிடும்,” என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சனைக்கு எப்படியாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று நினைத்தார் அபி ரமேஷ். இந்த யோசனையில் உருவானதுதான் Misfits Market. Misfit – அப்படினா உதவாக்கரை என்று சொல்லலாம்.
நிறுவன செயல்பாடுகள்
இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிங்களிடம் அபி நெருங்கிய தொடர்பில் இருந்தார். அறுவடை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் அனைத்துமே சூப்பர்மார்க்கெட்டை சென்றடைவதில்லை.
இவை முறையாக தரம் பிரிக்கப்பட்டு முதல் ரகம் சூப்பர்மார்க்கெட்டின் அலமாரிகளை நிரப்பிவிடுகின்றன. அடுத்த ரகங்கள் விற்பனை செய்யப்படாத நிலையில் வீணாகின்றன. இவற்றை மிகக்குறைந்த விலைக்கு அவர்களிடம் வாங்கிக்கொள்வதாக அபி ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒருபுறம் விளைச்சல் அனைத்துமே வீணாகாமல் லாபம் கிடைப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி. மற்றொருபுறம் மிகக்குறைந்த விலையில் வாங்குவதில் நுகர்வோர்களுக்கும் மகிழ்ச்சி. இப்படி இருதரப்பினரும் பலனடைய செய்கிறது Misfits Market.
வணிக வளர்ச்சி
உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுத்து, நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்த அபி ரமேஷ் Shopify தளத்தில் ஒரு பேஜ் கிரியேட் செய்தார். விளம்பரம், லோகோ என படிப்படியாக முதலீடு செய்ய ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் கடன் அதிகமானது. நெருக்கடியான சூழலில் தவித்தார்.
அபி ரமேஷின் நெருங்கிய நண்பர் எட்வர் லேண்டோ, வானத்திலிருந்து இறங்கி வந்த ஏஞ்சல் போலவே, ஏஞ்சல் முதலீட்டாளராக மாறி அவருக்கு நிதியுதவி செய்தார்.
Misfits Market அபியின் முதல் தொழில் முயற்சி அல்ல. கல்லூரியில் படித்த நாட்களிலேயே பிசினஸ் செய்திருக்கிறார். ஆனாலும் அந்த முயற்சிகளில் அவருக்கு திருப்தி கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்தே Misfits Market தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
உடலுக்கு வலு சேர்க்கும் உணவு வீணாவதைத் தடுக்கவேண்டும். இதுதான் Misfits Market முக்கிய நோக்கம்.
“சின்னதா 700 சதுர அடியில ஆரம்பிச்ச இந்த தொழில் ஒரே வருஷத்துல, 10,000 சதுர அடியில செயல்படற அளவுக்கு வளர்ந்துது. இன்னிக்கு இங்க ஆயிரம் பேருக்கு மேல வேலை செய்யறாங்க. 300 மில்லியன் டாலர் நிதி திரட்டியிருக்கோம்,” என்கிறார் அபி ரமேஷ்.
Misfits Market நிறுவனம் சூப்பர்மார்க்கெட்டில் கிடைக்கும் மளிகைப்பொருட்களின் விலையைக் காட்டிலும் 40% குறைவான விலையில விற்பனை செய்கிறது.
உணவுப்பொருட்களை மலிவான விலையில் கொடுப்பதுடன் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவர் செய்கிறது Misfits Market. இன்று இந்நிறுவனம் 2 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.
அபி ரமேஷ் போலவே ஏராளமானோர் தொழில் செய்து சத்தமில்லாமல் முன்னேறி வருகிறார்கள். இவர்கள் தனிப்பட்ட வளர்ச்சியை சாதித்து காட்டியதுடன் சாதிக்கத் துடிக்கும் எத்தனையோ தொழில்முனைவோர்களுக்கு ஊக்கமளிக்கின்றனர்.
அந்த வகையில் அபி ரமேஷின் பயணம் மூலம் தொழில்முனைவோர்கள் சில படிப்பினைகளை தெரிந்துகொள்ளலாம். அவை:
- மற்றவர்கள் முக்கியத்துவம் அளிக்காமல் கடந்து செல்லும் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வளிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
- சவாலான சூழலையும் துணிந்து எதிர்கொள்ளவேண்டும்.
- வெற்றி மட்டுமல்ல தோல்வியும் நமக்குக் கிடைக்கும் ஒரு அனுபவம்தான். இவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடவேண்டும்.
- தொழில் முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் தொடர்பு வட்டத்தை உருவாக்கி விரிவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
- ரிஸ்க் இல்லாத தொழிலே இல்லை. அதை சமாளித்துதான் ஆகவேண்டும். அதேசமயம், அதை சிறப்பாக, திறம்பட எதிர்கொள்ள உதவும் வகையில் முதலீட்டாளர், பார்ட்னர், வழிகாட்டி ஆகியோருடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகளைப் பெறவேண்டும்.
ஒரு சாதாரண யோசனையைக்கூட மிகப்பெரிய வணிக வாய்ப்பாக மாற்றமுடியும் என்பதற்கு அபி ரமேஷ் போன்றோர் சிறந்த உதாரணம்.