Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

Chandrayaan 3-இன் மாஸ்டர் மைண்ட் – இந்திய நிலவுப்பயண வரலாற்றில் மீண்டும் ஒரு தமிழர்!

இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழர்கள் தான் இருந்துவருகின்றனர். முதல் இரண்டு திட்டங்களைப் போலவே சந்திரயான் 3 திட்ட இயக்குநராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே பணிபுரிந்துள்ளார்.

உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பி, தனது விண்வெளி பயணத்தில் மற்றொரு புதிய மைல்கல்லை எட்டி, சர்வதேச நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்தியா.

இந்த வரலாற்று சாதனைக்கு மூளையாகச் செயல்பட்டவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விசயமாக அமைந்துள்ளது.சந்திராயன் 3

இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சந்திராயன்- 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது ஆகஸ்ட் 23 அல்லது 24-ந்தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, சந்திராயன் -1 மற்றும் சந்திராயன் -2 என முதல் இரண்டு திட்டங்களிலும் அதன் திட்ட இயக்குநர்களாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களே இடம் பிடித்திருந்தனர். முதல் திட்டத்திற்கு கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இயக்குநராக இருந்தார். இரண்டாவது திட்டத்திற்கு சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி முத்தையா வனிதா இணை இயக்குநராக இருந்தார்.

இந்த வரிசையில் தற்போது நிலவின் தென்பகுதிக்கு முதன்முறையாக விண்கலத்தை அனுப்பி உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்திய விண்வெளி ஆய்வின் முக்கிய மைல் கற்களில் ஒன்றான சந்திராயன் 3 திட்டத்திற்கு இயக்குநராக இருந்தவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் ஆவார்.

யார் இந்த வீரமுத்துவேல்?

தற்போது பெங்களூருவில் வசித்து வரும் வீரமுத்துவேல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை, தென்னக ரயில்வேயில் டெக்னீஷியனாக வேலை பார்த்தவர். தற்போது, SRMU., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். இவரது தாயார் ரமணி.

தந்தை ரயில்வே ஊழியர் என்பதால், விழுப்புரம் ரயில்வே பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த வீரமுத்துவேல், பின்னர் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் இயந்திரவியலில் டிப்ளமோ முடித்தார். பிறகு, சென்னை சாய்ராம் கல்லுாரியில், பொறியியல் பட்டப்படிப்பில் இயந்திரவியல் பிரிவில் படித்தார். அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி., அரசு பொறியியல் கல்லுாரியில், எம்.இ., மெக்கானிக்கல் பயின்றார்.

விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் சிறு வயது முதலே இருந்ததால், அதற்காகத் தன்னை கொஞ்சம் கொஞ்சமாகத் தயார்ப்படுத்திக்கொண்டார். எனவே, டிப்ளமோ படிப்பைத் தொடர்ந்து, ஐஐடியில் உயர்கல்வியை முடித்தார். பிறகு அங்கேயே விண்வெளித் துறை குறித்த ஆய்வையும் அவர் மேற்கொண்டார்.

தனது கடின உழைப்பால் வீரமுத்துவேலுக்கு 1989ல் இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பல தேடி வந்த போதிலும், அவற்றை ஒதுக்கிவிட்டு இஸ்ரோ வேலையையே தேர்வு செய்தார் வீரமுத்துவேல்.

சிக்கலான ஹார்டுவேர் வேலையில் ஆர்வம் கொண்டவரான வீரமுத்துவேல், தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தனது தொடர் ஆராய்ச்சிகளின் பலனாக, 2016ம் ஆண்டில், விண்கலத்தின் மின்னணு தொகுப்பில் அதிர்வு கட்டுப்பாட்டு அமைப்பு குறித்த ஒரு ஆராய்ச்சி கட்டுரையை அவர் சமர்ப்பித்தார். அதுதொடர்பான சோதனைகள் பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடத்தப்பட்டன.

விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்கவும், விண்கலத்தின் ரோவர் பகுதியை இயக்கவும் அவரது ஆய்வு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதினர். அப்போது அந்த ஆய்வுக் கட்டுரையில் இடம் பெற்ற தொழில்நுட்பம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. எனவே, வீரமுத்துவேலுக்கு பாராட்டு மழையும் குவிந்தது.

இதுவே அவரை சந்திரயான் 2 திட்டத்திற்குள் அழைத்து வந்தது. அத்திட்டத்தின் நாசா உடனான ஒருங்கிணைப்பை முற்றிலுமாக வீரமுத்துவேல் ஏற்றுக்கொண்டிருந்தார். சந்திராயன் 2 முயற்சி எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்ற போதும், இஸ்ரோ தனது முயற்சியைக் கைவிடவில்லை.

எனவே, சந்திராயன் 3 திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல்வேறு பொறுப்புகளிலும், திட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இவர், இந்த திட்டத்தை சிறப்பாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை அப்போதே மக்கள் மனதில் உண்டானது.

இவருக்குக் கீழ் 29 துணை இயக்குநர்களுடன் இன்னும் பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உழைத்து சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டத்தை உருவாக்கி உள்ளனர். நான்கு ஆண்டுகளில் பல சோதனைகள் மூலம் சந்திரயான் விண்கலம் படிப்படியாக மேம்பட்டுள்ளது. சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு சந்திரயான் 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆய்வகத்திலேயே கதியாகக் கிடந்தார்!

மெய் நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் வன்பொருள் குறித்தான அனைத்து துறைகளிலும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட வீரமுத்துவேல், சந்திராயன் 3 திட்டத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வகத்திலேயே பல மணி நேரங்களைச் செலவிட்டதாக கூறப்படுகிறது.

அந்தக் கடின உழைப்பின் பலனைத்தான் தற்போது சந்திராயன் 3 நிலவுக்கு எடுத்துச் சென்றுள்ளது. சூரியனின் வெளிச்சம் படாத பகுதியான நிலவின் தென்பகுதி குறித்த பல புதிய தகவல்களை நமது சந்திராயன் 3 உலகிற்கு எடுத்துச் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனித குலம் உருவான வரலாறு, பூமியிலிருந்து நிலவு எப்படி பிரிந்து சென்றது, அங்கு மனிதர்கள் உயிர்வாழ சாத்தியக் கூறுகள் உள்ளனவா? எனப் பல கேள்விகளுக்கு சந்திராயன் 3 பதிலைத் தேடித்தரும் என இந்தியாவைப் போலவே உலகநாடுகளும் அதனை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

இப்படி இந்தியாவிற்கு மட்டுமின்றி, உலகின் விண்வெளி ஆய்வு வரலாற்றிலேயே முக்கிய மைல்கல்லாக இடம் பெற்றிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தின் திட்ட இயக்குநாகச் செயல்பட்டு, உலகளவில் மீண்டும் தமிழகத்தின் பெருமையை கொண்டு சென்றுள்ளார் வீரமுத்துவேல்.

தன்னடக்கம்

சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பிரதமர், குடியரசுத் தலைவர் என முக்கியத் தலைவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்திராயன் 3 திட்டத்தின் முக்கிய மாஸ்டர் மைண்ட்டாக செயல்பட்ட அதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில்,

“Chandrayaan-3 விண்கலத்தை புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கி நிலவில் தரையிறக்கும் வரை அனைத்து பணிகளும் சவால் நிறைந்தவை. எனவே, அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

“நிலவில் தரையிறங்கும் ரோவர் சாதனத்தில் ஒரு சக்கரத்தில் நம் நாட்டின் அசோக சக்கர சின்னமும், மற்றொரு சக்கரத்தில் இஸ்ரோவின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. நான் உட்பட தமிழகத்தை சேர்ந்த பலர் இந்த திட்டத்தில் பணியாற்றி உள்ளோம். ஒரு தமிழனாக மட்டுமின்றி, இந்தியனாக இதில் எனது பங்களிப்பு உள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்,’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பே காரணம்

தனது மகனின் இந்த வரலாற்று வெற்றி குறித்து வீரமுத்துவேலின் தந்தை பிபிசி தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில்,

“தனது மகனின் விடாமுயற்சியும் திறனுமே அவர் இந்நிலைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம். எனது மகன் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தனது விடாமுயற்சியால் எப்போதும் முதலிடம் பெறுவார். அவரது தனித்தன்மையான செயல்பாடும் அறிவுமே அவர் இந்த நிலைக்கு உயர்ந்ததற்குக் காரணம். என் மகனின் இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் அவரது உழைப்பு மட்டுமே,” எனத் தெரிவித்துள்ளார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *