Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

ஒவ்வொரு நாளும் காலை, ராகவேந்தர குமார் தனது நோக்கத்தை நிறைவேற்ற வீட்டைவிட்டு புறப்பட்டு விடுகிறார். அவரது நோக்கம், இலவச ஹெல்மெட்களை வழங்குவது…

காரில் ஹெல்மெட்களை அள்ளி வைத்துக்கொண்டு கிரேட்டர் நொய்டாவில் உள்ள பகுதிகளில் வலம் வருகிறார். அவரது காரின் கண்ணாடியில், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் வலியுறுத்தும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.

குமார் இப்படி தீவிரமாக சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் ’ஹெல்மெட் மனிதர்’ என அழைக்கப்படும் குமார், இதுவரை கான்பூர், தில்லி, மீரட், நொய்டா உள்ளிட்ட நகரங்களில் 56 ஆயிரம் ஹெல்மெட்களை வழங்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன், குமாரிடம் இருந்து ஹெல்மெட் பெற்ற இந்தூரைச்சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் விபத்துக்குள்ளானார். பைக்கில் இருந்து கீழே விழுந்த விக்ரம் சிங், சாலைத்தடுப்பில் மோதிக்கொண்டார். அப்போது அவரது ஹெல்மெட் இரண்டாக பிளந்தது. ஆனால், அவர் உயிர் தப்பினார். தனது உயிர் காத்த ஹெல்மெட் வழங்கியதற்காக அவர் குமாரை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறார்.

தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தகவல்படி, 2021ல் 1.50 லட்சம் பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குமார், 2020ல் தனது லாப நோக்கில்லாத ’ஹெல்மெட் மேன் ஆப் இந்தியா’வை துவக்கினார். இதன் ஒரு பகுதியாக காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆண்டு முழுவதும் ஹெல்மெட் வங்கியை செயல்படுத்த முயன்று வருகிறார். நொய்டாவில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் எதிரே ஹெல்மெட் நிலையம் அமைக்கவும் விரும்புகிறார். வீட்டில் இருந்து ஹெல்மெட் எடுத்து வர மறக்கும் மாணவர்களுக்கு இந்த மையம் இலவச ஹெல்மெட் அளிக்கும்.

தேவை உள்ளவர்கள் ஹெல்மெட் வாங்கிக் கொண்டு, எட்டு நாட்களில் திரும்பி அளிக்கலாம் அல்லது மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். எனினும், இந்த திட்டம் இன்னமும் செயலாக்கம் பெறவில்லை.

துவக்கத்தில் குமார், தனது சேமிப்பபைக் கொண்டு ஹெல்மெட்களை வாங்கினார். எனினும், இப்போது தனது விவசாய வருமானம் மற்றும் நன்கொடைகளை சார்ந்திருக்கிறார். இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர் நொய்டாவில் இருந்த தனது வீட்டை கூட விற்றுவிட்டார்.

“இந்தத் திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக நெருக்கடியான நேரத்தில் தனது நகைகளை விற்று பணம் கொடுத்த மனைவிக்கு தான் நன்றி,” என்கிறார் குமார்.

இந்தியாவில் பலர் சாலை பாதுகாப்பை முக்கியமாகக் கருதுவதில்லை என்றாலும் இது மிகவும் முக்கிய விஷயம். சாலை விபத்தால் நான் தனிப்பட்ட இழப்பிற்கு உள்ளானேன். வேறு எந்த குடும்பமும் இதை அனுபவிக்கக் கூடாது என நினைக்கிறேன், என குமார் சோஷியல் ஸ்டோரியிடம் கூறினார்.

நண்பரின் இழப்பு

பீகாரின் சிறிய கிராமத்தைச் சேர்ந்த குமார் மேற்படிப்பிற்காக தில்லி வந்தார். கல்லூரி நாட்களில் கிருஷ்ண குமார் என்பவர் அவரது அறைத்தோழராக அமைந்தார். கிருஷ்ணா பொறியியல் படித்துக்கொண்டிருந்தார். குமார் சட்டம் படித்துக்கொண்டிருந்தார்.

“படித்துக்கொண்டிருந்த போதே பகுதிநேர வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். வேலை முடித்து திரும்பி வரும் போது நான் சாப்பிடுவதை கிருஷ்ணா உறுதி செய்து கொள்வான். என்னை ஒரு சகோதரன் போல கவனித்துக்கொண்டான். வீட்டில் இருந்து வெளியே தங்கி இருக்கும் போது இத்தகைய நண்பன் கிடைப்பது வரம்,” என்கிறார் குமார்.

இருப்பினும், 2014ல் கிருஷ்ணா தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது யமுனா நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பம் நிலை குலைந்து போனது.

“இளம் பிள்ளையை இழப்பது நினைத்துப்பார்க்க முடியாத இழப்பு. அவர்கள் கண்களின் வலியை உணர்ந்தேன். அந்த தருணத்தில் தான் என் வாழ்க்கை நோக்கத்தை தீர்மானித்தேன்,” என்கிறார். அன்று முதல் அவர் ஹெல்மெட்களை விநியோகிக்கத்துவங்கினார்.

உயிர் காப்பது

ஆரம்பத்தில் குமார், வழக்கறிஞராக வேலை பார்த்துக்கொண்டே ஓய்வு நேரத்தில் தனது நோக்கத்தை செயல்படுத்தினார். நொய்டாவில் இருந்து பீகார் செல்லும் எல்லா இடங்களிலும் யாரேனும் ஒருவர் வண்டியில் ஹெல்மெட் இல்லாமல் செல்வதை பார்த்தால், அவர் இலவசமாக ஹெல்மெட் வழங்குவார்.

எனினும், 2016ல் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனது வேலையை விட்டு விலகினார்.

“துவக்கத்தில் எந்த திட்டமிடலும் இல்லாமல் செயல்பட்டேன். எங்கே இருக்கிறேனோ அங்கே ஹெல்மெட் தருவேன். எனினும், விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் அல்லது நிறைய பேர் ஹெல்மெட் இல்லாமல் செல்லும் இடங்களாக தேர்வு செய்து செயல்படத்துவங்கினேன்,” என்கிறார்.

பாட்னாவில் ஒருமுறை ஹெல்மெட் கடைக்கு ச்சென்று அங்கிருந்த ஹெல்மெட்களின் தரம் பற்றி விசாரித்த சம்பவத்தை நினைவு கூர்கிறார். கடைக்காரர் தன்னிடம் இரண்டு லட்சம் ஹெல்மெட் இருப்பதாகக் கூறிய போது குமார் அனைத்தையும் வாங்கிக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

“முதலில் நான் கேலி செய்கிறேன் என நினைத்தவர் என் லட்சியத்தை எடுத்து கூறியதும் புரிந்து கொண்டு என் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்,” என்கிறார்.

விபத்திற்கு சில மாதங்களுக்கு பின் நண்பரின் வீட்டிற்கு சென்று வந்த சம்பவம் பற்றியும் குறிப்பிடுகிறார். அங்கு 12ம் வகுப்பு புத்தகங்கள் பயனில்லாமல் இருப்பதை பார்த்தவர், அவற்றை எடுத்து வந்து, ஏழை மாணவர் ஒருவருக்கு கொடுத்தார்.

“சில மாதங்கள் கழித்து அந்த மாணவரின் அப்பா அழைத்து, தனது மகன் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றிருப்பதாக தெரிவித்து நன்றி கூறினார்,” என்கிறார் குமார்.

அப்போது தான் இலவச ஹெல்மெட்டிற்காக புத்தகங்களை சேகரிக்கும் எண்ணம் உண்டானது.

“ஹெல்மெட் அணியாமல் இருக்கும் வசதி படைத்தவர்கள் மற்றும் படித்தவர்களிடம் பழைய புத்தகங்களை கேட்கத் துவங்கினேன் என்பவர் இளம் பிள்ளைகளிடம் ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு புத்தகங்களை நன்கொடையாக தருமாறு கேட்கிறேன். இந்த தலைமுறை தான் மாற்றத்திற்கான தலைமுறை. அவர்கள் இலவசமாக ஹெல்மெட் எடுத்துக்கொண்டால் வீட்டில் பெற்றோர்கள் அதை பயன்படுத்தலாம்,” என்று கூறுகிறார்.

குமார் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்குகிறார். இதுவரை 1400 நூலகங்களை கண்டறிந்து வைத்துள்ளார்.

“சாலை விபத்துகள் நடைபெறாமல் நாட்டை பாதுகாப்பானதாக மாற்றுவதில் இளைஞர்களுக்கு கல்வி அளிப்பது முக்கியம். நூலகங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கும்,” என்கிறார்.

குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் பிரைட் ஆப் ஆசியா விருதும் பெற்றுள்ளார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *