Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சரியான ‘பிட்ச் டெக்’ தயாரித்து நிதி திரட்ட வழிகாட்டும் சேலம் ‘Start Insights’

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முதலீடு பெற சரியான ‘பிட்ச் டெக்’, முதலீட்டாளர்களுடன் இணைப்பு ஏற்படுத்தும் சேவைகள் வழங்கும் சேலத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் Start Insights.

தொழில்முனைவு என்பது ஒரு வழிபாதை. எத்தனை முறை தோற்றாலும் அங்கிருந்து முன்னோக்கிச் செல்ல விரும்புவார்களே தவிர பின்னோக்கி வர மாட்டார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் பிரேமானந்த்.

நான்குமுறை ஸ்டார்ட் அப் முயற்சி செய்து தோல்வி அடைந்த பிறகு ஐந்தாவதாக ’ஸ்டார்ட் இன்சைட்ஸ்’ ‘Start Insights’ எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் பிரேமானந்த். தற்போது இந்த நிறுவனம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம், 50 லட்ச ரூபாய் நிதியையும் பெற்றிருக்கிறது. அடுத்த கட்ட நிதி திரட்டுவதற்கும் தயாராகி வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பிரேமானந்த் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக சௌமியா சந்திரசேகரன் இருக்கிறார்கள். தங்களுடைய ஸ்டார்ட் அப் பயணம் குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டது…

தொடக்க காலமும்; தொடர் தோல்விகளும்

சேலத்தைச் சேர்ந்த நான் படித்து முடித்தவுடன் நாஸ்காம் அமைப்பின் உதவியுடன் செயல்படும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றினேன். ஆரம்பத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றியதால் ஒரு ஆரம்பகட்ட நிறுவனம் எப்படி செயல்படும் என்பது ஒரளவுக்கு புரிந்தது.

முதலில் ஃபின்டெக் நிறுவனம் தொடங்கினோம். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த சமயம் என்பதால் ஜிஎஸ்டி என்பது தொடர்பான டெக்னாலஜி நிறுவனம் அது. கிட்டத்தட்ட விர்ச்சுவல் சிஎப்ஓ போல செயல்படும் நிறுவனம் அது. ஆறு மாதங்கள் வரை செயல்பட்டிருப்போம். ஆனால், அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நேரம் சரியானதல்ல. நிறுவனங்களும் அதற்குத் தயராகவில்லை. அதனால் அந்த ஸ்டார்ட்-அப் முயற்சி தோல்வி அடைந்தது.

இரண்டாவதாக ஒரு எஜுடெக் நிறுவனம் தொடங்கினோம் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதை கண்டறியாமல் நமக்குக் கிடைத்ததை படித்துக்கொண்டிருக்கிறோம். கல்லூரி மாணவர்களுக்குத் தேவையானதை படிக்காமல், கிடைத்ததை படிக்கும் நிலைமைக்கு கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சில கேள்விகள் மற்றும் அவர்களின் திறனை அறியும் பட்சத்தில் அவர்களுக்குத் தேவையானதை படிக்க உதவிடமுடியும்.

தவிர மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் நடத்தினோம். அதனால் இந்த ஸ்டார்ட் அப் நன்றாக இருந்தாலும் என்னுடைய இணை நிறுவனர் உயர்படிப்புக்காக சென்றுவிட்டதால், இணை நிறுவனர் இல்லாமல் டெக்னாலஜி நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்பதால் அந்த நிறுவனமும் தோல்வி என்பதால் பெங்களூருவில் இருந்து சேலம் வந்துவிட்டேன்.

கிராமப்புரத்தில் தொழில்முனைவு என்பது மிகவும் குறைவாக இருந்தது. அதனால் கிராமப்புர மாணவர்களுக்கு தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என ’ஸ்டார்டர்ஸ் அப்’ என்னும் நிறுவனத்தை தொடங்கினேன்.

பெங்களூருவில் இருப்பது போல இங்கும் ஸ்டார்ட் அப் ஆர்வம் இருக்கும் என நினைத்தோம். ஆனால், இங்கு நிலைமை தலைகீழ். இங்கு தொழில்முனைவுக்கான சூழலே இல்லை என்பதால் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

அடுத்ததாக ’Trapsi’ என்னும் நிறுவனம் தொடங்கினோம். கல்லூரி மாணவர்களுக்கு ஹேக்கத்தான் மூலம் டிஜிட்டல் தொடர்பாக சொல்லிக்கொடுக்கத் தொடங்கினோம். அதில் வெற்றி அடையும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினோம் 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நாங்கள் சென்றடைந்தோம். இந்த சமயத்தில்தான் கோவிட் வந்தது. கல்லூரிகள் மூடப்பட்டன. இதுவரை உருவாக்கிய அனைத்தும் வீண் ஆனது.

தோல்வியில் இருந்து மீண்டது எப்படி?

இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்களிடம் படித்த மாணவர்களுக்கு டிசைன் தெரியும் என்பதால் நிறுவனங்களுக்குத் தேவையான டிஜிட்டல் தேவைகளை செய்துகொடுக்கலாமே என்று தோன்றியது. இணையதளம், புரமோஷன், டிசைன் என பல விஷயங்களையும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினோம். அப்போது வாடிக்கையாளர்களிடம் பேசிய போதுதான் தெரிந்தது, அவர்களுடைய பிரச்சினை நிறுவனத்தை நடத்துவதைவிட நிதி திரட்டுவதில் இருக்கிறது என்பது புரிந்தது.

முதலீட்டாளர்களிடம் எப்படி பேசுவது, அதற்கு எப்படி தயராவது, கடனாக திரட்டுவதா, பங்குகளை விற்று திரட்டுவதா என பல விஷயங்கள் அவர்களுக்குப் புரியவில்லை. அப்போதுதான் இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது எங்களுக்கு புரிந்தது.

“ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவது எப்படி, முதலீட்டாளர்களுடன் உரையாடுவது எப்படி, அதற்குத் தேவையான பிட்ச் டெக் தயார் செய்வது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எழுதத் தொடங்கினேன். பிரேம் இன்சைட் என்னும் பெயரில் என்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எழுதத் தொடங்கினேன். அந்த பிரேம் இன்சைட்தான் தற்போது Start Insights ஆக மாறி இருக்கிறது,” என பிரேம் குறிப்பிட்டார்.

Start Insights செயல்பாடுகள் என்ன?

Start Insights நிறுவனத்தில் பிரேமுடன் சௌமியா எப்படி இணை நிறுவனராக இணைந்தார் என்பது குறித்து அவரே பகிர்ந்துகொண்டார்.

2019-ம் ஆண்டு இன்ஜினீயரிங் முடித்தேன். அப்போது கேம்பஸில் வேலை கிடைத்தது. ஆனால், மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்னும் நிபந்தனை இருந்ததால் வேலையில் சேரவில்லை. இந்த சூழலில் கோவிட் வந்தது. அதனால் வேலைக்கான வாய்ப்பு குறைந்திருந்தால் தொழில்முனைவில் கவனம் செலுத்தினேன்.

ஒரு பயோமெடிக்கல் நிறுவனத்தில் செயல்பாடுகளை முழுமையாக கவனித்தேன். சம்பளம் இல்லை ஆனால் பெரிய வாய்ப்பு என்பதால் அதில் கவனம் செலுத்தினேன். ஆனால், ஒரு கட்டத்தில் என்னால் அந்த பணியில் தொடர முடியவில்லை. எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் அனுபவம் கொடுத்ததால் பழைய இணை நிறுவனர் மீது பெரிய மதிப்பு இருக்கிறது. ஆனாலும் தொடரமுடியாத சூழல்.

”அப்போது கிளப் ஹவுசில் பிரேம் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. முன்னால் பணியாற்றிய நிறுவனத்தில் பிரேம் எங்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவருடன் அறிமுகமும், உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்னும் சூழல் வந்த போது ’பிரேம் இன்சைட்ஸ்’ (அப்போது) நிறுவனத்தில் இண்டர்ன் ஆக வேலைக்கு சேர்ந்தேன். தொடர்ச்சியான சூழல் காரணமாக இணை நிறுவனராக உயர்ந்தேன்,” என சௌமியா தெரிவித்தார்.

ஒரு இண்டர்ன் எப்படி இணை நிறுவனர் என்னும் கேள்விக்கு பிரேம் பதில் அளித்தார். ஆரம்பத்தில் இண்டர்ன் ஆக இருந்தாலும் அவர், செயல்பாடுகளை கவனித்த அனுபவம் இருந்ததால் இந்த நிறுவனத்தில் செயல்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

அந்த சமயத்தில் ஒரு நிறுவனமாக கட்டமைக்கும் தேவை இருந்தது. பிரேம் இன்சைட்ஸ் என்பது என்னுடைய பெயரில் இருந்தது. இதனை மாற்றி முறையான நிறுவனமாக பதிவு செய்ய திட்டமிட்டேன். அப்போது சௌமியாவும் முதலீடு செய்தார். அதனால் ’ஸ்டார்ட் இன்சைட்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் செயல்பாட்டு அதிகாரியாகவும் மாறினார் என்று பிரேம் கூறினார்.

ஏன் முதலீடு தேவை?

முதலீட்டுக்கு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு நீங்கள் தேவையான உதவியை செய்கிறீர்கள். கிட்டத்தட்ட சேவை நிறுவனம்தான். இதற்கு எதற்காக நிதி / முதலீடு தேவை என்னும் கேள்விக்கு இருவரும் விரிவாக பதில் அளித்தனர்.

நாங்கள் மூன்று சேவைகளை வழங்குகிறோம்.

  • முதலாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ’பிட்ச் டெக்’ மட்டுமே தேவை என்றால் அவர்கள் எங்களிடம் இருந்து அதனை பெற்றுக்கொள்ளலாம்.
  • அடுத்தாக முதலீட்டு குறித்த விழிப்புணர்வு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிகமாக இருக்காது. அவர்கள் அவர்களது பிஸினஸில் கவனம் செலுத்துவார்கள். பிட்ச் டெக் தயார் செய்வது, புரஜெக்‌ஷன், சந்தை மதிப்பு (வேல்யுவேஷன்) உள்ளிட்டவை குறித்து முழுமையான புரிதல் இருக்காது. தவிர பங்குகள் எவ்வளவு கொடுப்பது, அதில் இருக்கும் வகைகள் என்ன? நிறுவனங்கள் எப்படியெல்லாம் நிதி திரட்டுகிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வு கொடுப்பது இரண்டாவது சேவை.
  • மூன்றாவது முதலீட்டாளர்களுடன் தொடர்பு. அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களை நேரடியாக தெரிந்திருக்காது. அதனால் முதலீட்டாளர்களுடான தொடர்பையும் உருவாக்குகிறோம்.

தற்போதுவரை இவற்றை நாங்கள் செய்துவருகிறோம். இதனை do it yourself ஆக மாற்ற இருக்கிறோம். எங்களுடைய தளத்துக்கு வந்தால் எங்களிடன் அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். தவிர முதலீட்டாளர்களுடம் எங்களிடம் இணைந்திருப்பார்கள்.

நேரடியாக முதலீட்டாளர்களை தொடர்ப்புகொள்ள முடியும். முதலீட்டாளர்களுக்கும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு தயாராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற அவர்களின் விதிமுறை தெரிந்த நிறுவனங்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் எங்களிடம் இருக்கும் நிறுவனங்களுக்கு இவை அனைத்தும் தெரியும் என்பதால் முதலீட்டாளர்களுக்கு பெரிய சிக்கல் இருக்காது. இதற்கான இணைதளத்தை உருவாக்குவதற்குதான் நிதி பெற்றோம்.

இதுவரை ரூ.50 லட்சம் நிதி திரட்டி இருக்கிறோம். மேலும் ஒரு கோடி ரூபாய் திரட்டும் பணியில் இருக்கிறோம். இதில் பாதி அளவுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து ஒப்புதலை வாங்கி இருக்கிறோம். இன்னும் சில வாரங்களில் இதற்கான பணிகள் முடியும், என்றனர்.

இதுவரை இவர்கள் 50 நிறுவனங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இதில் 8 நிறுவனங்கள் நிதி திரட்டி இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மொத்தமாக 2 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டி இருக்கிறார்கள்.

தற்போது சேலம் சோனா கல்லூரியில் இவர்களது அலுவலகம் இருக்கிறது. இவர்களுடைய செயல்பாடு சேலத்தில் இருந்தாலும் சர்வதேச அளவில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என பிரேம் தெரிவித்தார்.

ஸ்டார்ட் அப் அலை தற்போது தமிழ்நாட்டில் தொடங்கி இருக்கும் சூழலில், சேலத்தில் இருந்து செயல்பட்டுவருவது அனைவருக்கும் தேவையான ஒன்று.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *