40,000-க்கும் அதிகமானோரை ரத்த தானம் செய்ய வைத்த மதுரை ‘ஜீவ நதி’ அமைப்பு!
உடுக்க உடை, பசிக்கு உணவு என எதைக் கொடுத்தாலும் உயிர் காக்கும் ரத்த தானத்திற்கு நிகராகாது. பிறப்பு முதல் இறப்பு வரை உடலில் வற்றாத ஜீவநதியாக ஓடும் ரத்தத்தை பிறருக்கு தானமாக கொடுப்பதற்காகவே “ஜீவ நதி” என்ற இளைஞர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
உடுக்க உடை, பசிக்கு உணவு என எதைக் கொடுத்தாலும் உயிர் காக்கும் ரத்தத் தானத்திற்கு நிகராகாது. பிறப்பு முதல் இறப்பு வரை உடலில் வற்றாத ஜீவநதியாக ஓடும் ரத்தத்தை பிறருக்கு தானமாக கொடுப்பதற்காகவே “ஜீவ நதி” என்ற இளைஞர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் ரத்த தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘ஜீவ நதி’ அமைப்பு இதுவரை அங்குள்ள கார் கம்பெனிகள், ஜூவல்லரி கடைகள், ஜவுளிக்கடைகள், தனியார் நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணிபுரியக்கூடியவர்களை விழிப்புணர்வு செய்து ரத்த தானம் செய்ய வைக்கிறார்கள் ‘ஜீவ நதி’ அமைப்பை சேர்ந்த இளைஞர்கள்.
ஆரம்ப காலக்கட்டத்தில் நண்பர்கள் இணைந்து ரத்த தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அதிகளவு ரத்தம் சேகரித்து கொடுக்கும் இயக்கமாக உள்ளது.
ஆம், இதுகுறித்து ஜீவநதி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கணேஷ் முருகன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
“2001 டிசம்பர் 26ம் தேதி யதார்த்தமாக நானும் எனது நண்பர்களும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்ந்து முதல் ரத்த தானம் செய்தோம். அதேநாளில் குஜராத்தில் பூகம்பம் நடந்தது. அந்த பெரும் துயரத்தில் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதகிளவு ரத்த தானம் தேவைப்பட்டது. எங்களுடைய ரத்தமும் குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அன்று தான் ரத்தத்தின் தேவையை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அதன் பின்னர், நண்பர்கள் குழுவாக சேர்ந்து ’ஜீவ நதி’ என்ற ரத்த தான அமைப்பை உருவாக்கினோம்,” என்கிறார்.
“ஜீவ நதி” ஆரம்பித்த 2001ம் ஆண்டு மக்களிடையே ரத்தம் குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை. இதனால் ரத்த தானம் மட்டுமே செய்து வந்த இளைஞர்கள் குழு, அடுத்தக்கட்டமாக ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க ஆரம்பித்தனர். இந்த விழிப்புணர்வு முயற்சி மெல்ல, மெல்ல வளர்ந்து 2010ம் ஆண்டு முதல் வருடத்துக்கு 20க்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இதன் மூலம் கடந்த 23 அண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ரத்த தான முகாம்களை நடத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமானோரை ரத்த தானம் செய்ய வைத்துள்ளனர். குறிப்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து ரத்தம் 6 முறை அதிக அளவில் சேகரித்து கொடுத்த அமைப்பு என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு.
தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ரத்த தானத்திற்கு பெருதவியாக இருப்பதாகக் கூறும் கணேஷ் முருகன், குடும்பத்தினரின் ரத்த வகை என்ன என்பதை குடும்பத்தில் உள்ள அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், வாட்ஸ்அப்பில் உள்ள ஃபேமிலி குரூப்பில் தங்களது ரத்த வகையை பகிர்ந்து வைத்தால் அது அவசர காலத்தில் உதவியாக இருக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.