Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

‘டாக்டர் ஆன் வீல்ஸ்’ – முதியவர்கள், உடல் ஊனமுற்றோருக்கு மொபைல் வேனில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!


பிரபாகர் ராவ் குடியிருப்பது மதுரை மாநகரில். அவரது தாயின் வயது 83. வயது முதிர்வு அவ்வப்போது அவரை நோய்வாய்படச் செய்தது. ஆனால், வயதுமுதிர்ந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று திரும்புவது பிரபாகருக்கு சவாலானதாக இருந்துள்ளது. அவருக்கு மட்டுமில்லை, வயதானவர்களை வீட்டில் கொண்ட அனைவருக்குமே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது சவாலானது.

இதற்கான தீர்வினை பிரபாகருக்கு வழங்கியது டாக்டர் சந்திரமெளலியின் மருத்துவம் அளிக்கும் மொபைல் வேன். அவரோ அந்த வேனை ‘மினி ஐசியு’ என்று அழைக்கிறார். ஏனெனில், மாற்றி வடிவமைக்கப்பட்ட மாருதி ஈஈசிஓ சிறப்பு வாகனத்தில் உட்செலுத்துதல் பம்புகள், சிரிஞ்ச் டிரைவர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உட்பட அத்தியாவசிய ஐசியு உபகரணங்களை பொருத்தி வீட்டு வாசலில் மருத்துவ சேவையை அளித்து வருகிறார் மருத்துவர் சந்திரமெளலி.

மொபைல் வேனில் 83 வயதான ராவ்வின் தாயினை சந்திரமெளலி முழுமையாக பரிசோதித்து, அவரது கால்களில் திரவம் தேங்குவது, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் படுக்கைப் புண்களுக்குத் தேவையான சிகிச்சையினை அளிக்கிறார்.

“வீட்டு வாசலில் முதியோர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வரும் இந்த மொபைல் வேன் ஒரு சிறந்த முயற்சியாகும். நாங்கள் அவரை அழைத்து உதவியை நாடுகையில் ஒருநாள் கூட அவர் பதிலளிக்காமல் இருந்ததில்லை,” என்று நன்றியுணர்வுடன் பகிர்ந்தார் ராவ்.

மதுரையைச் சேர்ந்த டாக்டர் சந்திரமெளலியால் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த ‘டாக்டர் ஆன் வீல்ஸ்’. பலதரப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மருத்துவச் சேவைகளை அவர்களின் வீட்டு வாசலுக்கு எடுத்துச் செல்வதே இதன் நோக்கமாகும்.

“இந்த நடமாடும் கிளினிக், மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் வயதானவர்களுக்கும், குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறோம்,” என்று சந்திரமெளலி யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.

வீட்டு வாசலுக்கு உணவு வரும் போது… மருத்துவம் முடியாதா?

டாக்டர் சந்திரமெளலி பிறந்தது திருச்சி. வளர்ந்தது, பள்ளிப்படிப்பை முடித்ததெல்லாம் கனாடா. பள்ளிப்படிப்பை முடித்தபின், 2006ம் ஆண்டு இந்தியா திரும்பி மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்றுள்ளார்.

எம்பிபிஎஸ் மற்றும் அவசர மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு 2015ம் ஆண்டு அவரது கல்வியை முடித்துவிட்டு, தனியார் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் தீவிர அவசரப் பிரிவில் இளநிலை ஆலோசகராகச் பணியில் சேர்ந்தார்.

மருத்துவமனையில் பணிபுரியும் போது, ஐசியு-வில் படுக்கைகள் இல்லாத காரணத்தினாலும் அல்லது சிகிச்சைச் செலவை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத காரணத்தினாலும் பல நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இச்சம்பவங்கள் சந்திரமெளலியை வெகுவாக பாதித்தது. அதே சமயம், அவரது பாட்டியின் மீதிருந்த ஆழமான பாசப்பிணைப்பு, முதியோர்களுக்கான சேவையைத் தொடங்க தூண்டியுள்ளது.

“வயதான நோயாளிகளுக்கு அதிக அன்பும் கவனிப்பும் தேவை. அவர்கள் பெரிய குழந்தைகள். அவர்களது அருகில் அமர்ந்து உடல்நலக் கவலைகளை கவனமாகக் கேட்கக்கூடிய ஒரு நிபுணர் தேவை. மருத்துவர்களை அடைவதில் முதியோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். குறிப்பாக, மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும் சென்று திரும்ப அவர்கள் மேற்கொள்ளும் பயணம் பெரும் இன்னலை அளிக்கிறது.”

சாதாரண செக் அப்பிற்கு கூட முதியவர்கள் மருத்துவமனைக்கு வந்து, நீண்ட வரிசையில் நின்று மருத்துவரை சந்திக்க வேண்டும்.

”பெரும்பாலான வெளிநாடுகளில் முதியவர்களுக்கு மருத்துவர்கள் வீட்டிற்கு சென்று சிகிச்சை அளிக்கின்றனர். வீட்டு வாசலில் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் போது, சிகிச்சை மற்றும் மருந்துகளை ஏன் வழங்க முடியாது என்று சிந்தித்தேன்?,”

என்ற சந்திரமெளலி, முதியவர்களுக்காகவும் சமுதாயத்திற்காகவும் பணியாற்ற வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை வழங்கவும், அவர் ‘டாக்டர் ஆன் வீல்ஸ்’ எனும் நடமாடும் மருத்துவமனையை தொடங்க முடிவு செய்தார்.

வீட்டு வாசல் தேடி மருத்துவம்…

தொடக்கத்தில் ஒரு மாதத்திற்கு 8 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று சந்திரமெளலி மாதத்திற்கு 600க்கும் மேற்பட்டோரின் வீட்டு வாசல் தேடி மருத்துவம் அளித்து வருகிறார். இதற்காக பிசியோதெரபிஸ்ட்கள், மருத்துவர் உதவியாளர், கதிரியக்க நிபுணர், செவிலியர்கள் மற்றும் ஓட்டுநர் என 8 பேர் கொண்ட குழுவையும் கொண்டுள்ளார்.

அக்குழுவினருடன் நோயாளிகளின் நிலையினைப் பொறுத்து வாராந்திர, இருவாரம் அல்லது மாதந்தோறும் வழக்கமான மருத்துவ பரிசோதனையை அளித்து வருகிறார். டாக்டரின் நாள் அதிகாலை 3 மணிக்கு துவங்குகிறது. காலை 10 மணி வரை நடமாடும் மருத்துவமனையில் பயணித்து மருத்துவம் அளிக்கும் அவர், காலை 10 முதல் 12 வரையிலும், மாலை 7 முதல் 9 வரையிலும் அவரது கிளினிக்கில் சிகிச்சை அளிக்கிறார். இடைப்பட்ட மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடமாடும் மருத்துவமனையில் ஆன் டியூட்டியில் இருக்கிறார்.

“நாள்முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக பல இடங்களுக்கு விரைந்து செல்வது எனக்கு கடினமாக இருந்தது. ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று மணிநேரம் மட்டுமே ஓய்வெடுக்கிறேன். இப்படி தொடர்ந்து பயணித்தால், எமர்ஜென்சி என வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க என்னுடல் ஒத்துழைக்காது. அதனால், அப்பாயிமென்ட் முறையை பின்பற்ற தீர்மானித்தேன்,” என்றார்.

மதுரை மற்றும் விருதுநகர், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு டாக்டர் ஆன் வீல்ஸ் சேவை செய்கிறது. மருத்துவக் குழு பயணிக்க வேண்டிய தூரத்தைப் பொறுத்து ரூ.300 முதல் ரூ.800 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

“நான் அனைத்தையும் இலவசமாக செய்யவே விரும்புகிறேன். ஆனால், அப்படி செய்தால் இம்முயற்சியை என்னால் தொடர முடியாது. இப்போதும் கைமீறி செல்லும் செலவுகளை நானே சமாளித்து வருகிறேன். இருப்பினும், நோயாளியின் குடும்பம் ஏழ்மையானதாக உணரும்போது, அவர்களிடம் எந்தத் தொகையையும் வசூலிப்பதில்லை,” என்று கூறினார்.

டாக்டர் ஆன் வீல்சில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புதிய நோயாளிகளிடம் அமர்ந்து பேசும் மருத்துவர், அவர்களது பிரச்சினையை கேட்டறிந்து அதற்கேற்ப அவர்களுக்கான சிகிச்சைத் திட்டத்தை பரிந்துரைக்கிறார்.

அதன்படி, அவரது குழுவானது நோயாளிகளுக்கு அடிப்படை ஆலோசனைகள், நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்கு பிந்தைய ஆதரவு உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. மருத்துவ குழுவானது மருந்துகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சோதனைகளுக்காக இரத்த மாதிரிகளையும் சேகரிக்கிறது. கையடக்க எக்ஸ்-கதிர்கள் உட்பட பல வசதிகளையும் வழங்குகிறது.

“ஒரு மருத்துவராக, நோயாளிகளுக்கு வீட்டிலே சிகிச்சை அளிப்பதில் உள்ள வரம்புகளை நானறிவேன். படுக்கைப் புண்கள் மற்றும் யுடிஐ போன்றவற்றிகான சிகிச்சைகளை வீட்டிலேயே அளிக்கலாம். பக்கவாதம் அல்லது இருதயப் பிரச்சினை போன்று பிரச்சினை தீவிரமானதாக இருந்தால், அவர்களை மருத்துவமனையில் சிகிச்சையில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறேன். இந்த மொபைல் வேன் மூலம் சிகிச்சை அளிப்பது எவ்விதத்திலும் மருத்துவமனைகளுக்கு மாற்றாக இருக்காது என்பதை சொல்ல தேவையில்லை,” என்று தெளிவாக விளக்கினார் அவர்.

மதுரையில் முதியோர் இல்லம் மற்றும் இரண்டு அடுக்கு மருத்துவமனையை உள்ளடக்கிய ஒரு மையத்தைத் தொடங்க அவர் முடிவெடுத்துள்ளார். டாக்டர் சந்திரமௌலியின் பயணம் சவால்கள் நிறைந்தது. ஏனெனில், வீட்டிற்கே சென்று மருத்துவம் அளிப்பதால், தொடர் பயணத்தை மேற்கொள்வதுடன், அவரது பணிநேரமும் நீண்டது.

“போக்குவரத்தைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அதிகாலையிலே பயணத்தைத் தொடங்குகிறோம். ஆனாலும், சில சமயங்களில் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் பயணம் செய்வது நிச்சயமாக ஒரு பிரச்சினையாக மாறிவிடும்.

நாளொன்று 14 மணி நேரம் பணி செய்கிறேன். இதனால், குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது வெகுவாக குறைந்துவிட்டது. இப்பயணத்தில் நிலையை புரிந்து கொண்டு மனைவியும், என் குழந்தைகளும் ஒத்துழைக்கின்றனர். இருப்பினும், அவர்களுடன் போதுமான நேரத்தை செலவழிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

”முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியே இந்தப் பாதையில் நடக்கத் தூண்டுகிறது. முதியவர்களிடம் அவர்களது உடல்நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் போது அவர்களது முகத்தில் அந்தச் சிரிப்பைப் பார்ப்பது உண்மையிலேயே மனதை நிறையச் செய்கிறது. ஒவ்வொரு நாளும் ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை என்னால் ஏற்படுத்த முடியும் என்பது நம்பமுடியாத நிறைவை அளிக்கிறது,” என்று மனமகிழ்வுடன் பகிர்ந்தார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *