Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

பாக் வீரர் சவாலை சாய்த்த ‘ஜீனியஸ்’ – ஈட்டி எறிதலில் உலகின் ‘அரசன்’ ஆன நீரஜ் சோப்ரா!

88.17 மீட்டர் தூரம் எறிந்து, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்து வரலாறு படைத்தார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் எறிந்து, இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார்.

நீரஜுக்கு ‘டஃப் ஃபைட்’ கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் சரிநிகர் போட்டியிட்டு சவால் அளித்தார். ஆனால், நீரஜ்ஜின் தனித்துவமான ஒன்றுதான் அவரை முறியடித்து வெற்றிக் கொள்ளச் செய்தது.

நீரஜ்ஜின் தனித்துவம்

கடந்த ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ். இதனையடுத்து, தங்கம் வெல்வது அவரது குறிக்கோள்களில் ஒன்றாகவே மாறி கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், அவர் புடாபெஸ்ட்டில் எறிந்த 88.17 மீ தூரம் அவரது டாப் 5 எறிதலில் ஒன்றல்ல என்பதுதான் கவனிக்கத்தக்கது.

ஆனால், நீரஜ் சோப்ராவின் தனித்துவம் என்னவெனில், அவர் தான் ஓடிப்போய் த்ரோ செய்யும் ‘டர்ஃப்பின்’ தன்மை, வானிலை, உள்ளிட்ட புறச்சூழல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எவ்வளவு தூரம் ஓடி வந்து வீசினால், எவ்வளவு தூரம் போய் விழும் என்பதில் துல்லியத்தை மனக்கண்ணிலும் அறிந்தவர் என்பதுதான் நீரஜ்ஜின் ஸ்பெஷல்.

ஒலிம்பிக் தங்கம் வென்ற பிறகு இன்னொரு தங்கப் பதக்கம் இவருக்குக் கிடைத்திருப்பது இந்திய தடகள வீரர்களிலேயே நீரஜ்ஜை பெருமைக்குரிய தனித்துவ வீரராக உயர்த்தியுள்ளது.

பாக். வீரரை எதிர்கொண்ட விதம்

புடாபெஸ்ட்டின் இந்த வரலாற்று இரவில் நீரஜ் சோப்ராவுக்கு மிக அருகில் வந்து சவால் அளித்தவர் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம். ஆனால், நதீமும் எடுத்த எடுப்பில் எல்லாம் வீச முடியவில்லை. அவர் முதலில் 74.80 மீட்டர் தூரமே எறிய முடிந்தது. பிறகு, 82.18 மீட்டர் எறிந்தார். அதன்பிறகுதான் சவாலான 87.82 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

நதீம் உடல் ரீதியாக வலுவான த்ரோயர் என்பதால் நிச்சயம் அவர் மீண்டெழுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீரஜ் சோப்ராவின் துல்லியக் கணிப்பு நதீமுக்கு இல்லை. அங்குள்ள நிலைமைகளை அருமையாகக் கணிப்பவர் நீரஜ் சோப்ரா. பாகிஸ்தான் வீரர் வெறும் உடல் பவரைக் காட்டுபவர் என்றுதான் நிபுணர்கள் கூறுகின்றனர். செக். குடியரசு வீரர் ஜேகப் வாட்லீச் 86.67 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார்.

தலைமுடி கண்களில் விழாமல் இருப்பதற்காக வெள்ளை நிற தலை பேண்ட் கட்டிக்கொண்டு ஆடிய நீரஜ் இரண்டாம் ரவுண்டில்தான் சிறப்பான த்ரோவைச் செய்தார். ஈட்டி இலக்கை எட்டி குத்துவதற்கு முன்பே திரும்பி கையை உயர்த்தி கொண்டாடி விட்டார் சோப்ரா. அழுத்தமான சூழ்நிலைகளில் இவருக்குத் தடையற்ற உத்வேகம் வருகிறது. அதனால்தான் எந்த டர்ஃபிலும் இவரால் ஜொலிக்க முடிகிறது.

இவர் அளவுக்கு சீராகவும் துல்லியமாகவும் செயல்படும் வேறு இந்திய தடகள வீரர்கள் யாருமில்லை என்றே கூறிவிடலாம். ஒலிம்பிக் கோல்டு மெடல் எடுத்த பிறகே சாதனை ஓவர் என்பதில்லாமல் அடுத்தடுத்த கடினமான போட்டித் தொடர்களிலும் முத்திரைப் பதிப்பது நீரஜ் சோப்ராவை வீரர் என்ற தளத்திலிருந்து ‘கிரேட்’ என்ற தளத்திற்கு உயர்த்தியுள்ளது.

நீரஜின் ஜீனியஸ் த்ரோக்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வென்றபோது எறிந்த தூரம் 87.58 மீட்டர். இது அவரது டாப் 10 சிறந்த எறிதல் பட்டியலில் இல்லை என்றால் நாம் புரிந்து கொள்ளலாம், தனக்கான தரநிலையை எந்த உயரத்தில் வைத்திருக்கிறார் நீரஜ் என்று. அந்த டாப் 10 எறிதலில் 89.94 மீட்டர் அதிகபட்ச தூரம்; 88.13 தூரம் குறைந்தபட்ச தூரம் என்றால் நீரஜ்ஜின் தரநிலையை ஊகிக்க முடிகிறதா?

88 மீட்டர் தூரம் எறிவதெல்லாம் இவருக்கு சர்வ சாதாரணம். 10 முறை இந்தத் தூரத்தில் எறிந்துள்ளார். 85 மீட்டர்களுக்கும் அதிகமாக விட்டெறிந்தது 26 முறை என்கிறது புள்ளி விவரங்கள். இதுதான் சீரான ஒரு தன்மை. அதுவும் இது சாதாரண வீரர்களின் சீர்மை அல்ல. கிரேட்களின் சீர்மை. தோஹா டைமண்ட் லீக் என்ற மதிப்பு மிக்க தொடரில் 88.67 மீட்டர் தூரம் எறிந்தார். காயமடைந்து மீண்டு வந்த சோப்ரா லாசேன் டைமண்ட் லீகில் 87.66 மீட்டர் தூரம் எறிந்தார். காயத்திலும் இத்தனை தூரம் எறிய முடிந்துள்ளது.

நீரஜ் சோப்ரா தனது ஜீனியஸ் த்ரோக்களின் மூலம் இந்தத் தலைமுறை இந்திய ஈட்டி எறிதல் வீரர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தேசிய முகாமில் ஈட்டி எறிதல் பயிற்சியாளராக இருக்கும் சமர்ஜீத் சிங் கூறுவதை முத்தாய்ப்பாக மேற்கோள் காட்டினால் அதுதான் நீரஜ் சோப்ரா.

“நான் 75 மீட்டர் தூரம் எறிவேன்; அதுவே அப்போதெல்லாம் பெரிய விஷயம். அயல் நாட்டு வீரர்கள் பலரின் வீடியோக்களை பார்த்து இவர்களால் மட்டும் எப்படி 82 – 85 மீட்டர் தூரம் விட்டெறிய முடிகிறது என்று ஆச்சரியம் அடைந்துள்ளேன். 80 மீட்டர் தூரம் எறிவது என்பதே இந்தியாவில் பெரிய மனத்தடையாக இருந்த காலத்தில் இப்போது நமக்கு நீரஜ் சோப்ரா வடிவில் சாம்பியன் த்ரோயர் கிடைத்திருக்கிறார்.”

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ள நீரஜ் சோப்ரா, இந்தத் தொடரின் தகுதிச் சுற்றிலேயே 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் பெருமிதம்

ஹரியானா மாநிலம் பானிபட்டில் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா தன் கடுமையான பயிற்சியாலும் திறனாலும் இந்திய ராணுவத்தில் சுபேதார் பணியைப் பெற்றார். இப்போது உலக அளவில் ஈட்டி எறிதல் விளையாட்டில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றது குறித்து தந்தை சதீஷ் குமார் கூறியது:

“உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் நீரஜ் தங்கப் பதக்கம் வென்றது நம் நாட்டுக்கு மிகவும் பெருமித தருணம்.”

சாதனை மேல் சாதனை

அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்து, உலக ஈட்டி எறிதல் வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள நீரஜ் சோப்ராவின் முக்கியச் சாதனைகளும் பதக்கங்களும்:

2016 ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி

2016 உலக ஜூனியர் போட்டியில் தங்கம்

2016 தெற்காசிய விளையாட்டில் தங்கம்

2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்

2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம்

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்

2021 ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம்

2022 டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் முதலிடம்

2022 உலக தடகள சாம்பியஷன்ஷிப்பில் வெள்ளி

2023 உலக தடகள சாம்பியஷன்ஷிப்பில் தங்கம்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *